Monday, July 20, 2015

நிசப்தம் - வா. மணிகண்டன்

சென்ற மாதத்தில், ஒரு மாணவனுக்கு உதவி வேண்டி எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களிடம் பேசினேன். உடனே உதவுவதாக சொல்லிய அவர், கோபி புத்தகத் திருவிழாவில் 18.7.2015 அன்று சந்திக்கலாம் என்றார். 

மணிகண்டன் அவர்களின் பேச்சு நிகழ்வும், கோபி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்தாயிரம் ரூபாய் என ஏழு பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்வும் அன்று நடைபெற இருந்தது. .

நானும், நண்பன் கமலக்கண்ணனும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள கோபி புறப்பட்டோம். கண்காட்சி நடைபெற்ற  மண்டபம் முன்னர் பார்த்ததும், ஒரே கூட்டமாக இருந்தது. 'பரவால்லியே, நம் மக்களுக்கு புத்தகங்கள் வாங்க இவ்வளவு ஆர்வமா'  என்று நினைத்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு மேலே பார்த்தால், பேனரில்  'ஆடி தள்ளுபடி விற்பனை விழா' என்று இருந்தது. சப்பென்று ஆகிவிட்டது. அதானே, நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் புத்தகங்கள் வாங்கி விடுவார்களா என்ன?. இரண்டு மண்டபங்களும் சேர்ந்து இருந்தது. பக்கத்து மண்டபத்தில் தான் புத்தக திருவிழா. அங்கே அளவான கூட்டம். 

மணிகண்டன் அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். தாய்த்தமிழ்ப் பள்ளி குமணன் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார் மணிகண்டன். புத்தக அரங்குகளை பார்வையிட்டு , புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வரவும், மாலை நிகழ்வு துவங்கவும் சரியாக இருந்தது. 



மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசி முடித்ததும் மணிகண்டன் அவர்கள் பேசினார். நிசப்தம் அறக்கட்டளை ஏன் துவங்கினேன், என்ன விதமான உதவிகள் செய்கிறோம் என்பது பற்றி பேசியவர், இன்றைய கல்விமுறை, அரசியல் என புயல் போல உரையாற்றத் துவங்கினார். 

நாங்கள் படித்தது பு.புளியம்பட்டி கே.வி.கே அரசு பள்ளியில்.நாங்கள் படித்த காலத்தில், அதாவது 97-99 களில்,  கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளி என்றால் ஆச்சரியமாகப் பார்ப்போம். அங்கே படித்தவர்தான் மணிகண்டன் அவர்களும். அப்பொழுது எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி இருக்கிறது எனத் தன் ஆதங்கத்தைக் கூறினார். (நல்லவேளை, நாங்கள் படித்த பள்ளி.. அப்பொழுதும் அப்படியே இருந்தது.. இப்பொழுதும் அப்படியே இருக்கிறது.. !!)

இப்பொழுது மாணவர்கள் 499 மதிப்பெண்கள் எடுத்தாலும், 'அப்படியா' என்று கேட்டுவிட்டுதான் நகர்கிறோம். இவ்வளவு மாணவர்கள், இவ்வளவு மதிப்பெண்கள் எதற்காக.. எல்லாம் இன்ஜினீயரிங் கல்லூரி சீட்களை நிரப்பத்தான் என்றார். 

அது ஒரு காரணம் என்றாலும், ஒரு வருடம் மட்டுமே படித்த அந்தக் காலங்களில் ஒரு மதிப்பு  இருந்தது. 400 மார்க் என்றாலே அது ஆச்சரியம். பாசா, பெயிலா அதுதான் அப்போதைய கேள்வி. இப்பொழுதோ, எவ்வளவு மார்க்?. பேசாமல், 9 மற்றும் 11 வகுப்புகள் தேவையே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எந்தத் தனியார் பள்ளியிலும் 9 மற்றும் 11 வகுப்புகள் எடுக்கப்படுவேதேயில்லை. ஒரே பாடத்தை, இரண்டு வருடம் மீள மீளப் படித்து, முக்கி முக்கி மனப்பாடம் செய்து, திரும்பத் திரும்ப கை வலிக்க எழுதிப் பார்த்தால்.. 499 என்ன 500, 1199 என்ன 1200 கூட எடுப்பார்கள். :( 

டாஸ்மாக், சூழல் கேடுகளால் வரும் நோய்கள் பற்றிக் கூறியவர், அரசியல்வாதிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.. அவர்களின் நோக்கம் ஒன்றே, இந்த ஐந்து வருடங்கள்.. அப்புறம், 'அத அப்புறம் பாத்துக்கறது' என்பது போலவே இருக்கிறார்கள் என்றார். 

12 வருடம் பள்ளி, 3 அல்லது 4 வருட கல்லூரிப் படிப்பு படித்த மாணவன், நாம் கேட்கும் சாதாரணக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை என்று வருத்தப்பட்டார். நானும் பார்த்திருக்கிறேன், இப்போது இருக்கும் பெரும்பான்மையான மாணவர்களால், நான்கு வரி படிக்க முடியாது. ஆங்கிலம் வேண்டாம்.. தாய்மொழி தமிழில் படிக்கலாமே.. அது அதைவிட மோசம்.  மனப்பாடம் செய்யணும், பரிட்சையில் போய் அப்படியே எழுதணும், அதை அப்படியே மறந்து விட வேண்டும் என ஒரு மந்தைக் கும்பலை உருவாக்கி கொண்டிருக்கிறோமே எனப் பயமாக இருக்கிறது. என்னதான் நீ கற்றாய் என்றால் ஒரு பதிலும் அவர்களிடம் இருப்பதில்லை. 

புயலென உரையாற்றி முடித்த வா. மணிகண்டன், பள்ளிகளுக்குப்  புத்தகங்கள் வாங்க அதற்குரிய கூப்பன்களை வழங்கினார். ஒரு பள்ளிக்கு கூப்பன் வழங்க என்னையும் மேடையேற்றினார். மேடை என்றாலே நடுங்கும் என்னையும் மேடையேற்றிய வா. மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றிகள். 

சிலரின் பேச்சு முன் தயாரிப்பாக இருக்கும். சில நேரங்களில் தூங்கி கூட விடுவோம். ஆனால், மணி அவர்களின் பேச்சு யதார்த்தம் நிரம்பியதாக இருந்தது. இந்த சமூகத்தின் மீதும், அதன் போக்குகள் மீதும் கோபம் கொண்டு அவர் பேசியது மிக்க மகிழ்வாக இருந்தது. அதுவும் ஒரு மேடையில் அவர் பேசியது ரொம்பவே மகிழ்ச்சி. அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கொஞ்சம் பேருக்கேனும், மனதில் ஒரு தீக்குச்சி வெளிச்சம் தெரிந்திருக்கும். அந்த வெளிச்சம் பரவட்டும்.