Wednesday, March 6, 2019

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுடன் சேராமல் தனியாகவே இருந்தது நிஜாம் அரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து இந்தியாவுடன் இணைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் நாவல் விரிகிறது. 

கதை சந்திரசேகரன் என்னும் பால்ய வயது இளைஞனைச் சுற்றியே செல்கிறது. அவன் படித்த பள்ளி, கல்லூரி, நண்பர்கள், கிரிக்கெட்,  லான்சர் பாரெக்ஸ் எனும் ரயில்வே குடியிருப்பு,  அதில் குடியிருக்கும் பக்கத்து வீட்டினர்,  இவ்வளவு பிரச்சனையிலும் அவர்கள் வளர்க்கும் பசு பற்றி என நாவலில் ஏகப்பட்ட தகவல்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமியர்களுடன் ஏற்படும் சண்டைகள், பின்னர் ஆட்சி மாற்றத்தில் அவர்கள் காட்டும் வேறுபாடு என சொல்லிக் கொண்டே செல்கிறார் அசோகமித்திரன். 

ஒரு சாமான்ய மனிதனின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலாறு, அரசியல் மாற்றங்கள் பற்றி எல்லாருமே அறிந்திருந்தாலும், அதற்கு நாம் என்ன செய்வது என்பது போலிருக்கும் சாமானியர்கள். காந்தி கொல்லப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு இஸ்லாமியர் தான் அவரைக் கொன்றிருக்கவேண்டும் என நினைப்பதைச் சொல்லலாம். நாம் ஒன்றைச் சொல்லி சொல்லியே சாமானிய மனிதரிடம் எதையும் நிலைநிறுத்தி விட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 



இந்திய அரசுடன் இணைந்தால், இப்பொழுது இருப்பது போல சுதந்திரமாக இருக்க முடியாது எனச் சொல்கிறார்கள் நிஜாம் ஆதரவாளர்கள். ஆனால், அதையும் மீறி கலகம் செய்கிறார்கள். கலகமோ, போராட்டமோ எப்பொழுதும் அடி வாங்குவது கீழ்த்தட்டு மக்களே. இந்து, முஸ்லீம் என்பதல்ல, அவன் ஏழையாய் இருக்கிறான் என்பதே தகுந்த காரணமாகி விடுகிறது. எப்பொழுதும் எரிக்கப்படுவது ஏழைகளின் குடிசைகளே. இவ்வளவு நடந்துகொண்டிருக்கும்போதும், சில பணக்கார வீட்டு பையன்களும், பெண்களும் கல்லூரிக்கு காரில் வந்து செல்கிறார்கள். 

இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து, நிஜாம் ஆட்சியைப் பிடிக்கும் நேரத்தில் கலவரம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்கள் அஞ்சி, வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள். கலகம் ஏற்படும்போது, ஒரு இரவு நேரத்தில் அங்கே இருக்கும் சந்திரசேகரன் தப்பி ஓடி ஒரு வீட்டுக்குள் குதிக்கிறான். அந்த வீட்டில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள், குழந்தைகள், ஒரு கிழவி என எல்லோரும் இவனைக் கண்டு பயப்படுகிறார்கள். 

வறுமை தாண்டவமாடும் இஸ்லாமியக் குடும்பம் என்று உடம்பைப் பார்த்தாலே தெரிகிறது. அந்த மூன்று ஆண்களும் சேர்ந்து சந்திரசேகரனைக் கொன்று விட முடியும். ஆனால் அவர்கள் அஞ்சி இருக்கிறார்கள். அங்கே இருந்த பெண்களில் ஒரு இளம்பெண் அவன் முன்னால் வந்து, தன் உடைகளைக் களைந்து 'எங்களை ஒன்றும் செய்துவிடாதே..' என்கிறாள். வறுமையால் அவளின் விலா எலும்புகள் உடம்பில் துருத்திக் கொண்டு இருக்கிறது. முதன் முதலாக பாலிய வயதில், ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்த்த சந்திரசேகரன் தாங்க முடியாத துயரத்துடன் அந்த வீட்டை விட்டு ஓடுகிறான். 'அந்தப்பெண் ஒரு குழந்தை. அவள் குடும்பத்தைக் காப்பாற்ற இந்தவொரு முடிவுக்கு வந்திருக்கிறாள். அதற்கு நானும் ஒரு காரணம். நான் ஒரு அற்ப புழு.' என்று நினைத்தவாறே ஓடி கொண்டிருந்த சந்திரசேகரன், பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான்.