அசடன் (இடியட்)
'குற்றமும் தண்டனையும்' நாவலுக்குப் பிறகு எம்.ஏ. சுசீலா அம்மா அவர்கள், பியோதர் தஸ்தாயேவ்ஸ்கியின் 'இடியட்' நாவலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். இவ்வளவு பெரிய நாவலை மொழியாக்கம் செய்த சுசீலா அம்மா அவர்களின் உழைப்புக்கு என் வணக்கங்களும் நன்றிகளும். இப்படி ஒரு நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்து அதை வெளியிட்ட மதுரை பாரதி புத்தகாலயம் பதிப்பகத்துக்கும் என் நன்றிகள். (முதலில் இருப்பவர் எம்.ஏ. சுசிலா) சாலையில் செல்லும்போது முன்பின் தெரியாத ஒரு குழந்தை நமக்கு ஒரு முத்தமோ அல்லது ஒரு புன்னகையையோ வீசிச் சென்றால், அந்த கணத்தை பதிவு செய்வதென்பது கொஞ்சம் கடினம். அது போலவே, மிகப் பெரிய படைப்பான இந்த 'அசடன்' நாவலில் நான் உணர்ந்ததை சொல்வது கொஞ்சம் கடினம். எவ்வளவு எழுதினாலும் இன்னும் போதவில்லையோ என்றுதான் தோன்றுகிறது. இருந்தாலும் நான் புரிந்து கொண்ட வரையில், இங்கே சொல்ல முயல்கிறேன். ********************************* என் பார்வையில்: 'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்' என்று வள்ளலார் இறைவனை வேண்டுகிறார். உள்ளே ஒன்ற...