Showing posts with label முத்தம்மாள் பழனிச்சாமி. Show all posts
Showing posts with label முத்தம்மாள் பழனிச்சாமி. Show all posts

Monday, April 6, 2026

நாடு விட்டு நாடு - முத்தம்மாள் பழனிச்சாமி

தங்கள் குடும்ப வரலாறு போல எழுதிய இந்த புத்தகம் சென்ற காலத்தை நமக்கு திரும்பவும் நினைவூட்டுகிறது. சென்ற நூற்றாண்டின் இறுதி வருடங்கள் வரைக்கும் கூட வறுமை தாண்டவமாடியது. விறகு வெட்டுதல், தண்ணீர் எடுக்க நீண்ட தூரம் செல்லுதல், சினிமா தவிர எந்த பொழுதுபோக்கும் இல்லாதிருத்தல் என்றே இருந்தது. அப்படி என்றால் 1940-1950 காலகட்டங்களில் எப்படி இருந்திருக்கும். அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் கொங்கு பகுதியில் இருந்து மலேயா சென்று உழைத்து வாழ்ந்த தமது குடும்பத்தின் வரலாற்றை இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தில் சொல்லியுள்ளார் முத்தம்மாள் அவர்கள். 


முத்தம்மாள் அவர்களிடம் 'பால்ய வயதில் நடந்த எதுவுமே எங்களுக்கு நினைவில் இல்லை. நீங்கள் எப்படி சின்ன வயதில் நடந்தது எல்லாம் நினைவில் இருந்து எழுதுகிறீர்கள், இல்லை அது அனைத்தும் கதையா? ' என்று கேட்க, 'எங்கள் காலத்தில் இப்பொழுது உள்ளது போல பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லை. டிவி, போன் என உங்களை உள்ளே இழுத்துக்கொள்ள நிறைய விசயங்கள் இப்பொழுது உண்டு. எங்களுடைய சின்ன வயதில் நடந்ததை நாங்கள் எங்களுக்குள் திரும்பி திரும்பி பேசிக் கொள்வோம். பாட்டி தாத்தா போன்றோர் கதை சொல்கிறேன் என்று எங்கள் சின்ன வயதில் நடந்ததை திரும்ப திரும்பச் சொல்வார்கள். ஒருவேளை அதனால்தான் என்னுடைய நினைவில் அந்த பழைய காலம் அப்படியே இருக்கிறது' எனச் சொல்கிறார். 

கொங்குப் பகுதியான வெள்ளகோவிலுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற குடும்பம் முத்தம்மாள் அவர்களின் குடும்பம். முத்தம்மாள் அவர்களின் தாய் கொஞ்சம் படித்தவர். பழனியம்மாள் மணமாகி, கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தாலியைக் கழற்றி வீசிவிட்டு வந்தவர். என்ன பிரச்சினை என்றாலும் தாலியை கழற்றி வீசலாமா , எல்லாம் படித்தவள் என்கிற திமிர் என்று ஊர் பேசுகிறது. அவருடைய தந்தையும் ஒரு சிறு பிரச்சினையில் கொஞ்ச காலம் சிறை செல்ல நேர்கிறது. இதை எல்லாம் பார்த்த பழனியம்மாளின் தந்தை, இனிமேல் இந்த ஊரில் இருக்க கூடாது என எண்ணி காட்டை விற்றுவிட்டு மலேயாவுக்கு தனது மகள், மனைவியுடன் செல்கிறார். ஏற்கனவே பழனிச்சாமி அவர்களுக்கு பழனியம்மாள் குடும்பத்துடன் பழக்கம் இருந்திருக்கிறது. அங்கே அவர்களை சந்திப்பவர்,  இரண்டாம் தாரமாக பழனியம்மாளை ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்கிறார்  பழனிச்சாமி. அவர்களுக்கு சம்மதம் என்றாலும் பழனியம்மாளின் அம்மா தாலி கட்டக் கூடாது என பழைய  சம்பிரதாயம் பேசுகிறார். இரண்டு மனைவியருடனும் எந்த பிரச்சினையும் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார். குழந்தைகள் பிறந்ததும், அவர்களை எப்பாடு பட்டாவது நல்ல கல்வி கொடுத்து விட வேண்டும் என பழனியாம்மாள் நினைக்கிறார். 

முத்தம்மாள் அவர்கள் தான் சார்ந்த சாதியின் உழைப்பு, அவர்களின் சிக்கனம் என நிறையச் சொன்னாலும், அவர்களின் பங்காளிச் சண்டைகள், பழைய பழக்க வழக்கங்கள் என அவர்களின் தவறுகளையும் சொல்லத் தவறுவதில்லை. எல்லாவற்றையும் ஒரு சிறு நகைச்சுவையுடன் சொல்ல முடிவது அவரின் பலமும் கூட. வயதாகிய பின்னரும், பேரன் பேத்திகள் எடுத்த பிறகு ஒரு சண்டையில் கணவர் படுக்கை அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் பேரன்கள் கவலைப்பட இவரோ தன் பாட்டுக்கு தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். என்ன பாட்டி இப்படி பயமில்லாமல் இருக்கே, தாத்தா ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது என்று அவர்கள் கேட்க 'உள்ளே தூக்கு போட்டுக்கொள்ள எந்த வசதியும் இல்லை அதனால்தான்' என்று நகைச்சுவையாக சொல்கிறார். 


இரண்டாம் உலகப் போர் கட்டத்தில் மலேயாவில் இருந்து இங்கே வந்து, எந்த வேலையும் சரியாக அமையாமல் குன்னூர் சென்று பெட்டிக்கடை வைத்தது, அங்கே இருந்து வெள்ளகோவிலுக்கு தனியாக பேருந்தில் பயணம் செய்தது என அவரின் நினைவுகள் பின்னால் உள்ள காலத்தை நமக்கு சொல்கிறார். தனது தந்தை வழி தாத்தாவுடன் இருந்த சில நினைவுகள் பகிர்கிறார்.  பின்னர் அங்கே இருந்து மலேயாவுக்கு கஷ்டப்பட்டு கப்பலில் வந்து சேர்ந்தால், அவர்கள் விட்டுச் சென்ற தோட்டம் ஜப்பான் படையால் சின்னாபின்னமாகி கிடக்கிறது. அதனைச் சரிசெய்து, படிப்பையும் தொடர்கிறார்கள். முத்தம்மாள் அவர்களின் மாமாவும் போர் காலகட்டத்தில் இறந்துவிட, தனியாக இருக்கும் பாட்டியை இவர்கள் அழைத்துக் கொண்டு வந்துவிடுகிறார்கள். சயாம் ரயில்வே வேலைக்கு சென்ற சில தமிழர்கள் பற்றியும், அங்கே இருந்து திரும்பி ஓடிவந்த ஒரு சிலர் பற்றியும் சொல்கிறார். 

எதற்கும் பயப்படாமல் பெண்களை சுதந்திரமாக வளர்த்த தனது தந்தையின் மேல் அவருக்கு இருந்த பிரியம் சொற்களில் தெரிகிறது. கடலில் நீந்துவது, படகு ஓட்டுவது, மீன் பிடிப்பது என ஒவ்வொன்றையும் தன் பெண்களுக்கு சொல்லித் தருகிறார். தாய் பழனியம்மா அவற்றை எதிர்த்து பேசினாலும் அதனை அவர் கண்டுகொள்வதில்லை. தந்தை இறப்பின் போது நடந்த சடங்குகளில் பிரச்சினை ஏற்படும்போது அமைதியாகவே இருக்கிறார்கள். பின்னர் தமது பிள்ளைகள் காதல் திருமணம் செய்வதை ஏற்றுக்கொள்கிறார் பழனியம்மாள். தனது கணவர் இறந்த பின்னர் பிள்ளைகளை தனியாகவே போராடி கரைசேர்க்கிறார். ஆனால் எப்பொழுதும் கல்வியே பிள்ளைகளுக்குத் துணை என்பதை அவர் மறப்பதில்லை. 

அங்கேயே பிறந்து வளர்ந்த, ஸ்காட்டிஷ் தந்தைக்கு பிறந்தவரான ஸ்பென்ஸ் கிராண்டை திருமணம் செய்து கொள்கிறார் முத்தம்மாள். அவர் அம்மா தமிழ் என்பதால் தமிழ் நன்றாக பேசுகிறார். திருமணத்துக்கு பின்னர் முத்தம்மாள் ஆசிரியராக வேலைக்குச் செல்கிறார். அவருக்கு குழந்தைகள் பிறந்து வளர்ந்து சிலர் வெளிநாட்டில் வேலை கிடைத்து தங்குகிறார்கள். அங்கேயே மணம் முடித்து, மணவிலக்கு என பிள்ளைகளின் வாழ்க்கைகள் பற்றியும் முத்தம்மாள் எதையும் மறைக்காமல் எழுதுகிறார். 

'நான் இங்கு என் குடும்ப ரகசியங்களையம் நடந்த உண்மைகளையும் எழுதுவது சில நேரத்தில் மனக்கஷ்டமாகக் கூட இருக்கும். இங்கு நான் யாரையும் புண்படுத்தவோ ஏளனம் செய்யவோ மனதாலும் நினைக்கவில்லை. அப்பாரய்யன் ஒரு கொலையாளி. அம்மாவின் தகப்பனார் சிறைவாசம் அனுபவித்த கைதி. அம்மா, அய்யன் தாலி கட்டாத சட்டபூர்வமற்ற மனைவி. பெரியம்மா தன் கணவனை இன்னொருத்திக்கு விட்டுக்கொடுத்த ஏமாளி. அய்யன் முன்கோபக்காரர், பழிவாங்கும் உணர்ச்சியுடையவர். இப்படி அவர்களின் குறைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எப்படியிருப்பினும் நான் அவர்களின் ரத்தத்தில் ஊறிய வாரிசு. அவர்கள் வகுத்த வழிதான் எங்கள் வழி.' - என்று புத்தகத்தின் இறுதியில் சொல்கிறார். 

இந்த தன்வரலாற்றுப் புத்தகத்தை படித்து முடிக்கும்பொழுது இது ஒரு குடும்பத்தின் வரலாறும், கதையும் மட்டும் அல்ல என்பது புரியும். சென்ற காலகட்டத்தின் நினைவுகளால் நெய்யப்பட்ட அழகானதொரு பொக்கிஷம். 

நாடு விட்டு நாடு
முத்தம்மாள் பழனிச்சாமி
பதிப்பு: தமிழினி