Tuesday, July 31, 2012

குடிமகன்களை குடிக்கும் மகன்களாக்கியது...

டாஸ்மாக் - எல்லோருக்கும் தெரிந்த இடம். கிராமம், நகரம் என்ற வேறுபாடில்லாமல் எங்கும் இருக்கிறது. குறிப்பிட்ட தூரத்துக்குள் அரசுப் பள்ளிகள் இருக்கிறதோ இல்லையோ, டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன.

ஒரு பொருள் எளிதாக எங்கும் கிடைத்தால் அதை மக்கள் வாங்கவே விரும்புவார்கள். அந்தப் பொருள் ஏதோ டீ போலவோ, பிஸ்கட் போலவோ, போதை தராமல் இருந்தால் பரவாயில்லை. ஆனால் போதையை தரும் இந்தக் கடைகளை என்ன செய்யலாம்?.

பிறந்த நாளா -  லோன் கிடைக்கவில்லையா - லோன் கிடைத்து விட்டதா - மேனஜேர் திட்டினாரா - மேனஜேர் பாராட்டினாரா - சம்பளம் உயர்வா - குழந்தை பிறந்ததா - காதலி போனை எடுக்கவில்லையா - மனைவி கூட சண்டையா - கல்யாணமா - நண்பர்கள் சந்திப்பா - உறவினர்கள் யாராவது இறந்து விட்டார்களா - இப்படி எது நடந்தாலும், எந்தப் பிரச்சினை என்றாலும் நம் மக்கள் சொல்லும் வார்த்தை "வா.. குடிக்கலாம்" என்பதே.  பத்தடி தூரத்தில் கிடைக்கும் பொழுது எல்லோரும் விரும்புவது டாஸ்மாக்கையே.

எங்கள் சிறு வயதுகளில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த கடை இன்று ஊருக்கு நட்ட நடுவில். சுற்றிலும் தள்ளாடும் மக்கள். அலைமோதும் கூட்டம். சனி, ஞாயிறுகளில் கேட்க வேண்டாம், வசூல் அள்ளுகிறது. பண்டிகை, தேர்தல் சமயங்களிலும் அப்படியே - பத்து மடங்கு, இருபது மடங்கு வருமானம் என்று பத்திரிகைகளில் சொல்கிறார்கள்.

மிக்சர், முறுக்கு சுற்றிய பாலிதீன் கவர்கள், தண்ணி கவர்கள், குளிர்பான பாட்டில்கள் என ஒவ்வொரு டாஸ்மாக் கடையைச் சுற்றிலும் கொட்டிக் கிடக்கிறது.  சில சமயங்களில் உடைந்த பாட்டில்களும். இந்த உடைந்த பாட்டில்கள், எல்லா சாலை ஓரங்களிலும், சுற்றுலா செல்லும் மலை பகுதிகளிலும், இன்னும் ஏன் பாதுகாக்கப்பட்ட இடங்களில் கூட பாட்டில்களை உடைத்து வீசி இருக்கிறார்கள்.

பணம் இருப்பவன் குடித்தால் அவனுக்கு பணம் இருக்கிறது, குடிக்கிறான் என்பதைக் கூட ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், தினமும் இருநூறு ரூபாய் கூலி(இதை விடக் குறைவாகவும் கொடுக்கபடுகிறது) வாங்கிக் கொண்டு, அதில் பாதியையோ அல்லது முழுவதையுமோ குடிக்கச் செலவிடும் குடிமகனை என்னவென்று சொல்வது. மனைவி, பிள்ளைகள் அவனுக்கு இருக்கும். மனைவி கொண்டு வரும் கூலியில், குடும்பம் நடந்து கொண்டிருக்கலாம். இந்த இடத்தில்தான் நமக்கு உறுத்துகிறது, அந்த டாஸ்மாக்கை நடத்துவது ஒரு அரசாங்கம் என்று.

பெரியார், கள் இறக்க காரணமாக தன் தோட்டத்தில் இருந்த அனைத்து தென்னை மரங்களையும் வெட்டி விட்டதாகச் சொல்வார்கள். அதே பெரியாரைத் தான் திராவிடக் கழகங்கள், முன்னோடி என்று சொல்லிக் கொள்கின்றன. ஆனால், அதே திராவிடக் கழகங்கள் தான் டாஸ்மாக்கையும் நடத்திக் கொண்டிருக்கின்றன என்பது மிகப் பெரிய முரண் அல்லவா?.

இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக்கை ஒழிக்க மாட்டார்கள். அது ஒரு தங்கச் சுரங்கம். குடிமகன் குடித்துச் செத்தால் என்ன, அவன் குடும்பம் பசியில் வாழ்ந்தால் என்ன, அவன் பிள்ளைகள் படிக்கும் வயதில் வேலைக்கு போனால் என்ன?. எல்லாம் அவன் தலைஎழுத்து  என்று சொன்னாலும் சொல்வார்கள்.

டாஸ்மாக் - நம் கலாச்சாரத்தில் ஓர் அங்கமாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை.


Saturday, July 21, 2012

பாலாஜி: வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - இரண்டாம் பரிசு - தி ஹிந்து நாளிதழ்

பாலாஜியின் அறிவியல் முயற்சிகளைப் பற்றி எனது பதிவுகளில் நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அந்தப் பதிவுகள்;
ஓர் இளம் விஞ்ஞானி
பாலாஜியின் இன்னுமொரு முயற்சி

நேற்று(20/07/2012), புதிய தலைமுறையின் 'வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி - 2012' கோவையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில்,  பாலாஜி தனது கண்டுபிடிப்பான 'Eco Bike'-கை  இடம்பெறச் செய்திருந்தான். அவனின் முயற்சிக்கு கிடைத்த பலனாக, பாலாஜியின் கண்டுபிடிப்பு இரண்டாம் பரிசு பெற்றுள்ளது.  அதைப் பற்றிய செய்திக் குறிப்பு தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article3664437.eceபாலாஜியின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் பாலாஜியின் பெற்றோருக்கு எங்களின் நன்றிகள். 


Tuesday, July 10, 2012

குறும்படம்: Two solutions for one problem

Abbas Kiarostami - இயக்கிய இந்தக் குறும்படம் பள்ளி செல்லும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது.

Nader மற்றும் Dara இருவரும் நண்பர்கள். நடேரிடமிருந்து, டரா ஒரு புத்தகத்தை வாங்கி இருக்கிறான். அதைத் திரும்பிக் கொடுக்கிறான் அன்று. புத்தகத்தின் அட்டை கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் கோபத்தில் டராவின் புத்தகத்தை கிழிக்கிறான். அவன் திருப்பி, புத்தகப் பையை கிழிக்க, அவன் பேனாவை உடைக்க, இருவரும் மாறி மாறி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். கடைசியில் இருவருக்கும் தலையில் காயம் மற்றும் கண்ணில் காயம் ஏற்படுகிறது. இது ஒரு தீர்வு.

இன்னொரு தீர்வு. புத்தகம் கிழிந்து இருப்பதைப் பார்த்ததும், நடேர் டராவிடம், புத்தகம் கிழிந்து இருப்பதைச் சொல்கிறான். டரா புத்தகத்தை ஒட்டித் தருகிறான். தொடர்ந்து இருவரும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வருவது இரண்டு சிறுவர்கள் என்றாலும், இது பெரியவர்களான நமக்கும் தான். கொஞ்சம் விட்டுக் கொடுத்து, கோபம் இல்லாமல் பேசினால் எல்லோருமே நமக்கு நண்பர்களாகவே நீடிப்பார்கள்.

அது போல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரேயொரு தீர்வு மட்டும் தான் என்பதை இந்தப் படம் பொய்யாக்குகிறது. கொஞ்சம் யோசித்தால், நல்ல தீர்வை நாம் கண்டடையலாம். 

Two solutions for one problem

Thursday, July 5, 2012

கர்ண மோட்சம்

எனது சிறு வயதில், ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் 'நல்லதங்காள்' கதையைப் படிக்க ஒரு பெரியவர் வருவார். மைக் வைத்து, ரேடியோ கட்டி, அவருக்கு பெரிய வீட்டில் இருந்து கொண்டு வந்த சேரைப் போட்டு, பூஜை போட்டு என வாரக் கணக்கில் கதை சொல்வார். உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாடும் போதும், உடுக்கையை நிறுத்தி விட்டு கதை சொல்லும்போதும், அனேகமாக பெண்கள், நல்லதங்காளை தங்கள் சகோதரி போல நினைத்துக் கொண்டே அழுவார்கள். கீழே போட்டு உட்கார சாக்குப் பையும், போர்த்திக்கொள்ள போர்வையும் கொண்டு போய் விடிய விடிய கதை கேட்டு, அங்கேயே தூங்கி விடிகாலையில் எழுந்து வருவோம்.

கொஞ்ச வருடம் கழித்து, அந்தப் பெரியவரை அழைக்காமல், வீடியோப் படம் என்று ஒரு திருவிழாவன்று சொல்லி, ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கினார்கள். 'திருவிளையாடல்' படத்தில் தொடங்கி, கரகாட்டக்காரன், முதல் மரியாதை என்று தொடர்ந்து மூன்று படம் காட்டினார்கள். ஊரே கைகொட்டி, விடிய விடிய சொக்கிக் கிடந்தது 'டெக்' படத்தின் முன்னால்.

இப்போதெல்லாம் அதுவும் வெறுத்துப்போய், ஆர்கெஸ்ட்ரா, குத்து நடனம் என ரசனை மாறிக் கிடக்கிறது கிராமங்களில்.

ஆமாம், ஒரு காலத்தில் 'நல்லதங்காள்' கதை சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்ன ஆனார். அந்தக் கலை என்ன ஆனது. அவரின் வாரிசுகள் அந்தக் கதையைச் சொல்லி இப்பொழுது சம்பாதிக்க முடியுமா... இது ஒரு உதாரணம் மட்டும் தான், இது போல எத்தனை எத்தனை கலைகள் இங்கே மறைந்து கொண்டிருக்கின்றன...

இந்தக் கர்ண மோட்சம் குறும்படம் கூட ஒரு கலையைப் பற்றிதான் பேசுகிறது. அந்தக் கலைஞர்களை நாம் எவ்வாறு மதிக்கிறோம், அந்தக் கலைக்கு நாம் தந்த மரியாதை என்ன?.

கர்ணன் பற்றி சொல்லும்போது;
"மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் வழங்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்"

"கொடுத்துச் சிவந்தன கர்ணனின் கைகள்" என்று சொல்லுவார்கள்.

ஆனால், கர்ணன் வேஷம் போட்ட இந்தக் கலைஞனுக்கு.. ??Wednesday, July 4, 2012

தாயார் சன்னதி

"இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்?"
- வண்ணதாசன்

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான், அட நமக்கும் இப்படி எல்லாம் நடந்திருக்கிறதே.. என்று எண்ண வைத்தது. முக்கியமாக பாட்டிகள் பற்றிய கட்டுரைகள். சுகா அவர்களின் ஊர்ப் பக்கம் ஆச்சி என்று கூப்பிட்டால், எங்கள் ஊர்ப் பக்கம் ஆத்தா என்று கூப்பிடுவோம். எங்கள் ஊர்ப் பக்கமும், பாட்டிகளின் சொந்த ஊர்ப் பெயரைச் சேர்த்தே கூப்பிடுவது வழக்கம். அவர்களின் உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது.

எனது சிறு வயதில் இரவு நேரத்தில், பாம்பை 'பாம்பு' என்று சொல்லக் கூடாது. பூச்சி என்றே சொல்ல வேண்டும். வாய் தவறிச் சொன்னால், திட்டு விழுகும். 'பாம்பு என்ற பூச்சி' என்ற கட்டுரையைப் படித்ததும், 'அட, நம்ம வீட்டிலும் இப்படிதானே சொல்லி வளர்த்தாங்க' என்று நினைத்துக் கொண்டேன்.

தீவிர பக்தரான பெரியப்பாவை Giant Wheel இல் உட்காரவைத்து, பெரியப்பா பயந்து கொண்டே அதில் அமர்ந்திருக்கிறார். சுற்ற ஆரம்பித்ததும் தலை கிறுகிறுக்க, பெரியப்பாவின் குரலுக்கு சுத்துவது நிற்கவில்லை. சுற்றி முடித்ததும், ஒவ்வொரு இருக்கையாக உச்சிக்கு வந்து நின்றது. இவர்கள் அமர்ந்திருந்த இருக்கை இப்பொழுது உச்சியில். சுகா, பெரியப்பாவிடம்

"பெரியப்பா, அங்கே பார்த்தேளா? நெல்லையப்பர் கோயில் தெரியுது" அதற்கு அவர் சொன்ன பதில்,"எந்த மயிராண்டி கோயிலையும் நான் பார்க்கல" . 
இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் எனக்கு சிரிப்பு நிற்க வெகு நேரம் ஆனது.

இப்படி எல்லாக் கட்டுரைகளிலும், எங்காவது ஓரிடத்தில் நமது முகம் தட்டுப் பட்டுக்கொண்டே இருக்கிறது. 

நாம் பார்த்த மனிதர்கள் புத்தகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். சிறு புன்னகையும், பெருஞ்ச்சிரிப்பையும், சிறு துக்கத்தையும் தந்து, நமது கடந்து போன நாட்களையும், நாம் மறந்து போன மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வரவைப்பது இந்தக் கட்டுரைகள்.தாயார் சன்னதி
சுகா
சொல்வனம்
280 பக்கங்கள்

உடுமலை.காமில் வாங்க; தாயார் சன்னதி