Thursday, July 5, 2012

கர்ண மோட்சம்

எனது சிறு வயதில், ஊரில் திருவிழா நடக்கும் சமயங்களில் 'நல்லதங்காள்' கதையைப் படிக்க ஒரு பெரியவர் வருவார். மைக் வைத்து, ரேடியோ கட்டி, அவருக்கு பெரிய வீட்டில் இருந்து கொண்டு வந்த சேரைப் போட்டு, பூஜை போட்டு என வாரக் கணக்கில் கதை சொல்வார். உடுக்கை அடித்துக் கொண்டே அவர் பாடும் போதும், உடுக்கையை நிறுத்தி விட்டு கதை சொல்லும்போதும், அனேகமாக பெண்கள், நல்லதங்காளை தங்கள் சகோதரி போல நினைத்துக் கொண்டே அழுவார்கள். கீழே போட்டு உட்கார சாக்குப் பையும், போர்த்திக்கொள்ள போர்வையும் கொண்டு போய் விடிய விடிய கதை கேட்டு, அங்கேயே தூங்கி விடிகாலையில் எழுந்து வருவோம்.

கொஞ்ச வருடம் கழித்து, அந்தப் பெரியவரை அழைக்காமல், வீடியோப் படம் என்று ஒரு திருவிழாவன்று சொல்லி, ஆளுக்கு ஐந்து ரூபாய் வாங்கினார்கள். 'திருவிளையாடல்' படத்தில் தொடங்கி, கரகாட்டக்காரன், முதல் மரியாதை என்று தொடர்ந்து மூன்று படம் காட்டினார்கள். ஊரே கைகொட்டி, விடிய விடிய சொக்கிக் கிடந்தது 'டெக்' படத்தின் முன்னால்.

இப்போதெல்லாம் அதுவும் வெறுத்துப்போய், ஆர்கெஸ்ட்ரா, குத்து நடனம் என ரசனை மாறிக் கிடக்கிறது கிராமங்களில்.

ஆமாம், ஒரு காலத்தில் 'நல்லதங்காள்' கதை சொல்லி பிழைப்பை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெரியவர் என்ன ஆனார். அந்தக் கலை என்ன ஆனது. அவரின் வாரிசுகள் அந்தக் கதையைச் சொல்லி இப்பொழுது சம்பாதிக்க முடியுமா... இது ஒரு உதாரணம் மட்டும் தான், இது போல எத்தனை எத்தனை கலைகள் இங்கே மறைந்து கொண்டிருக்கின்றன...

இந்தக் கர்ண மோட்சம் குறும்படம் கூட ஒரு கலையைப் பற்றிதான் பேசுகிறது. அந்தக் கலைஞர்களை நாம் எவ்வாறு மதிக்கிறோம், அந்தக் கலைக்கு நாம் தந்த மரியாதை என்ன?.

கர்ணன் பற்றி சொல்லும்போது;
"மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் வழங்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்"

"கொடுத்துச் சிவந்தன கர்ணனின் கைகள்" என்று சொல்லுவார்கள்.

ஆனால், கர்ணன் வேஷம் போட்ட இந்தக் கலைஞனுக்கு.. ??



4 comments:

  1. பல பழைய கலைகள் இப்படித்தான் ஆதரவில்லாமல் அழிந்து வருகிறது. நலிந்து வரும் கலைகளை அரசு பார்வைக்கு கொண்டு சென்று ஆதரவளித்தால் அதன் சுவடுகளையாவது காப்பாற்றலாம்

    ReplyDelete
  2. அஞ்சுநட்சத்திர ஹொட்டேலில் இப்பெல்லாம் இதைக் காமிக்கலாம்.

    அந்த வரும்படியாவது வரட்டுமே.

    ராஜஸ்தான் பயணத்தில் அரண்மனைகளில் தங்கியபோது பொம்மலாட்டம் நிகழ்ச்சிகளை கிராமத்துக் கலைஞர்கள் வந்து நடத்தினார்கள்.

    ReplyDelete
  3. நம்முடைய வேர்கள் இப்படியே காணமல் போகின்றன. தமிழக அரசு என்ன செய்யும்? வேஸ்ட் பொலிடிக்ஸ்

    ReplyDelete