Showing posts with label அசோகமித்திரன். Show all posts
Showing posts with label அசோகமித்திரன். Show all posts

Wednesday, March 6, 2019

18வது அட்சக்கோடு - அசோகமித்திரன்

ஹைதராபாத்தில் நிஜாம் ஆட்சி நடந்துகொண்டிருந்த காலகட்டம். இந்தியாவுடன் சேராமல் தனியாகவே இருந்தது நிஜாம் அரசு. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் ஒரு வருடம் கழித்து இந்தியாவுடன் இணைகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சில நிகழ்வுகளுடன் நாவல் விரிகிறது. 

கதை சந்திரசேகரன் என்னும் பால்ய வயது இளைஞனைச் சுற்றியே செல்கிறது. அவன் படித்த பள்ளி, கல்லூரி, நண்பர்கள், கிரிக்கெட்,  லான்சர் பாரெக்ஸ் எனும் ரயில்வே குடியிருப்பு,  அதில் குடியிருக்கும் பக்கத்து வீட்டினர்,  இவ்வளவு பிரச்சனையிலும் அவர்கள் வளர்க்கும் பசு பற்றி என நாவலில் ஏகப்பட்ட தகவல்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமியர்களுடன் ஏற்படும் சண்டைகள், பின்னர் ஆட்சி மாற்றத்தில் அவர்கள் காட்டும் வேறுபாடு என சொல்லிக் கொண்டே செல்கிறார் அசோகமித்திரன். 

ஒரு சாமான்ய மனிதனின் பார்வையில் நாவல் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் வரலாறு, அரசியல் மாற்றங்கள் பற்றி எல்லாருமே அறிந்திருந்தாலும், அதற்கு நாம் என்ன செய்வது என்பது போலிருக்கும் சாமானியர்கள். காந்தி கொல்லப்பட்டதை அறிந்த சந்திரசேகரன், ஒரு இஸ்லாமியர் தான் அவரைக் கொன்றிருக்கவேண்டும் என நினைப்பதைச் சொல்லலாம். நாம் ஒன்றைச் சொல்லி சொல்லியே சாமானிய மனிதரிடம் எதையும் நிலைநிறுத்தி விட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. 



இந்திய அரசுடன் இணைந்தால், இப்பொழுது இருப்பது போல சுதந்திரமாக இருக்க முடியாது எனச் சொல்கிறார்கள் நிஜாம் ஆதரவாளர்கள். ஆனால், அதையும் மீறி கலகம் செய்கிறார்கள். கலகமோ, போராட்டமோ எப்பொழுதும் அடி வாங்குவது கீழ்த்தட்டு மக்களே. இந்து, முஸ்லீம் என்பதல்ல, அவன் ஏழையாய் இருக்கிறான் என்பதே தகுந்த காரணமாகி விடுகிறது. எப்பொழுதும் எரிக்கப்படுவது ஏழைகளின் குடிசைகளே. இவ்வளவு நடந்துகொண்டிருக்கும்போதும், சில பணக்கார வீட்டு பையன்களும், பெண்களும் கல்லூரிக்கு காரில் வந்து செல்கிறார்கள். 

இந்திய ராணுவம் உள்ளே நுழைந்து, நிஜாம் ஆட்சியைப் பிடிக்கும் நேரத்தில் கலவரம் ஏற்படுகிறது. இஸ்லாமியர்கள் அஞ்சி, வீடுகளுக்குள்ளேயே இருக்கிறார்கள். கலகம் ஏற்படும்போது, ஒரு இரவு நேரத்தில் அங்கே இருக்கும் சந்திரசேகரன் தப்பி ஓடி ஒரு வீட்டுக்குள் குதிக்கிறான். அந்த வீட்டில் மூன்று ஆண்கள், நான்கு பெண்கள், குழந்தைகள், ஒரு கிழவி என எல்லோரும் இவனைக் கண்டு பயப்படுகிறார்கள். 

வறுமை தாண்டவமாடும் இஸ்லாமியக் குடும்பம் என்று உடம்பைப் பார்த்தாலே தெரிகிறது. அந்த மூன்று ஆண்களும் சேர்ந்து சந்திரசேகரனைக் கொன்று விட முடியும். ஆனால் அவர்கள் அஞ்சி இருக்கிறார்கள். அங்கே இருந்த பெண்களில் ஒரு இளம்பெண் அவன் முன்னால் வந்து, தன் உடைகளைக் களைந்து 'எங்களை ஒன்றும் செய்துவிடாதே..' என்கிறாள். வறுமையால் அவளின் விலா எலும்புகள் உடம்பில் துருத்திக் கொண்டு இருக்கிறது. முதன் முதலாக பாலிய வயதில், ஒரு பெண்ணின் நிர்வாணத்தை பார்த்த சந்திரசேகரன் தாங்க முடியாத துயரத்துடன் அந்த வீட்டை விட்டு ஓடுகிறான். 'அந்தப்பெண் ஒரு குழந்தை. அவள் குடும்பத்தைக் காப்பாற்ற இந்தவொரு முடிவுக்கு வந்திருக்கிறாள். அதற்கு நானும் ஒரு காரணம். நான் ஒரு அற்ப புழு.' என்று நினைத்தவாறே ஓடி கொண்டிருந்த சந்திரசேகரன், பொழுது விடிந்திருப்பதையும் உணர்ந்தான். 



Monday, May 6, 2013

மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்)

சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்களின் இந்த நாவல் ஒரு நடிகனுக்கும், சினிமாத் துறையில் இருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நாவல்.

வட நாட்டு நடிகன் சத்யன்குமார். சத்யனுக்கு அவன் குடும்பத்தினர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சில படங்களுக்கு நடிக்க வரும்பொழுது, இங்கே வேலை செய்யும் கோபாலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது நட்பாகத் தொடர்கிறது. சத்யன் குமார் சென்னை வந்தால், கண்டிப்பாக அங்கே கோபால் இருக்க வேண்டும். கோபாலுக்கு இலக்கியத்தில் விருப்பம் உண்டு என்பதால், அது சத்யனுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சத்யனுக்கு, கோபாலைப் பிடிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோபால் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.



கோபாலுக்கு மனைவி, பையன் என குடும்பம் உண்டு. ஒரு பெண் பிள்ளையை கல்யாணம் செய்து, அனுப்பி விட்டார். மனைவி ஜம்பகம். அவளுக்கு கோபால் சினிமாத் துறையில் வேலை செய்வது பிடிப்பதில்லை. நேரம் கெட்ட நேரம் வெளியே போவது, வருவது  என்று இருப்பது பிடிப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணுடன் சுத்திக் கொண்டு வருவதாக சண்டை போடுவாள். சில சமயங்களில் பைத்தியம் பிடித்தது போல, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசுவாள்.


அன்றொரு நாள் சத்யன் சென்னை வந்தபோது, ஜம்பகம் உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்கிறாள். பையனுக்கும் உடம்பு சரியில்லை. அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று வருகிறான் கோபால். காய்ச்சல் குறைந்த பாடில்லை. அன்றிரவே, பையன் இறந்து விடுகிறான். ஜம்பகம் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறாள். அவளை மயக்க மருந்து குடுத்து படுக்க வைக்கிறார்கள். சென்னையில் இருக்கும் சத்யன், விசயத்தைக் கேள்விப்பட்டு கோபால் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருகிறான். அவனிடம் மட்டும் கோபால், பையன் காய்ச்சலால் சாகவில்லை என்றும், நான் பார்க்கும்போது முகத்தின் மீது ஒரு தலையணை கிடந்தது என்றும் சொல்கிறான்.

அதற்குப் பின்னர் ஜம்பகத்தை, அவளின் அம்மா ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறாள். தனியாக இருக்கும் கோபால், சென்னை வீட்டை காலி செய்து விட்டு, ஒரு சாமியாரைத் தேடி கும்பகோணம் அருகில் உள்ள ஊருக்குச் செல்கிறான். பின்னர் சென்னை வரும் சத்யன், கோபாலைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் எங்கே சென்றான் எனத் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ தெரிந்து கொண்டு, கும்பகோணம் பயணிக்கிறான். அவனுக்கு இப்பொழுது உடல்நிலை வேறு நன்றாக இல்லை.


கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் அந்த ஊரில் கோபாலைச் சந்திக்கிறான் சத்யன். அப்பொழுது சாமியார் அங்கே வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது;

"நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்" என்கிறான் சத்யன்.

"எதை பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு நாள் கோபாலின் மனைவியை நீ கையை பிடித்து இழுத்தாய். அல்லது அவள் உன்னை இழுத்தாள். அதனை கோபாலின் பெண்ணும், பிள்ளையும் பார்த்து விட்டார்கள்"

"சுவாமிஜி.."

"இங்கே யாரும் சாமியில்லை... எல்லோரும் பூதம் தான்.. பே.. பே "  எனச் சிரித்து விட்டு சாமியார் செல்கிறார்.

கோபாலிடம், "அவனை இந்த ஆற்றில் குளித்து விட்டுப் போகச் சொல். அவனுக்கு இதுதான் மானசரோவர்".

சத்யன் அது என்னவென்று கேட்க;
"வடக்கே, இமையமலையில் மானசரோவர் என்ற ஏரி இருக்கிறது. சுத்தமான தண்ணீர். அதில் குளித்தால் உடம்பு சுத்தமாகும். பின்னர் மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் போகும். உனக்கு இந்த ஆறுதான் மானசரோவர் என்கிறார் சாமி"

சத்யன் ஆற்றில் இறங்கி குளிக்கப் போகிறான்.

************************
நாவலில் இருந்து;
"மண்ணுக்குள் புதைத்த பின்னர் நாம் எல்லோரும் எட்டு ஆண்டுகளில் மண்ணோடு மண் தான். ஆனால், தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவனுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஆண்டு ஆகும்"
"ஏன்?"
"அவன் தோல் ஏற்கனவே கொஞ்சம் பதப் படுத்தப் பட்டிருக்கும்"

---------------

"டாக்டர், கற்பனையில் நான் கொன்றவர்களை விட, நிஜத்தில் நீங்கள் கொன்றவர்கள் அதிகம்"
-------------

"சுவாமிஜி"
"இங்கே யாரும் சாமி இல்லை.. எல்லோரும் பூதம் தான்"
************************

புத்தகம் வாங்க: உடுமலை.காம்


Friday, January 11, 2013

உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி

நாம் புரிந்து கொண்டதென்பது ஒன்று. ஆனால் உண்மை என்பது இன்னொன்று. சில சமயங்களில் நாம் புரிந்து கொண்டதிலிருந்து, உண்மையானது வெகு தூரத்தில் இருக்கும்

உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆகவே,  ஒருவர் தான் புரிந்து கொண்டதிலிருந்து கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். யார் சொல்வது இங்கே உண்மை?. உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும்.




அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதைகளின் சிறு தொகுப்பான '1945இல் இப்படியெல்லாம் இருந்தது'' புத்தகத்தை விஷ்ணுபுரம் விருது விழாவில் வாங்கினேன். அந்தப் புத்தகத்தில் தான் 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' என்கிற கதை இருக்கிறது. மிகவும் சிந்திக்கச் செய்த கதை.

ஒரு தம்பதியினர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நடுத்தர காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அத்தை வருகிறாள். அத்தை வந்த பின்னர், வீட்டு வேலை மற்றும் சமையலை அத்தையே பார்த்துக் கொள்கிறார். முதலில் ஒரு குறையும் சொல்லாமல் இருக்கும் அத்தை, போக போக வீட்டில் தான் இல்லாமல் எதுவும் நடக்காது போல உரிமை எடுத்துக் கொள்கிறார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட அத்தையைக் கேட்க கூடிய நிலைமையில் இருக்கிறார்கள் இருவரும்.

ஒருநாள் அத்தை இறந்து விடுகிறார். உறவினர்கள் யார் என்பது தெரியாமல் இவர்களாகவே எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின்னர் கணவன் கேட்கிறான், "இருந்தாலும் உன் அத்தைக்கு நாம் ரொம்ப இடம் குடுத்துட்டோம்" என்கிறான். மனைவி சொல்கிறாள்; "என்னது என் அத்தையா? உங்கள் அத்தை என்றல்லவா இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்".

இவ்வளவுதான் கதை, ஆனால் இத்தனை நாட்களாக நாம் புரிந்து கொண்டவை அனைத்தும் உண்மை அல்ல என்பது நினைவுக்கு வராமல் போகாது.

*****************


'உங்கள் வயது என்ன?' என்ற கதையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

முற்காலத்தில் உயிர்களைப் படைத்த கடவுள், வயதை நிர்ணயம் செய்யாமல் விட்டு விட்டார். எனவே  உலகத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகி, இடம் இல்லாமல் ஆகி விட்டது. இனிமேல், எல்லா உயிர்களுக்கும் வயதை நிர்ணயம் செய்து விடலாம் என முடிவெடுத்து, அப்படியே எல்லா உயிர்களுக்கும் வாழ் நாளை முடிவு செய்தார்.

மனிதன், கழுதை, மற்றும் நாய் ஆகிய மூன்று உயிர்களுக்கு மட்டும் வயதைச் சொல்லவில்லை. மூன்றும் கடவுள் முன்னால் வந்து நின்றன. மூன்றுக்கும் நாற்பது வயது என முடிவு செய்தார்.

கழுதை மட்டும், "என்னால், இத்தனை வருடம் பொதியைச் சுமக்க முடியாது. தயவு செய்து என் வயதை பாதியாக குறைத்து விடுங்கள்" என்றது.

உடனே மனிதன், "அந்த இருபதை  எனக்கு கொடுத்து விடுங்கள்", எனக் கேட்க, கடவுள் ஒப்புக் கொண்டார்.

நாய், "என் வயதையும் குறைத்து விடுங்கள்" என்றது, கடவுள் ஆகட்டும் என்றார்.

மனிதன் உடனே எழுந்து, "சாமி.." என வாய் திறக்க, கடவுள் "அப்படியே ஆகட்டும்" எனச் சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார்

அன்றிலிருந்து தான், முதல் நாற்பது வருடங்கள் மனிதனாகவும், அடுத்த இருபது வருடங்கள் கழுதை போலவும், மீதி இருபது வருடங்கள் நாய் போலவும் அலைய நேரிட்டது.

*****************



'1945இல் இப்படியெல்லாம் இருந்தது', 'தோஸ்த்', 'நாய்க்கடி', 'யார் முதலில்?' போன்ற கதைகளும் அருமையானவை. படித்துப் பாருங்கள்.

புத்தகம் வாங்க;
உடுமலை.காம் 




படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி

Monday, May 2, 2011

தண்ணீர் - அசோகமித்திரன்



தண்ணீர். ஓர் அறிவுள்ள உயிரிலிருந்து எல்லா உயிர்களுக்கும் ஆதாரம் தண்ணீர் மட்டுமே. 'தண்ணீர்' நாவலின் முன்னுரையில் அசோகமித்திரன் அவர்கள்; 'வாழ்க்கையில் உன்னதமானதெல்லாம் இலவசம் என்ற பழமொழி அன்று உண்டு' என்று கூறுகிறார். இலவசமாக இருந்த தண்ணீர், வரி விதிக்கப்பட்ட பொருளாக மாறிய காலத்தில் நாம் இருக்கிறோம்.

நட்ட நடு இரவில் தண்ணீர் வரும். எழுந்து பிடித்து வைக்க வேண்டும். ஒரு வாரம் குழாயில் வரவில்லை என்றால், லாரி தண்ணி பிடிக்க வரிசையில் நிற்க வேண்டும். குடிப்பதற்கு சரி, மற்ற வேலைகளுக்கு; அதற்கு உப்புத் தண்ணீர். குடம் ஒரு ரூபாய் என வாங்க வேண்டும். பிடித்த தண்ணீரை சிக்கனமாக புழங்க வேண்டும். தண்ணீர்ப் பிரச்சினையும் இருந்து, அந்த இடத்தில் வாடகைக்கு குடியிருப்போரின் நிலைமை, அதோ கதிதான். அதிலும் கோடை காலத்தில், தண்ணிக்கு வீதி வீதியாக குடங்களை தூக்கிக் கொண்டு போவததைத் தவிர வேறு வழியே இல்லை.

தண்ணீருக்கு அலைந்த கதைகளைச் சொன்னால் அதற்கு முடிவேயில்லை. அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில், எப்பொழுது தண்ணீர் வருமெனத் தெரியாத குழாய்; குடம் ஒரு ரூபாய் என விற்கும் வீட்டுக்காரர்கள்; காலிக் குடங்களை வாங்கிக் கொண்டு போய் காசுக்கு பொதுக் குழாயில் நிரப்பிக் கொண்டு வரும் வண்டிக்காரர்கள்; சாக்கடையும், குழாய் மேடையும் ஒன்றாகவே இருக்கும் பொதுக் குழாய்கள்; ஒரு குடம் தண்ணிக்கு அரை மணி நேரம் வரிசையில் நிற்பது; அங்கே வரும் நீ முந்தி, நான் முந்தி சண்டைகள்; கெட்ட வார்த்தைகள்; வரிசையில் நிற்கும் வயதானவர்களின் இயலாமை என, இந்த தண்ணீரைச் சுற்றிதான் எவ்வளவு பிரச்சினைகள். கிராமம், நகரம் என்று இல்லை. எல்லா ஊரிலும் தண்ணீர் பிரச்சினை சொல்லி மாளாது.

ஆற்றில் தண்ணீர் இல்லை. ஆனால், கடைகளில் ஒரு லிட்டர், ரெண்டு லிட்டர், நாப்பது லிட்டர் என பாட்டில்களில் அடுக்கி வைத்திருக்கிறார்கள். எங்கிருந்துதான் கிடைக்குமோ?.

நாவலைப் பற்றிச் சொல்ல வந்து, தண்ணீர் பிரச்சினைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நாவலில் முழுவதும் வருவதும், தண்ணீர் மற்றும் அதற்கு அலைவது தான். அதாவது நாவலின் கதைப் போக்கு வேறு என்றாலும், 'நீரின்றி அமையாது இந்த உலகு' போல தண்ணீரும் கூடவே வருகிறது.

ஜமுனாவும், சாயாவும் சகோதரிகள். ஜமுனா மூத்தவள், பாஸ்கர் என்பவனுடன், அவன் ஏற்கனவே கல்யாணம் ஆனவன் என்பது தெரியாமல் பழகி, தெரிந்த பின்னரும் அவனை ஒதுக்க முடியாமல், அவன் வரும்போதெல்லாம் வெளியே அவனுடன் செல்கிறாள். அவன் சினிமாவில் அவளுக்கு கதாநாயகி வேடம் வாங்கித் தருவதாகவே இத்தனை நாட்களாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறான்.

சாயா படித்தவள். அவளுக்கும் கல்யாணம் ஆகி, கணவன் மிலிடரியில் இருக்கிறான். அவன் இந்த வருடம் வருகிறேன் என்று சொல்லியிருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயா. அவளுக்கு ஒரு பையனும் உண்டு. சாயா வேலைக்குச் செல்வதால், பையனை அவளின் அம்மா வீட்டில் விட்டிருக்கிறாள். அம்மாவுக்கும் புத்தி சுவாதீனம் இல்லாமலிருப்பதால், பாட்டியும், மாமாவும் பார்த்துக் கொள்வதால், சாயாவும், ஜமுனாவும் தனியே வசித்து வருகிறார்கள்.

பாஸ்கர் அடிக்கடி ஜமுனாவைப் பார்க்க வருவது, சாயாவுக்குப் பிடிக்காமல் அவள் விடுதிக்குப் போகிறாள். தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஜமுனாவை, பக்கத்துக்கு வீட்டு டீச்சரம்மா தேற்றுகிறாள்.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் இடையில் தண்ணீர் பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இறுதியில், ஜமுனா என்ன ஆனாள் ?
சாயா அவளிடம் திரும்ப வந்து விட்டாளா ?
சாயாவின் கணவன் மிலிடரியில் இருந்து திரும்ப வந்தானா?
சாயாவின் பையன் என்ன ஆனான்?
பாஸ்கர் என்ன ஆனான்?

நாவலைப் படித்துப் பாருங்கள்.

நாவலில் ஓரிடத்தில்; "இப்போ பகவானே வந்தாக் கூட கொஞ்சம் திண்ணையில் காத்திருங்கோ, குழாயிலே தண்ணி வரதை நன்னா பார்த்துட்டு வரோம்ன்னுதான் சொல்லுவோம்".

இன்னொரு இடத்தில், ஜமுனாவைத் தேற்றும் டீச்சர், வீதியில் இரண்டு குழந்தைகள் தனது தேவைக்கும், சக்திக்கும் அதிகமான தண்ணீரை கொண்டு செல்வதைப் பற்றி பேசும் காட்சி, தன்னம்பிக்கை வர வைக்கக் கூடிய இடம்.

நடு இரவில் கொட்டும் மழையில், மழைத் தண்ணீர் பிடிக்க எழுப்பும் மனைவி, வீட்டுக்கார அம்மாள், டீச்சரின் மாமியார், கணவன், ஜமுனாவின் அம்மா, பாட்டி என ஒவ்வொரு பாத்திரமும் அதன் கதை சொல்லலும் அருமை.

தண்ணீர் போகும் போக்கிலே தான் நமது வாழ்க்கையும் செல்வது போலத் தோன்றுகிறது.

தண்ணீர்
அசோகமித்திரன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூபாய் நூறு.