Wednesday, August 17, 2011

சிக்னல்















சிக்னல்


சிக்னலில்
நகர்ந்து கொண்டிருக்கின்றன
வாகனங்கள்

கைக்குட்டை, சாக்ஸ், பூ
மற்றும் இன்னபிற விற்கும்
சிறுவர்களின் கல்வியும்
அவர்களின் பால்ய சந்தோசங்களும்
அவர்கள் தொலைத்த நிமிடத்தில் இருந்து.
நகராமல் அப்படியே இருக்கிறது.

***************

ஆம்புலன்ஸ்

மனிதம் மறந்து
விட்டதன் அடையாளமாய்
அவசர வண்டிக்கு
வழிவிடச் சொல்லி
காவலர் ஓடிவருகிறார்.

***************

சுதந்திரம்

ஊரெல்லாம் சுதந்திர தினக்
கொண்டாட்டங்கள்
அன்றும் வாட்ச்மேன் தாத்தா
கொடியேற்றி காலையில் கொடுத்த
சாக்லேட்டோடு
வேலைக்கு வந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி.

Friday, August 12, 2011

தொலைக்காட்சி உலகம்

இருபத்தி நாலு மணி நேர செய்திகள்
இருபத்தி நாலு மணி நேர விளையாட்டு
இருபத்தி நாலு மணி நேர திரைப்படங்கள்
இருபத்தி நாலு மணி நேர பாடல்கள் என
இருபத்தி நாலு மணி நேரத்தில்
ஒரு நிமிடமும் வீணாவதில்லை..

விடுமுறை தினங்களும், பண்டிகைகளும்
நடிகர் பேட்டிகள், விளம்பரங்கள்
முதல் முறையாக ஒளிபரப்பாகும் வரலாற்றுப் படங்கள்
என சுமூகமாகவே கழிகின்றது..

மீதி நாட்களுக்கு, இருக்கவே இருக்கிறது..
எப்போது முடியும் எனத் தெரியாத
நெடுந் தொடர் கதைகள்..

சமையலுக்கு, அழகுக்கு,
நோய்களுக்கு, மனை வாங்குவதற்கு,
ராசிக் கற்கள், ஜோதிடம் என எல்லாவற்றையும்
சொல்லித் தருகிறார்கள் அல்லது விற்கிறார்கள்.

பெரும் நேரத்தை விழுங்கும்
இதன் இயக்கத்தை நிறுத்தினால்
நம் உலகமும் சுருண்டு கொள்கிறது
நம் வீட்டுக்குள்.


Wednesday, August 10, 2011

பாலிதீன் பைகளில் டீ !

இரண்டு மூன்று நாட்களுக்கு வீட்டு வேலைகள் இருப்பதால், வேலைக்கு ஆட்கள் வந்திருந்தார்கள். பதினோரு மணிக்கு டீ வாங்க காசு கேட்டார்கள். வேலைக்கு வந்தது மூன்று பேர். ஒருவர் மட்டும் பணத்தை வாங்கிக் கொண்டு கடைக்குப் போனார். வரும்போது, பாலிதீன் பையில் வாங்கிய டீயோடு, கூடவே மூன்று பிளாஸ்டிக் கப்புகளும் வாங்கி வந்திருந்தார்.

இப்படி டீ வாங்கி குடிக்காதீர்கள் என்று சொன்னேன். காதிலேயே போட்டு கொண்டதாகத் தெரியவில்லை. இவன் போய் சொல்ல வந்துட்டான் என நினைத்திருக்கலாம்.

எல்லா டீக் கடைகளிலும் பாலிதீன் பைகளில் கொதிக்க கொதிக்க ஊத்தி தருகிறார்கள். இப்படி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அவர்களுக்கு தெரிந்திருக்குமா?. இப்படி குடிப்பவர்கள் பெரும்பாலும் கட்டிட வேலைக்கு செல்பவர்களே.

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை போட்டாலும், மறைத்து வைத்து பயன்படுத்தும், நமக்கு அதன் தீமைகள் எப்போது தெரியப் போகின்றன?.

வீதிக்கு நாலு டீக் கடைகள் இருக்கும் நம் ஊர்களில் எப்படி இதை சமாளிப்பது?. என்னதான் தடை போட்டாலும், மக்களாகத் திருந்தாமல் பாலிதீன் என்னும் நஞ்சை அழிக்க முடியுமா?

இந்த உலகை காப்பாற்ற என்ன செய்யப் போகிறோம் நாம்...?

பழைய பதிவொன்று: பாலிதீன் என்னும் பிசாசு..




Tuesday, August 9, 2011

குறும்படம்: துருவ நட்சத்திரம்

நேற்று இந்த 'துருவ நட்சத்திரம்' குறும்படம் கண்ணில் பட்டது.
பிடித்ததால் உங்களுக்காக இங்கே;






Wednesday, August 3, 2011

சிநேகம்














எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.

பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.

தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.

மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Monday, August 1, 2011

புதிய இடம்: வால்பாறை

கொஞ்ச நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு நண்பர்கள் சென்றிருந்தோம். மலை என்றாலே பனி, சில்லென்ற காற்று, பசுமை, நெடிது உயர்ந்த மரங்கள், எப்பொழுதும் பூ பூவாய் தூறும் மழை என நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நாங்கள் செல்லும் வழியில் நிறைய குரங்குகளும், ஒரே ஒரு வரை ஆடும் பார்க்க நேர்ந்தது. போகும் வழியெல்லாம் தேயிலைத் தோட்டங்கள்.

மனிதன் மலை வளங்களைச் சுரண்டிக் கொண்டு இருந்தாலும், அவைகள் இன்னும் கொஞ்சம் தேக்கி வைத்திருக்கின்றன. அவசர கால உலகத்தில், இது போன்ற இடங்களே நம்மை ஒரு மகிழ்ச்சியான நிலைக்கு கொண்டு செல்கின்றன.

அங்கே எடுத்த ஒரு சில புகைப்படங்கள்;