Showing posts with label இயற்கை வேளாண்மை. Show all posts
Showing posts with label இயற்கை வேளாண்மை. Show all posts

Thursday, March 31, 2016

அஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை

கரும்பைப் பிழிந்து வரும் பாகைக் காய்ச்சினால், வெல்லம், சர்க்கரை போன்றவை கிடைக்கும். இதனைத்தான் நாம் பன்னெடுங்காலமாக பயன்படுத்தி வந்தோம். கூடவே, தேன், கருப்பட்டி போன்றவற்றையும் சுவைக்காகப் பயன்படுத்தினோம். 

வெள்ளை தவிர நமக்கு மற்ற நிறங்கள் பிடிக்காதே!. பழுப்பு நிறத்தில் இருக்கும் நாட்டுச் சர்க்கரையை, பல இரசாயனங்கள் கலந்து வெள்ளை ஆக்குகிறோம் என்று மாற்றினார்கள். நம்மையும் அந்த வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றினார்கள். ஒரு பொருளை, அதன் இயற்கை நிறத்திலிருந்து வேறு நிறத்திற்கு மாற்ற உபயோகித்த இரசாயனங்கள் 'உண்ணத் தகுந்த அளவில்' உள்ளது என்று கருதியிருக்கக் கூடும். ஆனால், ஒருவர் எடுத்துக் கொள்ளும் உணவைப் போல இன்னொருவர் எடுத்துக் கொள்வதில்லை. அதிகமாக எடுத்துக் கொள்ளும் நபர் அதிக இரசாயனங்களை உட்கொள்ள நேரிடுகிறது.



உதாரணமாக பானங்கள் மற்றும் உணவு வகைகளில் அளவுக்கதிகமான சர்க்கரையைப் பயன்படுத்துகிறார்கள். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களைக் கவர, திகட்டும் அளவுக்கு சுவைக்காகப் பயன்படுத்தும் சர்க்கரை, பல நோய்களை நம் உடலுக்கு ஏற்படுத்துகிறது. முக்கியமாக, கேன்சர் போன்ற தீவிர நோய்களை வரவழைக்கும் சில இரசாயனங்கள் வெள்ளைச் சர்க்கரையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

நாம் முக்கியமாக கேட்க வேண்டியது, பழுப்பு நிறத்தில் இருக்கும் சர்க்கரையை ஏன் அவர்கள் நிறம் மாற்றினார்கள்?. கையாள்வதற்கு எளிது, மின்னும் அழகு, கைகளில் ஒட்டாதது, இரசாயன நிறுவனங்களின் விற்பனை, உலக அரசியல்...என நிறையக் காரணங்களை நாம் கூறிக் கொள்ளலாம். 

ஆனால் எல்லாவற்றையும் தள்ளிவிட்டு பார்த்தோமானால்.. அந்த வெள்ளைச் சர்க்கரையை காசு கொடுத்து வாங்கியது நாம் தானே. அதன் சுவைக்கு அடிமையானதும் நாம் தானே. ஏன் அதை நாம் தொடர்ந்து வாங்குகிறோம்?. 



நாம் இனிமேல் வெள்ளைச் சர்க்கரையைப் பயன்படுத்தப் போவதில்லை என்பதில் தொடங்குகிறது நம் உடல் நலம். 

வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றான, கலப்படம் அற்ற நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி போன்றவற்றை பயன்படுத்துவோம். இவை மயக்கும் சுவைகளை அளிப்பதில்லை,மின்னும் நிறத்தில் இல்லை. ஆனால், உடல் நலம் பேணும் அவை. ஒரு நாளும் அவை நோய்க் காரணிகளை உருவாக்காது.

Tuesday, February 24, 2015

தரு இயற்கை அங்காடி(Tharu Organic, Kovai)

தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம். 



அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம். 

பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது. 

கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பசுமை விகடன் கட்டுரைகள், மசானபு புகோகா அவர்களின் புத்தகங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது. 



கடை ஆரம்பிக்கலாம் என கடை தேடி அலைந்தோம். ஆனால் வாடகை, இடம் என எதுவும் சரியாக அமையவில்லை. ஏன், நம் வீட்டிலேயே சிறு கடை போல ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். இதோ நேற்று (23/02/2015) அன்று "தரு இயற்கை அங்காடி" என்ற பெயரில், கோவையில் எங்கள் வீட்டின் முன்பாகவே கடையைத் துவங்கி விட்டோம். 

எங்களிடம் அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த நிலக்கடலை, தட்டைப் பயிறு, கொள்ளு போன்ற பருப்பு வகைகளும்,சுத்தமான கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை கிடைக்கும். 

நீங்கள் கோவை மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றால், ஒருமுறை வருகை தந்து பாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 




எங்கள் முகவரி:
தரு இயற்கை அங்காடி 
C-285, சேரன் மாநகர்,
6-வது பேருந்து நிறுத்தம் அருகில்,
விளாங்குறிச்சி,
கோவை - 641 035 

Tharu Organic,
C-285, Cheran Managar,
Near 6th Bus Stop,
Vilankurichi,
Coimbatore - 641 035.

Friday, July 25, 2014

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால்,  ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்?. இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா.

***********

நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. 'உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்று சொல்வார்கள் ஊரில். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும்.. அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் என பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை விடுத்து, விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கும்.

இயற்கை முறை விவசாயத்தில், நாம் நுழைவதற்கு தடையாக இருப்பது அந்த பயமே. ஆனால், நம்மாழ்வார் போன்ற சில ஆசான்கள் நமக்கு வழிகளைக் காட்டுவார்கள். நடக்க வேண்டியது நாம்தான்.  அப்படி ஒரு ஆசான்தான், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா அவர்கள்.


இளம் வயதில், தாவரங்களில் வரும் நோய்களைக் கண்டறியும் ஆய்வுகளில் பணி செய்திருக்கிறார். இயற்கை முறை விவசாயம் மீது நாட்டம் கொண்டு, தன் தந்தையின் ஆரஞ்சுப் பழத் தோட்டத்தில் இயற்கை முறையைப் புகுத்துகிறார். ஆனால், ஒரே மாதிரியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், பயிர் வளர்ப்புக்கு பழக்கப்பட்ட அந்த மரங்கள் பட்டுப் போகின்றன. அவரின் தந்தை, இது சரிப்பட்டு வராது எனச் சொல்ல, மீண்டும் ஆய்வு வேலைக்கே செல்கிறார்.

இயற்கை முறை விவசாயம் மீதான ஆர்வம் தணியாமல் இருக்க, எட்டு வருடங்கள் கழிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார் ஃபுகோகா. அதன் பின்னர், எந்த ஒரு நவீன முறைகளைப் பின்பற்றும் உயர்தர பண்ணையைக் காட்டிலும், அவரின் பண்ணையில் விளைச்சல் அதிகரிக்கிறது. அவரின் பண்ணையைத் தேடி வந்து, அங்கேயே அவருடன் தங்கி இளைஞர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்கிறார்கள்.



***********

இயற்கை விவசாயத்துக்கு முக்கியமான நான்கு அடிப்படை விதிகளைச் சொல்கிறார்;

1. நிலம் உழப்படக் கூடாது

நிலத்தை எப்பொழுதும் உழவே கூடாது. நிலத்தை உழும்பொழுது, மேல் மட்டத்தில் உள்ள மண்புழுக்கள், நுண்ணியிரிகள் கொல்லப் படுகின்றன. மண்ணின் அடியில் உள்ள சில களைப் பூண்டுகள், மேலே வந்து களைகளும் பெருகுகின்றன. நிலத்தை உழுவது என்பது, அந்நிலத்தை மேலும் கெடுப்பதே என்கிறார் ஃபுகோகா.

2. உரங்கள்

உரங்கள், இரசாயனங்கள் அன்றி வேறில்லை. அவற்றை முதலில் பயன்படுத்தும் பொழுது, விளைச்சல் அதிகரித்தாலும், ஒவ்வொரு முறையும் உரங்களை அதிகப்படுத்த வேண்டும். செலவும் ஏறிக்கொண்டே போகும். மண்ணின் தரமும் கெட்டு, சூழலையும் கெடச் செய்கின்றன உரங்கள்.

3. களைகள்

நிலத்தை உழாமல் இருப்பதன் மூலம் பாதிக் களைகள் கட்டுப்படும். மீதி இருப்பதை, வைக்கோல்களைப் பரப்புவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களைகள் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை. வழக்கமாக,  களை எடுத்தல் என்பது மிகவும் செலவு வைக்கக் கூடியது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறார் ஃபுகோகா.

4. பூச்சிக்கொல்லிகள்

இயற்கைக்கு ஓர் சமன்நிலை உண்டு. ஓர் உயிர் பெருகும்போது, அதை உண்ண இன்னொரு உயிர் உண்டு. அது ஒரு சங்கிலி போன்றது. [ஒரு சமயம் எங்கள் வீட்டில் வளரும் வாழை மரங்களில், பச்சைப் புழுக்கள் பெருகி இலையை மடித்து வளர்ச்சியைப் பாதித்தன. ஆனால் குருவிகள், அதைக் கொத்தி கொத்தி தனக்கு உணவாக்கிக் கொண்டன. எந்த மருந்தும் தெளிக்காமல், அவைகள் மறைந்து விட்டன] நாம் ஒரு பூச்சியைத் தடுக்க, இன்னொரு பூச்சி பெருகி விடும். இவ்வாறு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது, காலப்போக்கில் சூழலை மிகவும் கெடுத்துவிடும் என எச்சரிக்கிறார் மசானபு ஃபுகோகா.

***********

வைக்கோலும், களிமண் உருண்டைகளும்

இவரின் இயற்கை முறை வேளாண்மையில், முக்கிய இடம் வகிப்பது வைக்கோல். அறுவடை செய்த பின்னர், அந்த வைக்கோலை அதே நிலத்தில் அப்படியே பரவலாகப் போட வேண்டும். இதனால் களைகள் கட்டுப்பட்டு, வைக்கோல் மக்கி கரிம உரமாக மாறிவிடும். ஒவ்வொரு பயிர் சுழற்சியின் போதும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கிறார். இன்று அவரின் நிலத்தில், மண் மிகுந்த வளத்துடன் உயர்ந்துள்ளது.  விதைகளை அப்படியே தூவாமல், ஒரு சிறு களிமண் உருண்டையில் பொதிந்து தூவ வேண்டும் என்கிறார். இதனால், எலி போன்ற விலங்குகள் விதைகளை நாசப்படுத்துவதும் குறைந்து, முளைக்கும் திறனும் அதிகரிக்கும் என்கிறார்.

இயற்கை வேளாண் பொருட்களின் விலை

சந்தையில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள், மற்ற பொருட்களைக் காட்டிலும் விலை அதிகம் தான். இயற்கை முறையில் பயிரிடுவது என்பது, மிகுந்த செலவன்றியும், குறைந்த உழைப்புடனும் செய்யப்படுவதால் விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து என்கிறார் ஃபுகோகா.



ஒற்றை வைக்கோல்

மசானபு ஃபுகோகா சொல்கிறார்;
"இந்த மலைக்குடிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நடுவே, உடலாலும், மனதாலும் சோர்ந்து போன, அனைத்திலும் நம்பிக்கை இழந்த சிலரும் வருவதுண்டு. அவர்களுக்கு ஒரு சோடிக் காலணிகள் கூட வாங்கித் தருவதற்கு சக்தியற்ற இந்த வயதான விவசாயிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

ஒரே ஒரு வைக்கோல்!

இந்த ஒற்றை வைக்கோலில் இருந்து ஒரு புரட்சியைத் தொடங்கலாம். "
***********

இதோ அந்த வயதானவரின் கைகளில், அந்த ஒற்றை வைக்கோல். மசானபு ஃபுகோகா - விடமிருந்து, அந்த ஒற்றை வைக்கோலைப் பெற நாம் முன் வர வேண்டும்.

இந்தப் புத்தகத்தில், இயற்கை முறை விவசாயம் மட்டுமில்லை.. தத்துவம், உணவுமுறை, உடல் நலம் என அனைத்தையும் பற்றிப் பேசுகிறார் மசானபு ஃபுகோகா. 
படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
***********
ஒற்றை வைக்கோல் புரட்சி
ஆசிரியர்: மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்
எதிர் வெளியீடு
படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி