Showing posts with label எம்.டி. வாசுதேவன் நாயர். Show all posts
Showing posts with label எம்.டி. வாசுதேவன் நாயர். Show all posts

Monday, August 26, 2024

நிர்மால்யம் - எம்.டி.வாசுதேவன் நாயர்

மலையாளத்தில் வெளிவந்த படம் நிர்மால்யம் (1973).  இந்த படத்தை எழுதி, இயக்கியவர் எம்.டி.வாசுதேவன் நாயர். அவர் முதன்முதலாக இயக்கிய படமும் கூட. அப்படத்தின் திரைக்கதையை தமிழில் மீரா கதிரவன் மொழி பெயர்த்துள்ளார். 

அந்தக் காலத்தில் ஒரு வெளிச்சப்பாட்டின் வறுமையை, இயலாமையை நம்மை உணர வைக்கும் கதை நிர்மால்யம். ஒரு கையில் சிலம்பும், மறுகையில் பள்ளிவாளும், இடுப்பில் சலங்கைகளும் கட்டி ஆடும் வெளிச்சப்பாட்டை    தமிழில் அருள் வாக்கு சொல்பவர் என்று கூறலாம். நெற்றியில் பள்ளி வாளால் வெட்டிக் கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுவார்கள். 



தனது தந்தையான பெரிய வெளிச்சப்பாடு ஆடிய காலங்களில் குடும்பத்துக்கு வருமானம் குறைவில்லாமல் இருந்திருக்கிறது. கோவிலில் தொடர்ந்து பூஜைகளும் நடக்கும். எனவே கொஞ்சம் வசதியாகவே இருந்திருக்கிறார்கள். கோவில் நிர்வாகிகளுக்கு கோவிலைப் பராமரிக்க மனதில்லாமல், பூஜை குறைய வருமானம் குறைந்து வறுமை வாட்டுகிறது. வெளிச்சப்பாடுக்கு அப்பு என்ற மகனும், அம்மிணி என்ற மகளும், இரண்டு சிறிய பெண் குழந்தைகள் என நான்கு பிள்ளைகள். மனைவி பெயர் நாராயணி.  பெரிய வெளிச்சப்பாடு இப்போது முதுமையில், வாய் பேச முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார்.

கோவிலில் ஒருநாள் பக்தரின் வேண்டுதல் பூஜை நடக்கிறது. பூஜை நடந்தால் செண்டை மேளம், வெளிச்சப்பாடு, வாரியர் என எல்லாரும் வரவேண்டும். பூஜை முடிந்து பூஜைக்கு உண்டான பணம் மட்டுமே கொடுக்கிறார் வேண்டிய பக்தர். அதைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது மேளம் அடித்தவர் இந்த பணத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் எனக் கோபப்பட்டு போகிறார். கோவில் நம்பூதிரி எனக்கு இந்த வேலையே வேண்டாம், வேறு ஆளை பூசைக்கு வைத்துக்கொள்ளட்டும் என அவரும் ஊரை விட்டுப் போகிறார். வெளிச்சப்பாடுக்கும் குறைந்த தொகையே வருகிறது. இவ்வளவு குறைந்த தொகைக்கு, எதுக்காக ஆவேசப்பட்டு வேகமாக ஆடி, மண்டையில் ரத்தம் வருமாறு அடித்துக்கொள்ள வேண்டும், இந்த அளவுக்கு எல்லாம் போக வேண்டாம் என அவரிடம் சொல்கிறார்கள். அதற்கு வெளிச்சப்பாடு "இந்த நடைக்கு வந்து, பள்ளி வாளை எடுத்து அந்த முகத்தை (தெய்வத்தை) பார்த்தால் .. எல்லாமே மறந்து போய்விடும்" என்கிறார். 

வெளிச்சப்பாடின் மகன் அப்பு வேலைக்கு முயன்று கொண்டிருக்கிறான். இரண்டு ரூபாய் கேட்டால் கூட தர இயலாத தந்தை மேல் அவனுக்கு கோபம் வருகிறது. ஒருநாள் பள்ளிவாள், சலங்கை, சிலம்பம் என எல்லாவற்றையும் பழைய பாத்திரக்காரனுக்கு போடுகிறான். தெய்வத்தின் பொருளை நான் வாங்க மாட்டேன் என பாத்திரக்காரன் சென்று விடுகிறான். அந்நேரத்தில் அங்கே வந்த வெளிச்சப்பாடு, அவனை வீட்டை விட்டுப் போகச் சொல்கிறார். அவனும் போய்விடுகிறான். பிறகு அவனை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடிவதில்லை. 


புதிதாக வந்த கோவில் நம்பூதிரி இள வயதுள்ள உண்ணி நம்பூதிரி. வெளிச்சப்பாடின் மகள் அம்மிணிக்கும், உண்ணிக்கும் காதல் பூக்கிறது. அரசாங்க வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் உண்ணி நம்பூதிரியை நம்புகிறாள் அம்மிணி. ஆனால் அவனின் தந்தை வேறு ஒரு வரனை நம்பூதிரிக்கு நிச்சயம் செய்துவிட, அந்த காதல் கைகூடாமல் போகிறது. 

அந்தக் காலத்தில் அம்மை, தொற்று வியாதிகள் என பல நோய்கள் வந்ததால் அம்மனுக்கு வேண்டுதல் நிறைய இருக்கும். வெளிச்சப்பாடுக்கு வேலையும், வருமானமும் குறைவில்லாமல் இருக்கும். "ஏதாவது நோய் வந்தால், உங்களுக்கு வருமானம் வரும்" என்று ஒருவர் கூற, அப்படியெல்லாம் எதுவும் நடக்க கூடாது என்றே சொல்கிறார் வெளிச்சப்பாடு. ஆனால் கொஞ்ச நாட்களிலேயே ஊரில் ஒரு சிலருக்கு அம்மை வார்க்கிறது. அம்மனுக்கு நீண்ட காலமாக குருதி பூசை நடக்காததால் தான் அம்மை வந்திருக்கிறது, பூசையை நடத்த வேண்டும் என முடிவு செய்கிறார்கள் ஊர் மக்கள். 

நீண்ட காலம் கழித்து வெளிச்சப்பாடு சுறுசுறுப்பாகிறார். பூசை நடத்த எல்லோருடனும் சேர்ந்து பணம் வசூல் செய்கிறார். அதிலிருந்து ஒரு பைசா கூட அவர் செலவு செய்வதில்லை. தெய்வம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை ஊர் மக்கள் உணர்ந்தால் போதும் என்ற சந்தோசம் அவருக்கு. 

பூசை நடக்க இருக்கும் அன்று அவருக்கு ஒரு துயரமான விஷயம் தெரியவருகிறது. மைமுண்ணி என்பவன் வெளிச்சப்பாடுக்கு கடன் கொடுத்து இருக்கிறான். அவரை எங்கே பார்த்தாலும் கடனைத் திருப்பிக் கொடு என்கிறான். அவ்வப்பொழுது வெளிச்சப்பாட்டின் வீட்டுக்கு வந்து செல்கிறான். வெளிச்சப்பாடின் மனைவி நாராயணியுடன் மைமுண்ணி தொடர்பில் இருப்பதை அறிந்து கையில் பள்ளிவாளுடன் "எனக்கு நாலு பிள்ளைகளை பெற்ற நாராயணி நீயா இப்படி" எனக் கேட்கிறார். அதற்கு நாராயணி, உலகத்தையே வெல்லக்கூடிய பள்ளி வாளின் முன் பயமில்லாமல் "ஆம் நான்தான். நீங்கள் தெய்வம் தெய்வம் என்று சுற்றிக் கொண்டிருந்த பொழுது என் பிள்ளைகள் எப்படி சாப்பிட்டார்கள். உங்கள் தெய்வம் வந்து கொடுக்கவில்லை. வேறு ஒரு ஆணின் முகம் தெரியாமல் வளர்ந்த என்னை, நாற்பது வயதில் இந்த நிலைக்கு தள்ளியது நீங்கள்" என வெடித்து அழுகிறாள். வெளிச்சப்பாடு பிரமித்து நிற்கிறார். 




வறுமை தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்ததை எண்ணி கலங்கும் வெளிச்சப்பாடு, கோவிலில் எந்நாளும் இல்லாத ஆவேசம் கொண்டு ஆடுகிறார். வாளால் அவர் நெற்றியில் வெட்டுவதை தடுக்க வரும் வாரியரை உதறி விட்டு கோபம் கொண்டு ஆடுகிறார். ரத்தம் முகத்தில் வழிந்தாலும் அதை உதறிவிட்டு ஓங்கி நெற்றியில் வெட்டி உயிரற்று சாய்கிறார் வெளிச்சப்பாடு. 

வறுமையின் முன்னால் தெய்வம் கூட பதிலற்று நிற்கிறது. 

==

எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய இப்படம் நிறைய விருதுகள் பெற்ற படம். தமிழில் மீரா கதிரவன் அழகாக மொழி பெயர்த்துள்ளார். சில மலையாளச் சொற்களுக்கு அந்தந்த பக்கங்களிலேயே தமிழில் குறிப்புகள் கொடுத்துள்ளார். 

நிர்மால்யம்
எம்.டி.வாசுதேவன் நாயர் 
தமிழில் மீரா கதிரவன் 


Wednesday, June 2, 2021

நாலுகெட்டு - எம்.டி. வாசுதேவன் நாயர்

பழைய பெருமைகள் உள்ள வடக்கு வீடு, முன்பு 64 பேருக்கு மேலிருந்த பெரிய குடும்பமாக இருந்தது. பின்னர் பங்கு பிரித்ததில் காரணவர் பெரிய மாமா மற்றும் அவரின் அக்கா குடும்பம் என இப்போது வடக்குப்பாடு இல்லத்தில் இருக்கிறார்கள். எட்டு கட்டு வீடாக இருந்து இப்போது நாலு கெட்டு வீடாக சுருங்கி விட்டது. 

சகோதரன் சகோதரிகளுடன் அந்த வீட்டில் பிறந்தவள் பாருக்குட்டி. எங்கேயும் போகாமல் பொத்தி பொத்தி வளர்ந்த அவள், கோந்துன்னி நாயருடன் காதல் கொள்கிறாள். 'எனக்கு நாலுகெட்டு வீடோ, பெரிய நிலமோ இல்லை. ஆனால் உன்னை காப்பாத்துவேன். உனக்கு நம்பிக்கை இருக்கா?' எனக் கேட்க பாருக்குட்டியும் நம்புகிறேன் எனச் சொல்லி கல்யாணம் செய்துகொள்கிறாள். ஒரே ஊர் என்றாலும்  திருமணத்துக்குப் பின்னர் பிறந்த வீட்டுடன் எந்த தொடர்பும் இல்லை பாருக்குட்டிக்கு.  வடக்கு வீீட்டில் உள்ளவர்கள், பாருக்குட்டிக்கு புலை(இறந்து விட்டவளாக கருதி செய்யும் சடங்கு) செய்து விடுகிறார்கள். 

சிறு நிலமும், ஒரு வீடும் உள்ள கோந்துன்னியின் மனையில் குடும்பம் நடக்கிறது. பின்னர் பிறக்கும் ஆண் குழந்தைக்கு அப்புண்ணி என்று பெயர் வைக்கிறார்கள். அப்புண்ணி கைக்குழந்தையாக இருக்கும்போது கோந்துன்னி நாயர் இறந்துவிடுகிறார். அவரின் கூட்டாளியான செய்தாலி, நாயருக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டதாக ஊருக்குள் பேச்சிருக்கிறது. ஆனால் செய்தாலியை காவல்துறை எதுவும் செய்வதில்லை.

பாருக்குட்டி தனியாக மகனை வளர்த்து வருகிறாள். இன்னொரு இல்லத்தில் வேலைக்காரியாக சென்று, கொண்டு வரும் சொற்ப பணத்தில் வாழக்கை நகர்கிறது. பக்கத்து வீட்டில் இருக்கும் முத்தாச்சி பாட்டி அப்புண்ணிக்கு பழைய கதை எல்லாம் சொல்லுகிறாள். 'கீழ விட்டால் எறும்பு கடிக்கும், மேலே விட்டால் பேன் கடிக்கும்னு வளர்ந்தவ பாருக்குட்டி. இப்போ அவ வேலைக்காரியாக வேலைக்கு போறா. இதுவும் ஒரு யோகம்தான். உனக்கு நெறைய சொந்தம் உண்டு'  என்று சொல்கிறாள் முத்தாச்சி பாட்டி.

ஒருநாள் வடக்கு நாலுக்கட்டு வீட்டுக்கு அவனை அழைத்துச் செல்கிறாள் பாட்டி. அன்று அங்கே நாக பூஜை நடக்கிறது. இரவு முழுவதும் பூஜை நடந்ததால் அப்புண்ணி அங்கேயே தூங்கி விடுகிறான். காலையில் அவன் அங்கே இருப்பதை அறிந்த பாருக்குட்டியின் அம்மாவான அம்மும்மா பாட்டி அவனை கொஞ்சுகிறாள். அங்கே இருப்பவர்களுக்கு, பெரிய மாமா வந்தால் திட்டுவார் என பாட்டியிடம் சொல்கிறார்கள். சொன்னவாறே அவர், அப்புண்ணியை திட்டி வீட்டை விட்டு துரத்தி விடுகிறார்.

எந்த ஆணின் முகத்தையும் ஏறிட்டுப் பார்க்காத பாருக்குட்டி தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கிறாள். அப்புண்ணி மேல் படிப்புக்காக வேறு பள்ளி மாற வேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் சங்கரன் நாயரை நாடுகிறாள். சங்கரன் நாயரை அவளுக்கு முன்பே தெரியும் என்றாலும் தயங்கி தயங்கியே அவரிடம் சொல்லுகிறாள். எப்படியோ இருக்க வேண்டிய பெண்மணி தன்னிடம் உதவி கேட்டதும், அதை நான் பார்த்துக்கிறேன் எனச் சொல்கிறார். பின்னர் வீட்டுத் தோட்டத்துக்கு வேலி அமைக்கவும் உதவுகிறார். பாருக்குட்டியும், நாயரும் பேசிக்கொள்வதை ஊர் திரித்துப் பேசுகிறது . சங்கரன் நாயரும் ஒண்டிக்கட்டையாக இருப்பதே அதற்கு காரணம். அப்புண்ணிக்கு ஊரில் பேசிக்கொள்வது தெரியவர, அவனுக்கு அம்மா மேலும் சங்கரன் நாயர் மேலும் கோபம் வருகிறது. ஒருநாள் அவன் அம்மாவிடம் 'உனக்கு சங்கரன் நாயர் இருக்கிறார் ' எனச் சொல்லிவிட்டு கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறான். 

வீட்டை விட்டு வெளியேறிய அப்புண்ணி, தன் அப்பாவைக் கொன்றதாக சொல்லப்படும் செய்தாலியை சந்திக்கிறான். செய்தாலி 'நாயர் என்கூட வரணும், இல்ல நாலுகட்டு வீட்டுக்குப் போகணும்' எனச் சொல்கிறான். அங்கே யாரும் தன்னை மதிப்பதில்லை, போனால் வெளியே அடித்து அனுப்பி விடுவார்கள் எனச் சொல்கிறான் அப்புண்ணி. 'அந்த வீட்டில் உனக்கும் பங்கு உண்டு, சொத்துக்களில் நீயும் ஒரு வாரிசு, அதனால் உனக்கு உரிமை உண்டு' என்று செய்தாலி சொல்லி அவனை நாலுகெட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான். அங்கே போனதும் அம்மும்மா பாட்டி மகிழ்ந்தாலும், பெரிய மாமா அவனை அடிக்க வருகிறார். பாருக்குட்டியின் சகோதரனான குட்டன் மாமா 'அவன் மேல் கை படக்கூடாது. அவனுக்கும் உரிமை உண்டு' எனச் சொல்ல, பெரிய மாமா அவனையும் திட்டிவிட்டு கோபத்துடன் வெளியே போகிறார். பெரிய அளவில் அவனுக்கு அங்கே வரவேற்பில்லை என்றாலும், அவன் ஒரு ஓரமாக அங்கே தங்கிக்கொள்ள முடியும். இருப்பதை உண்டு அப்படியே பள்ளிக்கும் சென்று வருகிறான். 

அப்புண்ணி வடக்கு வீட்டுக்குப் போனதும், பாருக்குட்டி தனியாக வசித்து வருகிறாள். ஒருநாள் கடும் மழைவெள்ளம். பக்கத்து வீட்டில் உள்ள எல்லோரும் வெளியேறுகிறார்கள். பாருக்குட்டியைக் கூப்பிட அவள் போக மறுத்துவிடுகிறாள். மழை வெள்ளம் ஏறி வருகிறது. வீட்டு வாசல் வரை வந்துவிட்டது. அப்பொழுது யாரோ கதவைத் தட்டும் ஓசை கேட்க கதவைத் திறந்தால் அங்கே சங்கரன் நாயர் தோணியுடன் நின்றுகொண்டிருக்கிறார். 'வாங்க போயிரலாம்' எனக் கூப்பிட, தயக்கத்துடன் தோணியில் ஏறி மயங்கி விழுகிறாள் பாருக்குட்டி. கொஞ்ச நேரம் கழித்து விழித்து 'நாம எங்க போறோம்' என நாயரிடம் கேட்க 'தண்ணி ஏறாத மேட்டுக்கு' எனச் சொல்கிறார். 

வடக்கு வீட்டில் இப்பொழுது நிலைமை சரியில்லை. யாரிடமும் காசு இல்லை. அப்புண்ணிக்கு பள்ளியில் உதவித் தொகை கிடைக்கிறது. அதில் பள்ளியின் கல்வித் தொகை போக மீதியை பாட்டியிடம் கொடுத்து வைக்கிறான். பாட்டியோ தன் மகனான குட்டனிடம் கொடுத்து விடுகிறாள். வடக்கு வீட்டில் விளையும் எல்லாச் செல்வமும் பெரிய மாமாவின் இல்லமான பூந்தோட்டத்துக்கு போவதாக சண்டை வருகிறது. சொத்தைப் பிரிக்க வேண்டும் என குட்டன் முடிவுக்கு வருகிறார். பெரிய மாமா அதெல்லாம் முடியாது என முதலில் தெரிவித்தாலும் பின்னர் சரி என்கிறார். வக்கீல்கள் வந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். 

அப்புண்ணியின் படிப்பும் முடிகிறது. பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண். மேலே படிக்க வசதியில்லை என தன் ஆசிரியரிடம் தெரிவித்து விட்டு, டீ எஸ்டேட்டுக்கு வேலைக்குப் போகிறான். அந்த வேலையை அவனுக்கு வாங்கித் தருவது செய்தாலிகுட்டி. அவன் அப்பாவை கொன்றதாக சொல்லும் அதே செய்தாலி தான் அவனுக்கு உதவுகிறார். பாவ மன்னிப்பு போல அவனுக்கு உதவி செய்கிறார். அந்த வேலையில் அவனுக்கு கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. ஐந்தாறு வருடங்கள் ஓடி விட்டன. அவன் ஊருக்கே திரும்பிப் போகவில்லை. அதைப் பற்றி நினைப்பதுமில்லை. 

ஒருநாள் அவன் தன் சொந்த ஊருக்குப் போக முடிவு செய்கிறான். அப்பாவியான மீனாட்சி பெரியம்மா வீட்டில் தங்குகிறான். அவனிடம் பணம் இருப்பதை அறிந்துகொண்டு, உறவு கொண்டாட வருபவர்களை அவன் கண்டுகொள்வதில்லை. பாகம் பிரித்த பின்னர் நாலுகெட்டு வீடு இப்பொழுது பெரிய மாமாவுக்கு சொந்தம். அவருக்கு அந்த வீட்டின் மேல் கொஞ்சம் கடனிருக்கிறது. அப்புண்ணியிடம் அவர் பணம் கேட்க, அப்புண்ணியோ கடன் எல்லாம் தரமுடியாது வேண்டுமானால் இந்த வீட்டை நானே வாங்கிக்கொள்கிறேன் என்கிறான். முதலில் தயங்கும் அவர், பின்னர் சரி எனச் சொல்கிறார். இப்பொழுது நாலுகெட்டு வீட்டுக்கு சொந்தக்காரன் அப்புண்ணி. பாருக்குட்டியின் மகன் அப்புண்ணியின் வீடு. அப்புண்ணி, அம்மா பாருக்குட்டியையும், சங்கரன் நாயரையும் அந்த வீட்டுக்கு கூட்டி வருகிறான். எத்தனையோ வருடங்கள் அந்த வீட்டில் பாருக்குட்டியின் காலடி படாமல் இருந்த அந்த பரம்பரை வீடு இப்பொழுது அவளுக்கு சொந்தம். 

இந்நாவலில் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். மாளு, பெரிய மாமா, பெரிய மாமாவின் பெண் அம்மிணி, முத்தாச்சி பாட்டி, செய்தாலி என பலர். அப்புண்ணிக்கு உதவும் பலர், அவனிடம் என்ன கிடைக்கும் என எதிர்பார்க்கும் சிலர் என நாவல் முழுதும் மனித மனங்களின் அழுக்குகளையும், தூய எண்ணங்களையும் பார்க்கலாம். அதிலும் ஒரு பெரியம்மா, தனக்கென சொத்திருந்தாலும் அங்கே போகாமல், நாலுகெட்டு வீட்டில் என்ன கிடைக்கும் என அங்கேயே தங்கியிருந்து, அவ்வப்பொழுது 'நானும் என் பிள்ளைகளும் என்ன செய்வோம்' என புலம்புகிறாள். 

மூன்று தலைமுறைகளை சுற்றி நாவல் சுழல்கிறது. அப்புண்ணிக்கு படிப்பு ஒன்றே வாழ்க்கையின் பிடிப்பாக இருக்கிறது. அவனை மீட்பதும், பின்பு அவனுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வர காரணமாக இருப்பதும் படிப்புதான். அந்த வீட்டிலேயே வளர்ந்து படிப்பு வராமல் அதே ஊரில் தங்கி இருக்கும் அவனின் பெரியம்மா பிள்ளைகள் போல அல்ல அப்புண்ணி. பழம் பெருமைகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாது என்று கடைசியில் தான் வாங்கிய அந்த நாலுகெட்டு வீட்டை இடித்து புதிதாக கட்டலாம் என்கிறான் அப்புண்ணி. ஆம், பழம் பெருமைகள் ஒரு வரலாறாக அப்படியே இருக்கட்டும். 

தமிழில் நாவல் மொழிபெயர்ப்பு: குளச்சல் மு.யூசுப்