Monday, May 11, 2020

இந்து ஞானம் ஓர் எளிய அறிமுகம் - க்ஷிதி மோகன் சென்

க்ஷிதி மோகன் சென் சமஸ்கிருத வல்லுநர். தாகூரும் அவரும் நெருங்கிய நண்பர்கள். தாகூரின் அழைப்பை ஏற்று சாந்தி நிகேதனில் சேர்ந்து பணியாற்றி பங்களிப்புச் செய்தவர் சென். ஒரு ஆய்வாளராக அவர் எண்ணற்ற நூல்களை எழுதி இருக்கிறார். ஆங்கிலத்தில் இந்து மதம், அதன் ஞானத் தொடர்ச்சி பற்றி நூல்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் புராணக்கதைகளை விவரிப்பதாக உள்ளது. எனவே, இந்து ஞானம் பற்றிய அறிமுகமாக சிறு நூலை வங்காள மொழியில் எழுதுகிறார். அதை ஆங்கிலத்தில் அவரின் பேரன் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.

மிகச் சிறிய நூலாக இருந்தாலும், அதற்குள் எவ்வளவு சொல்ல முடியுமோ அவ்வளவையும் சொல்லிச் செல்கிறார் சென். சில இடங்களில் விரிவாக சொல்லிக்கொண்டு அடுத்த பகுதிக்கு செல்கிறார். ஒரு சிறந்த அறிமுகப் புத்தகம் இந்நூல்.

மூன்று பகுதிகளாக இந்நூல் உள்ளது.  இந்து மத தோற்றம், வேதங்கள், பழக்க வழக்கம், உபநிடதங்கள், ஆறு தரிசனங்கள், வங்காள பால்கள்(baul) மற்றும் சைவ சித்தாந்தம் போன்ற மற்றைய போக்குகள், தற்கால அறிஞர்கள் பங்களிப்பு என்று விளக்குகிறார் சென். இந்நூலின் மூன்றாம் பகுதியில் முக்கியமான உபநிடத வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளது.




உபநிடதங்கள் எழுதப்பட்ட காலத்துக்குப் பின்னரே பவுத்தம், சமணம் போன்ற மதங்கள் தோன்றி, உபநிடத ஞானத்தைப் பகிர்ந்து கொண்டன என்று சொல்கிறார் சென். இந்தியாவில் தோன்றிய புத்த மதம், இங்கே மறைந்து விட்டது என்பதில் உண்மையில்லை. புத்த மதத்தின் கொல்லாமை போன்ற சில தரிசனங்கள் இந்து மதத்தில் தொடர்ந்து இயங்கி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். 

வங்காளத்து பால் மரபு மற்றி சொல்லும் சென், அவர்களின் பாடல்களில் உள்ள கருத்துக்களை பகிர்கிறார். ஒரு நாடோடி மரபு போல் பால்கள் செயல்பட்டாலும் இந்து ஞானத்தின் ஒரு மரபாக ஏற்றுக்கொள்கிறார். 'தோட்டத்துக்குள் புகுந்த ஒரு பொற்கொல்லன், அங்கே இருக்கும் தாமரையை தன் உரைகல்லில் உரசியே மதிப்பிடுவான்' எனும் கருத்தாழம் மிக்க பால்களின் பாடல்களை குறிப்பிடுகிறார். கபீர், சூஃபி போன்ற மரபுகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆறு தரிசனங்கள் அத்தியாயத்தில் ஒவ்வொன்றைப் பற்றியும் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். ஒன்று பொருளே முதலில் இருந்தது என்கிறது. மற்றொன்று எல்லாமே அணுக்களால் ஆனது என்று சொல்ல, இன்னொரு தரிசனமோ யோகம் செய்து அவனை அறிய வேண்டும் என்கிறது. நியாய தரிசனமோ தர்க்க வாதம் கொண்டு கடவுளை அறிய முற்படுகிறது. வேதங்களின் பாடல்கள் மூலம் இறையை அறிய முயன்றனர். அதிலிருந்து கிளைத்த உபநிடதம், கீதை போன்றவை அதை மறுத்து பிரம்மத்தை முன்வைக்கிறது. அத்வைதம், துவைதம், தனி வழிபாடு என்ற போக்குகள். இப்படி இத்தனை போக்குகள் இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் முரண்பட்டாலும், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் இந்த நாட்டில் அவைகள் இயங்கி வந்தன. 'இது உண்மையில் இந்த சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கு சான்று. ஒன்றையொன்று சகித்துக்கொள்வதே நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல் ஞானத்தின் தாழ்களை திறக்கக்கூடும்' - என்கிறார் சென். 

இந்த நூலின் முக்கியத்துவம் உணர்ந்த ஜெயமோகன் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென சுனில் கிருஷ்ணனிடம்  சொல்லியிருக்கிறார். ஆயுர்வேத மருத்துவரான சுனில் கிருஷ்ணன் தமிழில் மொழிபெயர்க்க, சமஸ்கிருத பரிச்சயம் உள்ள  ஜடாயு - வேதங்கள், உபநிடத வரிகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 




Thursday, May 7, 2020

ஏணிப் படிகள் - தகழி சிவசங்கரன் பிள்ளை

'திருவாங்கூரிலிருந்து குருவாயூர், கொச்சி எனப் போக வேண்டும் என்றால் அடுத்த நாட்டுடன் அனுமதி வாங்க வேண்டுமா' என வியக்கிறாள் கார்த்தியாயினி.

அவளின் கணவர் கேசவபிள்ளை 'பின்னே திருவாங்கூர் தனி நாடாகிவிட்டால் அதுதானே நடைமுறை' என்கிறார்.

கேசவபிள்ளை ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து இப்பொழுது அரசாங்கத்தில் மேல் பதவியான தலைமை காரியதரிசி பதவியில் இருப்பவர். அவருடைய மனைவி கார்த்தியாயினி. பெற்றோர் பார்த்து திருமணம் செய்த பெண். எந்த அலங்காரமும் இல்லாத எளிமையான கிராமத்து பெண்.  



திருவாங்கூர் சமஸ்தானத்தில்  அரசாங்கத்தில் சாதாரண குமாஸ்தா வேலையில் அவர் இருந்தபொழுது, அவளை பெற்றோர் சொன்னதால் கல்யாணம் செய்துகொள்கிறார் கேசவ பிள்ளை. ஆனால் அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் தங்கம்மா என்ற பெண்ணை காதலிக்கிறார். ஏற்கெனவே கல்யாணம் ஆனதை மறைத்து தங்கம்மாளிடம் பழகுகிறார். அவளைப் பயன்படுத்தி பெரிய பதவியை அடைகிறார். ஊரில் கல்யாணம் செய்த மனைவி, இங்கே தங்கம்மாள் என குழப்ப நிலையில் இருக்கும்பொழுது தங்கம்மாளை விட்டு பிரிய நேர்கிறது. 

கணவன் சொல்லை மறுக்காத கார்த்தியாயினி, எதையும் மறுத்து பேசும் தங்கம்மாள்; அலங்கார விஷயங்களிலோ, பொதுவான தகவல்களையோ அறிந்திராத கார்த்தியாயினி, எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என நினைக்கும் தங்கம்மாள் என இரண்டு பெண்களும் எதிரும் புதிருமாக இருக்கிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில், கார்த்தியாயினி எல்லாம் அறிந்த கணவனுக்கே புத்தி சொல்கிறாள், இக்கட்டான நேரங்களில் ஒரு விவேகியாய் அவனுக்கு வழிகாட்டுகிறாள். மாறாக தங்கம்மாவோ, கணவன் என ஒருவனுக்காக, அவனை தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என ஆண்டுகள் பல கடந்து ஆசைப்படுகிறாள்.  

சாதாரண குமாஸ்தா வேலையில் இருந்த கேசவபிள்ளை, தலைமை அதிகாரியாக பொறுப்பேற்கிறார். அந்தப் பதவிக்காக காத்திருந்த எல்லோரின் தலைக்கு மேல் பறந்து சென்று அவர் அதை அடைகிறார். அரசு இயந்திரம் அவரை உள்ளே இழுத்துக் கொள்கிறது. ஒரு பட்டப்படிப்பு படித்தவன் குமாஸ்தா வேலை செய்வதா என அவரை ஏளனம் பேசியவர்கள், இன்று வாயடைத்துப் போகிறார்கள். கொஞ்சம் பொறுமை, தெளிவு என மற்றவர்களை பயன்படுத்திக் கொண்டு அவர் மேலே செல்கிறார். அதற்கு முதல் படியில் ஏற உதவியது தங்கம்மாள், எனவே அவளை எப்போதும் மறக்காமல் இருக்கிறார். 

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு வெளியில் இந்தியா சுதந்திரம் பெற போராட்டம் நடக்கிறது. அதனால் இங்கேயும் போராட்டம் நடக்கிறது. கேசவபிள்ளை காங்கிரஸ் போராட்ட வீரர்களை அடக்கி ஒடுக்குகிறார். திருவாங்கூர் தனி நாடாகும் என நினைத்திருக்கும் கேசவபிள்ளை போன்றோருக்கு அது நடக்காமல் இந்தியாவோடு இணைந்து சுதந்திரம் பெறுகிறது. சுதந்திரம் பெற்றாலும் அரசாங்க இயந்திரம் அதேதானே. இப்பொழுது காங்கிரஸ் ஆட்களுக்கு ஆட்சி நடத்த கேசவபிள்ளையின் உதவி தேவைப்படுகிறது. பின்னர் காங்கிரஸ் கட்சி ஆட்சி முடிந்து கம்யூனிஸ்ட் ஆட்சி வரும்போதே கேசவபிள்ளை பதவியைவிட்டு விலக நேர்கிறது. 

சுதந்திரம் பெற்றாலும், அந்தச் சுதந்திரத்துக்கு பாடுபட்டவர்களை எல்லோரும் மறந்துவிடுகிறார்கள். தியாகிகளுக்கு கொடுக்கக் கூடிய நிலம் கூட மற்றவர்களால் பறிக்கப் பட்டு, அவர்கள் தொடர்ந்து அரசாங்கத்தின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கிறார்கள். பின்னர் தளர்ந்து போய், மடிந்து சாகிறார்கள். இதில் காங்கிரஸ். கம்யூனிஸ்ட் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரே மாதிரி இருக்கிறார்கள் என்பதை தகழி நாவலில் சொல்லிச் செல்கிறார். தியாகம் செய்தவன் வீதியிலும், தியாகம் செய்தது போல நடித்தவர்கள் மின்விசிறிக்கு கீழே அமர்ந்துகொண்டு அடுத்தவர்களை ஏவிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் எங்கும் நிறைந்து இருக்கிறது.

கேசவனின் பெண்பிள்ளை கல்லூரி சென்று கொண்டிருக்கிறாள். இப்பொழுது அவருக்கு தங்கம்மாளிடம் தொடர்பு ஏற்படுகிறது. ஆசிரமம், சாமியார் என சுற்றிக்கொண்டிருந்த தங்கம்மாள் இப்பொழுது கேசவபிள்ளை தன்னுடன் இருந்தால் போதும் எனச் சொல்கிறாள். கொஞ்ச நாட்களில் அவளிடம் இருந்து விடுபட்டு வருகிறார். தங்கம்மாள் இந்த 45 வயதில் கர்ப்பமாக இருக்கிறாள். கம்யூனிஸ்ட் ஆட்சி வருவதால் தான் வேலையை விட்டு விலக நேரிடும் என நினைக்கிறார் கேசவப்பிள்ளை. மகளுக்கு கல்யாணம் செய்து வைக்கவேண்டும், அவளுக்கு ஒரு காதலன் இருக்கிறான் என மனைவி சொல்ல; என்று அவருக்கு இப்பொழுது நிறைய பிரச்சனைகள். 

லஞ்சம் ஊழல் என ஒவ்வொரு அரசாங்க காரியத்துக்கும் பணம் கொடுத்தே வெற்றி பெற முடிகிறது. கஞ்சி குடித்தாவது உயிர் வாழ்வோம் என்று சொல்லும் கார்த்தியாயினி கூட ஓரிடத்தில் ஏலக்காய் தோட்டம் இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறாள். இந்த அரசாங்க வேலையால், கேசவபிள்ளை தாய், தந்தையை இழக்கிறார். சொந்த ஊரில் யாரும் அவருடன் பழகுவதில்லை. ஏன் நண்பர்கள் என்று கூட யாருமில்லை. அவர் பெற்ற செல்வம் அதிகம். அவர் மேலே இருக்கும் படிகளையே பார்த்துக் கொண்டிருந்ததால் கீழே உள்ளவர்களை மறந்து விடுகிறார். ஒரு காலத்தில் கேசவபிள்ளை எந்த வேலையும் இல்லாமல், காசு இல்லாமல் ஒரு விடுதியில் தங்கியிருந்த சமயம், ஒரு கிழவியின் கடையில் காசு கொடுக்காமல்  சாப்பிட முடிகிறது. நிறைய ஆண்டுகள் கழிந்து அவருக்கு அந்த கிழவியின் முகம் நினைவுக்கு வருகிறது. 

திவான்களின் ஆட்சியில் இருந்து, சுதந்திரம் பெற்று, காங்கிரஸ் ஆட்சி அமைத்த அன்றைய திருவாங்கூரின் சரித்திரத்தை சொல்லிச் செல்கிறார் தகழி. பதவிக்கு வேண்டி என்ன வேண்டுமானாலும் செய்பவர்கள், பின்னர் ஊழலில் திளைத்து வருமானம் ஈட்டுபவர்கள், அரசாங்க கதவை தட்ட முடியாத ஏழைகள் என அவர் அன்றைய நிலையை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் தகழி. 

தமிழில்: சி.ஏ. பாலன்