Showing posts with label சின்னஞ்சிறு துளிகள். Show all posts
Showing posts with label சின்னஞ்சிறு துளிகள். Show all posts

Thursday, November 3, 2011

நூலகம் தேவையா?


நூலகம் என்பது வெறும் பொழுதுபோக்கு இடம் என்றுதான் நிறைய பேர் நினைத்திருப்பார்கள் போலத் தெரிகிறது. அது பொழுது போக்கு இடம் இல்லை, அறிவு பொதிந்து கிடக்கும் இடம் என்பதை ஆள்பவர்களுக்கு எப்படி புரிய வைப்பது?.

நூலகம் தேவையா என்று கேட்டால், தேவை என்பது தான் என் நிலைப்பாடு. மருத்துவமனைகள் முக்கியமும் கூட, ஆனால் பரந்து கிடக்கும் சென்னை மாநகரில் அதற்கு ஓரிடம் கூடவா சிக்கவில்லை.

போன அரசு கட்டிய நூலகம் என்பதற்காக, நூலகத்தை இடம் மாற்றும் முடிவு சரியானதல்ல. இந்த நூலகத்தை விட, பெரிய நூலகம் மற்றும் வசதிகள் கொண்ட ஓர் இடத்துக்கு மாற்றினால் பரவாயில்லை. மருத்துவமனையாகவே மாற்றினாலும், அதற்கு தகுந்தது போல இருக்குமா எனத் தெரியவில்லை. புதிதாக கட்டும்பொழுது தேவைகளை அறிந்து கட்ட முடியும்.

எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்கள், இவர்களுக்கு ஓட்டுப் போட்டு அமரவைத்த நம்மை என்ன செய்யலாம்?

எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களின் பதிவு: சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் தமிழக அரசின் முடிவுக்குக் கண்டனம்


Tuesday, November 1, 2011

அரசுப் பள்ளிகளில் ஓர் ஆச்சரியப் பள்ளி

மேட்டுப்பாளையம் அருகிலுள்ள, ராமம்பாளையம் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் திரு. பிராங்க்ளின் என்பவர் பற்றி புதிய தலைமுறை வார இதழ், ஈரோடு கதிர் அவர்களின் வலைத் தளம் மற்றும் எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு என பல முறை அந்தப் பள்ளியை பற்றி அறிந்திருந்தாலும் இன்னும் நேரில் செல்ல முடியவில்லை.



போன சனிக்கிழமை அன்று, சாமக்கோடாங்கி பிரகாஷ் தான் அங்கு செல்லவிருப்பதால், 'வருகிறீர்களா' என்று கேட்டார். என்னால் அன்றும் செல்ல இயலவில்லை. நண்பன் கமலக்கண்ணன் செல்வதாக கூறினான். நண்பர்கள் அங்கு சென்று வந்ததை பிரகாஷ் தனது தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஒரு அரசாங்கம் செய்ய முடியாத ஒரு செயலை, அந்த ஊர் மக்களும் அந்த ஆசிரியரும் சாதித்துக் காட்டி இருக்கிறார்கள். அவர்களுக்கு எனது வணக்கங்கள்.

திரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை
இராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்

எழுத்தாளர் எஸ்.ரா அவர்களின் வலைப் பதிவு
நல்லார் ஒருவர்

பள்ளியின் வலைத்தளம்
இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி




Saturday, June 25, 2011

சிறு துளிகள் (25/06/2011)

சேனல் 4

இலங்கையில் தமிழர்கள் வதம் செய்யப்பட்ட காட்சிகளை இங்கிலாந்து நாட்டின் சேனல் நான்கு ஒளிபரப்பி இருக்கிறது. எந்த ஊடகங்களும் இதைப் பற்றிய விவவரங்களை வெளியிடவில்லை இந்தியாவில். பத்தோடு சேர்ந்து இதுவும் ஒரு செய்தியாக சில சேனல்களில் படித்தார்கள்.

இந்த வார விகடனில் வெளியான கட்டுரையில் 'அந்தக் காட்சிகளை இங்கு இருக்கும் ஊடகங்கள் திரும்ப திரும்ப காட்ட, அது என்ன சாமியாரின் படுக்கை அறையா?' என்று இறுதியாக கேட்டிருந்தார் கட்டுரை ஆசிரியர்.

இதைப் பார்க்கும்பொழுது நமக்கு என்ன தேவை என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக ஊடகங்கள் மாறி வருகின்றன என்பதைத்தான் காட்டுகிறது.

பெட்ரோலியப் பொருட்கள்

செய்தி ஒன்று: கச்சா எண்ணெய் விலை குறைவால், மும்பை பங்குச் சந்தை ஐநூறு புள்ளிகள் ஒரே நாளில் ஏற்றம்.
செய்தி இரண்டு: கச்சா எண்ணெய் விலை உயர்வால், தத்தளித்த (!!) எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு கட்ட நள்ளிரவு முதல் டீசல் மூன்று ரூபாயும், சிலிண்டர் ஐம்பது ரூபாயும் உயர்ந்தது.

இதில் எது உண்மை.. ??
எது நடக்கிறதோ இல்லையோ இன்னும் விலைவாசி ஏறத்தான் போகிறது.


ஈரோடு மாவட்ட ஆட்சியர்

நாம் நம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முட்டி மோதி, இரவு முழுவதும் காத்திருந்து அப்ளிகேசன் வாங்கி, எல்.கே.ஜி படிப்புக்கு முப்பது நாப்பது ஆயிரம் கட்டிக் கொண்டிருக்கும் நிலையில்.. ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன் குழந்தையை, அரசுப் பள்ளியில் சேர்த்திருக்கிறார். அரசுப் பணிகளில் பணியாற்றும் பலரும் பெரிய பெரிய தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துக் கொண்டிருக்க, தன் மகளை அரசுப் பள்ளியில் சேர்த்த ஈரோடு கலெக்டர் அவர்களுக்கு எனது நன்றிகள்.

அரசுப் பள்ளிகளின் தரமும் நாம் அறிந்ததே. கலெக்டரின் குழந்தை தங்கள் பள்ளியில் படிக்கிறது என்று அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் இனி தரமாகப் பாடம் நடத்துவார்கள். கழிப்பறை, விளையாட்டுப் பொருட்கள் என எளிதாக கிடைக்கும். சத்துணவு தரமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள மற்ற பள்ளிகள் வழக்கம் போலதான் இயங்கும். என்ன செய்வது, நமக்கு என்ன ஒவ்வொரு ஊருக்கும் இந்த மாதிரி ஒரு கலெக்டரா இருக்கிறார்?.


Thursday, February 17, 2011

சிறு துளிகள் (17/02/2011)

பிரகதீஸ்வரன்

முன்பெல்லாம் பள்ளிக்கூடம் மெயின் ரோட்டில் இருக்கும். சாராயக் கடை சந்து பொந்துகளில் இருக்கும். இப்போது சாராயக் கடை மெயின் ரோட்டிலும், பள்ளிக் கூடங்கள் சந்து பொந்துகளிலும் இருக்கின்றன. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துவது சாராயக் கடை முதலாளி. அதில் படித்துவிட்டு வேலை கேட்டுப் போனால், மறுபடியும் சாராயக் கடையில்தான் வேலை கொடுக்கிறான்.

ஒரு லிட்டர் சாராயம் தயாரிக்க 30 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ் நாட்டில் எப்படியும் ஒரு வருஷத்துக்கு ஒரு லட்சம் கோடி லிட்டர் சாராயம் விற்கும். இதை தயாரிக்க குறைந்தது 14 டி.எம்.சி தண்ணீராவது வேணும். இவ்வளவு தண்ணீரை வைகை ஆற்றில் விட்டால் ராமநாதபுரம் பக்கம் மூணு போகம் விளையுமே? ஆனா, நம்ம ஆளுங்க அவ்வளவையும் குடிச்சுட்டு ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்துடுறாங்க. அந்த ஒண்ணுக்கு அடிக்க மூணு ரூபாய் கேட்கறான். 'அரிசியே ஒரு ரூபாய்தான்'னு அவன்கிட்ட நியாயம் பேச முடியுமா?. இதைதான் மேடையில் நாடகமாகப் போடுறோம்.

- 'பூபாளம்' பிரகதீஸ்வரன் , சென்ற வார ஆனந்த விகடனில். (நன்றி: ஆனந்த விகடன்)

அதிகாரம், பதவி

ஒரு முதலமைச்சரோ அல்லது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரோ, ஒரு பிரச்சினைக்காக அவர்களின் பதவி மற்றும் அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி எவ்வளவோ செய்யலாம். மத்தியில் வேறு கூட்டணி ஆட்சியோ, அல்லது அந்த உறுப்பினர் எதிர் கட்சியாக இருந்தால் அரசின் கவனத்தை ஈர்க்க போராட்டம் செய்வார்கள். ஆனால், இங்கே அவர்களே ஆட்சி செய்து கொண்டு, அவர்களே உண்ணாவிரதம் இருந்துகொண்டு, அவர்களே போராட்டக் கைதும் ஆகிக் கொண்டு.... இதையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டும் இருக்கிறோம்

தமிழ் வளர்ச்சி

போன வாரத்தில் ஒருநாள் தமிழ் வளர்ச்சி துறை சார்பாக திருப்பூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அரசு ஊழியர்களிடம் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சர் யார் எனக் கேட்டிருக்கிறார் ஒரு அதிகாரி. ஒருவரும் சொல்லாமல் இருக்க, அவரே 'இந்த துறை ஏற்படுத்த பட்ட பொழுது தமிழ்குடிமகன் அமைச்சராக இருந்தார். அதன் பின்னர் தற்பொழுது நமது முதல்வரே இந்த துறைக்கும் அமைச்சர்' என்று கூறியிருக்கிறார். தமிழ் வளர்வது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், தமிழ் இனத்துக்கென்று ஒரு அமைச்சரேனும் இருக்கிறாரா? .

கல்யாண நாள்

காதலர் தினம் வேண்டும், கூடாது என்று நிறையக் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது காதலர்களை துன்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். காதல் என்பது ஏதோ வேற்று நாட்டிலிருந்து வந்தது போல பாவிக்கிறார்கள். சங்க காலத்திலிருந்து காதல் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. இங்கே காதலர்கள் என நான் சொல்வது, இனம், தகுதி, அழகு ஆகியவற்றைப் பார்க்காமல் காதலிக்கும் காதலர்கள் பற்றி. இப்படிக் காதலிக்கும் காதலர்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன். மேம்போக்காக காதலித்து கொஞ்ச காலத்தில் பிரிந்து விடும் 'அவசர மனிதர்களை' விட்டுத் தள்ளுங்கள், உண்மையான காதலர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நிற்க. 'நானெல்லாம் காதலிக்கவில்லை, எனக்கு திருமணமாகி குழந்தைகள் இருக்கின்றன.. எனக்கெல்லாம் எதுக்கு காதலர் தினம்' என அலுத்துக் கொள்பவரா நீங்கள்?. உங்களுக்காகவே "கல்யாண நாள்" என்று ஒரு நாள் இருக்கிறதாம். இந்த நாளைப் பற்றி பகரிந்து கொண்ட பதிவர் திருமதி.சித்ரா அவர்களுக்கு எனது நன்றிகள். அந்த பதிவு கல்யாணம்தான் கட்டிக்கிட்டு. அடுத்த வருடத்திலிருந்து கொண்டாடிடுவோமா?, இதுக்கும் யாராவது 'இது அந்நிய நாட்டின் இறக்குமதி', 'கலாச்சாரம், பண்பாடு' என்று திட்டுவார்களோ, இல்லை 'கல்யாணம் ஆன பெரியவர்கள்' என்ற மரியாதையில் விட்டு விடுவார்களோ?. பார்க்கலாம்.


Monday, January 31, 2011

சிறு துளிகள் (31/01/2011)

விழுதுகள் மையத்தில்...

இந்த வாரம் ஒரு மாலை வேளையில், எங்கள் விழுதுகள் அமைப்பினால் நடக்கும் ஒரு மையத்துக்குச் சென்றிருந்தேன். வாரமொரு முறை நடக்கும் பிரார்த்தனையில், தெரிந்தவர்கள் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லை என்றால் அவர்களுக்காக வேண்டுவது வழக்கம். இந்த வாரம், ஒவ்வொரு மாணாவராகத் தங்கள் பாட்டி, தாத்தா, அம்மா என உடல் நிலை சரியில்லாதவர்கள் பெயர்களைச் சொன்னார்கள்.

அதில் ஒரு மாணவன், "சார்.. என்னோட அக்காவுக்கு கையில காயம் சார்.." என்றான்.
"ஏன்.. என்னாச்சு".. என்றோம்.
"கையில் அரிவாள் பட்டிருசுங்க சார்.." என்றான்.
"அருவாளா? கையில எப்படி பட்டுச்சு"
கொஞ்சம் தயங்கி "சார்.. வீட்ல அம்மாவுக்கும். அப்பாவுக்கும் சண்டை சார். அப்பா, அருவாளா எடுத்துட்டு அம்மாவா அடிக்க வர, அக்கா நடுவுல பூந்து கையில காயம் ஆயிருச்சு சார்.." என்று எங்கள் கண்களையே பார்த்தான்.
வேறு ஒன்றும் பேச இயலாதவராய், "சரிப்பா.. உங்க அக்கா பேரச் சொல்லு" என்றோம்.

பெரிய குடும்பமோ (உதாரணதுக்கு நடிகர் விஜயகுமார் பேரன்), அல்லது இந்த மாதிரி ஒரு கிராமத்துக் குடும்பமோ பெற்றோர்களின் சண்டையில் மாட்டிக் கொண்டு துன்புறுவது குழந்தைகளே. பெற்றோர்கள் சண்டையால் வளரும் குழந்தைகள், என்ன விதமான மனத் துன்பங்களுக்கு ஆளாவார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இன்னும் ஒரு மாணவன், "பாப்பா" பாட்டில் பாரதி சொன்னது போல, உயிர்கள் அனைத்தையும் நேசிக்க வேண்டும் என்று சொன்னது போல சொன்னான்.
"சார்.. எங்க வீட்டு நாய் செத்துப் போச்சு சார்.. பேரு ஜிம்மி.. எழுதிக்குங்க சார்" என்றான்.


தமிழக மீனவர்கள்

ஏதோ தமிழக மீனவர்கள் பற்றி இப்பொழுதுதான் கரிசனம் வந்தது போல எல்லாத் தலைவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேறு ஒன்றும் காரணமில்லை, வரும் தேர்தல் தான் மூல காரணம். கூட்டணி பிரித்துக் கொண்டு திரும்பவும் ஓட்டுக் கேட்டு வர வேண்டுமல்லவா, அது வரைக்கும் தாக்குதலை நிறுத்தி வைக்க சொல்லி இருந்தாலும் இருப்பார்கள். தன்னைக் கட்டு மரம் என்று கூறிக் கொள்ளும் தலைவர் டெல்லியில் கூட்டணி பற்றி பேசிக் கொண்டு இருக்கிறார். கொஞ்சம் கண் வைத்தால், கட்டு மரமே வாழ்க்கையாக கொண்ட மீனவர்கள் சுட்டுக் கொல்லப் பட மாட்டார்கள்.

விலைவாசி

கொஞ்சம் அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் சிறிதளவாவது தப்பித்துக் கொள்ளலாம். ஒரு துணிக்கடை அல்லது பலசரக்குக் கடை ஊழியரோ வாங்கும் சம்பளம் ஐந்தாயிரத்துக்கும் குறைவே. இதில் வீட்டு வாடகை, காய்கறிகள், மருத்துவச் செலவு என செலவுகளை எப்படித்தான் சமாளிக்கிறார்களோ?.
என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.. என்றுதான் பாடத் தோன்றுகிறது.


சில குறுஞ்செய்திகள்:

ஒரு காலத்தில் யாரிடமும் கடிகாரம் இல்லை, ஆனால் நேரம் இருந்தது. இப்போது, எல்லோரிடமும் கடிகாரம் இருக்கிறது, நேரம் தான் இல்லை.

**********

ஓர் ஏழை ஒரு மீனைப் பிடித்தான். ஆனால் அவனின் மனைவியால் அதைச் சமைக்க முடியவில்லை. ஏனெனில், விலை வாசியால் மின்சாரம், சமையல் வாயு, எண்ணெய் வீட்டில் இல்லை. எனவே, மீனை மீண்டும் ஏழை மீண்டும் நீரில் விட, திடீரென மீன் கத்தியது. "உயிர் காக்கும் திட்டங்கள் தந்த முதல்வருக்கு நன்றி." :)


**********

நம்பிக்கையின் உச்சம்:
ஒரு ஏரோனாடிக் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து பேராசிரியர்களையும் ஒரு விமானத்தில் உட்கார வைத்தார்கள். விமானம் கிளம்பப் போகும் சமயம், "இந்த விமானம் நமது கல்லூரி மாணவர்கள் தயாரித்தது" எனச் சொல்ல அனைவரும் தலை தெறிக்க வெளியே ஓடினார்கள். ஒருவர் மட்டும் உள்ளேயே உட்கார்ந்திருக்க, அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர், "எங்கள் மாணவர்கள் தயாரித்தது என்றால், இது ஓடாது" என்றாரே பார்க்கலாம். :)


**********


Wednesday, December 29, 2010

சிறு துளிகள் (29/12/2010)

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எல்லோருடைய கனவுகளும் இந்த வருடம் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.


(மேலே உள்ள புகைப்படம் நான் முன்பு எடுத்தது, வாழ்த்து சொல்ல தேடிக் கண்டுபிடித்தேன் :) ) .

ஊழல் தலைவர்கள்

உங்களிடம் ஒருவர், 'நீங்கள் ஊழல் செய்கிறீர்கள்' என்று சொன்னால், என்ன சொல்லுவீர்கள். 'ஆமாம்', 'இல்லை' என்று இரண்டு பதில்கள். இதற்கும் மேலாக நீங்கள் ஊழல் செய்யவில்லை என்பதற்கான ஆதாரங்களை பட்டியலிடுவீர்கள். அதை விடுத்து, 'எனக்கு முன்னால் இருந்தவன் ஒருவன். அவன் செய்யாததையா நான் செய்து விட்டேன், அவன் என்ன செத்தா போனான்?' என்று கேட்பீர்களா?. எங்க கிராமத்துல அடிக்கடி சொல்லுவார்கள் 'ஏண்டா.. அவன் கெணத்துல உளுந்தானா.. நீயும்மா போய் உழுவே?'. ஆக எல்லாத் தலைவர்களும் தப்பித்து விட்டு கடைசியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை கிணத்துக்குள் தள்ளி விட்டுதான் போவார்கள்.

சுனாமி

இந்த வருடமும் சுனாமி தினம் வந்து போனது. மீண்டும் ஒருமுறை வந்தால் தடுக்க நம்மிடம் ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிதியை மட்டும் ஒதுக்கிவிட்டு என்ன செய்து கொண்டிருகிறார்கள் எனத் தெரியவில்லை. பாதிக்கப் பட்டவர்கள் இன்னும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

விலைவாசி



இது வரை வெங்காயம் தான் விலை ஏறுகிறது என்றார்கள். இன்று தக்காளி கிலோ அறுபது ரூபாய். இப்படியே போனால் எல்லாக் காய்கறிகளும் நூறு ரூபாய்க்கு மேல்தான் கிடைக்கும் போல. விலை ஏறுவது போல, சம்பளமும் ஏறாதே. வாடகை, பள்ளி கட்டணம் எனக் கட்டி விட்டு மீதி இருக்கும் காசில் எங்கே போய் காய்கறிகள் வாங்க. சரி, வெங்காயம், காய்கறிகள் போடாத சமையல் செய்ய பழகிக் கொள்ள வேண்டியதுதான். காய்கறிகள் விலை ஏறினால், கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பொருட்களும் விலை ஏறும். சரி, அப்படிதான் நாம் கொடுக்கும் காசு, விவசாயிகளின் கைகளுக்கு போனாலாவது பரவாயில்லை. அத்தனையும் இடைத் தரகர்கள் கைகளில்.

இந்த வருடப் பொங்கல் இனிக்காது போல இருக்கிறது.


விருது, பேட்டி

மூன்றாம் கோணம் தளத்தில் என்னைப் பேட்டி எடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் படிக்க பேட்டி. மூன்றாம் கோண நண்பர்களுக்கு என் நன்றிகள்.

இந்த வருடம் எனக்கு விருது கொடுத்த "ஆஹா பக்கங்கள்" திரு. எம் அப்துல் காதர் அவர்களுக்கு என் நன்றிகள்.





மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்துக்கள்..


Tuesday, November 23, 2010

சிறு துளிகள் (23/11/2010)

பதிவரும் எங்கள் நண்பருமான திரு.பிரகாஷ்(சாமக்கோடங்கி ...) அவர்கள், எங்கள் விழுதுகளின் செயல்பாடுகளில் மிக்க ஆர்வமும், அனைத்து வகைகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருப்பவர். அவரிடம் மழைக் காலமாக இருப்பதால் மரங்கள் நட எண்ணியுள்ளோம் எனத் தெரிவித்ததும், நூற்றி ஐம்பது மரக் கன்றுகளை வாங்கித் தந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று அவரும் வந்திருந்து ஆரம்பித்து வைக்க, இந்த வாரம் முழுவதும் அனைத்து மரங்களையும் நட்டு விடுவோம். நண்பர் பிரகாஷுக்கு எங்களின் நன்றிகளும் வணக்கங்களும்.

இடமும் நேரமும் இருப்பவர்கள் இப்பொழுது மரக் கன்றுகளை நட்டால் நன்றாக வளரும். எதைப் போட்டாலும் வளரும் அளவுக்கு மழை பெய்து மண் மிகவும் நெகிழ்வாக இருக்கிறது. மரங்களை நட இதுவே ஏற்ற தருணம்.

*******************************



போன வாரத்தில் ஒரு நாள் மருதமலைக்குச் சென்றோம். காலை நேர அபிஷேக பூஜை நடந்து கொண்டிருந்தது. விசேட நாள் இல்லை என்பதால் கோவிலில் கூட்டம் இல்லாமல் முருகனை நிம்மதியாகப் பார்க்க முடிந்தது. வெளிப் பிரகாரத்தில் என் செல்லில் இருந்து போட்டோ எடுத்துக் கொண்டிருந்த பொழுது, வேகவேகமாக வந்த ஒருவர் ரூபாய் பத்துக்கான கட்டணத் தாளை திணித்து, பத்து ரூபாயை பெற்றுக் கொண்டார். எம்பெருமான் முருகன் மயில் மீது ஏறி வந்திருந்தால் கூட அவ்வளவு வேகம் இருக்காது :).





*******************************

ஒவ்வொரு வருடமும் கார்த்திகை தீபமன்று, வீட்டில் அண்ணாமலையார் வழிபாடு செய்வோம். இந்த வருடமும் கார்த்திகைத் தீபத்தன்று ஏழு வகைப் பொரியல், இனிப்புகள் என விசேடமாக முடிந்தது :).



*******************************
சிட்டுக் குருவிகளும், வண்ணத்துப் பூச்சிகளும் காண முடியாத தூரத்துக்குச் சென்று விட்டது போல கண்ணிலே பார்க்க முடிவதில்லை. மழை பெய்து கொஞ்சம் பூமி குளிர்ந்து இருப்பதால் அவ்வப்பொழுது அங்கங்கே தென்படுகின்றன. ATM வரிசையில் நின்றிருந்த பொழுது ஒரு வண்ணத்துப்பூச்சி என் செல்லில் சிறைப்பட்டது. மழை வாழ்க.






*******************************
எஸ்.எம். எஸ்.

என் செல்லுக்கு வந்த சில குறுஞ்செய்திகள்:

PM finally breaks silence: The only 2G i know is SoniaG and RahulG.. I dont know SpectramG
---------
ஐம்பது ரூபா குடுத்து ஒரு லிட்டர் Fanta குடிச்சு பிரைவேட் கம்பனிக்கு லாபம் தர்றத விட எழுபது ரூபா குடுத்து ஒரு குவார்ட்டர் வாங்கி அடிச்சு கவர்ன்மேன்ட்கு லாபம் தர்றது பெட்டெர்.

எப்படி எல்லாம் யோசிக்கறாங்க :) ?

Thursday, November 11, 2010

சிறு துளிகள் (11/11/2010)

நேற்று காலை சன் தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியில், பேச்சாளர்கள் பாரதி பாஸ்கரும், ராஜாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது புதிது, புதிதாக வரும் சிறப்புத் தினங்கள் பற்றி. அதில் பாரதி பாஸ்கர் அவர்கள் ஒரு கவிதை சொன்னார்;

"தினங்களை விட்டு விட்டு
எப்போது
குழந்தைகளைக்
கொண்டாடப் போகிறீர்கள்" . (குழந்தைகள் தினம் வரப் போகிறது இன்னும் இரண்டு நாட்களில்)

சொல்லப் போனால் குழந்தைகளை கவனிக்க முழுவதும் மறந்து விட்டோம். பள்ளி, டியுசன், டிவி, வீடியோ கேம்ஸ் என்று நகர்ந்து கொண்டிருக்கிறது அவர்களின் வாழ்க்கை முறை. கேட்டதெல்லாம் உடனே கிடைக்கிறது. ஒரு பொருளைப் பெற காத்துக் கிடப்பது இல்லை. எல்லாம் உடனே வேண்டும் என்ற மனப்பான்மை வளர்ந்து வருகிறது.

இதற்கு நேர் எதிர் ஏழைக் குழந்தைகள். எதுவுமே கிடைக்காமல், (உணவும்தான்) சிக்னல்களிலும், பேருந்து நிலையங்களிலும் கையேந்திக் கொண்டிருக்கிறது பிஞ்சு கைகள்.

ஒருவேளை இந்த முரண்பாடுகள்தான் குற்றங்களைக் கொண்டு வருகிறதோ?. இன்றைய குழந்தை நாளைக்கு என்னவாக வேண்டும் என்பதில் இந்தச் சமூகத்துக்கு வேண்டிய அக்கறை எங்கே?.

கொஞ்சம் குழந்தைகளைக் கவனியுங்கள்....

**************************************

கடத்தல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. உலகம் தெரியாத குழந்தைகளை தங்கள் நோக்கத்துக்காக கடத்துவது தவிர்க்க முடியாத குற்றங்கள். இன்னும் குழந்தைகள் கொடுமைச் சட்டங்கள், தண்டனைகள் அதிகமாக வேண்டும்.

குழந்தைகள் கூடி விளையாடுவது இந்தக் காலத்தில் குறைந்து வருவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உலகைப் புரிந்து கொள்ள முடியாத சூழலில் வளரும் குழந்தைகளுக்கு, பள்ளிகளும், பெற்றோர்களும் இனியாவது விழிப்புணர்வு கொண்டு, கொஞ்சம் உலகைப் பற்றி விவரிக்கலாம்.

இலக்கியம், தினமும் படிப்பு என்று கூட வேண்டாம், தினச் செய்திகள் கூட தெரிந்து கொள்ள ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் வளர்த்து வருகிறோம். ஆனால் அவர்களுக்கு எந்திரன் படத்தின் வெளியீட்டு நாள் தெரிகிறது. கொஞ்சம் வாசிப்பை அவர்களுக்கு பழக்கப்படுத்தலாம்.

சிறுவர் கொடுமைகள் என்றால் அது எங்கேயும் இருக்கிறது.

- ஒரு குழந்தையையும் இன்னொரு குழந்தையையும் ஒப்பீடு செய்வது.
- நிறம், உயரம் போன்றவற்றை இழிவு செய்வது
- பள்ளியிலும் வெளியிலும் உள்ள பாலியல் தொந்தரவுகள்
- முக்கியமாக அவர்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருப்பது
- பெற்றோர்களின் பிரச்சினைகள் (விவாகரத்து, சண்டை... )

இது போன்று இன்னும் நிறைய இருக்கிறது. இந்தக் கொடுமைகள் குறைய நாம் என்ன செய்யப் போகிறோம்? .

****************************************

கோவை என்கவுண்டருக்குப் பிறகு, குழந்தைகளைக் கடத்தும் மற்றவர்கள் பயந்திருப்பார்கள். இனி குழந்தை கடத்தல் நடக்காதிருக்க வேண்டும். ஒரு குற்றவாளி இறக்கும் போது அவனுடன் சேர்ந்து ரகசியங்களும் கொல்லப்பட்டிருக்கக் கூடும். அப்படி ஏதும் இல்லாத பட்சத்தில், வேறு யாருக்கும் இதில் தொடர்பில்லை அவன்தான் முழுக் குற்றவாளி என்றால் இந்த என்கவுண்டர் நியாயமானதே.

"பாதகம் செய்பவரைக் கண்டால் - நீ
பயங் கொள்ளலாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.. "

***************************************

குழந்தைகள் தினத்தில் மட்டுமின்றி எல்லா நாட்களும் குழந்தைகளைக் கொண்டாடுவோம்.

Sunday, October 31, 2010

சின்னஞ்சிறு துளிகள் (31/10/2010)

விசுவின் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் ஒருவர் பள்ளிகளில் கழிப்பறை இல்லாததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளியோ, அரசுப் பள்ளியோ முறையாக எந்தப் பள்ளிகளிலும் கழிவறை வசதிகள் இல்லை. அரசுப் பள்ளிகளில் இன்னும் கொடுமை. அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அந்த நரகத்தைப் பற்றி. பசங்கள் கூட பரவாயில்லை, கொஞ்சம் பெரிய பெண்கள் எல்லாம் என்ன செய்வார்கள்?. எவ்வளவோ இலவசங்களை அள்ளி வழங்கும் அரசுகள் கொஞ்சம் கவனித்தால் நமது செல்வங்கள், பள்ளியில் ஒரு பிரச்சனையிலிருந்து தப்பி விடுவார்கள்.

********************************

தன்னை பாதித்த சம்பவமாக ஆவணப் பட இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆனந்த விகடனில்;

"ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே வைத்தியனாதபுரம் என்ற கிராமத்தில் குழந்தைத் தொழிலாளர்களுக்கான சிறப்புப் பள்ளி ஒன்று இயங்குகிறது. வெறும் பத்துக்குப் பத்து அறையில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலும் 25 மாணவர்கள் படிக்கின்றனர். எல்லோரும் ஒரே அறையில்தான் அமர்ந்திருக்க வேண்டும். ஒரு மேசை, நாற்காலி கூடக் கிடையாது. மிக மிகக் குறைந்த சம்பளத்தில் அந்தப் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை வேலைக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார். 'ஒரே அறையில் ஆறு வகுப்பு மாணவர்களையும் எப்படிச் சமாளிப்பீர்கள்?' என்று அவரிடம் கேட்டேன். 'ஒன்று, இரண்டாம் வகுப்பினருக்கு போர்டில் எழுதிப்போட்டு படிக்கச் சொல்வேன். மூன்று, நான்காம் வகுப்பினரை எதிர் திசையில் திரும்பி அமர்ந்து படிக்கச் சொல்வேன். ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களை மற்ற திசையில் திரும்பி அமரச் சொல்லி நான் பாடம் நடத்துவேன்' என்றார். கல்விச் சேவையில் தமிழ்நாடு உச்சிக்குப் போய்விட்டது என்று பீற்றிக்கொள்வது எத்தனை அயோக்கியத்தனம்? "

********************************

கோவையில் இரண்டு குழந்தைகளை கடத்திக் கொண்டு போய் வாய்க்காலில் தள்ளி விட்டு வந்துள்ளான் ஒருவன். பள்ளிக்கு கூட்டிச் செல்லும் கால் டாக்ஸி மூலம் அவன் அவர்களைக் கடத்திக் கொண்டு போயுள்ளான். பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் இக்கட்டான சூழலில் தப்பிக்க வழி முறைகளைச் சொல்லிக் கொடுக்கலாம். முன் பின் தெரியாத ஒருவன் வெளியே எங்கேனும் கூப்பிட்டால் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தலாம். பாவம் அந்தக் குழந்தைகள். ஒரு குழந்தையின் உடல் கிடைத்து விட, இன்னொரு குழந்தையின் உடலை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

செல் போனால் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் அந்தக் குழந்தைகளை கடத்தியவனை காட்டிக் கொடுத்தது செல் போன் தான். அவனைப் பிடிப்பதற்குள் வாய்க்காலில் தள்ளி விட்டான். கொஞ்ச நாட்களுக்கு முன்னர் சென்னையில் இருந்து பெங்களூருக்கு கடத்தப்பட்ட சிறுவனை வழியில் காட்டிக் கொடுத்ததும் செல் போன் தான்.

********************************

ஒரு நாள் காலையில் தொலைக்காட்சியில் ஜெயலலிதா அம்மா ஒரு பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்தார். சிக்கென்ற உடையில் பினனால் சிறகுகள் போன்ற அலங்காரத்துடன் ஆடிக் கொண்டிருந்த அந்த பாடலை வீட்டில் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த போது 'இப்போ இந்த பாட்டை அம்மா பார்த்துட்டு இருந்தாங்கன்னா என்ன நெனப்பாங்க' என்றேன். அப்போ தங்கமணி 'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு நெனப்பாங்க' என்று ஒரே போடா போட்டாங்க பாருங்க, ஒரே சிரிப்பு மழைதான்.

********************************

என்னைப் பாதித்த சின்ன விடயங்கள் பற்றி இனி எழுதலாம் என்று நினைக்கிறேன். இதே தலைப்பை வேறு யாராவது வைத்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தவும். நான் மாற்றிக் கொள்கிறேன். நன்றி.