Posts

Showing posts from July, 2013

சிறுநுரை போல...

காமந் தாங்குமதி யென்பேர் தாமஃ தறியுநர் கொல்லோ வனைமது கையர்கொல் யாமெங் காதலர்க் காணே மாயிற் செறிதுளி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல்பொரு சிறுநுரை போல மெல்ல மெல்ல இல்லா குதுமே. (குறுந்தொகை, கல்பொரு சிறுநுரையார்) *************** பிரிவை தாங்கிக்கொள் என்பவர்கள் தாங்கள் அதை அறிந்தவர்கள்தானா ? அத்தனை வல்லமை உடையவர்களா ? நான் என் தலைவனை காணேன் என்றால் துயர் நிரம்பிய நெஞ்சத்துடன் நீர்விரிவிலிருந்து வந்து கல்லில் மோதி மறையும் சிறுநுரை போல் மெல்ல மெல்ல இல்லாமலாவேன். - ஜெயமோகன், சங்க சித்திரங்கள்

குழந்தைகளுக்கு நேரமில்லை

குழந்தைகள், இப்பொழுது குழந்தைகள் இல்லை பள்ளியில் இடம்  வேண்டி ஆறு மாத குழந்தைக்கு விடிய விடிய வரிசையில் நிற்கிறோம் ஆறு மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடி ஏழு மணிக்கு குளி  எட்டு மணிக்கு வீதியில் பள்ளி வண்டி நிற்கும் அதற்குள் சாப்பிட்டு முடி படிப்பது பாலர் வகுப்பு என்றாலும் அரை மணி நேரம் பயணம் செய்து பள்ளிக்கூடம் செல் கேட்ட கேள்விக்கு பதில் சொல் தமிழில் பேசாதிருப்பது முக்கியம் அவனைவிட அதிக மதிப்பெண் எடு காலையில் அடைத்து வைத்ததை மதியம் சாப்பிடு அவ்வபொழுது இயற்கை உபாதைகளை அடக்கி நேரத்துக்கு செல் வாரத்தில் ஒருநாள் மட்டும் அரை மணி நேரம் பி.டி. நேரத்தில் விளையாடு மாலை ஓய்ந்து வா ஏதாவது தின்று தண்ணீர் குடி மீண்டும் வீட்டுப் பாடங்களை எழுதிப் படி டியூசன் போ.. அங்கும் படி சனி, ஞாயிறும் டியூசன் இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைத்தால் டி.வி பார் கராத்தே, இசை, நடன வகுப்புகளில் சேர்.. அக்கம் பக்கத்தில் பேச நேரமில்லை விளையாட்டு.. மூச். நேரத்துக்கு சாப்பிடு நேரத்தில் தூங்கு காலையில் நேரத்தில் எழ வேண்டும். பெரியவர்கள் ...

புல் வெளியில் ஒரு கல் - கவிஞர் தேவதேவன்

Image
காட்டுச் செடி காக்கை திருடி வைத்திருக்கும் வடையோ அதைப் பறிக்க நினைத்த நரியோ அல்ல மர்மமான துக்க இருள் நடுவே ஒரு காட்டுச் செடி தூய்மையின் வண்ணத்துடன் பூக்கிறது ஒரு சின்னஞ்சிறு தேன்மலர் ஆக மெல்லிய அதன் மணக் கைகள் தட்டுகின்றன எல்லோர் கதவையும் ************************* நீர்ப்பயம் நாய் கடிக்காது பார்த்துக்கொள் அதிலும் வெறிநாய் கடித்தால் பேராபத்து அந்த வெறிநாய் போலே ஊளையிட்டுத் திரிவாய் தண்ணீர் அருந்த இயலாது தொண்டை நரம்புகள் தெறிக்கும் அப்புறம் தண்ணீரைக் கண்டாலே அலறித் துடிப்பாய் மரணத்தில்தான் உனக்கு விடுதலை ஆகவே நாய்க்கு வரும் நோய்பற்றிக் கவலை கொள் நாய் பற்றிக் கவலை கொள் ************************* புல்வெளியில் ஒரு கல் புல்வெளி மீது சிறு குருவி வந்திறங்கித் தத்திய காட்சி, அழிந்து புல்வெளிமீது  ஒரு கல் இப்போது. மனிதச் சிறுவன் ஒருவனால் அந்தப் பறவை நோக்கி எறியப்பட்ட கல்லாயிருக்கலாம் அது. இப்...

சினிமா: தி சைக்ளிஸ்ட் (The Cyclist)

Image
ஏழையாய் இருப்பது கொடுமை. அதிலும், இன்னொரு நாட்டில் அகதியாய், ஏதும் செய்ய  இயலாமல் இருப்பது அதை விட கொடுமை.  ஈரான் நாட்டில், ஆப்கன் அகதியாய்த் தங்கி இருக்கும் ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை இது. இந்தப் படத்தின் இயக்குநர்  மோசென் மக்மல்பப். கணவன், மனைவி மற்றும் ஒரு பையன் என சிறு குடும்பம் தான். மனைவி, மிகுந்த உடல் பிரச்சினை காரணமாக, மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருக்கிறார். தினமும் இவ்வளவு செலவாகும் என்று மருத்துவமனையில் சொல்கிறார்கள். கையில் கொஞ்சம் கூட பணம் இல்லை. இருக்கும் கொஞ்சம் பணமும் ஆப்கன் நோட்டுகளாக இருக்கிறது. வேலை தேடிப்  போனாலும் அவ்வளவு பணம் கிடைப்பது கஷ்டம்.  ஆப்கன் அகதிகளுக்கு மிக குறைந்த சம்பளமே குடுப்பார்கள். அப்பாவும், பையனும் சேர்ந்து கிணறு வெட்டுவார்கள். ஆனால் அந்த வேலைக்கும் அடிதடி. தங்கள் நண்பரான, சர்கஸில் மோட்டார் பைக் ஓட்டும் நண்பரைத் தேடிச் செல்கிறார்கள். முதல் நாள் மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யும் அவர், வேலை வாங்கித் தர முயற்சிக்கிறார். அந்த நண்பர், ஒரு சர்கஸ் ஏஜென்டிடம் அழைத்து செல்கிறார். "இவர் ஆப்கன் நாட்டில் சை...

பள்ளம்

காற்றே இல்லை எனச் சொல்லும் இதே மனிதன் தான் வேம்பு போன்ற மரங்களை வெட்டிவிட்டு வீட்டைச் சுற்றிலும் குரோட்டன்ஸ் வைத்தவன்.. ஆற்றில் நீர் இல்லாததை 'பச்..  தண்ணியே இல்லை' எனக்கடந்து போகும் இதே மனிதர்கள்தான் மக்கவியலாத பொருளையும், கழிவு நீரையும் கொட்டுகிறார்கள்.. நீர் இல்லாதபோது, நிறைய மணல் அள்ளலாம் எனச் சிலர் சந்தோசப் படுகிறார்கள்.. ஆற்று நீரை அப்படியே குடிக்காதீர்கள் அதில் கழிவுகள் இருக்கிறது என்று சொல்கிறார்கள்.. உழைத்து மூப்பேறிய மூத்த தலைமுறை விவசாயியின் ஒடுங்கிய வயிறு போலான பள்ளங்களோடு ஆறு அத்தனையையும் கவனித்துக் கொண்டிருக்கிறது..

மனம் எனும் தோணி

வாழ்க்கை - நாம் வாழ்வது. வாழ்வைப் பற்றிப் பேசும்பொழுது பெரும்பான்மையான கவிஞர்கள், படகோடு ஒப்பிடுவார்கள். கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பாடலில், 'நீர்வழிப் படூம் புனை போல்' எனச் சொல்கிறார். 'வாழ்க்கை என்னும் ஓடம்.. வழங்குகின்ற பாடம்..' என்று கே.பி. சுந்தராம்பாள் அவர்கள் பாடிய பாடலையும் கேட்டு இருக்கிறோம். திருநாவுக்கரசர் பாடிய கீழ்க்கண்ட பாடல், பள்ளியில் படிக்கும்பொழுது மனப்பாடச் செய்யுளாக இருந்தது. இது ஒரு பக்திப் பாடலாக இருந்தாலும், சொல்லப்பட்ட உவமைகளும், பொருளும் என்னைக் கவர்ந்தவை. மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச் சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா உனையுனு முணர்வை நல்கா யொற்றியூர் உடைய கோவே. பாடல் பொருள் எளிதில் விளங்கக் கூடியதே. "மனம் என்ற தோணியில், மதி எனும் துடுப்பைக் கொண்டு, சினம் என்ற சரக்கை ஏற்றி இந்த வாழ்க்கை எனும் கடலில் ஓடும்போது, ஆசைகள்(பற்றுகள்) எனும் பாறையில் மோதி, நினைவிழக்கும் பொழுது உன்னை நினைக்கும் உணர்வைத் தருவாய்... ஒற்றியூர் ப...

இறங்கள் !!

போன வாரம் திருப்பூர் சென்றிருந்தோம். சிக்னலுக்கு காத்திருந்த பொழுது, டிவைடர் கற்களில் டி.எம்.எஸ். அவர்களுக்கு ஒரு கட்சியின் சார்பாக இரங்கல் சுவரொட்டி ஒட்டி இருந்தார்கள். அதில் கடைசியில் இப்படி ஒரு வாக்கியம் இருந்தது; டி.எம்.எஸ். அவர்களுக்கு​ --------- ------------------------------ ------------- ------  (கட்சியின்) சார்பாக இறங்கள் இதில் உள்ள எழுத்து பிழை ஒரு பக்கம் என்றாலும், நம்மையும் இறக்கச் சொன்ன இந்தச் சுவரொட்டியைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை. அழுத்தம் திருத்தமாகத் தமிழை உச்சரித்துப் , பாடிய டி.எம்.எஸ். அவர்களின் ஆவி நிச்சயம் மன்னிக்காது. இரங்கல் - இறங்கள் !! (இரண்டு வார்த்தைகளும் ஒன்று என நம்பி சுவரொட்டி தயாரித்தவர் வாழ்க) நாங்கள் பள்ளியில் படிக்கும் பொழுது, எங்கள் தமிழ் அய்யா அடிக்கடி ஒரு வாக்கியம் சொல்வார்; "மாவட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" - மேற்கண்ட வாக்கியத்தில், தெரியாமல் ஒரு கால் சேர்த்தால்; " மாவாட்ட கல்வி அதிகாரி சிற்றுண்டிச் சாலைக்குச் சென்றார்" !! தெரியாமல் எங்காவது இது மாதிரி சே...