Showing posts with label நான் படித்தவை. Show all posts
Showing posts with label நான் படித்தவை. Show all posts

Friday, August 1, 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகன் எழுதிய முதல் நாவல் ரப்பர். ஓரிடத்தில், ரப்பர் மரங்கள் பற்றி இப்படிச் சொல்கிறது நாவல்;  "ரப்பர் மரம் தன் பக்கத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் வாழ விடாது. பறவைகள் வந்து கூடடையாது. தினம் தினம் ரப்பர் பாலை சொட்டிக் கொண்டு, பாலுக்காக அறுத்த காயங்களைக் கொண்டிருக்கும் ரப்பர் மரங்கள் ராணுவ வீரனைப் போல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன. நம் மண்ணுக்கான மரமில்லை, மற்ற மரங்களைப் போல நீரைச் சேமிப்பதில்லை."

***************

பொன்னுப் பெருவட்டர் படுக்கையில் இருக்கிறார். வாழ்ந்து முடித்த இந்த  தள்ளாத வயதில், இன்னொருவரின் உதவியோடு உயிர் வாழ்வதில் பெரும் கோபம் கொண்டவராக இருக்கிறார். முதுமையில், படுக்கையில் படுத்த பின்னர் எல்லா வயதானவர்களுக்கும் கோபம் வருவதுண்டு. ஒவ்வொன்றுக்கும், மற்றவர்களை எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒரு சுமை. இந்தக் கணமே, தான் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடலாகாதா என எண்ணுகிறார். தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞியிடம், விஷம் குடுத்து விடு என்று வேண்டுகிறார்.

இந்த வீடு, இந்த ரப்பர்  தோட்டம் எல்லாம் பொன்னுப் பெருவட்டரின் காலத்தில் அவரே உருவாக்கியது. வெறும் காடாக இருந்த அந்த நிலத்தில், ரப்பர் மரம் பயிரிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் அவரைத் தேடி வந்தது. இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரக் குடும்பம் பெருவட்டர் குடும்பம். பெரியவரின் மகன் செல்லையாப் பெருவட்டர், சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறார். பேரன்கள் பிரான்சிஸ் மற்றும் லிவி.



செல்லையாப் பெருவட்டர், சில தொழில் முயற்சிகளில் கடன் பட நேர்கிறது. தன் தந்தை காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்கள், எப்பொழுது வேண்டுமானாலும் விற்கப்படக் கூடும் என்று எண்ணுகிறார். பெரியவர் அதற்குள் இல்லாமலானால், இலகுவாக சொத்துக்களை விற்று விடலாம் என்று நினைக்கிறார் செல்லையாப் பெருவட்டர்.

மருமகள் திரேஸ் அழகி. அவளின் பழைய காதல், ஒரு அழகிய பகுதி கூட. ஆனால், ஆடம்பரத்தை விரும்பும் அவள், அந்தக் காதலை நிராகரித்து, பெருவட்டார் குடும்பத்துக்கு மருமகளாகிறாள்.   திரேஸ் மேல் லிவி கொஞ்சம் அன்பாக இருந்தாலும், பிரான்சிஸ் அவளை முற்றிலும் வெறுக்கிறான். அவளின் கேட்ட சகவாசம் தனக்குத் தெரியும் என்று அவளிடம் சொல்கிறான். மனைவியை, எதிர்க்க முடியாதவராக செல்லையாப் பெருவட்டர். 

அந்தக் காலத்தில் பெரிய பரம்பரையாக இருந்த அறைக்கல் குடும்பத்தைச் சேர்ந்த தங்கம் என்னும் பெண் அவர்களின் வீட்டில் வேலை செய்து வருகிறாள். பெருவட்டரின் பேரன் லிவியால் அவள் கர்ப்பமாகிறாள். அதனால், தங்கம் தற்கொலை செய்து கொள்கிறாள். சொத்துப் பிரச்சினை, தங்கம் தற்கொலை என எதையும் பெரியவரிடம் சொல்வதில்லை.

இவர்களைப் போலில்லாமல், ஒரு தனி அடையாளமாக பிரான்சிஸ் நாவலில் வருகிறான். பெரிய பெருவட்டருக்கும் இவன் மேல் பாசம் அதிகம். குடி, தகாத உறவுகள் என அவன் இருந்தாலும், ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் போல நியாயத்தின் பக்கமே நிற்கிறான். இந்த சொத்துக்களை எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை, நிம்மதியாக இருந்தால் போதும் என நினைக்கிறான். அம்மா திரேசுடன், லிவியும் சேர்ந்து சொத்துக்களை விற்க வழக்கறிஞரை போய்ப் பார்த்ததை அறிந்து அவர்களைத் திட்டி அடிக்கிறான்.



படுக்கையில் இருக்கும் பெருவட்டரைப் பார்க்க வருகிறார் கங்காணி.  பெரியவர் கங்காணியும், பெரிய பெருவட்டரும் பழைய நண்பர்கள். இந்த நிலத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். இவ்வளவு வயதாகியும், நடமாடிக் கொண்டிருக்கும் கங்காணியைப் பார்த்ததும், அவரைப் போல தான் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறார் பெருவட்டர்.கங்காணியின் பேரன் லாரன்ஸ், ஒரு மருத்துவர். பெருவட்டருக்கு வைத்தியம் பார்க்க, ஒரு முறை சென்றிருக்கிறான்.

லாரன்ஸ் சில சமூக சேவைகளில் ஈடுபடுவதாகவும், முக்கியமாக ரப்பர் மரங்கள் பற்றிய தீமைகளை அறியாமல் அதைப் பயிரிட்டு வளர்த்து வரும் மக்களிடம், ரப்பரின் தீமைகள் பற்றிச் சொல்லப் போவதாக, பிரான்ஸிடம் தெரிவிக்கிறான். அவர்களுடன் இணைந்து தானும் செயல்படப் போவதாக பிரான்ஸ் அவர்களிடம் சொல்கிறான். பெரிய பெருவட்டரும், தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞிக்கென, ஒரு இடத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

***************

நம் நாட்டு மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து, ரப்பர் பயிரிட்ட பொன்னு பெருவட்டரிடம் கதை ஆரம்பித்து, ரப்பர் தோட்டங்களை அழிக்க நினைக்கும் அவரின் பேரன் பிரான்சிடம் வந்து முடிகிறது நாவல்.

Friday, July 25, 2014

ஒற்றை வைக்கோல் புரட்சி - மசானபு ஃபுகோகா

வேளாண்மையில் நிலத்தை உழ வேண்டியது முக்கியம். அப்பொழுதுதான் நிலம் பண்பட்டு, நல்ல விளைச்சலைத் தரும். ஆனால்,  ஒரு நிலத்தை உழுது 25 வருடங்கள் ஆகின்றன. அதில் வரும் விளைச்சல், மற்ற எந்த உயர்தர பண்ணைகளைக் காட்டிலும் அதிகம். அதெப்படி, நிலத்தை உழாமல் விளைச்சல் எடுக்க முடியும்?. இயற்கை முறையில், தன் பண்ணையில் இருபத்தைந்து வருடங்களாக நிலத்தை உழாமல், பயிரிட்டு வருவதாகச் சொல்கிறார், 'ஒற்றை வைக்கோல் புரட்சி' புத்தகத்தின் ஆசிரியர் மசானபு ஃபுகோகா.

***********

நிலத்தை உழுது, உரங்களைக் கொட்டி, வீரியமிக்க விதைகளை விதைத்து, பூசிகொல்லிகளைத் தெளித்து நாம் செய்யும் விவசாயம் மிகக் கேடானது. அப்படி வேலை செய்து, பயிரிட்டாலும் மிஞ்சுவதோ ஒன்றுமில்லை. 'உழுகிறவன் கணக்குப் பார்த்தால், உழக்கு கூட மிஞ்சாது' என்று சொல்வார்கள் ஊரில். இவ்வளவு செலவழித்து, விவசாயம் பார்த்தால், வருமானம் என்பது சொற்பமே. இயற்கை முறையில், குறைந்த செலவில் விவசாயம் பார்க்கலாம் என்றாலும்.. அது சரிப்பட்டு வருமா என்ற தயக்கம் இருக்கும். வேளாண்துறை விஞ்ஞானிகளும், அறிஞர்களும் ரசாயனம், பூச்சிகொல்லி மருந்துகள் என பரிந்துரைக்கிறார்கள். அவர்கள் சொல்வதை விடுத்து, விவசாயம் செய்தால் என்ன ஆகும் என்ற பயம் இருக்கும்.

இயற்கை முறை விவசாயத்தில், நாம் நுழைவதற்கு தடையாக இருப்பது அந்த பயமே. ஆனால், நம்மாழ்வார் போன்ற சில ஆசான்கள் நமக்கு வழிகளைக் காட்டுவார்கள். நடக்க வேண்டியது நாம்தான்.  அப்படி ஒரு ஆசான்தான், ஜப்பானைச் சேர்ந்த மசானபு ஃபுகோகா அவர்கள்.


இளம் வயதில், தாவரங்களில் வரும் நோய்களைக் கண்டறியும் ஆய்வுகளில் பணி செய்திருக்கிறார். இயற்கை முறை விவசாயம் மீது நாட்டம் கொண்டு, தன் தந்தையின் ஆரஞ்சுப் பழத் தோட்டத்தில் இயற்கை முறையைப் புகுத்துகிறார். ஆனால், ஒரே மாதிரியான உரங்கள், பூச்சிக் கொல்லிகள், பயிர் வளர்ப்புக்கு பழக்கப்பட்ட அந்த மரங்கள் பட்டுப் போகின்றன. அவரின் தந்தை, இது சரிப்பட்டு வராது எனச் சொல்ல, மீண்டும் ஆய்வு வேலைக்கே செல்கிறார்.

இயற்கை முறை விவசாயம் மீதான ஆர்வம் தணியாமல் இருக்க, எட்டு வருடங்கள் கழிந்து மீண்டும் தன் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்கிறார் ஃபுகோகா. அதன் பின்னர், எந்த ஒரு நவீன முறைகளைப் பின்பற்றும் உயர்தர பண்ணையைக் காட்டிலும், அவரின் பண்ணையில் விளைச்சல் அதிகரிக்கிறது. அவரின் பண்ணையைத் தேடி வந்து, அங்கேயே அவருடன் தங்கி இளைஞர்களும், விவசாயிகளும் கற்றுக்கொள்கிறார்கள்.



***********

இயற்கை விவசாயத்துக்கு முக்கியமான நான்கு அடிப்படை விதிகளைச் சொல்கிறார்;

1. நிலம் உழப்படக் கூடாது

நிலத்தை எப்பொழுதும் உழவே கூடாது. நிலத்தை உழும்பொழுது, மேல் மட்டத்தில் உள்ள மண்புழுக்கள், நுண்ணியிரிகள் கொல்லப் படுகின்றன. மண்ணின் அடியில் உள்ள சில களைப் பூண்டுகள், மேலே வந்து களைகளும் பெருகுகின்றன. நிலத்தை உழுவது என்பது, அந்நிலத்தை மேலும் கெடுப்பதே என்கிறார் ஃபுகோகா.

2. உரங்கள்

உரங்கள், இரசாயனங்கள் அன்றி வேறில்லை. அவற்றை முதலில் பயன்படுத்தும் பொழுது, விளைச்சல் அதிகரித்தாலும், ஒவ்வொரு முறையும் உரங்களை அதிகப்படுத்த வேண்டும். செலவும் ஏறிக்கொண்டே போகும். மண்ணின் தரமும் கெட்டு, சூழலையும் கெடச் செய்கின்றன உரங்கள்.

3. களைகள்

நிலத்தை உழாமல் இருப்பதன் மூலம் பாதிக் களைகள் கட்டுப்படும். மீதி இருப்பதை, வைக்கோல்களைப் பரப்புவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். அங்கொன்றும், இங்கொன்றுமாக இருக்கும் களைகள் நமக்கு பெரிய பிரச்சினை இல்லை. வழக்கமாக,  களை எடுத்தல் என்பது மிகவும் செலவு வைக்கக் கூடியது. அதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனச் சொல்கிறார் ஃபுகோகா.

4. பூச்சிக்கொல்லிகள்

இயற்கைக்கு ஓர் சமன்நிலை உண்டு. ஓர் உயிர் பெருகும்போது, அதை உண்ண இன்னொரு உயிர் உண்டு. அது ஒரு சங்கிலி போன்றது. [ஒரு சமயம் எங்கள் வீட்டில் வளரும் வாழை மரங்களில், பச்சைப் புழுக்கள் பெருகி இலையை மடித்து வளர்ச்சியைப் பாதித்தன. ஆனால் குருவிகள், அதைக் கொத்தி கொத்தி தனக்கு உணவாக்கிக் கொண்டன. எந்த மருந்தும் தெளிக்காமல், அவைகள் மறைந்து விட்டன] நாம் ஒரு பூச்சியைத் தடுக்க, இன்னொரு பூச்சி பெருகி விடும். இவ்வாறு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்துவது, காலப்போக்கில் சூழலை மிகவும் கெடுத்துவிடும் என எச்சரிக்கிறார் மசானபு ஃபுகோகா.

***********

வைக்கோலும், களிமண் உருண்டைகளும்

இவரின் இயற்கை முறை வேளாண்மையில், முக்கிய இடம் வகிப்பது வைக்கோல். அறுவடை செய்த பின்னர், அந்த வைக்கோலை அதே நிலத்தில் அப்படியே பரவலாகப் போட வேண்டும். இதனால் களைகள் கட்டுப்பட்டு, வைக்கோல் மக்கி கரிம உரமாக மாறிவிடும். ஒவ்வொரு பயிர் சுழற்சியின் போதும் இதைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்கிறார். இன்று அவரின் நிலத்தில், மண் மிகுந்த வளத்துடன் உயர்ந்துள்ளது.  விதைகளை அப்படியே தூவாமல், ஒரு சிறு களிமண் உருண்டையில் பொதிந்து தூவ வேண்டும் என்கிறார். இதனால், எலி போன்ற விலங்குகள் விதைகளை நாசப்படுத்துவதும் குறைந்து, முளைக்கும் திறனும் அதிகரிக்கும் என்கிறார்.

இயற்கை வேளாண் பொருட்களின் விலை

சந்தையில் இயற்கை முறையில் விளைவித்த பொருட்கள், மற்ற பொருட்களைக் காட்டிலும் விலை அதிகம் தான். இயற்கை முறையில் பயிரிடுவது என்பது, மிகுந்த செலவன்றியும், குறைந்த உழைப்புடனும் செய்யப்படுவதால் விலை குறைவாகக் கிடைக்க வேண்டும் என்பது என் கருத்து என்கிறார் ஃபுகோகா.



ஒற்றை வைக்கோல்

மசானபு ஃபுகோகா சொல்கிறார்;
"இந்த மலைக்குடிலுக்கு வரும் இளைஞர்களுக்கு நடுவே, உடலாலும், மனதாலும் சோர்ந்து போன, அனைத்திலும் நம்பிக்கை இழந்த சிலரும் வருவதுண்டு. அவர்களுக்கு ஒரு சோடிக் காலணிகள் கூட வாங்கித் தருவதற்கு சக்தியற்ற இந்த வயதான விவசாயிடம் அவர்களுக்கு கொடுப்பதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது.

ஒரே ஒரு வைக்கோல்!

இந்த ஒற்றை வைக்கோலில் இருந்து ஒரு புரட்சியைத் தொடங்கலாம். "
***********

இதோ அந்த வயதானவரின் கைகளில், அந்த ஒற்றை வைக்கோல். மசானபு ஃபுகோகா - விடமிருந்து, அந்த ஒற்றை வைக்கோலைப் பெற நாம் முன் வர வேண்டும்.

இந்தப் புத்தகத்தில், இயற்கை முறை விவசாயம் மட்டுமில்லை.. தத்துவம், உணவுமுறை, உடல் நலம் என அனைத்தையும் பற்றிப் பேசுகிறார் மசானபு ஃபுகோகா. 
படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.
***********
ஒற்றை வைக்கோல் புரட்சி
ஆசிரியர்: மசானபு ஃபுகோகா
தமிழில்: பூவுலகின் நண்பர்கள்
எதிர் வெளியீடு
படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி 

Friday, March 21, 2014

மௌனி - எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

மௌனியின் படைப்புகள் - புத்தகம் வாங்கி ஏறக்குறைய இரண்டு வருடங்கள் இருக்கும். இதற்கிடையில் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

நேரடியான கதை சொல்லலில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. குறைந்த கதைகளே எழுதியிருந்த போதிலும், புதுமைப்பித்தன் இவருடைய எழுத்துக்களைப் பாராட்டி  இருக்கிறார்.

இரண்டு மூன்று முறை படித்த போதும், சில பத்திகள் ஒன்றும் புரியாமல் திரும்ப திரும்ப படித்திருக்கிறேன். ஆனால், மற்ற நாவல்களைப் போல மௌனியின் எழுத்துக்களை அவ்வளவு எளிதாக கடந்து போக முடிவதில்லை. நினைவில் ஆழ்ந்து அப்படியே சில நாட்கள் தூங்கி இருக்கிறேன்.

சில வரிகளை அவ்வளவு எளிதாக கடந்து போக முடியவில்லை. திரும்ப எத்தனை முறை படித்தாலும், புதியது போலவே இருக்கிறது.

எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

குடும்பம் ஒரு இயந்திரம். பழுதுபட்டுப் போன ஒரு பாகத்தினால் அது நின்று போவதில்லை. அதற்கு பிரதி பாகம் தானாகவே உருவாகி விடும்.

வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி.

போன்ற வாக்கியங்கள் கவித்துவம் மிக்கவை. அவரின் எழுத்துக்களில் சொல் புதிது, பொருள் புதிது. மீண்டும் படிக்க வேண்டும்.

அவரின் எழுத்துக்களை முழுதும் படிக்காமல், நானோவெனில்(!) இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.

[நானோவெனில், அவனோவெனில் -  என அவரின் கதைகளில் வருகிறது.]

அழியாச்சுடர்கள் தளத்தில்: மௌனி



Tuesday, January 28, 2014

யேசு கதைகள் - பால் சக்காரியா (தமிழில்: கே.வி. ஜெயஸ்ரீ)

பால் சக்கரியா அவர்களின் 'யேசு கதைகள்' படித்தபொழுது அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து போனது. பிறப்பால் இந்துவாக இருந்தாலும், ஒவ்வொரு முறை சர்ச்சையும் சிலுவையையும் காணும் போது, அம்மா கையெடுத்து வணங்குவதை மறந்ததில்லை. எழுதப் படிக்கத் தெரியாத அம்மாவை, இயேசு எப்படி ஈர்த்தார் எனப் புரியவில்லை.

நான் பிறந்த சமயம், கொஞ்ச நாள் கிறித்துவ மருத்துவமனையில் தங்கியிருந்த போது பழகியிருக்கலாம். வாடிப்போன முகமும், குருதி வடியும் கைகளும், துயரமும் என அவர் சிலுவையில் தொங்கியிருந்த சிற்பங்களைப் பார்த்து, அட நம்மில் ஒருவர் என அம்மாவை நினைக்க வைத்திருக்கலாம். ஒவ்வொரு முறை பேருந்தில் போகும்பொழுதும், சர்ச்சைக் கடக்கும்போது வணங்கத் தவறவில்லை அம்மா.

இந்தக் கதைகளிலும், யேசுவைச் சுற்றி பெண்கள்தான் இருக்கிறார்கள். இந்தப் புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுவது போல, யேசு பெண்களுக்கு நெருக்கமானவராக இருக்கிறார். தங்கள் துயரங்கள், சந்தோசங்கள் என அவரிடம் சொல்ல ஆயிரம் இருக்கின்றன பெண்களுக்கு.



*********

யாருக்குத் தெரியும் என்ற கதையில்,ஏரோது மன்னனின் உத்திரவுப்படி, குழந்தை யேசுவைக் கொல்ல அனுப்பப்பட்ட ஒரு படைவீரன், ஒரு வேசியின் இல்லத்தில் தங்குகிறான். அந்தப் பகுதிகளில், இரண்டு வயசுக்கு கீழ் உள்ள அனைத்து ஆண் குழந்தைகளையும் கொல்ல அவனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளைக் கொன்ற குருதி வீச்சத்துடன் அந்தப் பெண்ணின் வீட்டில் தங்கி இருக்கிறான். அந்தப் பெண்ணுக்கும், படை வீரனுக்கும் நடக்கும் உரையாடலே கதை.

"குழந்தைகளுடன் உங்களுக்கு யுத்தமில்லை அல்லவா?"
அவன் சொல்கிறான், "படைவீரர்களுக்கு யாருடன்தான் யுத்தம்"

"இத்தனை ஆயிரம் குழந்தைகளின் குருதியினூடாகவா ஒரு ரட்சகன் வருகிறான்?"

"நான் வேசியாக இருப்பதும், இந்த ரட்சகன் குழந்தைகளின் குருதியினூடாக பிறக்க வேண்டும் என்பதும் விதியா?. இந்தக் குழந்தைகளின் குருதிச் சிதறலுக்கு அவன் என்ன பதில் சொல்லப் போகிறான்?"

ஆனால், அதே பெண்தான் யேசுவைக் காப்பாற்றி வைத்து அந்த இரவில் இன்னொரு இடத்துக்கு அனுப்புகிறாள். விடைபெறும்போது, தாயிடம் சொல்கிறாள்; "அவன் வளர்ந்து ராஜாவாகும் எங்களைக் காப்பாற்றச் சொல். அப்படியே அந்தப் படைவீரனையும் காப்பாற்றச் சொல்".

*********

அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள் என்ற கதை, மிக முக்கியமான கதை. தன் சகோதர, சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைத்த டீச்சர் இன்னும் முதிர் கன்னியாக இருக்கிறார். திருமணம் செய்தால், அவர் தரும் வருமானம் நின்று விடும் என்று அவரின் பெற்றோர்கள் திருமணத்தை ஒத்திப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

அன்னம்மா டீச்சர் இயேசுவை, தம்பி என்றே அழைக்கிறார். சிலுவையில் மரித்த பொழுது, இயேசுவின் வயதை விட இப்பொழுது தன் வயது அதிகம் என்பதால் அப்படிச் சொல்கிறார். ஓரிடத்தில், "இன்றைய உன் மகிமையை கனவு காணக் கூட உன்னால் முடிந்ததா?" என்று சொல்கிறார். 

ஒருநாள், அதுவும் புனித வெள்ளியன்றே ஒரு புல்வெளி மேல் இறந்து கிடக்கிறார் டீச்சர். இறந்த பின்னர், ஒரு இளைஞனை அன்னம்மா டீச்சர் சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. "நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும்  சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்."

*********

போந்தியஸ் பிலாத்து என்பவர் தான், யேசுவுக்கு தண்டனை வழங்கியவர்.  இந்த பிலாத்து தன் நண்பர், அன்தொனியஸ் என்பவருக்கு எழுதும் கடிதங்கள் இந்தப் புத்தகத்தில் குறுநாவலாக  இருக்கிறது. பிலாத்துவின் செயலாளர் யூதப் பெண் ரூத் மற்றும் பிலாத்துவின் மனைவி ஜூலியா இருவரும் இந்த கதைகளில் வருகிறார்கள்.

பிலாத்து தன் கடிதங்களில் இப்படிச் சொல்கிறார்;
"ஒரு கணம் மீட்பனாகவும், மறுகணம் மீட்கப் படுபவனாகவும் அவன் இருக்க முடியாது."

"தன் வலையில் தானே வீழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நேர்மையானவன் என்று நான் உணர்ந்தேன். ஆனால், நான் முதலில் சொன்னது போல தப்பிக்கச் சம்மதிப்பவர்களைத்தானே, நாம் தப்ப வைக்க முடியும்"

*********

சிலுவை மலை மீது, கண்ணாடி பார்க்கும் வரை மற்றும் ஒரு கிறிஸ்துமஸ் கதை போன்ற கதைகளும் இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

மதத்துக்கு அப்பால், யேசுவைப் பற்றி ஒரு சிறு வெளிச்சத்தையாவது இந்த கதைகள் நமக்கு காட்டுகின்றன.


Monday, January 6, 2014

குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்

அரசன் குடை கொண்டு ஆட்சி செய்ய வேண்டியவன். இதோ இந்தக் குடை நம்மைக் காப்பது போல, நான் உங்களைக் காப்பேன் என்று அதற்கு அர்த்தம். அந்தக் குடை நிழலில் மக்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். அந்தக் கால மன்னர் இந்தக் குடையை வைத்துக் கொண்டு மக்களை இரட்சித்தது எல்லாம் சரி, இப்பொழுது மன்னன் கிடையாது என்ற கேள்வி வரலாம். அப்பொழுது மன்னர்கள் என்றால் இப்பொழுது அரசியல்வாதிகள், நம்மை ஆள்பவர்கள். குடை மட்டும் தான் அவர்கள் கைகளில் இல்லை, மற்றபடி அவர்களும் மன்னர்களே!.

குடைநிழலும் குஞ்சரமும்(அவர்கள் வரும் வண்டி) இருந்து ஆட்சி செய்பவர்கள், நீதி, நியாயம் என்றா பார்க்கிறார்கள்?. அதெல்லாம் அவர்களுக்கு ஒத்து வராத விஷயம்.

********

கதை நடக்கும் இலங்கையில், இரவு வேளையில் தன் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன். இந்த ஒருவன் என்பவன் 'எவனோ ஒருவன்', 'உங்களில் ஒருவன்' என யாராகவோ இருக்கலாம். அயர்ந்து தூங்கும் நடு இரவில், கதவைத் தட்டி உள்ளே வருகிறது போலிஸ். 'உன் வீட்டில் யார் யாருக்கோ தஞ்சம் கொடுக்கிறாய். எங்களுடன் வா' என்று அவனை அழைத்துச் செல்கிறார்கள். எங்கே, எதற்கு.. எந்த பதிலுமில்லை. அம்மா, மனைவி, தங்கை, பிள்ளைகள் என இவனைச் சுற்றியே இருந்தவர்கள், கலங்கிப் போகிறார்கள்.

இவனுக்கு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. போகிற இடத்தில் வைத்து, தற்கொலை செய்து கொண்டான் அல்லது தப்பி ஓடும்போது சுடப்பட்டு இறந்தான் என பேப்பரில் செய்தி வருவது போல் நினைத்துக் கொள்கிறான். எதற்காக தன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் பேசுபவனாக இருப்பதுதான் பிரச்சினை என்றும் நினைக்கிறான்.



சிங்களப் பள்ளியில் சிங்களர் பெருமைகளும், தமிழ் பள்ளியில் தமிழர் பெருமைகளும் பாடமாக இருக்க, இருவருக்குமிடையே எங்கே இருந்து வரும் ஒற்றுமை. சிங்களப் பள்ளி இல்லாமல்,  பையனுக்கு வேறு நல்ல தமிழ் பள்ளி பார்க்க வேண்டும் என நினைத்து, வீடு மாற்ற முடிவு செய்கிறான். ஒரு வீட்டையும் பார்த்து பிடித்திருக்க, அந்த வீட்டையே முடிவு செய்கிறான். இப்பொழுது இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி, முன்பணமாக குடுத்திருந்த பணத்தை வாங்கி புது வீட்டுக்குத்  தந்தாகி விட்டது.

புது வீட்டு உரிமையாளர், கொஞ்சம் பழுது பார்ப்பு வேலைகள் இருப்பதாகச் சொல்லி இருப்பதால், வாரமொரு முறை சென்று பார்க்கிறான். வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. அப்படி எதேச்சையாக ஒருமுறை செல்லும் போது, தோரணம்,  வாழை மரம் கட்டி, வேறு யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு மயங்கி விழாத குறை. அந்தப் புது வீட்டு உரிமையாளர், அந்த வீட்டை இன்னொருவருக்கு விற்று இருக்கிறார். அவர்கள்தான் அந்த வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள். அந்த உரிமையாளரைப் பார்த்தால், நீங்கள் வந்து போனதைப் பற்றி சொல்லுகிறேன் என்று கூறுகிறார் வீட்டை வாங்கியவர்.

வேறு வழியில்லாமல் அவரிடம் விடைபெற்று, வீதியில் நடந்து வரும்பொழுது தனது பழைய நண்பனைச் சந்திக்க நேர்கிறது. அவன் வழக்கறிஞர் என்பதால், போலீசில் வழக்குப்  பதியச் சொல்கிறான். அவனும் அவ்வாறே வழக்குப் பதிந்து காத்திருக்கிறான். தான் கனடா செல்லவிருப்பதால், அதற்கு முன்னர் நான் உனக்கு உதவி செய்து அவனிடம் பணத்தை வாங்கிய பின்னரே  நான் புறப்படுவேன் என்கிறான் நண்பன். இடையில் அந்த முன்பணம் வாங்கிய உரிமையாளர், வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார், இவன் தன் நண்பனின் அறிவுரைப்படி வாபஸ் வாங்க மறுக்கிறான். இது எதுவும் அவன் வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி ஆகியோருக்குத் தெரியாது.

அன்று அவனை அழைத்த, அந்த வழக்கறிஞர் நண்பன் தான் இன்று கனடா செல்வதாகவும், இந்த போலிஸ் உனக்கு உதவி செய்வார்கள் எனச் சொல்லி விடை பெறுகிறான். அதற்கப்புறம் தான் தன்னை, போலிஸ் இரவில் கைது செய்து காவலில் வைத்திருக்கிறது. இப்பொழுது இருக்கும் வீட்டுக்காரரிடம் இருந்து முன்பணம் வேறு வாங்கியாயிற்று, அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும். அது இல்லாமல், போலிஸ் வேறு இவனை அழைத்து வந்து விட்டதை அறிந்த வீட்டுக்காரர், என்ன சொல்கிறாரே தெரியவில்லை. பிள்ளை, மனைவி, அம்மா, தங்கை என எங்கே செல்வார்கள் என நினைத்துப் பார்க்கிறான்.

பிடிக்க வேண்டும் என்பதற்காக பிடித்துக் கொண்டு வந்திருப்பதைப் போல, அடிக்க வேண்டும் என்பதற்காக அங்கே இருக்கும் சுவர் கடிகாரம் மணி அடித்து ஓய்கிறது.நல்லவேளையாக, ஒரு காவல்காரன் இவனுக்கு உதவி செய்கிறான். அவன் குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து அவனிடம் சொல்கிறான். அவன் இங்கே வந்து இருப்பதற்கான காரணமும் பெரிதாக ஒன்றுமில்லை. அதை அறிந்த அவன் மனம் வேதனை அடைகிறது.

இப்படி நினைத்துப் பார்க்கிறான், "குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது நடை மெலிந்து நலிவுறும் எங்களின் நிலைமை. அதனால்தான் சொல்கிறோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று. குடையை மட்டுமல்ல, குஞ்சரத்தையும் சேர்த்தே என்கிறது மனம். "

********

அதிகாரத்தாலும், ஆட்சிப் பீடங்களாலும் நசுக்கப்படும் ஒரு எளிய  மனிதனின் கதை. படிக்க வேண்டிய நாவல்.


Thursday, October 17, 2013

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (நாவல்)

ஒரு கடலோரக் கிராமத்தில் நடக்கும் கதை 'செம்மீன்'. தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று அந்த வருவாயை வைத்துப் பிழைப்பவர்கள் மீனவர்கள். சேமிப்பு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மீன் கிடைக்காத காலத்தில், இருப்பதை உண்டு காலம் தள்ள வேண்டியது தான். மரக்கான் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது, அவனுக்குத் தான் இந்த பரந்த விரிந்த கடல் இருக்கிறதே !. எப்பொழுதும்  கடல் அன்னை நம்மைக் கை விட்டுவிட மாட்டாள் என்பது அவர்களது நம்பிக்கை.

தினம் தினம் கிடைக்கும் வருவாயை செலவழித்து வரும் மீனவர்களுக்கு மத்தியில், செம்பன்குஞ்சு கொஞ்சம் வித்தியாசமானவன். சொந்தமாகத் தோணி வாங்க வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும், விதவிதமாக உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் மனைவி சக்கி-யும் பாடுபடுகிறாள். இருவரும் சேர்ந்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. மூத்தவள் கறுத்தம்மா. இளையவள், பஞ்சமி. தோணி வாங்கி, நன்றாகச் சம்பாதித்த பின்னர்தான், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதென முடிவோடு இருக்கிறான் செம்பன்குஞ்சு.


சின்ன வயதிலேயே அந்தக் கடலோரத் துறைக்கு வியாபாரம் செய்ய வந்தவன் பரீக்குட்டி. துலுக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இவனிடம் கறுத்தம்மா சின்ன வயதிலிருந்தே பழகிக் கொண்டு இருக்கிறாள். வளர்ந்த பின்னர் அது காதலாக மாறுகிறது.

செம்பன்குஞ்சு தோணி வாங்க முடிவு செய்கிறான்.கொஞ்சம் பணம் பற்றாமல் இருக்கவே, யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள். பரீக்குட்டியிடம் வாங்கலாம் என முடிவு செய்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு முன்னரே, கறுத்தம்மா பரீக்குட்டியிடம் 'கடன் தருவாயா' எனக் கேட்டதற்கு, அவனும் மகிழ்ந்து 'நான் தருகிறேன்' என்கிறான். சொன்னவாறே, பணம் தருகிறான்.

கறுத்தம்மாவின் மேல் உள்ள காதலால்தான் அவன் பணம் தந்தான் என்பதை அறிந்த, அவளின் தாய் சக்கி, 'பரீக்குட்டி வேறு சமூகம். இது நமக்கு ஒத்து வராது. கடல் தாயின் குழந்தைகள் நாம் தப்பு செய்யக் கூடாது. நமது துறையில் பிறந்த நீ, தோணி பிடிக்கும் ஒரு மரக்கான் வீட்டுக்குத் தான் போக வேண்டும். பரீக்குட்டியும் உன்னை கல்யாணம் செய்ய முடியாது' என்றெல்லாம் அறிவுரை கூறுகிறாள். கறுத்தம்மா, தன் தாயிடம் 'ஒரு நாளும் நான் தவறு செய்ய மாட்டேன், ஆனால் பரீக்குட்டியிடம் வாங்கிய கடனைக் குடுக்க வேண்டும்' என்று கூறுகிறாள்.

இப்பொழுது, தோணி சொந்தமாக இருப்பதில், நன்றாகச் சம்பாதிக்கிறான் செம்பன்குஞ்சு. கறுத்தம்மா ஏதாவது செய்து விடுவாளோ என்று சக்கி பயந்து கொண்டே இருக்கிறாள். விரைவில் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என செம்பன்குஞ்சுவிடம் சொன்னால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அவன் இரண்டாவதாக இன்னொரு தோணியையும் வாங்கி இருந்தான்.

செம்பன்குஞ்சு, பரீக்குட்டிக்குத் தர வேண்டிய பணத்தையும் அவனுக்குத் தருவதில்லை. திருப்பித் தருவார்கள் என்று அவன் கடன் கொடுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் அவன் பணம் கொடுத்திருந்தான். கையில் பணம் இல்லாமல் அவன் பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டது. தொழில் முன்னர் போல இல்லை அவனுக்கு.

இதற்கிடையில், செம்பன்குஞ்சு ஒரு மரக்கானைச் சந்திக்கிறான். அவன் பெயர் பழனி. தாய் தந்தை, ஏன் உறவினர்கள் கூட இல்லை. வீரம் மிக்க அவனைப் பார்த்ததும், கறுத்தம்மாவுக்கு இவனையே கல்யாணம் செய்வதென முடிவு செய்கிறான். அவனுக்குத் தாய் தந்தை இல்லாததால் அவன் நம்முடனே இருப்பான் எனக் கணக்குப் போடுகிறான் செம்பன்குஞ்சு. திருமணத்துக்கு பழனியும் சம்மதிக்கிறான்.  வேறு வழியின்றி கறுத்தம்மாவும் ஒத்துக் கொள்கிறாள்.

கல்யாணத்தன்று நடக்கும் சிறு பூசலில் 'கறுத்தம்மா கெட்டுப் போனவள். அதனால் தான் யாரும் இல்லாத பழனிக்கு மணம் முடிக்கப் பார்க்கிறார்கள்' என்ற பேச்சு எழுகிறது. இதைக் கேட்டதும் சக்கி மயங்கி விழுகிறாள். செம்பன்குஞ்சு அவர்களைச் சமாதானம் செய்து கல்யாணம் முடித்து வைக்கிறான். சக்கியோ இன்னும் மயங்கி மயங்கி விழுகிறாள். இந்த நிலையில், 'கறுத்தம்மாவை அழைத்துச் செல்ல வேண்டாம், சக்கி சரியானதும் கிளம்பலாம்' என்கிறான் செம்பன்குஞ்சு. பழனி மறுத்து விடுகிறான். கறுத்தம்மா தாயின் முகம் பார்க்க, 'இங்கயே இருந்து அந்த பரீக்குட்டியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கிறாயா?' என்கிறாள். உடனே அவளும் நான் பழனியுடன் புறப்படுகிறேன் என்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கிளம்பும் தன் மகளை, 'இனி நீ என் மகளே இல்லை' என்கிறான் செம்பன்குஞ்சு.

****************

சொந்தத் துறையில் அவள் கெட்டுப் போனதால்தான், அவளைக் கல்யாணம் செய்து வைத்து பழனியுடன் அனுப்பி விட்டான் செம்பன் குஞ்சு என பழனியின் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். சக்கியோ கொஞ்ச நாளில் 'நீ இன்னொரு பெண்ணைக் கட்டிக்கோ' என செம்பன்குஞ்சுவிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். அவன் மறு கல்யாணம் செய்தானா? கறுத்தம்மா தன் தாயின் இறப்புக்கு வந்தாளா? சிறு பெண் பஞ்சமி என்ன ஆனாள்?

"தோணி ஓட்டிச் செல்லும் மரக்கானின் உயிர், கரையில் உள்ள அவனின் மனைவியின் கையில் தான் இருக்கிறது. அவள் நெறி தவறிப் போனால், கடல் அன்னை பொறுக்க மாட்டாள். அவனை விழுங்கி விடுவாள்" என்பது அந்த மக்களின் நம்பிக்கை. உயிருக்குப் பயந்து, அவனை இப்பொழுது யாரும் தோணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அவனுடன் சேர்ந்து நாமும் பலியாக வேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். தனியனான அவன் என்ன செய்தான்?

கரையில் பாடிக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, கறுத்தம்மாவை மறந்து விட்டானா? நட்டம் இல்லாமல் தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறானா? பரீக்குட்டியிடம், செம்பன்குஞ்சு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தானா?

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்த கறுத்தம்மா, தனது குலத்தின் நீதிகளுக்கு இணங்க பழனியைக் கல்யாணம் செய்து கொண்டாள். பரீக்குட்டி இன்னும் அவள் நினைவில் இருக்கிறானா? எத்தனை நாள் மூடி வைத்தாலும் ஒருநாள் வெளியே வரத்தான் போகிறதே எனப் பயந்தாளா? . பழனியிடம், பரீக்குட்டி பற்றிச் சொன்னாளா?.

ஊரார் தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும்பொழுது பழனி என்ன செய்தான்?. கடலுக்குள் மீன் பிடிக்க போக அவன் என்ன செய்தான்?. மாமனார் செம்பன்குஞ்சுவை அவன் போய்ப் பார்த்தானா?. வேறு பையனிடம் கறுத்தம்மா பழகி இருக்கிறாள் என்பதை அறிந்த அவன் அவளிடம் அவனைப் பற்றி கேட்டானா?

நாவலைப் படித்துப் பாருங்களேன்.


செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி

Friday, September 13, 2013

ஜே.ஜே: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி (நாவல்)

புத்தகம் வாங்கி பல வருடங்கள் ஆனாலும்,  முதலில் முழுவதும் படிக்க முடியாமல் திணறினேன். அல்லது இப்புத்தகம் கோரும் உழைப்பை நான் கொடுக்கவில்லை. நாவல், வழக்கமான கதை சொல்லல் முறையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது  காரணமாக இருக்கலாம். இடையில் மூன்று நான்கு தடவை திரும்ப திரும்பப் படித்தேன். படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு பகுதி, ஒரு வாசகம் என்னைக் கவர்ந்தது. இன்று இரவு இந்த புத்தகத்தை, மீண்டும் படித்தால் கூட எனக்கு அது புதிய வாசிப்பாகவே இருக்கும்.

பாலு என்கிற வாசகன் மூலம், ஜே ஜே எனும் மலையாள எழுத்தாளரைப் பற்றிச் சொல்லிச் செல்லும் நாவல் தான் ஜே ஜே: சில குறிப்புகள். ஜே ஜே வின் பிறப்பு முதல் அவன் இறப்பு வரை, அவன் பழகியவர்கள், நண்பர்கள், காதலி, அவன்  எழுதியவை என சொல்லிச் செல்கிறது நாவல். பாலுவின் பார்வையில் நாவல்  சொல்லப் பட்டாலும், ஜே ஜே வின் வாழ்க்கைச் சித்திரமாக இருக்கிறது நாவல். 


வழக்கமான கதைப்போக்கு, வருணனைகள், கற்பனை சித்திரங்கள் என்று ஏதுமில்லை.நாவல் எழுதிப் பல ஆண்டுகள் ஆனாலும், இன்றைய சூழலுக்கு மிகப் பொருந்திப் போகிறது. ஓரிடத்தில் இப்படி வருகிறது 'என் கவிதையை ரசிக்க கூடிய ஒரு வாசகன் கிடைத்து விட்டான்  என்ற சந்தோசத்தில் இருந்தேன். அடுத்த நிமிடமே சட்டைப் பையில் இருந்து அவன் ஒரு கவிதையை எடுத்து நீட்டினான்'.

இன்னொரு இடத்தில 'சிவகாமி அம்மாளின் சபதம் நிறைவேறி விட்டதா?' என்று ஜே ஜே கேட்பது போல வருகிறது. தான் வரைந்த ஓவியத்தில் சூரியன் இல்லை என்று ஒருவர் சொல்ல, 'சூரியன் வானத்திலிருக்கும் என நம்புகிறேன்' என்று சொல்கிறான் ஜே ஜே. முற்றிலும் தமிழ் வார்த்தைகளை மட்டும் கொண்ட,  'பொங்குமாக்கடல்'  பத்திரிகையின் ஆசிரியரான தாமரைக்கனி ஜே ஜே என்ற வார்த்தைகளைக் கூட 'சே சே' என்றுதான் போடுவேன் என்கிறார்.

நாவலில் இருந்து சில வரிகள்;

*******************

எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க, அது அதற்கான இடைவெளி தேவைப்படுகிறது. சில சமயம் காலத்தின் இடைவெளி. சில சமயம் தூரத்தின் இடைவெளி.

*******************

பாதைகள் என்று எதுவுமில்லை. உன் காலடிச் சுவடுகளே உனக்கான பாதையை உருவாக்குகிறது.

*******************

என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான்.

அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.


*******************

மனிதக் குரல் ஏற்படுத்தும் பரவசத்திற்கு மாற்றாகப் புத்தகங்கள் இருக்க முடியாது. ஏசு எழுப்பிய குரல் அவர் முன் நின்றிருந்த ஜனங்கள் மனதில் எவ்வளவு பரவசத்தை ஏற்படுத்தியிருக்கும்! அதனால்தான் மனிதன் எவ்வளவோ படித்த பின்பும், எவ்வளவோ தெரிந்த பின்பும் மற்றொரு பெரிய குரலைத் தேடிப் போகிறான். குரல் தன்னுடன் பேசுவது போல அச்சு பேசாது என்பது வாசிப்பின் ஒரு நிலையில் அவனுக்குத் தெரிகிறது.

*******************



படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி 


Friday, September 6, 2013

ஈராறுகால்கொண்டெழும் புரவி

எழுத்தாளர் ஜெயமோகனின் ஐந்து கதைகளும், ஒரு குறுநாவலும் கொண்ட தொகுப்பு 'ஈராறு கால் கொண்டெழும் புரவி'.


ஈராறு கால் கொண்டெழும் புரவி(குறுநாவல்):

சாஸ்தான்குட்டிப்பிள்ளை தமிழ் ஆசிரியர். பேறுகாலத்தில் மனைவி இறந்து விட, தனி மரமாகிறார். சித்தர் ஞானம், சித்தர்கள் பாடல் என்று தணியாத ஆர்வம். இரண்டு வேம்பு குசிச்களை மட்டும் வைத்துக்கொண்டு, நிலத்துக்கடியில் ஊற்றை எப்படி கண்டறிகிறார்கள் என்று யோசிக்கிறார். தள்ளாத வயதில், ஒரு மலை மேல் சென்று குடில் அமைத்து 'சாமியார்' என அறியப்படுகிறார். அங்கே அவர் நட்டு வைத்த மாமரம், வளர்ந்து ஒரு காய் கூட பிடிக்காமல் இருக்கிறது. கொஞ்ச வருடங்கள் கழித்து, ஊருக்கு வருகிறார். அங்கே தான் அறிந்த, ஞானமுத்தனின் மருகளிடம் நீர் அருந்தி உயிர் துறக்கிறார். அவரின் சாம்பலை அந்த மாமரத்தின் அடியில் போட்டவுடன், அந்த வருடம் முதல் மாமரம் காய்த்து தொங்குகிறது.


இந்நாவலைப் பற்றி ஜெயமோகன்:
"என் படைப்புகளிலேயே மிக முக்கியமான சிலவற்றில் ஒன்று என நான் நினைப்பது ஈராறு கால் கொண்டெழும் புரவி. சித்தர் ஞானம் என்பதன் மீதான ஒரு விளையாடல் அது. அர்த்தமற்ற விளையாட்டல்ல. பல்வேறு மூல நூல்களின் வரிகள் அதில் பகடியாக திருப்பப்பட்டுள்ளன. திரிக்கப்பட்டுள்ளன.  அந்த விளையாட்டு வெறும் கேலி அல்ல. என்னைப் பொறுத்தவரை அது ஒருவகை பொருள் கொள்ளலே. எல்லா வாசகர்களுக்கும் நூல்களும் மொழியும் மாறி மாறி கவ்வி ஆடும் அந்த விளையாட்டு பிடி கிடைக்காது போகலாம்."
சில வரிகள் நாவலில் இருந்து;
"ஓடுவது மண்ணிலன்னா என்ன, மண்ணுக்கு அடியிலண்ணா என்ன"

"மொத்தம் ரெண்டு பூலோகம் இருக்குதுன்னு ஒரு மண்புழு நெனச்சுட்டு. ஒண்ணு அது திங்கப்போற மண்ணு. இன்னொண்ணு அது தின்னு வெளிக்கெரங்கின மண்ணு"

"ருசிச்சது உம்ம பசி அய்யா. பசிக்கப்பால் உள்ள ருசியென்ன?"



அலை அறிந்தது:

வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் 'அத்தர் பாய்' பற்றிய கதை. அலை என்பது மேலேயும் போகும், கீழேயும் போகும். மேலே போன அலை கீழே இறங்க  வேண்டும் என்பது விதி. ஒரு காலத்தில், அத்தர் பாயின் தாத்தா மிகுந்த செல்வத்துடன் இருந்திருக்கிறார். ரம்ஜான் அன்று, சக்காத்து பணத்தை ஏழை மக்களுக்கு வாரி வீசிய குடும்பமாக இருந்திருக்கிறார்கள். அவ்வளவு செல்வாக்குடன் இருந்து, இப்பொழுது வீடு வீடாகச் சென்று அத்தர் விற்கும் பாய் சொல்கிறார்; 'அலை மேலேறினா கீழிறங்கணும்னு அல்லாவோட ஆணை.. கீழ எறங்குத நேரத்துல நாம வந்து பொறந்தாச்சு ... சக்காத்த வாரி எறிஞ்சு குடுத்த பாவத்துக்கு இன்னும் எத்தன தல மொற கஷ்டப்படணுமோ'.

களம்:

பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் அன்று அரங்கேற்ற நாள். தாங்கள் கற்ற கலைகளை அவர்கள் மன்றத்தின் முன்னால்  அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். நகுலன், பீமன் என முடிய.. துரோணர் அர்ச்சுனனை அழைக்கிறார். வில் விஜயனான அவன், பறந்து செல்லும் ஒரு குருவியின் தலையை வெட்டி வீழ்த்துகிறான் தனதம்பால். மகிழ்ந்த துரோணர் 'இவனைப் போல வில்லாளி யாருமே இந்தப் புவியில் இல்லை' எனக் கூற, அரங்கத்தினுள் கர்ணன் வருகிறான். பறந்து செல்லும் ஒரு குருவியின் ஒற்றைச் சிறகை அது அறியாமல் தன்  அம்பால் அறுத்து, கைக்கு கொண்டு வந்து தலைக்கு சூடிக் கொள்கிறான். அர்ச்சுனன் துடிக்கிறான். இருவரும் போர் புரிய முடிவு செய்கிறார்கள். கர்ணனின், குலம் என்ன என்று கேட்க, கோபம் கொண்ட துரியோதனன் 'இவன் என் நண்பன். எனக்குச் சொந்தமான அங்கத நாட்டுக்கு இவனை மன்னன் ஆக்குகிறேன்' என்கிறான்.


 அங்கே வரும் தேரோட்டி, தன் மகன் களத்தில் இருப்பதைப் பார்க்கிறான். கர்ணனிடம் மன்றாடி, போர் வேண்டாம் எனச் சொல்ல அவனும் சம்மதிக்கிறான். சூரியன் மறைந்ததால், சபை மரபுப் படி அரங்கம் கலைகிறது. அர்ச்சுனன், தர்மனிடம் "இவனைக் கண்டு நீங்கள் பயப் பட வேண்டாம். இவனை நாம் வெல்வோம்." எனக் கூற, தர்மனோ " தன் அறத்தால் இந்த சூதன் மகன் நம்மை நிரந்தரமாக வென்று செல்வான் தம்பி. இன்று அந்த சூதன் சம்மட்டியுடன் களத்துக்கு வந்த போது என் மனம் உவகை கொண்டது. நீயும் பீமனும் எல்லாம் உவகை கொண்டோம். ஆனால் அவன் ஒருகணம் கூட அவரை நிராகரிக்கவில்லை. அக்கணத்தில் விண்ணில் தேவர்கள் அவன் மேல் மலர் சொரிந்து விட்டார்கள்” என்கிறான்.

பழைய முகம்:

சினிமா உலகம் எப்பொழுதுமே மிகை அலங்காரத்தால் ஆனது. அந்த அலங்காரத்தை நீக்கி விட்டால், அவர்களுக்கும் காதல் உண்டு, பிள்ளைகள் உண்டு, பிரச்சினைகளும் உண்டு. தான் சிறு வயதில் பார்த்து வியந்த ஒரு நடிகையை சந்திக்க நேர்கிறது அதுவும் பாலியல் தொழில் புரிபவளாக. முதலில் அது தான் இல்லை என்று மறுக்கும் அவள்,  பின்னர் ஒத்துக் கொள்கிறாள். கூடப் பிறந்த சகோதரர்கள் தன்னை ஏமாற்றியது, கூட்டி வந்தவன் தன்னை ஏமாற்றிய கதை என எல்லாவற்றையும் சொல்கிறாள். கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி வாங்கிய அடிகள், பத்துக்கு மேற்பட்ட முறை கருக்கலைப்பு, கடைசியில் பிறந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி குறைபாடு என போய்க் கொண்டிருக்கிறது அவள் வாழ்க்கை. இரவு முழுவதும் அவள் நடித்த பாடல்களைச் சளைக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறாள் அந்த நடிகை.

மன்மதன்:

சிற்பங்களைப் பார்க்க ஒரு கோவிலுக்குச் செல்கிறான் கிருஷ்ணன். அங்கே ஒரே ஒரு பெண் மட்டும் பூக் கட்டிக் கொண்டிருக்க, அவளின் பேரழகை வியந்து நோக்குகிறான். அவளிடம், 'சிற்பங்களைப் பர்ர்க்க வேண்டும்' எனச் சொல்ல ஓடிப் போகும் அவள் ஒரு ஆளைக் கூட்டி வருகிறாள். அந்தப் பெண்ணின் கணவன்தான் அவன். கண் பார்வை அற்ற ராஜூ. ராஜூ சிற்பங்களைப் பற்றி விளக்குகிறான். ஒவ்வொரு சிலையையும் கைகளால் தொட்டே, அதன் அற்புதங்களைப் பற்றிச் சொல்கிறான். கொஞ்ச நேரத்தில், அந்தப் பெண் தான் சந்தைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு போகிறாள். அவளிடம் சரி என்று சொல்லி விட்டு, மீண்டும் தொடர ஆரம்பிக்கிறான் மன்மதன் சிலையைக் காட்டி, "மன்மதன் கிட்ட எந்த ஆயுதமும் கெடையாது சார்..அந்தக் கரும்பு வில்லும்.. மலரம்பும் மட்டும்தான்".



அதர்வம்:

தனக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க வழி தெரியாமல் தவிக்கிறான் பாஞ்சால நாட்டு மன்னன் துருபதன். அதர்வ வேதம் அறிந்த யாஜரை அணுகுகிறார்கள். தனக்கு ஏற்பட்ட அவமானத்தை அழிக்கும் வல்லமையோடு ஒரு மகள் வேண்டும் என்கிறான் மன்னன். முதலில் மறுக்கும் அவர்கள், அவனிடம் "குரோதம் உப்புபோல மன்னரே, அது தானிருக்கும் பாண்டத்தையே முதலில் அழிக்கும்" என்று சொல்லிப் பார்க்கிறார்கள். மன்னன் மனம் மாறுவதில்லை. இதுதான் நடக்கும் என்பதை அறிந்த அவர்கள், யாகத்துக்குச் சம்மதிக்கிறார்கள். யாகம் முடியும் தருவாயில், தேவதையின் அனுக்கிரகம்  இருப்பதாகவும், அவளே குழந்தையாக பிறப்பாள் எனச் சொல்கிறார் யாசர். நீரில் அவள் முகத்தை காட்டுகிறார். பேரழகும், கருணையும், விவேகமும் உடையவளாக அந்த பெண் குழந்தை தோன்றுகிறது. துருபதன் 'இவள் பெயர் திரௌபதி, இனி இவள்தான் பாஞ்சாலி…' என்று நடுங்கிக் கொண்டே நீரைத் தொட, பிம்பம் கலைகிறது. யாக குண்டத்தில் இருந்து அக்னி மேலெழுந்து கொண்டிருக்கிறது.


படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.

Wednesday, May 29, 2013

விஷ்ணுபுரம் - ஜெயமோகன் (நாவல்)

விஷ்ணுபுரம் நாவல் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன். விஷ்ணுபுரம் பற்றி நான் அறிந்த வரையில் அல்லது  படித்து புரிந்த வகையில் இந்த கடிதத்தை அவருக்கு எழுதி இருந்தேன். அவரும் பதில் எழுதி இருந்தார். நான் அவருக்கு எழுதியதும், அவருடைய பதிலையும் இங்கே கொடுத்துள்ளேன். 

**************************

அன்பின் ஜெயமோகன்,
நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட புத்தகம் விஷ்ணுபுரம். பல வருடங்களாக இணையத்தில் உங்களைத் தொடர்ந்து படித்து வந்த போதிலும், விஷ்ணுபுரம் படிக்கவே இல்லை.விஷ்ணுபுரம் மட்டும் அல்ல, இன்னும் கொற்றவை, பின் தொடரும் நிழலின் குரல், காடு.... என படிக்க வேண்டும். போன மாதம் விஷ்ணுபுரம் வாங்கி, இப்பொழுது படித்து முடித்து விட்டேன். இன்னும் பிரமிப்பு போகவில்லை, ஒரு கனவு உலகத்துக்குள் சென்று வந்தது போல இருக்கிறது.

அவ்வபொழுது வரும் கவிதையான வரிகள் படிக்கும் பொழுது நினைவில் இருக்கிறது. அடுத்த அத்தியாயம் போகும்பொழுது அது மறந்து விடுகிறது. திரும்ப திரும்ப படிக்க வேண்டும், நினைவில் நிறுத்த வேண்டும். "பூரணத்திலிருந்து, பூரணத்தை எடுத்த பிறகும் பூரணமே எஞ்சி இருக்கிறது" போன்ற வரிகள் மறப்பதில்லை.


விஷ்ணுபுரம் ஆரம்பிக்கும் பொழுதே, "சேயை அணையும் தாய் போல இந்த ஆறு படித்துறை தோறும் கை நீட்டிச் செல்கிறது", "இந்த மண்ணுக்கு உரிமைப்பட்ட எதையோ சுமந்து அலைகிறேன் போலும்" போன்ற வாக்கியங்கள் என்னை உள்ளே இழுத்து விட்டது. இரண்டாம் பாகத்தை கொஞ்சம் வேகமாகப் படித்தேன் என்றாலும், திரும்பவும் பொறுமையாகப் படித்து உள்வாங்க வேண்டும்.

எங்கள் வீட்டில் ஒரு சின்ன செம்பு சிலை இருக்கும். இரண்டு கை விரல்களைச் சேர்த்த அளவே உள்ள சிலை. இது எப்படி கிடைத்தது என்று  கேட்டால் , பாட்டியின் பாட்டி கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் எடுத்துக்கொண்டு மேலே ஏறும்பொழுது, மேலிருந்து குடத்துக்குள் இந்த சிலை வந்து விழுந்ததாகச் சொல்வார்கள். அது உண்மையா, பொய்யா என்றெல்லாம் யோசிக்க முடியாது அல்லவா?. தொடரும் நம்பிக்கைகள் தானே, அடுத்த தலை முறைகளுக்கு கடத்த படுகிறது.

நாவல் கனவுகளில் மிதந்து கிடப்பது போல இருக்கிறது. நம்மையும் அந்த கனவுக்குள் இழுத்துக் கொண்டு போவது போல இருக்கிறது. நமக்கு முன்னர் வாழ்ந்த மாந்தர்கள், எவ்வாறு அடுத்த தலைமுறைகளில் தொன்மங்களாக மாறி விடுகிறார்கள்.. சித்திரை, திருவடி போன்றவர்கள் அதற்கடுத்த தலை முறைகளில் வணங்கத் தக்கவர்களாக மாறி விடுகிறார்கள். இப்படியே நாம் பார்க்கப் போனால், நம் ஊர்களில் கோயில் கொண்டுள்ள ஒவ்வொரு சிலைக்கு பின்னும் ஒரு வரலாறு இருக்க கூடும்.

பல்லாண்டுகளுக்கு முன்னர், அப்பம் சுட்டு அடுக்கி வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் வழங்கிய் ஊரில், இப்பொழுது ஒரு பாட்டி அப்பம் சாப்பிட முடியவில்லை. ஆயிரக் கணக்கான யானைகளும், குதிரைகளும் நடந்த வீதிகள் இன்று வெறிச்சோடிக் கிடக்கிறது. இன்பம்/துன்பம், வெறுப்பு/விருப்பு என்பது போல ஏற்றமும் தாழ்வும் நடந்து முடிகிறது. பாகற்காய் குழம்புக்குள் வெல்லம் போட்ட பின்னர், கசப்பும் இல்லாமல், இனிப்பும் இல்லாமல் ஒரு சுவை கிடைப்பது போல.. எதுவும் தன்னை அணுகாமல் அந்த பெருமூப்பன் அல்லது விஷ்ணு சிலை நீண்டு கிடக்கிறது.

அதிலும் அந்த கரிய நாய். எல்லோரையும், எல்லாவற்றையும்   உற்றுப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு, மெதுவாக அந்தப் பக்கம் நகர்ந்து போகும் அந்த நாய், அது தான் காலத்தின் கரமா?.

அக்னி தத்தன், விஷ்ணுபுரத்துக்கு வந்து  இந்த பெரிய கோவிலை நிர்வாகம் செய்கிறான். சோனா நதியில், மூழ்க இருந்த அவனை ஒரு பெண் காப்பாற்றுகிறாள். பல தலைமுறைகள் கடந்து அக்னி தத்தனின் வாரிசான, வேத தத்தனும் பிரளய காலத்தில்  ஆற்றில் கிடக்கிறான்.. அவனைக் காப்பாற்றப் போகும் பெண் நீரில் அடித்துப் போகிறாள். அக்னி தத்தனின் வாரிசு, பிரக்ஞை இன்றி அப்படியே ஒரு பாறை போல கிடக்கிறான். பிரளய காலத்தில், அவன் சோலைப் பைத்தியமாக இருக்க வேண்டும் என்பது முன்பே முடிவு செய்யப்பட்டது அல்லவா?.

இரண்டாம் பாகத்தில் நடக்கும் தருக்கங்கள் மிக நன்றாக ஊன்றிப் படிக்க வேண்டும் போல் இருக்கிறது. அனைத்து பிரிவினரும், அவரவர் சார்ந்த பிரிவின் கொள்கைகள் பற்றி விவாதம் செய்யும் பொழுது, "ஞானம் தருக்கத்துக்கு அப்பாற் பட்டது" என்று சித்தன் சொல்லும் இடம் எனக்குப் பிடித்து இருக்கிறது.

விஷ்ணுபுரத்தை முழுமையாக படித்து விட்டேனே என்றால், இல்லை என்றே சொல்வேன். முக்கியமாக இரண்டாம் பாகத்தை வேகமாகப் படித்தேன். இன்னும் ஒரு இரண்டு முறை படிக்க வேண்டும் போல இருக்கிறது.

வேறொன்றும் சொல்லத் தோணவில்லை. எழுத எழுத வந்து கொண்டே இருக்கும் போல இருக்கிறது. விஷ்ணுபுரம் பற்றி வெளியான விமர்சனங்களை இணையத்தில் படித்த பின்னரே, நாவலைப் புரிந்து கொள்ள முடிந்தது.

இவ்வளவு பெரிய நாவலை படைத்த தங்களுக்கு என் நன்றிகள்.

அன்புடன் 
இளங்கோ 
 
**************************

அன்புள்ள இளங்கோ

நன்றி.

உங்கள் வலைப்பூவையும் பார்த்தேன். விஷ்ணுபுரம் பற்றி நிறைய பேசி எழுதி விவாதித்துவிட்டோம் என்று ஒருபக்கம் நினைக்கையில் எங்கிருந்தோ ஒரு விரிவான கடிதம் முற்றிலும் புதிய வாசிப்புடன் வந்திருக்கும். நேற்றும் அப்படி ஒரு கடிதம். புரம் என்ற சொல் புருஷன் என்ற சொல்லில் இருந்து வந்தது. விஷ்ணுபுரம் ஒரு மனிதவாழ்க்கையின் குறியீடு. இளவயதின் கொண்டாட்டம் நடுவயதின் தத்துவத்தேடல் முதுமையின் சரிவு கடைசியில் மரணம் என அது செல்கிறது என்று அந்த கடிதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு படைப்பு ஒரு கட்டத்துக்குமேல் வாசகர்களால் கூட்டாக கற்பனைசெய்து உருவாக்கப்படுகிறது என நினைக்கிறேன். விவாதங்கள் அதன் விளைவுகள்

ஜெ

**************************


விஷ்ணுபுரம் புத்தகம் இணையத்தில் வாங்க : உடுமலை.காம்  




Monday, May 6, 2013

மானசரோவர் - அசோகமித்திரன் (நாவல்)

சினிமா உலகம் என்பது அலங்காரங்களால் ஆனது. நாம் நினைப்பது போல் வெளிப் பார்வைக்கு அது சந்தோசமான உலகம் போல தோன்றினாலும், அது அப்படியில்லை. அசோகமித்திரன் அவர்களின் இந்த நாவல் ஒரு நடிகனுக்கும், சினிமாத் துறையில் இருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய நாவல்.

வட நாட்டு நடிகன் சத்யன்குமார். சத்யனுக்கு அவன் குடும்பத்தினர் யாரும் இல்லை. தமிழ்நாட்டில் சில படங்களுக்கு நடிக்க வரும்பொழுது, இங்கே வேலை செய்யும் கோபாலுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது நட்பாகத் தொடர்கிறது. சத்யன் குமார் சென்னை வந்தால், கண்டிப்பாக அங்கே கோபால் இருக்க வேண்டும். கோபாலுக்கு இலக்கியத்தில் விருப்பம் உண்டு என்பதால், அது சத்யனுக்கு பிடித்துப் போகிறது. இருவரும் சந்திக்க நேர்ந்தால் பேசிக் கொண்டே இருப்பார்கள். சத்யனுக்கு, கோபாலைப் பிடிக்கும் என்பதால் தயாரிப்பாளர்கள் கோபால் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.



கோபாலுக்கு மனைவி, பையன் என குடும்பம் உண்டு. ஒரு பெண் பிள்ளையை கல்யாணம் செய்து, அனுப்பி விட்டார். மனைவி ஜம்பகம். அவளுக்கு கோபால் சினிமாத் துறையில் வேலை செய்வது பிடிப்பதில்லை. நேரம் கெட்ட நேரம் வெளியே போவது, வருவது  என்று இருப்பது பிடிப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பெண்ணுடன் சுத்திக் கொண்டு வருவதாக சண்டை போடுவாள். சில சமயங்களில் பைத்தியம் பிடித்தது போல, கையில் கிடைத்ததை எல்லாம் எடுத்து வீசுவாள்.


அன்றொரு நாள் சத்யன் சென்னை வந்தபோது, ஜம்பகம் உடம்பு சரியில்லாமல் படுத்து இருக்கிறாள். பையனுக்கும் உடம்பு சரியில்லை. அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்று வருகிறான் கோபால். காய்ச்சல் குறைந்த பாடில்லை. அன்றிரவே, பையன் இறந்து விடுகிறான். ஜம்பகம் பைத்தியம் பிடித்தது போல இருக்கிறாள். அவளை மயக்க மருந்து குடுத்து படுக்க வைக்கிறார்கள். சென்னையில் இருக்கும் சத்யன், விசயத்தைக் கேள்விப்பட்டு கோபால் வீட்டுக்கு துக்கம் விசாரிக்க வருகிறான். அவனிடம் மட்டும் கோபால், பையன் காய்ச்சலால் சாகவில்லை என்றும், நான் பார்க்கும்போது முகத்தின் மீது ஒரு தலையணை கிடந்தது என்றும் சொல்கிறான்.

அதற்குப் பின்னர் ஜம்பகத்தை, அவளின் அம்மா ஊருக்கு கூட்டிக் கொண்டு போகிறாள். தனியாக இருக்கும் கோபால், சென்னை வீட்டை காலி செய்து விட்டு, ஒரு சாமியாரைத் தேடி கும்பகோணம் அருகில் உள்ள ஊருக்குச் செல்கிறான். பின்னர் சென்னை வரும் சத்யன், கோபாலைப் பற்றி எல்லோரிடமும் விசாரிக்கிறான். யாருக்கும் அவன் எங்கே சென்றான் எனத் தெரிந்திருக்கவில்லை. எப்படியோ தெரிந்து கொண்டு, கும்பகோணம் பயணிக்கிறான். அவனுக்கு இப்பொழுது உடல்நிலை வேறு நன்றாக இல்லை.


கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் அந்த ஊரில் கோபாலைச் சந்திக்கிறான் சத்யன். அப்பொழுது சாமியார் அங்கே வருகிறார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்பொழுது;

"நான் ஒன்றைச் சொல்ல வேண்டும்" என்கிறான் சத்யன்.

"எதை பற்றிச் சொல்ல வேண்டும். ஒரு நாள் கோபாலின் மனைவியை நீ கையை பிடித்து இழுத்தாய். அல்லது அவள் உன்னை இழுத்தாள். அதனை கோபாலின் பெண்ணும், பிள்ளையும் பார்த்து விட்டார்கள்"

"சுவாமிஜி.."

"இங்கே யாரும் சாமியில்லை... எல்லோரும் பூதம் தான்.. பே.. பே "  எனச் சிரித்து விட்டு சாமியார் செல்கிறார்.

கோபாலிடம், "அவனை இந்த ஆற்றில் குளித்து விட்டுப் போகச் சொல். அவனுக்கு இதுதான் மானசரோவர்".

சத்யன் அது என்னவென்று கேட்க;
"வடக்கே, இமையமலையில் மானசரோவர் என்ற ஏரி இருக்கிறது. சுத்தமான தண்ணீர். அதில் குளித்தால் உடம்பு சுத்தமாகும். பின்னர் மனதில் உள்ள அழுக்குகள் எல்லாம் போகும். உனக்கு இந்த ஆறுதான் மானசரோவர் என்கிறார் சாமி"

சத்யன் ஆற்றில் இறங்கி குளிக்கப் போகிறான்.

************************
நாவலில் இருந்து;
"மண்ணுக்குள் புதைத்த பின்னர் நாம் எல்லோரும் எட்டு ஆண்டுகளில் மண்ணோடு மண் தான். ஆனால், தோல் தொழிற்சாலையில் வேலை செய்பவனுக்கு மட்டும் கூடுதலாக ஒரு ஆண்டு ஆகும்"
"ஏன்?"
"அவன் தோல் ஏற்கனவே கொஞ்சம் பதப் படுத்தப் பட்டிருக்கும்"

---------------

"டாக்டர், கற்பனையில் நான் கொன்றவர்களை விட, நிஜத்தில் நீங்கள் கொன்றவர்கள் அதிகம்"
-------------

"சுவாமிஜி"
"இங்கே யாரும் சாமி இல்லை.. எல்லோரும் பூதம் தான்"
************************

புத்தகம் வாங்க: உடுமலை.காம்


Monday, March 11, 2013

வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

நீங்கள் எப்போதாவது அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாங்கள் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறோம். பேருந்துகளில், ரயில் நிலையங்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகிறார்கள், வட நாட்டு மக்கள். மொழி புரியாமல் இங்கே வரும் அவர்கள், குறைந்த கூலிக்கு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். சின்ன இடத்தில அவ்வளவு பேரும்  தங்குகிறார்கள். குறைந்த சம்பளத்தை வாங்கி, கொஞ்சம் செலவு செய்து மீதியை தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால், அவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு நாள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நான்கைந்து பேர் ஏறினார்கள். பயணச் சீட்டும் எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும், நடத்துநர் அவர்களிடம் 'டிக்கெட் எங்கே?' எனக் கேட்க, உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தே நின்று விட்டான். அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. நடத்துநர் திரும்பவும் சத்தமாக கேட்க,. எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு மூன்று முறை கேட்டு, எப்படியோ அவர்கள் புரிந்து கொண்டு பயணச் சீட்டை எடுத்துக் காண்பித்தனர். நடத்துநர் சரி பார்த்து விட்டு, புலம்பிக் கொண்டே சென்றார். என் பக்கத்திலிருந்த ஒரு பயணி 'வந்திர்ரானுகோ கெளம்பி..' என்று, கேவலமாகச் சிரித்தார்.

இன்னொரு நாள் சந்தையில், வட நாட்டு இளைஞர்கள் சிலர் உருளைக் கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் ஐந்து கிலோ, பத்து கிலோ என்ற கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தனர் . 'எப்படித்தான் இத்தன உருளக் கெழங்க தின்கிரானுகளோ' என்று பேசிக்கொண்டு நடந்தார் இன்னொருவர்.

இதற்கும், இந்த ''வளைகள் எலிகளுக்கானவை"  கதைக்கும் என்ன சம்பந்தம் என்ன என்று கேட்கிறீர்களா?. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் - 'சூடிய பூ சூடற்க' கதைத் தொகுதியில், 'வளைகள் எலிகளுக்கானவை' என்ற கதை இருக்கிறது. இந்தக் கதையிலும் எங்கோ வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், ரயில் சுற்றுப் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புண்ணிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் ஏறும் நம் ஊர் மக்கள், அவர்களைப் பார்த்து 'வேறு பெட்டிக்கு போகச் சொல்கிறார்கள்.. கூடவே அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் எனவும் பேசி விடுகிறார்கள். அவர்கள் கோபத்துடன், தங்களிடம் இருந்த பயணச் சீட்டை காண்பிக்கிறார்கள். சிறு கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. இறுதியில கலெக்டர் வந்து சமாதானம் செய்து ரயிலைப் புறப்பட வைக்கிறார்.

'நாங்க ஏழைங்க சாப்.. கர்சிரோசி விவசாயிங்க.. வித்அவுட் பிச்சைக்காரங்க இல்ல.. போன வருஷம் காசி போனோம்.. அதுக்கு முந்தி காளிகட் போனோம்.. கன்யாகுமரி வந்து நாங்க ரத்தக் கறையோட போறோம்..'  என்று சொல்கிறார்கள் அவர்கள்.

ரயில் நகர்ந்த பின் வழியனுப்ப வந்த இருவர் பேசிக்கொண்டு போனார்கள். 'காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊர்லே கெடக்காம..பொறப்பிட்டு வந்திருக்கானுகோ.. ஊரை நாறடிக்கரதுக்கு..'

அவர்கள் மேற்கில் மேலாங்கோடும் கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை. தெற்கே கன்னியாகுமரிக் கடலையும் வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்ட முடியாது.


***********

அவர்கள் எங்கேயோ இருந்து கிளம்பி வந்து, இங்கே பிரயாணம் செய்கிறார்கள், கோவிலுக்குப் போகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். நாமோ இருக்கும் இடத்தில இருந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆம், எப்போதும் வளைகள் எலிகளுக்கானவை.

Thursday, February 21, 2013

தலைகீழ் விகிதங்கள் - நாஞ்சில் நாடன்

தலைகீழ் விகிதங்கள் - நாவல் 'சொல்ல மறந்த கதை' யாக திரையில் பார்த்ததை விட, புத்தகத்தில் படிக்கும் பொழுது ஒவ்வொரு வரிகளாக அசை போட முடிந்தது. படம் நன்றாகவே எடுக்கப் பட்டிருந்தாலும், புத்தகத்தில் தான் அதன் உயிரோட்டத்தை அறிந்து கொள்ள முடிந்தது. ஒரே பத்தியை இரண்டு மூன்று முறை கூட திரும்ப திரும்பப்  படிக்கலாம்.

எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் முதல் நாவலாக வெளிவந்தது இந்த தலைகீழ் விகிதங்கள்.

முன்பின் எந்த பழக்கமும் இல்லாத இருவர் மண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பொழுது, அங்கே விட்டுக் கொடுத்தல்கள் இல்லை என்றாலோ, சரியான புரிதல் இல்லை என்றாலோ.. அவர்கள் இருவரின் வாழ்க்கையும் முள்ளில் பட்ட துணி போல மாட்டிக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கும். மருமகன் பெண் வீட்டாருக்கு புதியவன் என்றால், மருமகளோ மாப்பிள்ளை வீட்டாருக்கு புதியவளாக இருக்கிறாள்.

மாமியார் கொடுமை, நாத்தானார் கொடுமை என்றெல்லாம் மருமகள் பற்றி ஆயிரக் கணக்கில் கதைகள் எழுதப் பட்டாலும், ஒரு மருமகனின் கதையைச் சொல்லிச் செல்வது இந்த நாவல்.

*******************

மூன்று பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையுமாக இருக்கும் குடும்பத்தில் மூத்த பிள்ளையாக சிவதாணு. படித்து முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவன். பெண் பிள்ளை வீட்டில் இருக்க, மற்ற இரண்டு தம்பிகளும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்பா சிதம்பரம் பிள்ளை சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, வரும் வருமானம் போதுமானதாக இருப்பதில்லை. தாய் செண்பகம். இவ்வளவு பேரும் கால் வயிற்றுக் கஞ்சியாவது குடிப்பது அந்த சின்ன வயல் காட்டிலிருந்து வருமானமே. எனவே, சிவதாணு வேலைக்குப் போனால் கொஞ்சம் குடும்ப பாரம் குறையும். ஆனால், அவனுக்கு இன்னும் வேலை இன்னும் கிடைக்கவில்லை.


சொக்கலிங்கம் பிள்ளை வசதியானவர். நகரத்தில் காப்பிக் கடை வருமானம். நீலாப்பிள்ளை அவரின் மனைவி. இரண்டே பெண் பிள்ளைகள். செல்வச் செழிப்பில் வளர்ந்தவர்கள். மூத்தவள் பார்வதிக்கு வரன் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இளையவள் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிறாள். சொக்கலிங்கம், சிவதாணுவின்  ஊரைச் சேர்ந்த சண்முகம் பிள்ளை என்பவரிடம் தன் மகளுக்கு, படித்த நல்ல பையனாக இருந்தால் சொல்லுமாறு கூற, அவர் சிவதாணுவைப் பற்றிச் சொல்கிறார்.

வசதி இல்லாத குடும்பம் என்று தெரிந்ததும், நல்ல பையன், படித்தவன்.. நாளைக்கு சொக்கலிங்கத்தின் செல்வத்தில் பாதி அவனுக்கு தான்.. என்ற நினைப்பில் சொக்கலிங்கம் சரி என்கிறார்.மாப்பிள்ளையை தங்கள் வீட்டிலியே வைத்துக் கொள்ளலாம் எனச் சொல்லும்  நீலாப்பிள்ளை, வறுமையான குடும்பம் என்பதால்.. 'எம் பொண்ணுக்கு உருப்படியில் ஒரு பொடி தொடப்பிடாது' எனச் சொல்கிறார்.

சிவதாணுவின் வீட்டில், அப்பா அம்மாவுக்கு சந்தோசம். வேலை இல்லாமல், வீடு இருக்கும் நிலைமையில் இப்பொழுது கல்யாணம் செய்து என்ன செய்வது என முதலில் மறுக்கும் சிவதாணுவை 'அவங்கதான் உனக்கு வேலை வாங்கித் தர்றேன்னு சொல்றாங்க..நீயாவது நல்லா இருந்தால் போதும்' என்று சம்மதிக்க வைக்கிறார்கள். பெண் வீட்டில் கொஞ்சம் பணம் வாங்கியே கல்யாணம் நடத்த வேண்டிய வீட்டின் வறுமையை நினைத்துப் பார்க்கும் அவனும் அரை மனதோடு ஒத்துக் கொள்கிறான்.

ஊருக்குள் பலரும் பலவாறு பேசுகிறார்கள். செல்வச் செழிப்பான குடும்பம், வறுமையான சிவதாணு வீட்டில் வந்து ஏன் சம்பந்தம் வைக்க வேண்டும் என்று வினவிக் கொண்டே இருக்கிறார்கள். கல்யாணமாகி அவன் மாமனார் வீட்டிலேயே தங்கிக் கொள்வான், படித்த பையன் காப்பிக் கடைய பார்த்துக்குவான், அங்க தான் ஆண் வாரிசு இல்லையே.. என்று பலவாறு பேசுவது சிவதாணு காதில் விழுகிறது.தன் நிலைமையை நினைத்து நொந்து கொள்கிறான். கல்யாணம் முடிந்து விடுகிறது.

கல்யாணம் முடிந்து, கொஞ்ச நாள் கிராமத்தில் தங்கி இருக்கும் பார்வதி, 'இங்க தான் உங்களுக்கு வேலை இல்லையே.. அங்க அப்பா கடைய பார்த்துக்கிட்டு மாசம் கொஞ்சம் பணம் குடுப்பார்.. அங்கேயே போகலாம்' எனச் சொல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், இப்பொழுது மாமனார் வீட்டில் அவரின் கடையைப் பார்த்துக்கொண்டு கொஞ்சம் பணம் பெற்றுக்கொள்கிறான். சொக்கலிங்கம், சிவதாணுவின் வேலைக்கு துரும்பையும் தூக்கி போடாமல் இருக்கிறார். சிவதாணு, ஓரிடத்தில் வேலைக்கு எழுதிப் போட அந்த வேலை கிடைத்து விடுகிறது. அதே சமயம், பார்வதியும் பிள்ளை உண்டாக, சிவதாணு மட்டும் கிளம்பிச் செல்கிறான். மூன்று மாதத்தில் வருவாள் என்று அவன் நினைத்திருக்க, அவளோ 'அம்மா இங்கயோ இருக்கச் சொல்லுறாங்க' என வர மறுத்து விடுகிறாள். அவன் அவ்வப் பொழுது நேரில் சென்று அவளைப் பார்த்து வருகிறான்.



பெண் குழந்தை பிறக்கிறது. மூன்று மாதம் கழித்து, 'இப்பவாவது அங்கே வந்து இரு' என்று கூப்பிட, அவள் மறுக்க.. வார்த்தைகள் தடித்து பார்வதியை சிவதாணு அடித்து விடுகிறான். மாமனார் சொக்கலிங்கம், 'இப்படி அடிக்கவா நான் பிள்ளைய பெத்திருக்கேன்.. வீட்டை விட்டு வெளியே போ..' என அவனைச் சொல்கிறார்.  வீட்டை விட்டும் வெளியேறும் அவன், அதன் பிறகு அந்த வீட்டு படியையே மிதிக்கப் போவதில்லை என நினைத்துக் கொள்கிறான்.

குழந்தையோடு பார்வதி அவள் அப்பா வீட்டில் இருக்க, சிவதாணு தனியாக வேலை செய்யும் இடத்தில இருக்கிறான். பெரியவர் சண்முகம் பிள்ளை செய்யும் சமாதானப் பேச்சுக்கள் அவனிடம் எடுபடுவதில்லை. அங்கே, சொக்கலிங்கமோ 'இவ்வளவு நடந்தப்புறம் எப்படி நான் அவங்க முகத்தில் முழிக்கிறது... எப்படியோ போகட்டும், நான் மட்டும் அங்கே போக மாட்டேன்' என கௌரவம் காட்டுகிறார்.

பார்வதியின் தங்கை பவானி, சிவதானுவுக்கு கடிதம் எழுதுகிறாள். அவனோ அவளுக்கு திருப்பி எழுதுவதில்லை. ஒரு கல்யாணத்திற்கு, பார்வதியின் சொந்த ஊருக்குச் செல்லும் சிவதாணு, காரில் ஏறுவதற்கு போகும் பொழுது 'நில்லுங்கோ' என்ற சத்தம் கேட்க, அங்கே குழந்தையுடன் பார்வதி வந்து கொண்டிருக்கிறாள். காருக்குள் அவளாகவே உள்ளே ஏற, அவனும் உள்ளே ஏறிக் கொள்கிறான். தூரத்தில் பவானி கை அசைத்து, விடை கொடுக்கிறாள்.


*******************

நாஞ்சில் நாட்டு பேச்சு வழக்கிலேயே கதை செல்கிறது. இரண்டு மூன்று நாட்களுக்கு என் வாயில் கூட, 'என்ன செய்யறது'  என்பதற்கு பதிலாக  'என்ன செய்யி' என்றே வருகிறது.

சில வரிகள்:
'கோழிய கொல்லப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்.. வளர்க்கப் பிடித்தாலும் வாளு வாளுங்கும்',
'கப்பல்லே பொண்ணு வருகுதுன்னா.. எனக்கு ஒன்னு.. எங்க அப்பனுக்கு ஒன்னுன்கிற கதையால்ல இருக்கு' 

'விலக்கும் போது விலகி, கையை எடுத்ததும் கூடிவிடும் குழி தாமரைப் பாசிகளைப் போல நினைவுகள் மீண்டும் மீண்டும் மனக் குளத்தைப் போர்த்துகின்றன'

*******************

முதற் பதிப்பின் முன்னுரையில் 'இது என் முதல் நாவல். இது காகமா குயிலா என்ற மயக்கம் உங்களுக்கு வேண்டாம். வசந்த காலம் வரும்போது அது தீர்மானமாகட்டும்' எனச் சொல்கிறார் நாஞ்சில் நாடன். படித்து விட்டு கண்டிப்பாக நீங்கள், இந்நாவல் குயில் என்றே தீர்மானம் செய்வீர்கள். நன்றி.

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி.


Tuesday, February 5, 2013

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய
சின்னத்தனங்கள்,

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய
துணிச்சல்,

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய
நோய்கள்,

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய
அவமானம்,

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப்பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில்
அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே -

நாளை மற்றுமொரு நாளே !



புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகளே, நாவலின் போக்கைச் சொல்கிறது.



ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை தான் நாவலில் வருகிறது. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, கிடைக்கும் நேரத்தில் உணவருந்தி, அலுவலகம் ஓடி, திரும்ப கூட்டுக்கு ஓடி வரும் பறவை போல மாலை திரும்பும் மனிதர்கள் பற்றிய நாவல் இல்லை இது. சாதாரண மனிதர்கள்தான் நாவலில் வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை, காலி பாட்டில்களை சேகரித்து காசு தேற்றும் நிலை, பத்து ரூபாய் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் தான் நாவல் முழுவதும் வருகிறார்கள்.

கந்தன் என்னும் பாத்திரத்தின் வாயிலாகவே கதை சொல்லப் படுகிறது. நாள், கிழமை என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. ஓரிடத்தில் நாவலில் சொல்வது போல 'நாயுடு, வாடகைக்கு வந்தால் ஆறாம் தேதி' அது மட்டும் தான் அவனுக்கு தெரியும். மற்ற எல்லா நாட்களும் அவனுக்கு ஒரே நாள்தான். இன்னோரிடத்தில், அவன் நண்பன் 'வருங்காலத்துக்கு என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறாய்?' எனக் கேட்கிறான், அதற்கு கந்தன் சொல்கிறான் 'எந்தத் திட்டம் போட்டு நான் சொர்ணத்தம்மாவின் வயிற்றில் வந்து பிறந்தேன்' எனக் கேட்கிறான். சொர்ணம் கந்தனின் அம்மா.

அவன் சேர்த்துக்கொண்ட மனைவியின் பெயர் மீனா. தன்னால் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், வேறோர் இடத்தில அவளைச் சேர்த்துவிட தரகர்களிடம் கேட்கிறான் கந்தன். அவர்களின் ஒரே பையன் சந்திரன், சண்டை போட்டு விட்டு எங்கேயோ ஓடி விட்டான். அவனை இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.

கந்தன் காலையில் எழுந்து, அவன் இடையில் சந்திக்கும் மனிதர்கள் ஊடே கதை ஓடி, அன்று இரவு கதை முடிகிறது. கனவில் தொடங்கும் அவனின் அன்றைய நாள், அவன் கனவு காண்பதிலே முடிந்து விடுகிறது. இடையில், அவனின் கதை சொல்லப் படுகிறது. அவனின் கதை என்பதை விட, கந்தன் மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களின் கதை.



ராக்காயி என்கிற மோகனா, செட்டியார் மற்றும் ஐரீன், சோலை, தரகர் அந்தோணி, குதிரை வண்டி ஓட்டி , ஏட்டையா பொன்னுசாமி, முத்துசாமி, அன்னக்கிளி என நாவலில் அப்படியே வந்து போகிறார்கள். நாம் நேரில் அவர்களைப் பார்த்தால் கூட, சொல்லி விட முடியும். பெரிய விளக்கங்கள் இல்லை, இரண்டொரு வார்த்தைகளில் நம் மனதுக்கு நெருக்கமாக வந்து விடுகிறார்கள்.

தரகர் அந்தோணி, சிறு வயதில் தான் ஒரு பத்து ரூபாய் பணத்துக்காக நிர்வாணமாக ஓடினேன் எனச் சொல்பவர், அன்றில் இருந்து 'இந்தப் பணமே ஒரு மானங் கெட்ட விஷயம்...' என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்கிறார்.

பக்கத்தில் ஒரு சேரி தீப்பற்றி எரிகிறது. இறந்தது பன்னிரண்டு பேர். வீணாக நகர சபைக்கு ஏன் கெட்ட பெயர் என்று மூன்று உயிர்களையே விபத்து குடிதுவிட்டதாகப் பத்திரிக்கைகள் அறிவிக்கின்றன. "அந்தப் பன்னிரண்டு பேருமே சாகவில்லை; அவங்க எல்லோருமே வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க; எப்படியும் அடுத்த தேர்தல்லே ஓட்டுப்போட வந்திடுவாங்க. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம்" என பேசிக்கொள்கிறார்கள் நாவலில்.

**********************

இன்றைக்கு இப்படி இருக்கிறான் கந்தன். அவனுடைய 'நாளை' எப்படி இருக்கும்?. அதைப்பற்றிய கவலை நமக்கு எதற்கு, நமக்கெல்லாம் எப்படி 'நாளை' என்பது உண்டோ, அது போலவே அவனுக்கும் 'நாளை மற்றுமொரு நாளே !'

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி 




Friday, January 11, 2013

உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி

நாம் புரிந்து கொண்டதென்பது ஒன்று. ஆனால் உண்மை என்பது இன்னொன்று. சில சமயங்களில் நாம் புரிந்து கொண்டதிலிருந்து, உண்மையானது வெகு தூரத்தில் இருக்கும்

உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆகவே,  ஒருவர் தான் புரிந்து கொண்டதிலிருந்து கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். யார் சொல்வது இங்கே உண்மை?. உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும்.




அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதைகளின் சிறு தொகுப்பான '1945இல் இப்படியெல்லாம் இருந்தது'' புத்தகத்தை விஷ்ணுபுரம் விருது விழாவில் வாங்கினேன். அந்தப் புத்தகத்தில் தான் 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' என்கிற கதை இருக்கிறது. மிகவும் சிந்திக்கச் செய்த கதை.

ஒரு தம்பதியினர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நடுத்தர காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அத்தை வருகிறாள். அத்தை வந்த பின்னர், வீட்டு வேலை மற்றும் சமையலை அத்தையே பார்த்துக் கொள்கிறார். முதலில் ஒரு குறையும் சொல்லாமல் இருக்கும் அத்தை, போக போக வீட்டில் தான் இல்லாமல் எதுவும் நடக்காது போல உரிமை எடுத்துக் கொள்கிறார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட அத்தையைக் கேட்க கூடிய நிலைமையில் இருக்கிறார்கள் இருவரும்.

ஒருநாள் அத்தை இறந்து விடுகிறார். உறவினர்கள் யார் என்பது தெரியாமல் இவர்களாகவே எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின்னர் கணவன் கேட்கிறான், "இருந்தாலும் உன் அத்தைக்கு நாம் ரொம்ப இடம் குடுத்துட்டோம்" என்கிறான். மனைவி சொல்கிறாள்; "என்னது என் அத்தையா? உங்கள் அத்தை என்றல்லவா இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்".

இவ்வளவுதான் கதை, ஆனால் இத்தனை நாட்களாக நாம் புரிந்து கொண்டவை அனைத்தும் உண்மை அல்ல என்பது நினைவுக்கு வராமல் போகாது.

*****************


'உங்கள் வயது என்ன?' என்ற கதையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

முற்காலத்தில் உயிர்களைப் படைத்த கடவுள், வயதை நிர்ணயம் செய்யாமல் விட்டு விட்டார். எனவே  உலகத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகி, இடம் இல்லாமல் ஆகி விட்டது. இனிமேல், எல்லா உயிர்களுக்கும் வயதை நிர்ணயம் செய்து விடலாம் என முடிவெடுத்து, அப்படியே எல்லா உயிர்களுக்கும் வாழ் நாளை முடிவு செய்தார்.

மனிதன், கழுதை, மற்றும் நாய் ஆகிய மூன்று உயிர்களுக்கு மட்டும் வயதைச் சொல்லவில்லை. மூன்றும் கடவுள் முன்னால் வந்து நின்றன. மூன்றுக்கும் நாற்பது வயது என முடிவு செய்தார்.

கழுதை மட்டும், "என்னால், இத்தனை வருடம் பொதியைச் சுமக்க முடியாது. தயவு செய்து என் வயதை பாதியாக குறைத்து விடுங்கள்" என்றது.

உடனே மனிதன், "அந்த இருபதை  எனக்கு கொடுத்து விடுங்கள்", எனக் கேட்க, கடவுள் ஒப்புக் கொண்டார்.

நாய், "என் வயதையும் குறைத்து விடுங்கள்" என்றது, கடவுள் ஆகட்டும் என்றார்.

மனிதன் உடனே எழுந்து, "சாமி.." என வாய் திறக்க, கடவுள் "அப்படியே ஆகட்டும்" எனச் சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார்

அன்றிலிருந்து தான், முதல் நாற்பது வருடங்கள் மனிதனாகவும், அடுத்த இருபது வருடங்கள் கழுதை போலவும், மீதி இருபது வருடங்கள் நாய் போலவும் அலைய நேரிட்டது.

*****************



'1945இல் இப்படியெல்லாம் இருந்தது', 'தோஸ்த்', 'நாய்க்கடி', 'யார் முதலில்?' போன்ற கதைகளும் அருமையானவை. படித்துப் பாருங்கள்.

புத்தகம் வாங்க;
உடுமலை.காம் 




படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி

Wednesday, July 4, 2012

தாயார் சன்னதி

"இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ. நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்?"
- வண்ணதாசன்

இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுதுதான், அட நமக்கும் இப்படி எல்லாம் நடந்திருக்கிறதே.. என்று எண்ண வைத்தது. முக்கியமாக பாட்டிகள் பற்றிய கட்டுரைகள். சுகா அவர்களின் ஊர்ப் பக்கம் ஆச்சி என்று கூப்பிட்டால், எங்கள் ஊர்ப் பக்கம் ஆத்தா என்று கூப்பிடுவோம். எங்கள் ஊர்ப் பக்கமும், பாட்டிகளின் சொந்த ஊர்ப் பெயரைச் சேர்த்தே கூப்பிடுவது வழக்கம். அவர்களின் உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது.





எனது சிறு வயதில் இரவு நேரத்தில், பாம்பை 'பாம்பு' என்று சொல்லக் கூடாது. பூச்சி என்றே சொல்ல வேண்டும். வாய் தவறிச் சொன்னால், திட்டு விழுகும். 'பாம்பு என்ற பூச்சி' என்ற கட்டுரையைப் படித்ததும், 'அட, நம்ம வீட்டிலும் இப்படிதானே சொல்லி வளர்த்தாங்க' என்று நினைத்துக் கொண்டேன்.

தீவிர பக்தரான பெரியப்பாவை Giant Wheel இல் உட்காரவைத்து, பெரியப்பா பயந்து கொண்டே அதில் அமர்ந்திருக்கிறார். சுற்ற ஆரம்பித்ததும் தலை கிறுகிறுக்க, பெரியப்பாவின் குரலுக்கு சுத்துவது நிற்கவில்லை. சுற்றி முடித்ததும், ஒவ்வொரு இருக்கையாக உச்சிக்கு வந்து நின்றது. இவர்கள் அமர்ந்திருந்த இருக்கை இப்பொழுது உச்சியில். சுகா, பெரியப்பாவிடம்

"பெரியப்பா, அங்கே பார்த்தேளா? நெல்லையப்பர் கோயில் தெரியுது" அதற்கு அவர் சொன்ன பதில்,"எந்த மயிராண்டி கோயிலையும் நான் பார்க்கல" . 
இந்தக் கட்டுரையைப் படித்த பின்னர் எனக்கு சிரிப்பு நிற்க வெகு நேரம் ஆனது.

இப்படி எல்லாக் கட்டுரைகளிலும், எங்காவது ஓரிடத்தில் நமது முகம் தட்டுப் பட்டுக்கொண்டே இருக்கிறது. 

நாம் பார்த்த மனிதர்கள் புத்தகம் முழுவதும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். சிறு புன்னகையும், பெருஞ்ச்சிரிப்பையும், சிறு துக்கத்தையும் தந்து, நமது கடந்து போன நாட்களையும், நாம் மறந்து போன மனிதர்களையும் நினைவுக்கு கொண்டு வரவைப்பது இந்தக் கட்டுரைகள்.



தாயார் சன்னதி
சுகா
சொல்வனம்
280 பக்கங்கள்

உடுமலை.காமில் வாங்க; தாயார் சன்னதி


Thursday, May 10, 2012

புதுமைப்பித்தன்


பல வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தன் அவர்களின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றை வாங்கினேன். புத்தக அலமாரியில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது இந்தப் புத்தகம் அகப்பட்டது. நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்ட அந்தத் தொகுப்பில் பதினாறு கதைகள் மட்டும் இடம்பெற்றுள்ளது. இதுவரைக்கும் நான் படித்திராத ஒரு சொல்லாட்சியுடன், நகைச்சுவை உணர்வுடன், சிந்திக்க வைக்கும் போக்குடன் கதைகளை எழுதியிருந்தார் புதுமைப்பித்தன். அன்றுமுதல் புதுமைப்பித்தன் என்னும் பெயரைக் கேட்டாலே அவரின் கதைகள் மனதில் வந்து போயின. நாற்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே வாழ்ந்த அவரின் கதைகள் ஜீவன் உள்ளவை.

'என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்து கொண்ட புனைபெயராகும். அது அமெரிக்க விளம்பரத் தன்மை வாய்ந்திருக்கிறது.. பிறகு நான் எடுத்தாளும் விசயங்கள்; பலர் வெறுப்பது, விரும்புவது..' என்று ஒருமுறை எழுதியிருக்கிறார். அவரின் இயற்பெயர் விருத்தாசலம்.

புதிய வகையில் சிந்திக்க கூடிய கதைகளாக எழுதியிருக்கும் புதுமைப்பித்தன் அவர்களின் சில கதைகளைப் பற்றிச் சில வரிகள்.

                                             ***************************

சாப விமோசனம்

'சாப விமோசனம்' கதை, ராமாயணத்தில் வரும் அகலிகை பற்றிய கதை. கணவன் கோதமன் கொடுத்த சாபம் காரணமாக கற்சிலையாகப் போகும் அகலிகை, அந்த வழியாக வந்த ராமனின் காலடி பட்டு சாப விமோசனம் பெறுகிறாள். அப்பொழுது ராமன் குழந்தை. காலம் ஓடுகிறது. கோதமனும், அகலிகையும் தீர்த்த யாத்திரை முடிந்து அயோத்திக்குத் திரும்புகிறார்கள். ராமனும் சீதையும் பதினான்கு ஆண்டு கால வனவாசம் முடித்து இன்னும் கொஞ்ச நாளில் திரும்புவார்கள் என்ற சேதியைத் தெரிந்துகொள்கிறாள் அகலிகை.

சீதையும் ராமனும் அவர்களைச் சந்திக்க வருகிறார்கள். அகலிகையும், சீதையும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பேச்சு அக்னிப் பிரவேசம் பற்றித் திரும்புகிறது. ராமன் பிரவேசம் செய்யச் சொல்லிக் கேட்டதை அறிந்த அகலிகை மீண்டும் கல்லாகப் போகிறாள்.

அவர்களிருவரின் வார்த்தைகளை கொஞ்சம் கவனியுங்கள். புதுமைப்பித்தனின் எழுத்தாற்றல் வியக்க வைக்கும்.

"அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய்?" என்று கேட்கிறாள் அகலிகை.
"அவர் கேட்டார்; நான் செய்தேன்" என்றாள் சீதை, அமைதியாக.
"அவன் கேட்டானா?" என்று கேட்டாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது.

அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா?

இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.

"உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? " என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை.

"உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?" என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.

"நிரூபித்து விட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்? நிற்கட்டும்; உலகம் எது?" என்றாள் அகலிகை.


                                             ***************************



அன்றிரவு

இந்தக் கதை பிட்டுக்கு மண் சுமந்த சிவனின் திருவிளையாடல் பற்றிய கதை. 'அழியாச் சுடர்கள்' தளத்தில் இந்தக் கதை வெளியாகியுள்ளது.  கதையின் இறுதியில் இருக்கும் ஒரு பத்தியை மட்டும் இங்கே தருகிறேன்.

ஈசன் முகத்தில் விழுந்தது பொற்பிரம்பின் அடி. அவனது மார்பில் விழுந்தது. நெஞ்சில் விழுந்தது. அப்புறத்து அண்டத்தின் முகடுகளில் விழுந்தது. சுழலும் கிரகங்களின் மீது விழுந்தது. சூலுற்ற ஜீவராசிகளின் மீது விழுந்தது. கருவூரில் அடைப்பட்ட உயிர்கள் மீது, மண்ணின்மீது, வனத்தின் மீது, மூன்று கவடாக முளைத்தெழுந்த தன்மீது, முன்றிலில் விளையாடிய சிசுவின் மீது, முறுவலித்த காதலியின் மீது, காதலின் மீது, கருத்தின் மீது, பொய்மையின் மீது, சத்தியத்தின் மீது, தருமத்தின் மீது அந்த அடி விழுந்தது.
காலத்தின் மீது விழுந்தது. தர்மதேவனுடைய வாள் மீது விழுந்தது. சாவின் மீது, பிறப்பின் மீது, மாயையின் மீது, தோற்றத்தைக் கடந்தவன் மீது, வாதவூரன் மீது, வாதவூரன் வேதனையின் மீது, அவன் வழிபட்ட ஆசையின் மீது, அவனது பக்தியின் மீது அந்த அடி விழுந்தது. 


                                             ***************************

ஒருநாள் கழிந்தது

இந்தக் கதை, தினமும் குடும்பத்தை நடத்த படாத படும் மனிதர்களில் ஒருவர் பற்றிய கதை. மாதம் முப்பது ரூபாய் சம்பளத்துக்கு கதை எழுதி, குடும்பம் நடத்தி வரும் முருகதாசர் பற்றிய கதை. கடைக்காரன் பாக்கி, அது இதுவென்று நிறையச் செலவாகி விடுகிறது அவருக்கு. யாரிடமாவது கேட்டுப் பார்க்கலாம் என்று முயல்கிறார். ஒருவர் எட்டணாவைக் கொடுக்கிறார்.

கதையில், அவரின் மனைவி கமலத்துடன் முருகதாசர் பேசும் வரிதான் கதையின் தலைப்பு. மனைவி காப்பிப் பொடி வாங்கிவரச் சொல்கிறார்.

"அந்தக் கடைக்காரனுக்காக அல்லவா வாங்கினேன் ! அதைக் கொடுத்துவிட்டால்?"
"திங்கட்கிழமை கொடுப்பதாகத்தானே சொன்னீர்களாம்"
"அதற்கென்ன இப்பொழுது?"
"போய்ச் சீக்கிரம் வாங்கிவாருங்கள்"
"திங்கட்கிழமைக்கு?"
"திங்கட்கிழமை பார்த்துக்கொள்ளுகிறது"

                                             ***************************

கடவுளும், கந்தசாமிப் பிள்ளையும்


விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் கதை. கடவுள் கொஞ்ச நாள் மனிதனாக மாறி, இந்தப் பூவுலகுக்கு வந்து வசித்தால் என்ன நடக்கும் என்று சொல்லும் கதை. கந்தசாமிப் பிள்ளையின் இல்லத்துக்கு வந்து தங்குகிறார் கடவுள். கடவுள் அவரின் வீட்டுக்கு வரும்பொழுது, கந்தசாமியின் குழந்தை;

"எனக்கு என்ன கொண்டாந்தே?" என்று கேட்கிறது.
"என்னைத்தான் கொண்டாந்தேன்" என்கிறார் பிள்ளை.
"என்னப்பா, தினந் தினம் உன்னியேத்தானே கொண்டாரே; பொரி கடலையாவது கொண்டாரப்படாது?" என்கிறது குழந்தை.
"இதுதானா உம்முடைய குழந்தை" என்று கேட்கும் கடவுளிடம், கந்தசாமி பிள்ளை பேசத் தயங்க
"சும்மா சொல்லும்; இப்போவெல்லாம் நான் சுத்த சைவன்; மண்பானைச் சமையல்தான் பிடிக்கும், பால் தயிர் கூடச் சேர்த்துக் கொள்ளுவதில்லை" என்கிறார் கடவுள்.

இன்னொரு இடத்தில்;

கடவுள் என்ன வேலை செய்யலாம் என்று நினைத்து, பரதம் ஆடி சம்பாதிக்கலாம் என்று முடிவு செய்து தேவியையும் பூமிக்கு கூட்டி வருகிறார். அவர்களின் ஆட்டத்தைப் பார்த்த கலாமண்டலியின் தலைவர் இப்படிச் சொல்கிறார்;

"ஒய் ! கலைன்னா என்னன்னு தெரியுமாங்காணும்? புலித் தோலைத்தான் கட்டிக் கொண்டீரே. பாம்புன்னா பாம்பையா புடிச்சுக்கொண்டு வருவா? பாம்பு மாதிரி ஆபரணம் போட்டுக் கொள்ள வேணும். புலித் தோல் மாதிரி பட்டு கட்டிக் கொள்ள வேணும். கலைக்கு முதல் அம்சம் கண்ணுக்கு அழகுங் காணும்"

இறுதியில் கடவுள், "உங்களிடம் எல்லாம் எட்டி நின்று வரம் கொடுக்கலாம்; உடன் இருந்து வாழ முடியாது" என்று கூறிவிட்டு, பூமியிலிருந்து கிளம்பிப் போய் விடுகிறார்.

                                             ***************************
இன்னொரு பதிவில் அவரின் மற்ற கதைகள் பற்றி எழுதுகிறேன்.

                                             ***************************

குறிப்பு:

இப்பதிவு  என்னுடைய 200 -  வது பதிவு. அதுவும் புதுமைப்பித்தன் அவர்களைப் பற்றி எழுதியது தற்செயலே. இந்தப் பதிவுலகத்துக்கு வந்து இவ்வளவு எழுதியிருக்கிறேன் என்பதே எனக்கு அதிசயமாய் இருக்கிறது. 
தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்தும், பாராட்டியும் வரும் அனைத்து வாசக நண்பர்களுக்கும் எனதன்பு  நன்றிகள்.


படங்கள் - இணையத்தில் இருந்து.