Friday, August 1, 2014

ரப்பர் - ஜெயமோகன்

ஜெயமோகன் எழுதிய முதல் நாவல் ரப்பர். ஓரிடத்தில், ரப்பர் மரங்கள் பற்றி இப்படிச் சொல்கிறது நாவல்;  "ரப்பர் மரம் தன் பக்கத்தில் எந்த ஒரு உயிரினத்தையும் வாழ விடாது. பறவைகள் வந்து கூடடையாது. தினம் தினம் ரப்பர் பாலை சொட்டிக் கொண்டு, பாலுக்காக அறுத்த காயங்களைக் கொண்டிருக்கும் ரப்பர் மரங்கள் ராணுவ வீரனைப் போல் அமைதியாக நின்று கொண்டிருக்கின்றன. நம் மண்ணுக்கான மரமில்லை, மற்ற மரங்களைப் போல நீரைச் சேமிப்பதில்லை."

***************

பொன்னுப் பெருவட்டர் படுக்கையில் இருக்கிறார். வாழ்ந்து முடித்த இந்த  தள்ளாத வயதில், இன்னொருவரின் உதவியோடு உயிர் வாழ்வதில் பெரும் கோபம் கொண்டவராக இருக்கிறார். முதுமையில், படுக்கையில் படுத்த பின்னர் எல்லா வயதானவர்களுக்கும் கோபம் வருவதுண்டு. ஒவ்வொன்றுக்கும், மற்றவர்களை எதிர்பார்த்திருக்க வேண்டியது ஒரு சுமை. இந்தக் கணமே, தான் இந்த உலகத்தை விட்டுச் சென்று விடலாகாதா என எண்ணுகிறார். தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞியிடம், விஷம் குடுத்து விடு என்று வேண்டுகிறார்.

இந்த வீடு, இந்த ரப்பர்  தோட்டம் எல்லாம் பொன்னுப் பெருவட்டரின் காலத்தில் அவரே உருவாக்கியது. வெறும் காடாக இருந்த அந்த நிலத்தில், ரப்பர் மரம் பயிரிட்டார். கொஞ்சம் கொஞ்சமாக செல்வம் அவரைத் தேடி வந்தது. இப்பொழுது ஊரில் பெரிய பணக்காரக் குடும்பம் பெருவட்டர் குடும்பம். பெரியவரின் மகன் செல்லையாப் பெருவட்டர், சொத்துக்களை நிர்வாகம் செய்து வருகிறார். பேரன்கள் பிரான்சிஸ் மற்றும் லிவி.செல்லையாப் பெருவட்டர், சில தொழில் முயற்சிகளில் கடன் பட நேர்கிறது. தன் தந்தை காலத்தில் சேர்த்து வைத்த சொத்துக்கள், எப்பொழுது வேண்டுமானாலும் விற்கப்படக் கூடும் என்று எண்ணுகிறார். பெரியவர் அதற்குள் இல்லாமலானால், இலகுவாக சொத்துக்களை விற்று விடலாம் என்று நினைக்கிறார் செல்லையாப் பெருவட்டர்.

மருமகள் திரேஸ் அழகி. அவளின் பழைய காதல், ஒரு அழகிய பகுதி கூட. ஆனால், ஆடம்பரத்தை விரும்பும் அவள், அந்தக் காதலை நிராகரித்து, பெருவட்டார் குடும்பத்துக்கு மருமகளாகிறாள்.   திரேஸ் மேல் லிவி கொஞ்சம் அன்பாக இருந்தாலும், பிரான்சிஸ் அவளை முற்றிலும் வெறுக்கிறான். அவளின் கேட்ட சகவாசம் தனக்குத் தெரியும் என்று அவளிடம் சொல்கிறான். மனைவியை, எதிர்க்க முடியாதவராக செல்லையாப் பெருவட்டர். 

அந்தக் காலத்தில் பெரிய பரம்பரையாக இருந்த அறைக்கல் குடும்பத்தைச் சேர்ந்த தங்கம் என்னும் பெண் அவர்களின் வீட்டில் வேலை செய்து வருகிறாள். பெருவட்டரின் பேரன் லிவியால் அவள் கர்ப்பமாகிறாள். அதனால், தங்கம் தற்கொலை செய்து கொள்கிறாள். சொத்துப் பிரச்சினை, தங்கம் தற்கொலை என எதையும் பெரியவரிடம் சொல்வதில்லை.

இவர்களைப் போலில்லாமல், ஒரு தனி அடையாளமாக பிரான்சிஸ் நாவலில் வருகிறான். பெரிய பெருவட்டருக்கும் இவன் மேல் பாசம் அதிகம். குடி, தகாத உறவுகள் என அவன் இருந்தாலும், ஏதோ ஒன்றுக்கு கட்டுப்பட்டவன் போல நியாயத்தின் பக்கமே நிற்கிறான். இந்த சொத்துக்களை எல்லாம் இழந்தாலும் பரவாயில்லை, நிம்மதியாக இருந்தால் போதும் என நினைக்கிறான். அம்மா திரேசுடன், லிவியும் சேர்ந்து சொத்துக்களை விற்க வழக்கறிஞரை போய்ப் பார்த்ததை அறிந்து அவர்களைத் திட்டி அடிக்கிறான்.படுக்கையில் இருக்கும் பெருவட்டரைப் பார்க்க வருகிறார் கங்காணி.  பெரியவர் கங்காணியும், பெரிய பெருவட்டரும் பழைய நண்பர்கள். இந்த நிலத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். இவ்வளவு வயதாகியும், நடமாடிக் கொண்டிருக்கும் கங்காணியைப் பார்த்ததும், அவரைப் போல தான் இருக்க முடியவில்லையே என ஏங்குகிறார் பெருவட்டர்.கங்காணியின் பேரன் லாரன்ஸ், ஒரு மருத்துவர். பெருவட்டருக்கு வைத்தியம் பார்க்க, ஒரு முறை சென்றிருக்கிறான்.

லாரன்ஸ் சில சமூக சேவைகளில் ஈடுபடுவதாகவும், முக்கியமாக ரப்பர் மரங்கள் பற்றிய தீமைகளை அறியாமல் அதைப் பயிரிட்டு வளர்த்து வரும் மக்களிடம், ரப்பரின் தீமைகள் பற்றிச் சொல்லப் போவதாக, பிரான்ஸிடம் தெரிவிக்கிறான். அவர்களுடன் இணைந்து தானும் செயல்படப் போவதாக பிரான்ஸ் அவர்களிடம் சொல்கிறான். பெரிய பெருவட்டரும், தன்னைப் பார்த்துக்கொள்ளும் குஞ்ஞிக்கென, ஒரு இடத்தை எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

***************

நம் நாட்டு மரங்கள் நிறைந்த காடுகளை அழித்து, ரப்பர் பயிரிட்ட பொன்னு பெருவட்டரிடம் கதை ஆரம்பித்து, ரப்பர் தோட்டங்களை அழிக்க நினைக்கும் அவரின் பேரன் பிரான்சிடம் வந்து முடிகிறது நாவல்.

1 comment:

ரூபன் said...

வணக்கம்
பதிவை படித்தபோது நாவலைவேண்டி படிக்கவேண்டும் என்ற சிந்தனைதான்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
என்பக்கம்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014   போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment