Monday, December 24, 2012

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது. 
விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை;

ஒரு கர்ப்பிணிப் பெண்ணை
அவளின் தாயிடம்
ஒப்படைப்பது போல
உன்னை
இந்த மர நிழலில்
விட்டுவிட்டுப் போகிறேன்

(இந்தக் கவிதை எனது நினைவில் இருந்து எழுதுவது.. எழுத்துப் பிழையோ அல்லது சொற்களோ விடுபட்டிருந்தால்.. மன்னிக்கவும்).

இந்தக் கவிதையை நாஞ்சில் அவர்கள் சொன்னதும், எவ்வளவு பெரிய கவிதை என்றுதான் எனக்குத் தோன்றியது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாய் எப்படிப் பார்ப்பாள் என்று எனக்குத் தெரியும். இரண்டு அக்காக்களுடன் பிறந்து வளர்ந்ததால் இருக்கலாம். அது போல இந்த மரம் உன்னைப் பார்த்துக்கொள்ளும் என்பது.. எவ்வளவு பெரிய உண்மை. உண்மையில் சொல்லப் போனால், அந்த மன எழுச்சியை, அந்த மரத்தின் பிரமாண்டத்தை, இயற்கையின் முன்னால் நாம் எல்லோரும் குழந்தைகள் என்பதை.. என்னால் வார்த்தைகளில் எழுத முடியவில்லை. இனி எந்த ஒரு மரத்தைக் கண்டாலும், தேவதேவனின் இந்தக் கவிதை நிச்சயம் மனதில் வந்து போகும்.

 பின்னர் பேசிய விமர்சகர் திரு.ராஜகோபாலன், 'சமூக அவலங்களுக்கு எதிராக.. தேவதவன் கவிதைகள் எழுதுவதில்லை. அவரின் கவிதைகள் அனைத்தும், அழகியல் சார்ந்தவை என்று ஒதுக்குபவர்கள் உண்டு. அழகியலை எழுதிய கவிஞர்களும் உண்டு. ஆனால், அவர்களுக்கும் தேவதேவன் அவர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. மற்றவர்கள், பிரமாண்டமான இயற்கையின் முன்னால் நாம் ஒரு தூசு போன்றவர்கள் என்று கவிதை எழுதினால், தேவதேவனின் கவிதைகளில் அந்த தூசும் இந்தப் பிரமாண்டத்துக்கு இணையானது என்பதைக் காட்டுவார்..' என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து திரு. மோகனரங்கன் அவர்கள் தேவதேவனின் கவிதைகள் பற்றி உரையாற்றினார். தொடர்ந்து மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்கள் தேவதேவனின் கவிதைகள் பற்றி மலையாளத்தில் உரையாட, கே.பி. வினோத் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.
அதற்குப் பின்னர் பேசிய இயக்குனர் சுகா அவர்கள், தனக்கும் கவிதைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசியவர், புதுக் கவிதைகள் என்றாலே என்னவென்றே தெரியாத தனக்கு, பிரமிளின்,
 
சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

என்ற கவிதையின் மூலம் புதியதொரு படைப்பை நோக்கி நகர்ந்தேன்.. என்று குறிப்பிட்டவர், 'ஜெயமோகன் தேவதேவன் பற்றிச் சொல்லும்போது, அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிச் சொன்னதை விட, தேவதேவன் என்ற மனிதரைப் பற்றி சொல்லியது அதிகம்' என்றார். மூத்த படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் இது போன்ற விழாவை நடத்தும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சை முடித்துக்கொண்டார் இயக்குனர் சுகா.
இசை ஞானி அவர்கள் பேசும்பொழுது 'திரு. ராஜகோபாலன் அவர்கள் பேசும்பொழுது கவிதைதான் முதலில் தோன்றியது எனக் கூறினார், ஆனால் இசைதான் முதலில் தோன்றியது, பின்னரும் இசைதான் தோன்றியது... அதற்குப் பின்னரும் இசைதான். பேசுவது இசை இல்லையா... இசை இல்லையா (இந்த இடங்களில் இசை போலவே பாடியவாறு சொல்ல.. ஒரே கை தட்டல்தான்).. எனவே இசைதான் எல்லாவற்றுக்கும் முதல்' என்று  கூறியவர், தேவதேவனின் கவிதைகள் உண்மையானது, அவரைப் போலவே என்று குறிப்பிட்டார்.

ஜெயமோகன் அவர்கள் பேசும்பொழுது, பால் சக்கரியாவின் கதை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசியவர், தேதேவனின் கவிதைகளைப் பற்றி கூறினார். பின்னர் கவிஞர் தேவதேவன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். 'இந்த மேடையில், நான் அமர்ந்திருந்த நாற்காலி இப்பொழுது காலியாக இருக்கிறது, அது இன்மையில் இருக்கிறது.. இந்த அரங்கத்தில், உங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும், பின்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் உங்களால் பார்க்க முடியாது'.. என்று கவிதையாகவே பேசியவர், தனது சிறு வயது பற்றியும்   'தன்னால் சில வரிகளைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை.' என்றும் குறிப்பிட்டார்.


விழாவைத் தொகுத்து வழங்கிய திரு.செல்வேந்திரன் அவர்கள் நன்றி கூற, விழா மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

விழாவில் ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'ஒளியாலானது' புத்தகம் வெளியிடப்பட்டது. விஷ்ணுபுரம் விருதை இசை ஞானி இளையராஜா அவர்கள், கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கினார்.

*******************************************

ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில், தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதும்பொழுது, அவரின் பல கவிதைகள் பற்றிச் சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்; 


’மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்’’அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்... '
*******************************************


தேவதேவன் கவிதைகள் வலைத் தளம்:
தேவதேவன் கவிதைகள் 


விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்
தேவதேவனின் கவிமொழி
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

படங்கள்:  ஜெயமோகன்.இன் தளத்திலிருந்து - நன்றிThursday, December 20, 2012

குறும்படம்: Rags to Pads

அதைப் பற்றி பேசுவதே தவறு என்றுதான் நம் சமூகம் சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுவும் இந்த சமூகத்துக்கு அது ஒரு கேலிப் பொருள். ஆண்கள் மட்டும் அல்ல, பெண்களும் கூடத்தான். "நான் அவ வீட்டுக்கு வரல.. அவ ரொம்ப சுத்தம் பாக்குறவ.." என்று அந்த நாட்களில் வெளியே போகாமல் இருக்க காரணம், பெரும்பாலும் இன்னொரு பெண்தான். "வீட்லயே இருக்க வேண்டியது தானே.." என்று திட்டுபவர்களும் அதிகம். "மூன்று நாளா.." என்று கேலி செய்பவர்கள் திருந்துவது எப்போது?. அந்த நாள் என்று சொன்னாலே, முகத்தைச் சுளித்துக் கொள்பவர்களை என்ன செய்யலாம்.?

மாதவிடாய் நாட்களில் நகரத்துப் பெண்கள் கூட சமாளித்துக் கொள்ளலாம். அதையும், கடையில் வாங்கிய பின்னர் பேப்பர் சுற்றி எடுத்து வரவேண்டிய கொடுமை இன்னொருபுறம். இயல்பாக இருப்பதை, மாத சுழற்சியை ஏன் நாம் மறைக்க நினைக்கிறோம்.

ஆனால், கிராமங்களில் இன்னும் பழைய துணிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம் அல்லது அதன் விலை அவர்களுக்கு அதிகமாக இருக்ககூடும். பழைய துணிகளால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் நிறைய.

கோவையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரைப் பற்றி ஏற்கனவே வார இதழ்களிலும், இணையத்திலும் படித்திருந்த போதிலும் இந்தக் குறும்படத்தின் வாயிலாக நாப்கின் தயாரிப்பதற்கு அவர் பட்ட கஷ்டங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒவ்வொரு பெண்ணும் பார்க்க வேண்டிய படம் என்றாலும், முக்கியமாக ஆண்கள் பார்க்க வேண்டும்.

முடிந்த அளவு இந்த குறும்படத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.

Wednesday, December 19, 2012

600 ரூபாய்

உங்களுக்குத் தெரியாது..
பத்துக்கு பத்துக்கு ஒரு அறை என்றால் கூட, வாடகை ஆயிரத்துக்கு மேல்..

உங்களுக்குத் தெரியாது..
என்னதான் அடித்து பிடித்து செலவு செய்தாலும்
மளிகைக்  கடையில் ஐநூறு  ரூபாய் பாக்கி நிற்கிறது
எல்லா மாதத்திலும்

உங்களுக்குத் தெரியாது..
விலை குறைவென்று பண்டிகைக்கு
வாங்கிய துணிகள்
சாயம் போயும், கிழிந்தும் போகின்றன

உங்களுக்குத் தெரியாது..
காய்ச்சல் சளி என்றால் கூட சமாளித்து விடலாம்
மேலதிக நோய் என்றால் மருத்துவர் கட்டணம் நூறுக்கு குறைவில்லை..

உங்களுக்குத் தெரியாது..
பேருந்து, ரயில் போன்றவைகளின்  கட்டணம்
நம் நாட்டில் இலவசம் இல்லையே..
அது போலவே கல்வியும்..

இதையெல்லாம் விட
நீங்கள் எப்போதெல்லாம் பெட்ரோல் விலை ஏத்துகிறீர்களோ
அப்போதெல்லாம் காய்கறிகள் உட்பட எல்லாம் விலை ஏறுகின்றன

உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா
ஒரு சவத்தை அடக்கம் செய்யக் கூட
குறைந்த பட்சம் இரண்டாயிரம் ரூபாய் தேவை..

இவையெல்லாம் உங்களுக்கு எதற்கு தெரிய வேண்டும்...
மாடங்களில் இருந்து பாருங்கள்...
ஊரே செழிப்பாக இருக்கும்
அவை ஆறுகள் அல்ல
சாக்கடைகள் என்று ஒரு நாளும் நீங்கள் அறியப்போவதில்லை..

சொன்னதே சொன்னீர்கள்,
அந்த அறுநூறு ரூபாயில்
எப்படி ஒரு மாதத்தை தள்ளுவது என்று
பாவப்பட்ட எங்களுக்குச்
சொல்லிக் கொடுங்கள்....

வெகு விரைவில்
குறைந்த செலவில் 
நாம் வல்லரசாகி விடலாம்....
Friday, December 14, 2012

விஷ்ணுபுரம் விருது விழா - 2012

விஷ்ணுபுரம் விருது இந்த வருடம் கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. விருது வழங்கும் விழா டிசம்பர் 22 அன்று கோவையில் நடைபெறுகிறது.
விஷ்ணுபுரம் விருது 2012
விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்


சென்ற வருடங்களில் எழுத்தாளர்கள் ஆ.மாதவன் அவர்களுக்கும், பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. அந்நிகழ்வுகளைப் பற்றிய எனது பதிவுகள்.
விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில்
பூமணி - விருது விழாTuesday, December 11, 2012

எனது டைரியிலிருந்து - 6

விற்ற காசு

தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக்  கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.

- ந. கண்ணன் (ஆனந்த விகடன்)===================================================

தோல்வி

கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
வெற்றிபெற்ற கடவுள் பெயர்.

- எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்)


===================================================

நடைபாதை ஓவியன்

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

- எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்)
===================================================

அகத்தகத்தினிலே

காதலர் தினம், அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'......ப் போல இருக்கிறாய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போயவிட்டேன்
ஒரேயடியாக.

- ஆதி (ஆனந்த விகடன்)

Friday, October 26, 2012

கதவின்றி அமையாது


மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும்.

சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன்.

கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு மேல் படிந்திருந்த கரையானை இடித்து விட்டு, அக்கதவைப் பார்த்து அச் சிறுவர்கள் அடையும் சந்தோசத்தை கி.ரா. அவர்கள் எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

உண்மையில் பார்த்தால் கதவுகள் இருக்கும் தைரியத்தில்தான் இரவில் பயமில்லாமல் நாம் உறங்குகின்றோம். தாழிட்டு விட்டு வெளியே சென்றால் நிம்மதியாக இருக்கின்றோம். கதவுகள் நம்முடன் வாழ்கின்றன. வீட்டுக்கும், வெளிக்கும் ஒரு பாலமாக கதவுகள் இருக்கின்றன.

இது ஒரு மீள்பதிவு.

Wednesday, September 26, 2012

தோட்டத்தில்: மெழுகு பீர்க்கங்காய் (Sponge Gourd)


ஆறு மாதத்துக்கு முன்னால், ஊத்துக்குளி அருகே ஒரு சிறு கிராமத்தின் வழியாகச் சென்ற போது " இங்க பாரு.. மெழுகு பீர்க்கங்காய்".. என்று அப்பாவும், அக்காவும் கத்தினார்கள். ஒரு வீட்டின் வேலி முழுவதும் கொடி படர்ந்து காய்கள் நிறையக் காய்த்திருந்தன. வண்டியை நிறுத்தி, அவர்களிடம் கேட்டு காய்களை வாங்கிக் கொண்டோம். அவர்களிடம் விதை இருக்கிறதா எனக் கேட்க, அவர்களும் கொஞ்சம் விதையை சந்தோசமாக கொடுத்தார்கள். "இப்பதான் நான் மொத மொதல்ல இந்த பீர்க்கையைப் பார்க்கிறேன்" என்று சொன்னதும், அக்கா "நீ சின்னப் பையனா இருந்தப்போ.. நம்ம வீட்டு வேப்ப மரத்துல நெறையப் பிடிச்சுதே.. ஞாபகம் இல்லையா.." என்று கேட்க... எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.

வீட்டுக்கு வந்ததும், மூன்று நான்கு விதைகளை மண்ணில் போட.. முளைத்து வந்ததில் ஒரே ஒரு செடி மட்டும் நன்றாக வளர்ந்தது. ஒரு கயிற்றில் கட்டி மொட்டை மாடிக்கு இழுத்து விட்டு,  ஒரு சிறிய பந்தல் போல செய்து அதன் மேல் படர விட நன்றாக காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த மருதாணிச் செடியின் மேல் நன்றாக படர்ந்து கீழேயும் காய்கள் பிடித்தது. இப்பொழுதெல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை பீர்க்கங்காய் சட்னி, பொரியல், கூட்டு தான் வீட்டில். மருந்தடிக்காத, நம் மண்ணில் விளைந்த காய் என்பதால் சுவை அதிகம். அது போலவே கொஞ்சம் முற்றினால் கசப்படிக்கிறது.

 


காயை முற்ற விட்டு, அதன் பின்னர், அதனை உடைத்தால்.. உள்ளே இருக்கும் நார் ஒரு பொம்மை போல அவ்வளவு அழகாக, மென்மையாக இருக்கிறது. சின்ன பையனாக இருந்த போது, இந்த நாரில் தேய்த்து குளித்தது நினைவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் Sponge Gourd என்று சொல்கிறார்கள். 

Monday, September 3, 2012

எனது புகைப்படங்கள்..


அவினாசி தேர்த் திருவிழாவில்... தீபத் திருநாளன்று..

ஊர்ப் பக்கம் மயில் மேய்ந்து கொண்டிருக்க, அதைப் படம் பிடிக்க..  உற்றுப் பார்த்தால் மட்டும் மயில் தெரிகிறது..

கோவில் கோபுரம் - அவினாசி அருகில்...

மக்காச்சோளப் பூ!!

சோம்புச் செடி - நண்பனின் வீட்டில்... 

நீல வானம்...

ஏற்காட்டில்... 


Monday, August 27, 2012

புத்தர்எங்கேனும் அழுகுரல் கேட்கும்போதோ..
வன்முறை தனது கரங்களை விரிக்கும்போதோ..
போதிக்க நான்
புத்தனைத் தேடுகிறேன்..

அகப்பட்ட புத்தனோ 
'நானே புத்தனில்லை'
எனச் சொல்லிவிட்டு
தனியே நடந்து போகிறார்...

புத்தரே புத்தனில்லை
எனச் சொல்லிய பின்னர்
யார்தான் புத்தன்?

படம்: இணையத்தில் இருந்து - நன்றி

Friday, August 17, 2012

ஏமாற்று வியாபாரிகள்

காய்கறி அங்காடியில்
பேரம் முடிந்து
விற்றவனும், வாங்கியவனும்
விலை அதிகம் எனவும்
குறைவு எனவும்
சிறு முணுமுணுப்புடன் விலகினர்...

இரண்டு சொத்தைக் காய்களைத்
தள்ளிவிட்டதில் விற்றவனும்
கிழிந்து போனதொரு பத்து ரூபாய்த் தாளை
மடித்துக் கொடுத்ததில் வாங்கியவனும்
உள்ளூர மகிழ்ந்த
கணத்தில்...

கடவுள்
தன் கையிலிருந்த
தராசையும் எடைக் கற்களையும்
வீசியெறிந்து விட்டு
நித்திரையைத் தொடர்ந்தார்.


படம்: இணையத்தில் இருந்து - நன்றி
இது ஒரு மீள்பதிவு

Thursday, August 16, 2012

சுதந்திர தினம் - விழுதுகள்

எங்கள் விழுதுகள் அமைப்பு பற்றி ஏற்கனவே இந்தப் பதிவுகளில் எழுதியிருக்கிறேன். 

சுதந்திர தினமான நேற்று, விழுதுகள் மையங்களில் சிறப்பாக கொண்டாடினோம். அனைத்து மையங்களிலும் விழா நடத்த முடியாது என்பதால், கள்ளிப்பாளையம், ஜெ.ஜெ நகர் மற்றும் எம். கவுண்டம்பாளையம் ஆகிய மையங்கள் இணைந்து விழாவை, எம். கவுண்டம்பாளையம் பள்ளி அரங்கில் நடத்தினோம்.

விளையாட்டு, நாடகம், நடனம், பேச்சு என மாணவர்கள் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பங்கேற்றார்கள். சளைக்காமல் அவர்கள் பங்கேற்று பெற்ற மகிழ்ச்சி என்பதோடு அல்லாமல், எங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டார்கள் எங்கள் மாணவர்கள்.

அங்கு எடுத்த புகைப்படங்கள்:


Monday, August 13, 2012

சினிமா:A Separation (எ செபரேசன்) படத்திலிருந்து...


எ செபரேசன் படத்தின் கதையை போன பதிவில் எழுதி இருந்தேன். (A Separation) அப்படத்தை பற்றி எனது பார்வையில் தோன்றியவற்றை இப்பதிவில் எழுதி இருக்கிறேன்.  சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான, ஆஸ்கார் விருதைப் பெற்ற இப்படம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. .

* கணவன் - மனைவி விவாகரத்துக்களில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். ஒரு வகையில் அவர்கள் வேறு வழியில்லாமல் விவாகரத்தை நாடினாலும், பெற்றோர் இருவரிடமும் பாசம் வைத்திருக்கும் குழந்தைகள் படும் துயரத்தை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. இந்தப் படத்தில், நடேர் மற்றும் சிமினின் மகளான டெர்மி அமைதியாக வந்து போகிறாள். பதினோரு வயதான அவள் இருவரிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கிறாள்.

* இரான் நாட்டை விட்டு மனைவி போக விரும்ப, கணவனோ பயமில்லாமல் இங்கேயே வாழ வேண்டும் என்று சொல்கிறான்.


* தள்ளாத வயதில் அல்சீமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தன் தந்தையை பாசத்துடன் கவனித்துக் கொள்கிறான் நடேர். அவருக்கு சவரம் செய்து, கழிவறைக்கு அழைத்துச் சென்று, குளிப்பாட்டி என அவருக்காக அவன் செய்யும் பணிவிடைகளும், அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் ஒரு பாசக்கார மகனாக நடேர்.

* வீட்டு வேலை என்று நடேரின் வீட்டில் சேர்ந்து கொள்கிறாள் ரசியாக். ஆனால், அங்கே அந்த பெரியவர் கழிவறைக்கு கூட செல்ல தெரியாமல், தன் உடையிலேயே கழித்து விட்டதைக் கண்டு.. அவரின் உடைகளை மாற்ற ரசியாக் தயங்குவது, நமக்கு கண்ணில் நீர் வரவைக்கும் காட்சிகள். அதுவும் ஒரு இஸ்லாமிய நாட்டில், ஒரு பெண் இது போல வேலைகள் செய்யத் தயங்குவது சாதாரணமே. *   யாரிடம் நாம் பொய் சொல்ல நேர்ந்தாலும், குழந்தைகளிடம் பொய் சொல்ல முடியாது. பணிப்பெண் ரசியாக்கை, நடேர் தள்ளிவிட்ட பின்னர், நடேர் கோர்ட் உட்பட, எல்லோரிடத்திலும் ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்கு தெரியாது என்றே சொல்கிறான். மகள் டெர்மி, நடேரிடம் கேட்கும்போது, தயங்கும் அவன், சில நொடிகள் கழித்து.. மகளின் கண்களைப் பார்த்து எனக்கு முன்னாலேயே தெரியும் என்று ஒப்புக்கொள்கிறான். அந்தக் குற்றத்தை அவன் ஒப்புக்கொண்டால், இரண்டு மூன்று வருடங்கள் தண்டனை கிடைக்கும், சிறை செல்ல நேரிடும். அப்படி சிறைக்குப் போனால், தன் தந்தையையும், மகளையும் யார் கவனித்துக் கொள்வார்கள் என்பதினாலேயே தான் சொல்லவில்லை என மகளிடம் சொல்கிறான்.

* பணக்கார குழந்தை, ஏழை வீட்டு குழந்தை என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. இரண்டு வீட்டு குழந்தைகளும் பாசத்துக்கும், ஆதரவுக்கும் ஏங்குகிறார்கள். நடேரின் மகள் டேர்மியும், பணிப்பெண் ரசியாகின் மகள் சொமியாவும் அப்படிதான்.

* யாராக இருந்தாலும் இறுதியில், தன் மனசாட்சிக்கு பயந்தோ அல்லது கடவுளுக்குப் பயந்தோ குற்றத்தை ஒப்புக்கொள்கிறார்கள். முதலில், நடேர் தன்னை தள்ளி விட்டதால்தான் அபார்சன் ஆனதாக சொல்லும் ரசியாக், இறுதியில் குரான் கொண்டு வரத் தயங்கி, நடேர் தள்ளிவிட்டதற்கு முதல் நாளே தான் காரில் அடிபட்டதாக ஒப்புக்கொள்கிறாள். * ரசியாக்கின் கணவன், வேலை இல்லாமல் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கிறான். பெருங் கோபம் கொண்டவனான அவன், கடைசியில் பணம் கிடைக்காது என்று தெரிந்ததும், தன்னைத் தானே அடித்துக்கொண்டு, வீதியில் நின்று கொண்டிருந்த நடேரின் கார் கண்ணாடியை உடைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடுகிறான். அவன் பின்னாலேயே ரசியாக்கும் ஓடுகிறாள். அதற்குப் பின்னர், அவர்களின் மீதி வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்?. அல்லது அவர்களும் விவாகரத்து மன்றத்தில் நின்று கொண்டிருப்பார்களா?.

* தான் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் இருக்கும் பெரியவர், அப்பாவின் மேல் உயிரையே வைத்திருக்கும் நடேர், வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு குடும்பச் சுமையால் வேலைக்கு வரும் ரசியாக், விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்திருக்கும் பெற்றோரை நினைத்து வருந்தும் டெர்மி, தன் மகள் தன்னுடன் வர மறுத்து விடுகிறாள் என்பதை நினைத்து வருந்தும் சிமின், வேலை இல்லாமல் இருக்கும் ரசியாக்கின் கணவன்....... என எல்லோரும் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள்தான்.

* கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போனால் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் தீர்வு கிடைக்கும். ஆனால், அப்படி இல்லாமல் இருப்பதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது.

*  இறுதிக் காட்சியில், டெர்மியிடம், 'உன்னுடைய முடிவை எடுத்து விட்டாயா.. நீ அப்பாவிடம் இருக்கப் போகிறாயா, அம்மாவிடம் போகிறாயா' என நீதிபதி திரும்பத் திரும்ப கேட்கிறார். டெர்மி கண்ணில் நீருடன், தயங்கிக் கொண்டே இருக்கிறாள். பெற்றோர்களை வெளியே போகச் சொல்கிறார் நீதிபதி. வெளியே வந்த நடேரும், சிமினும் எதிரும் புதிருமாக நின்று கொண்டிருக்கிறார்கள். ஒரு கண்ணாடி கதவு அவர்களைப் பிரித்துக் கொண்டு நிற்கிறது.* டெர்மி என்ன பதில் சொல்லியிருப்பாள்? இதற்கான பதில் நமக்குத் தேவையில்லை தான். எல்லா விவாகரத்து ஆன பெற்றோர்களின் குழந்தைகள் என்ன பதில் சொல்லியிருப்பார்களோ, அதைதானே அவளும் சொல்லியிருக்க கூடும்.

* குழந்தைகள் உலகம் எப்பொழுதுமே சிறு சிறு சந்தோசங்களை பொதிந்து வைத்திருக்கக் கூடியது. இவ்வளவு பெரிய துயரை, குழந்தைகள் தாங்கிக் கொண்டாலும், அவர்கள் மனதில் அது ஒரு ஆழப் பதிந்து கிடக்கும்.

* ஒவ்வொரு பெற்றோரும் பார்க்க வேண்டிய படம். டெர்மி மட்டும் அங்கே நீதிபதி முன் நின்று கொண்டில்லை. நிறையக் குழந்தைகள் நீதிமன்றப் படியேறி இறங்குகிறார்கள். நம் குழந்தைகளிடம் அந்தக் கேள்வி கேட்கப்படாமல் இருந்தாலே, நாம் நல்ல பெற்றோர்தான்.

Friday, August 10, 2012

சினிமா: A Separation


விவாகரத்துப் பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அவர்கள் வாழ்வது ஈரான் நாட்டில். பதினோரு வயதில் பள்ளி செல்லும் மகள். கணவன் - நடேரின் தந்தை அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்.  சுய நினைவில்லாத அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது போலவே எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. மனைவி - சிமின், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்க, நடேர் தன் வயதான தந்தையை விட்டு வர முடியாது என்று சொல்கிறான். எனவே, சிமின் விவாகரத்து வேண்டி மனுச் செய்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சிமின், தனது பொருட்களுடன் தன் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். மகள் - டெர்மி, தன் தாயுடன் செல்ல மறுத்து தன் தந்தையுடனே தங்கி விடுகிறாள். நடேர் வேலைக்குப் போன பின்னர் தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான். அப்பெண்ணின் பெயர் ரசியாக். டெர்மியின் ஆசிரியைக்கு பழக்கமானவள் அப்பெண்.
முதல் நாள் வேலைக்கு வருகிறாள் ரசியாக். அவளுடன் கூடவே அவளின் சிறு மகளும். அவள் தன் தாயின் வயிற்றில் தலையை வைத்து ஏதாவது சத்தம் வருகிறதா என காத்து வைத்து கேட்கிறாள். ரசியாக் கர்ப்பமாக இருக்கிறாள். நடேரின் தந்தை, அவரின் அறையை விட்டு 'நான் பேப்பர் வாங்க கடைக்கு போகிறேன்' என்று கதவைத் திறக்க முயல, அவரைச் சமாளித்து அறைக்குப் போகச் சொல்கிறாள். அப்பொழுதுதான் அவர் தன் உடையிலேயே சிறுநீர் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவரிடம், அந்த உடையை மாற்றச் சொல்கிறாள். அவருக்கோ எதுவும் புரியவில்லை. அவரைக் கூட்டிக்கொண்டு போய் கழிவறையில் நிறுத்தி, அவரின் உடையை மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ அப்படியே நிற்கிறார். தன் மகளை கொஞ்சம் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, கையில் உறையை மாட்டிக்கொண்டு அவருக்கு உடை மாற்றி விடுகிறாள். அச்சிறு பெண் 'நான் அப்பாவிடம் சொல்ல மாட்டேன்' என்கிறாள்.

அவள் உள்ளே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, ரசியாக்கின் பெண் முதியவரை காணவில்லை எனக் கூறுகிறாள். உடனே, அவரைத் தேடி சாலையில் ஓடுகிறாள். அவர் ஒரு நியூஸ் பேப்பர் கடையில் நிற்பதைப் பார்க்கிறாள். நிறையக் கார்கள் போய்க் கொண்டிருக்கும் அந்தச் சாலையை கடக்க அவர் முற்பட, ரசியாக் திகைத்து நிற்கிறாள்.பணி முடிந்து வந்த நடேரிடம், தன்னால் இந்த வேலைக்கு வர முடியாது என்றும், மிகக் கடினமான வேலை, ஒரு பெண் இன்னொரு முதியவருக்கு உடை மாற்றிவிடுவது மிக கடினம் என்று கூறுகிறாள். நடேருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேண்டுமானால் என் கணவரை நாளைக்கு உங்களைப் பார்க்க வரச் சொல்கிறேன், அவர் இப்பொழுது வேலை இல்லாமல்தான் இருக்கிறார் என்று கூற, நடேர் சரி என்கிறான்.

அடுத்த நாள், பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான் நடேர். அழைப்பு மணியை அழுத்துகிறான். பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். பதிலில்லை. மேல் வீட்டில் குடியிருக்கும் பெண்ணைக் கேட்க, 'காலையில் ரசியாக் இருந்தாளே.. எங்கே என்று தெரியவில்லை' என்று சொல்கிறார். காரில் இருக்கும் இன்னொரு சாவியைக் கொண்டு, வீட்டைத் திறக்கிறார்கள். அங்கே, நடேரின் அப்பா கட்டிலில் இருந்து கீழே பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். ஒரு கயிற்றில் அவர் கை கட்டிலுடன் சேர்த்துக் கட்டப் பட்டிருக்கிறது. கட்டை அவிழ்த்து, அவரைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவரை மெதுவாகக் கூப்பிட அவர் விழித்துக் கொள்கிறார்.

நடேர், ரசியாக்கின் மீது கோபம் கொள்கிறான். அப்பாவைக் கட்டிப்போட்டு எங்கோ வெளியில் கிளம்பிவிட்டாள் என்று நினைக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து வந்த ரசியாகிடம், 'இன்னும் கொஞ்ச நேரம் நான் வராமல் இருந்தால் அப்பா செத்திருப்பார்.. உன்னை வேலைக்கு வைத்ததே அவரைக் கவனித்துக் கொள்ளத்தான்.. ஆனால் அவரை விட்டு விட்டு வெளியே போயிருக்கிறாய்.. அதுவும் இல்லாமல் அவரை கயிற்றில் கட்டி போட்டிருக்கிறாய்.. மேசையில் இருந்த பணத்தை வேறு காணவில்லை.. ' எனச் சொல்ல, ரசியாக் 'கடவுள் சாட்சியாக பணத்தை நான் எடுக்கவில்லை' என்று கூறுகிறாள். 'முதலில் இங்கே இருந்து வெளியே போ' என்கிறான். அவள் தயங்கிக் கொண்டே நிற்க, அவளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான் நடேர். திரும்ப உள்ளே வரும் ரசியாக், 'இன்றைய சம்பளத்தைக் கொடுங்கள்' எனக் கேட்க, 'ஏற்கனவே பணத்தை எடுத்து விட்டு, அதுவும் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்ட பின்னர். .என்னால் சம்பளம் கொடுக்க முடியாது' என்று வெளியே தள்ளி கதவைச் சாத்தி விடுகிறான்.


அடுத்த நாள், சிமினின் தாய் வீட்டுக்குச் செல்கிறான் நடேர். அங்கு சிமின், ரசியாக் இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறாள் எனக் கூறுகிறாள். ஏன் என அவன் கேட்க, நீங்கள் அவளைப் பிடித்து தள்ளி இருக்கிறாய் என சிமின் சொல்லுகிறாள். இருவரும் ரசியாக்கைப் பார்க்க ஹாஸ்பிடல் செல்கிறார்கள். அங்கே, ரசியாக்குக்கு அபார்சன் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே,  ரசியாக்கின் கணவனுக்கும் நடேருக்கும் சண்டை ஏற்படுகிறது.

நீதி மன்றத்தில், நாலரை மாதக் குழந்தையின் கருக்கலைப்புக்கு அவன்தான் காரணம் என்கிறாள் ரசியாக். ரசியாகின் கணவனும் அதை ஆமோதிக்கிறான். அவளை வெளியே தள்ளி கதவைச் சாத்தும்போதுதான் தான் அடிபட நேர்ந்ததாகவும், அதுவே கருகலைப்புக்கு காரணம் என்கிறார்கள் இருவரும். அதை ஏற்க மறுக்கிறான் நடேர்.  ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்குத் தெரியாது என்கிறான் அவன். வழக்குப் போய் கொண்டிருக்கிறது. ரசியாக்கின் கணவன், நடேரின் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று ஆசிரியை மிரட்டுகிறான். பள்ளிக்கு வெளியே எப்பொழுதும் நின்றுகொண்டிருக்கிறான். தன் மகளை அவன் ஏதாவது செய்து விடுவான் என்று பயக்கும் சிமின், அவனுக்குப் பணம் கொடுத்து சமாதானம் செய்ய முயல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், பின்னர் சரி எனச் சொல்லிவிடுகிறான்.பணம் தந்து அவனைச் சரிக்கட்ட மறுக்கிறான் நடேர். சிமின் எவ்வளவோ கூறிப் பார்க்கிறாள். அவன் மறுத்துவிடுகிறான். கோபப்படும் அவள், டேர்மியை அழைத்துக்கொண்டு போகிறாள். சிமினைப் பார்க்க வரும் ரசியாக், 'எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முந்தின நாளே எனக்கு வலி இருந்தது. நான் யாரிடமும் சொல்லவில்லை.' என்கிறாள். சிமின், 'அது எப்படி நடந்தது.. அதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை?' என்கிறாள். நடேரின் அப்பா, ஒருநாள் வெளியே போன பொழுது, சந்தடி மிகுந்த சாலையில் ஒரு கார் தன்னை இடித்து விட்டதைச் சொல்கிறாள். 'இது என்னுடைய தவறே. இதை நீங்கள் பணம் கொடுத்து சரி பண்ண வேண்டாம்.. நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவும் வேண்டாம்' என்று சொல்லி விட்டுச் சொல்கிறாள்.


ரசியாக்கின் வீட்டுக்குச் செல்கிறார்கள், நடேரும் சிமினும். கூடவே டேர்மியும். ரசியாக்கின் பக்கத்து வீட்டு பெரியவர்கள் என நாலைந்து பேர் இருக்கிறார்கள். உள்ளூர பயந்து கொண்டிருக்கிறாள் ரசியாக். பணம் கொடுக்க தயாராக செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுகிறான் நடேர். தன் மகளையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் அவன், ரசியாக்கிடம் 'உங்கள் மேல் தவறில்லை என்றால்... போய் குர்ஆன் எடுத்துக் கொண்டு வாருங்கள்.. அதற்குப் பின்னர் நான் இந்தப் பணத்தைத் தருகிறேன்..' என்கிறான். எழுந்து போகும் ரசியாக், திரும்பி வர தாமதமாக, கணவன் அவளைத் தேடி உள்ளறைக்கு வந்து விடுகிறான். அங்கே ரசியாக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறாள். கணவனிடம் உண்மையைச் சொல்ல. அவன் வெறி பிடித்தவன் போல தன்னைத் தானே அறைந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறான். பின்னாலே ஓடி வரும் ரசியாக், சிமினிடம் 'நான் தான் உங்களை வர வேண்டாம் என்று சொன்னேனே. இப்பொழுது இப்படி ஆகிவிட்டதே' என்று பின்னாலேயே ஓடுகிறாள். நடேர் வெளியே வந்து பார்த்தால், அவன் கார் கண்ணாடி உடைந்து கிடைக்கிறது.


நீதி மன்றத்தில், இப்பொழுது விவாகரத்து வழக்கு. கூடவே டேர்மியும். அவள் யாரிடம் இருக்கப் போகிறாள் என்பதை அவள் முடிவு செய்ய வேண்டும். நடேரிடமும், சிமினிடமும் விசாரணை முடிந்து அவர்களின் மகளை உள்ளே கூப்பிடுகிறார் நீதிபதி. உள்ளே செல்லும் டெர்மி, நீதிபதி முன் அழுது கொண்டிருக்கிறாள். வெளியே பெற்றோர் இருவரும் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நிறையப் பேர் எதிரும் புதிருமாக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். படம் அத்துடன் முடிகிறது.

உள்ளே சென்ற டெர்மி என்ன முடிவை எடுத்திருப்பாள் என்பது நமக்குத் தெரியாமலேயே படம் முடிகிறது.

Monday, August 6, 2012

சிநேகம்

எப்பொழுதும்
தேங்காய்த் தொட்டி தேடி அலையும்
கண்ணம்மாவுக்கு ஊர் வைத்த பெயர்
பைத்தியக்காரி.

பூ வரைந்த பாவாடையும்
பாவாடை வரை நீண்ட மேல் துணியும்
ஒரு கையில் அடுக்கி வைத்த
தேங்காய்த் தொட்டிகளும்
மேல் தொட்டி நிறைய கூழாங் கற்களுமாக
வீதியில் நடந்து கொண்டிருப்பாள்.

தொட்டியும், கூழாங் கல்லும்
எங்கே கிடந்தாலும் ஓடிப் போய்
அள்ளிக் கொள்ளுவாள்
யாராவது திட்டினால், கெட்ட வார்த்தைகளும்
கல்லடியும் கிடைக்கும்.

மனிதர்கள் யாரும் தர முடியாத சிநேகத்தை
தான் கண்டெடுக்கும்
ஒவ்வொரு தொட்டியிலும்,
கல்லிலும் பார்த்து
சிரித்துக்கொண்டிருக்கிறாள் கண்ணம்மா..


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.
(மீள்பதிவு)