Tuesday, December 20, 2011

பூமணி - விருது விழா


இந்த வருடத்தின் 'விஷ்ணுபுரம்' விருது எழுத்தாளர் திரு. பூமணி அவர்களுக்கு, சென்ற ஞாயிறு அன்று கோவையில் வழங்கப்பட்டது.

கரிசல் இலக்கியத்தின் முன்னத்தி ஏர் கி.ரா என்றால், பின்னத்தி ஏர் பூமணி என்று விழாவில் பேசிய அனைவரும் சொன்னார்கள். அது போலவே எந்த வம்புக்கும் போகாத, தன் எழுத்தையே யாராவது 'இப்படி எழுதி இருக்குலாம்' என்றால், அவர் இப்படி பதில் சொல்வாராம் 'அப்படிங்களா, அடுத்த தடவ பார்க்கலாம்'. இவ்வளவுதான் அவர் பேசுவது என்று மேடையில் குறிப்பிட்டார்கள்.

நிகழ்ச்சியை 'காக்கைச் சிறகினிலே' பாடலோடு ஒரு சிறு பெண் ஆரம்பித்து வைத்தார். எப்பொழுதும் நான் ரசிக்கும் பாட்டு, அழகாக பாடி விழாவைத் தொடங்கி வைத்த அப்பெண்ணுக்கு எனது வாழத்துக்கள்.




கோவை ஞானி அவர்கள் விழாத் தலைமை உரையாற்றினார். பூமணிக்கும், அவருக்கும் உள்ள நட்பையும், பூமணி அவர்கள் எழுதி வெளியாகப் போகும், 'அஞ்ஞாடி' நாவலைப் பற்றி குறிப்பிட்டார்.

இயக்குனர் இமையம் பாரதிராஜாவை பேச அழைத்த செல்வேந்திரன், பூமணி அவர்களின் நாவல் வெளியான வருடங்களில், பாரதிராஜா அவர்களின் படங்கள் வெளிவந்ததை சுட்டிக் காட்டி, இதற்கு மேல் வேறன்ன வேண்டும் அவரை இந்த விழாவிற்கு நாங்கள் அழைக்க, என்று கூறி இயக்குனரை பேச அழைத்தார்.

பாரதிராஜா அவர்கள் பேசும்பொழுது, "இலக்கிய விழாவில் என்னை எதற்கு அழைத்திருக்கிறார்கள் என்று புரியவில்லை" என்று கூறியவர், 'எத்தனையோ விருதுகள் நான் வாங்கி இருந்தாலும், இந்த சபையில், எழுத்தாளர்கள் கூடி இருக்கும் ஒரு இடத்தில், பூமணிக்கு நான் விருது வழங்கியதை மிகப் பெரும் பேறாக எண்ணுகிறேன்' என்றார்.


எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள், கரிசல் மண்ணையும், அங்கு இருக்கும் மக்களைப் பற்றியும் அழகாகப் பேசினார். 'கொஞ்சம் கரிசல் மண்ணை கையில் எடுத்து, குப்பைகளை ஊதித் தள்ளிவிட்டு, கையில் மீதி இருக்கும் மண்ணை 'நெய் கரிசல்' என்று வாயில் போட்டுக் கொள்வார்கள். பூமணியின் ஒரு கதையில் வருவது போல புளிச்ச தண்ணிக்கு கூட வழி இல்லாத ஒரு ஊரில், அந்த மக்கள் இன்னும் ஊரையும், நிலத்தையும் நேசித்துக் கொண்டிருக்கிறார்கள். கி.ரா அவர்களின் ஒரு கதையில் வருவது போல, ஒரு பெரியவர் சாகக் கிடக்கும்பொழுது, உயிர் பிரியாமல் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் கரிசல் மண்ணை, வாயில் கரைத்து ஊற்றியதும் அவரின் உயிர் பிரிகிறது அந்தக் கதையில். வேம்பும், கருவேலமும் தான் எங்கள் ஊரில் இருக்கும் இரண்டு மரங்கள். இரண்டுமே வறட்சியைத் தாங்கி வளர்பவை. பனை மரம் கூட எங்காவது ஒன்றுதான் தென்படும். ' என்றார்.


ஜெயமோகன், 'எங்கள் ஊரில் எங்கு பார்த்தாலும் பசுமை. தலையை மேலே தூக்கிப் பார்த்தால் பச்சைப் பசேல் என்றுதான் தெரியும். முதன் முறையாக, பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு கிளம்பி கரிசல் மண்ணுக்கு வந்த பொழுதுதான், வானம் இவ்வளவு பெரியது என்று புரிந்தது. எங்கும் பசுமை இல்லாமல், பார்வையின் முடிவில் வானமும், மண்ணும் சேரும் ஒரு அழகை நான் அங்குதான் கண்டேன். அந்தக் கணத்தில் நான் அழுது விட்டேன்' என்று குறிப்பிட்டவர், 'கலை என்றால், எழுத்து, இலக்கியம், சினிமா, ஓவியம் என அனைத்தும்தான்' என்றார்.

பூமணி அவர்கள் மிகவும் தளர்வாக இருந்ததால், அவர் எழுதி வைத்திருந்த உரையை வாசகர் படித்தார். அந்த உரை ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை

எல்லோருமே பேசும்பொழுது, கரிசல் மண்ணின் பெருமையையும், அந்த ஊர்களைச் சுற்றியுள்ள எழுத்தாளர்களையும் பற்றி தவறாமல் குறிப்பிட்டார்கள். நிச்சயம் ஒருநாள் கோவில்பட்டிக்கு செல்ல வேண்டும், அந்தக் கரிசல் மண்ணை நானும் முகர்ந்து பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். கரிசல் மண்ணின் மீதும், கரிசல் இலக்கியத்தின் மீதும் ஒரு தீராக் காதலை ஏற்படுத்திய இந்த விழாக் குழுவினருக்கு எனது நன்றிகள்.

2 comments:

  1. பொதுவாக உங்கள் பதிவுகள் மிக சிறியதாய் இருக்கும். இந்த விழா குறித்து விரிவாக பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. @மோகன் குமார்
    நன்றிங்க

    ReplyDelete