Monday, October 28, 2013

ஒன்பது மற்றும் பதினொன்றாம்(+1) வகுப்புகள் தேவையா?

பத்து மற்றும் +2 வகுப்புகள் மாணவர்களுக்கு முக்கியமானவை. அடுத்து என்ன படிக்கலாம் என இந்தத் தேர்வுகளில் வரும் மதிப்பெண்களை வைத்தே முடிவு செய்ய முடியும். பொதுத் தேர்வுகளாக இருக்கும் இந்த இரண்டு வகுப்புகளையும், மாணவர்கள் முறையே ஒன்பது மற்றும் +1 முடிந்து ஒரு வருடம் மட்டுமே(!) படித்து தேர்வு எழுத வேண்டும் என்று இருக்கிறது.

உண்மையில் ஒரு வருடம் மட்டுமா மாணவர்கள் படிக்கிறார்கள்?

தனியார் பள்ளிகளில், பத்தாம் வகுப்புப் பாடத்தை ஒன்பதாம் வகுப்பிலும், +2 பாடத்தை +1 வகுப்பிலும் எடுக்கிறார்கள். அப்படி என்றால், இந்த மாணவர்கள் இரண்டு வருடம் படிக்கிறார்கள். முக்கியமான நாட்கள் தவிர, வருடத்தின் அனைத்து நாட்களும் பள்ளி உண்டு. காலை 8 மணிக்கு முன்னரே ஆரம்பிக்கும் வகுப்புகள், மாலை வேளைகளில் தான் முடிகின்றன. சில மாணவர்கள், வீடு திரும்பிப் பின்னர் தனிப்பயிற்சி வகுப்புகளுக்கும் செல்கிறார்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் கிடையாது. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அதிகாலை துவங்கி, இரவு பத்து மணி வரைக்கும் படிக்கிறார்கள். திரும்ப, திரும்ப படிப்பதால்.. புத்தகத்தின் எந்தப் பக்கத்தில் என்ன இருக்கும் என்று மனப்பாடமாகத் தெரிகிறது. படிக்காத மாணவர்களுக்கு என்று பள்ளியிலேயே தனியாக வகுப்புகள் வேறு  உண்டு.

ஆக, இவர்கள் இரண்டு வருடம் முட்டி மோதிப் படிக்க, அரசுப் பள்ளி மாணவர்கள் ஒரு வருடம் மட்டுமே படித்து இவர்களுடன் போட்டி போடுகிறார்கள். ஆசிரியர்கள் இல்லாமல், அதுவும் தகுந்த ஆசிரியர்கள் இல்லாமல், நிறைய விடுமுறை நாட்களோடு, தகுந்த வழிகாட்டுதல்கள் இன்றிப் படிக்கிறார்கள். இதில் எங்கேயோ இருக்கும் தமிழகத்தின் கடைக்கோடி கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களும் உண்டு.

படிப்பது ஒன்றும் தப்பில்லை தான், ஆனால் போட்டி (அ) தேர்வு  என்று வரும்போது, பயிற்சிக் காலம் என்பது சரிசமமாக இருக்க வேண்டும் அல்லவா?.

ஒன்பது மற்றும் பதினொன்றாம் வகுப்புகள் ஒன்றும் தேவையற்றதாக இல்லை. ஆனால், அதைப் படித்தால் பொதுத் தேர்வுகளில் மதிப்பெண் பெறுவது எப்படி?. நமது நோக்கமே, நிறைய மதிப்பெண்கள் தான், அதைப் பெற 10 மற்றும் +2 வகுப்புகள் தான் தேவையே தவிர, மற்ற வகுப்புகள் தேவை இல்லை என நினைக்கின்றனர்.

பிறகு எதற்காக 9 மற்றும் +1 வகுப்புகள்?.

- அனைத்துப் பள்ளிகளிலுமே, நேரடியாக 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை எடுக்க ஆரம்பிக்கலாமே.

- ஒரு வருடமாக இருக்கும் பாடத் திட்டத்தை இரண்டு வருடம் படிப்பது போலச் செய்யலாமே. [ஒருவேளை எட்டாம் வகுப்பிலேயே அதையும் சொல்லிக் கொடுத்தாலும் சொல்லிக் கொடுப்பார்கள் :( ]

- 9 மற்றும் +1 வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தினால், அதையும் கண்டிப்பாக படித்துத் தான் தீர வேண்டும்.

இவை எல்லாம் கல்வி அதிகாரிகளுக்குத் தெரியாமல் இருக்குமா, இருந்தும் ஏன் விட்டு வைத்திருக்கிறார்கள். இல்லை, அவர்கள் அப்படி இருப்பதுதான் நமது சாபமா?.

Thursday, October 17, 2013

செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை (நாவல்)

ஒரு கடலோரக் கிராமத்தில் நடக்கும் கதை 'செம்மீன்'. தினமும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று அந்த வருவாயை வைத்துப் பிழைப்பவர்கள் மீனவர்கள். சேமிப்பு என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. மீன் கிடைக்காத காலத்தில், இருப்பதை உண்டு காலம் தள்ள வேண்டியது தான். மரக்கான் சொத்து சேர்த்து வைக்கக் கூடாது, அவனுக்குத் தான் இந்த பரந்த விரிந்த கடல் இருக்கிறதே !. எப்பொழுதும்  கடல் அன்னை நம்மைக் கை விட்டுவிட மாட்டாள் என்பது அவர்களது நம்பிக்கை.

தினம் தினம் கிடைக்கும் வருவாயை செலவழித்து வரும் மீனவர்களுக்கு மத்தியில், செம்பன்குஞ்சு கொஞ்சம் வித்தியாசமானவன். சொந்தமாகத் தோணி வாங்க வேண்டும், பெரிய வீடு கட்ட வேண்டும், விதவிதமாக உண்ண வேண்டும் என ஆசைப்படுகிறான். அவன் மனைவி சக்கி-யும் பாடுபடுகிறாள். இருவரும் சேர்ந்து சேமிக்கத் தொடங்குகின்றனர். இரண்டு பெண் குழந்தைகள் இவர்களுக்கு. மூத்தவள் கறுத்தம்மா. இளையவள், பஞ்சமி. தோணி வாங்கி, நன்றாகச் சம்பாதித்த பின்னர்தான், தன் பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைப்பதென முடிவோடு இருக்கிறான் செம்பன்குஞ்சு.


சின்ன வயதிலேயே அந்தக் கடலோரத் துறைக்கு வியாபாரம் செய்ய வந்தவன் பரீக்குட்டி. துலுக்க சமூகத்தைச் சேர்ந்தவன். இவனிடம் கறுத்தம்மா சின்ன வயதிலிருந்தே பழகிக் கொண்டு இருக்கிறாள். வளர்ந்த பின்னர் அது காதலாக மாறுகிறது.

செம்பன்குஞ்சு தோணி வாங்க முடிவு செய்கிறான்.கொஞ்சம் பணம் பற்றாமல் இருக்கவே, யாரிடம் கடன் வாங்கலாம் என யோசிக்கிறார்கள். பரீக்குட்டியிடம் வாங்கலாம் என முடிவு செய்கிறார்கள். இவர்கள் கேட்பதற்கு முன்னரே, கறுத்தம்மா பரீக்குட்டியிடம் 'கடன் தருவாயா' எனக் கேட்டதற்கு, அவனும் மகிழ்ந்து 'நான் தருகிறேன்' என்கிறான். சொன்னவாறே, பணம் தருகிறான்.

கறுத்தம்மாவின் மேல் உள்ள காதலால்தான் அவன் பணம் தந்தான் என்பதை அறிந்த, அவளின் தாய் சக்கி, 'பரீக்குட்டி வேறு சமூகம். இது நமக்கு ஒத்து வராது. கடல் தாயின் குழந்தைகள் நாம் தப்பு செய்யக் கூடாது. நமது துறையில் பிறந்த நீ, தோணி பிடிக்கும் ஒரு மரக்கான் வீட்டுக்குத் தான் போக வேண்டும். பரீக்குட்டியும் உன்னை கல்யாணம் செய்ய முடியாது' என்றெல்லாம் அறிவுரை கூறுகிறாள். கறுத்தம்மா, தன் தாயிடம் 'ஒரு நாளும் நான் தவறு செய்ய மாட்டேன், ஆனால் பரீக்குட்டியிடம் வாங்கிய கடனைக் குடுக்க வேண்டும்' என்று கூறுகிறாள்.

இப்பொழுது, தோணி சொந்தமாக இருப்பதில், நன்றாகச் சம்பாதிக்கிறான் செம்பன்குஞ்சு. கறுத்தம்மா ஏதாவது செய்து விடுவாளோ என்று சக்கி பயந்து கொண்டே இருக்கிறாள். விரைவில் அவளுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என செம்பன்குஞ்சுவிடம் சொன்னால், அவன் அதைக் காதிலேயே போட்டுக் கொள்வதில்லை. அவன் இரண்டாவதாக இன்னொரு தோணியையும் வாங்கி இருந்தான்.

செம்பன்குஞ்சு, பரீக்குட்டிக்குத் தர வேண்டிய பணத்தையும் அவனுக்குத் தருவதில்லை. திருப்பித் தருவார்கள் என்று அவன் கடன் கொடுக்கவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் அவன் பணம் கொடுத்திருந்தான். கையில் பணம் இல்லாமல் அவன் பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டது. தொழில் முன்னர் போல இல்லை அவனுக்கு.

இதற்கிடையில், செம்பன்குஞ்சு ஒரு மரக்கானைச் சந்திக்கிறான். அவன் பெயர் பழனி. தாய் தந்தை, ஏன் உறவினர்கள் கூட இல்லை. வீரம் மிக்க அவனைப் பார்த்ததும், கறுத்தம்மாவுக்கு இவனையே கல்யாணம் செய்வதென முடிவு செய்கிறான். அவனுக்குத் தாய் தந்தை இல்லாததால் அவன் நம்முடனே இருப்பான் எனக் கணக்குப் போடுகிறான் செம்பன்குஞ்சு. திருமணத்துக்கு பழனியும் சம்மதிக்கிறான்.  வேறு வழியின்றி கறுத்தம்மாவும் ஒத்துக் கொள்கிறாள்.

கல்யாணத்தன்று நடக்கும் சிறு பூசலில் 'கறுத்தம்மா கெட்டுப் போனவள். அதனால் தான் யாரும் இல்லாத பழனிக்கு மணம் முடிக்கப் பார்க்கிறார்கள்' என்ற பேச்சு எழுகிறது. இதைக் கேட்டதும் சக்கி மயங்கி விழுகிறாள். செம்பன்குஞ்சு அவர்களைச் சமாதானம் செய்து கல்யாணம் முடித்து வைக்கிறான். சக்கியோ இன்னும் மயங்கி மயங்கி விழுகிறாள். இந்த நிலையில், 'கறுத்தம்மாவை அழைத்துச் செல்ல வேண்டாம், சக்கி சரியானதும் கிளம்பலாம்' என்கிறான் செம்பன்குஞ்சு. பழனி மறுத்து விடுகிறான். கறுத்தம்மா தாயின் முகம் பார்க்க, 'இங்கயே இருந்து அந்த பரீக்குட்டியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் என நினைக்கிறாயா?' என்கிறாள். உடனே அவளும் நான் பழனியுடன் புறப்படுகிறேன் என்கிறாள். எவ்வளவோ சொல்லியும் கிளம்பும் தன் மகளை, 'இனி நீ என் மகளே இல்லை' என்கிறான் செம்பன்குஞ்சு.

****************

சொந்தத் துறையில் அவள் கெட்டுப் போனதால்தான், அவளைக் கல்யாணம் செய்து வைத்து பழனியுடன் அனுப்பி விட்டான் செம்பன் குஞ்சு என பழனியின் ஊரில் பேசிக் கொள்கிறார்கள். சக்கியோ கொஞ்ச நாளில் 'நீ இன்னொரு பெண்ணைக் கட்டிக்கோ' என செம்பன்குஞ்சுவிடம் சொல்லிவிட்டு உயிரை விடுகிறாள். அவன் மறு கல்யாணம் செய்தானா? கறுத்தம்மா தன் தாயின் இறப்புக்கு வந்தாளா? சிறு பெண் பஞ்சமி என்ன ஆனாள்?

"தோணி ஓட்டிச் செல்லும் மரக்கானின் உயிர், கரையில் உள்ள அவனின் மனைவியின் கையில் தான் இருக்கிறது. அவள் நெறி தவறிப் போனால், கடல் அன்னை பொறுக்க மாட்டாள். அவனை விழுங்கி விடுவாள்" என்பது அந்த மக்களின் நம்பிக்கை. உயிருக்குப் பயந்து, அவனை இப்பொழுது யாரும் தோணியில் சேர்த்துக் கொள்வதில்லை. அவனுடன் சேர்ந்து நாமும் பலியாக வேண்டுமே எனப் பயப்படுகிறார்கள். தனியனான அவன் என்ன செய்தான்?

கரையில் பாடிக் கொண்டிருக்கும் பரீக்குட்டி, கறுத்தம்மாவை மறந்து விட்டானா? நட்டம் இல்லாமல் தொழிலை அவன் நடத்திக் கொண்டிருக்கிறானா? பரீக்குட்டியிடம், செம்பன்குஞ்சு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தானா?

மனதில் ஒருவனை நினைத்துக் கொண்டிருந்த கறுத்தம்மா, தனது குலத்தின் நீதிகளுக்கு இணங்க பழனியைக் கல்யாணம் செய்து கொண்டாள். பரீக்குட்டி இன்னும் அவள் நினைவில் இருக்கிறானா? எத்தனை நாள் மூடி வைத்தாலும் ஒருநாள் வெளியே வரத்தான் போகிறதே எனப் பயந்தாளா? . பழனியிடம், பரீக்குட்டி பற்றிச் சொன்னாளா?.

ஊரார் தன் மனைவியைப் பற்றித் தவறாகப் பேசும்பொழுது பழனி என்ன செய்தான்?. கடலுக்குள் மீன் பிடிக்க போக அவன் என்ன செய்தான்?. மாமனார் செம்பன்குஞ்சுவை அவன் போய்ப் பார்த்தானா?. வேறு பையனிடம் கறுத்தம்மா பழகி இருக்கிறாள் என்பதை அறிந்த அவன் அவளிடம் அவனைப் பற்றி கேட்டானா?

நாவலைப் படித்துப் பாருங்களேன்.


செம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில் - சுந்தர ராமசாமி

Wednesday, October 9, 2013

சினிமா - சிட்டி லைட்ஸ்(City Lights - Charlie Chaplin)சார்லி சாப்ளினின் படைப்புகளில் மிக முக்கியமான படைப்பு சிட்டி லைட்ஸ். அடுத்தவனைப் பற்றி கவலை படாத மனிதர்களுக்கு மத்தியில், சக உயிர்களின் மீது அன்பு செலுத்துவதைப் பற்றி தம் படங்களில் போதித்தார். நகைச்சுவை என்பது சிரிக்க மட்டும் இல்லாமல் சிந்திக்கவும் செய்த மாபெரும் மனிதன். உலகை தனது நடிப்பின் மூலம் திரும்பி பார்க்க வைத்தவர்.

சிட்டி லைட்ஸ்:

ஓரிடத்தில் ஒரு கண் தெரியாத பெண்ணை சாப்ளின் பார்க்க நேரிடுகிறது. அவளை பற்றி மிகவும் கவலை கொள்கிறார் சாப்ளின். அந்த பெண் பூ விற்று தனது பாட்டியுடன் வாழ்க்கையை நடத்தி வருகிறாள் என்பதை அறிந்து கொள்கிறார்.

ஒரு நதியின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பொழுது ஒரு பணக்காரன் தற்கொலைக்கு முயல, அதை தடுக்கிறார் சாப்ளின். அவரை காப்பாற்றப் போய் சாப்ளின் தண்ணிக்குள் விழுவது, பிறகு இருவரும் சேர்ந்து விழுவது, எப்படியோ இருவரும் மேலே ஏறி வருகிறார்கள். பின்னர் அந்த பணக்காரன் தனது வீட்டுக்கு சாப்ளினை அழைக்க, அவரும் செல்கிறார். போதையில் இருக்கும்பொழுது எல்லாவற்றையும் அள்ளிக் கொடுக்கும் பணக்காரன், போதை தெளிந்ததும் சாப்ளினை யார் என்றே தெரியாது என்று சொல்லிவிடுகின்றான்.

அந்தப் பணக்காரன் வீட்டில் சாப்ளின் தங்கியிருக்கும் ஒரு நாள் காலையில், அந்த வீதி வழியாக அந்த பெண் பூ விற்று கொண்டிருக்கிறாள். அவளை பார்த்ததும் அவருக்கு எல்லா பூக்களையும் வாங்க வேண்டுமென்று ஆசை. செல்வந்தனிடம் சொல்ல, அவனும் பணத்தை எடுத்து நீட்டுகிறான், அத்தனை பூக்களையும் அவரே வாங்கிக்கொள்ள, அப்பெண் மிக்க சந்தோசபடுகிறாள். உடனே சாப்ளின் உன்னை என் காரில் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூற, அவளும் சரி என்று கூறுகிறாள். அப்பெண்ணை வீட்டில் விட்டு விட்டு திரும்பி விடுகிறார் சார்லி. தவறுதலாக அப்பெண், சார்லியை மிகப் பெரிய பணக்காரன் என்று நினைத்து, மிக்க மகிழ்ச்சியுடன் தனது பாட்டியுடன் அவனைப் பற்றி கூறுகிறாள்.

பணக்காரன் வீட்டுக்கு திரும்பி வந்தால் அவனுக்குப் போதை தெளிந்து, சார்லியை விரட்டி விடுகிறார்கள். வேலை தேடி அலையும் சார்லியை, மீண்டும் பணக்காரன் சந்திக்கிறான். இப்பொழுது திரும்பவும் வீட்டுக்கு அழைக்க, இவர் மறுக்க, அவன் வற்புறுத்த, திரும்ப அவன் வீட்டுக்கு செல்கிறார். அடுத்த நாள் போதை தெளிந்ததும், வழக்கம் போல அந்தப் பணக்காரன் வீட்டில் இருந்து விரட்டப்படுகிறார்.


இரவில் பணக்காரன் வீட்டுக்கு செல்வதும், காலையில் அடித்து விரட்டுவதுமாக போகின்றன நாட்கள். ஒருநாள் அப்பெண் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் குடுத்து விட்டு போய்விட்டார்கள். பாட்டி அதை அப்பெண்ணிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அப்பொழுது அங்கே வரும் சார்லி, அதை பார்த்து விட்டு எல்லாவற்றையும் நான் பார்த்து கொள்கிறேன் என்கிறார். கூடவே, ஒரு கண் டாக்டர் ஊருக்கு வந்திருப்பதாகவும், அவரிடம் கூட்டி சென்று பரிசோதித்து கண் குறைபாட்டை போக்க தான் உதவுகிறேன் என்றும் சொல்கிறார் சார்லி. அவர்தான் பெரிய பணக்காரர் ஆயிற்றே என்று அப்பெண்ணும் மகிழ்ச்சி அடைகிறாள்.

சாப்ளின் ஒரு வேலைக்குச் செல்ல, அங்கே இருக்கும் ஆள் துரத்தி விடுகிறான். சரியென்று ஒருவன் பாக்சிங் விளையாட்டுக்கு கூப்பிட, ஒல்லி உடம்பை வைத்து கொண்டு பணத்துக்காகச் சரி என்கிறார். கடைசி வரை முட்டி மோதியும் அதிலும் தோல்வி. பாக்சிங் காட்சிகளில் நீங்கள் நிச்சயமாக சிரிப்பீர்கள்.


பணம் தேவைப்படுவதைப் பணக்காரனிடம், சொல்ல அவனும் பணம் தருகிறான். ஆனால் அங்கு நடந்த குழப்பத்தில், இவர் பணத்தை திருடி விட்டுப் போவதாக போலீஸ் சந்தேகப்படுகிறது. குடிகாரப் பணக்காரன் போதையில் உறங்கி விட்டான். வேறு வழி இல்லாமல், பணத்துடன் தப்பி விடுகிறார் சார்லி. அப்பெண்ணின் வீட்டுக்கு வந்து அப் பணத்தை கொடுத்துவிட்டு, இதை ஆபரேஷன் மற்றும் வீட்டு செலவுக்கு வைத்துகொள், நான் சீக்கிரமாக திரும்ப வருவேன் என்று கூறிவிட்டு சிறை செல்கிறார் சாப்ளின்.

சிறை வாசம் முடிந்ததும், அப்பெண் பூ விற்று கொண்டிருந்த பழைய இடத்துக்கு வருகிறார் சாப்ளின். அங்கே அப்பெண் இல்லாததைக் கண்டு வீதியில் நடக்க ஆரம்பிக்கிறார். அழுக்கான உடை, பார்த்தால் பைத்தியம் போலிருக்கும் அவரை சீண்டுகிறார்கள் தெருப் பையன்கள். அப்பொழுது கீழே கிடந்த ஒரு ரோஜா பூவை எடுக்கிறார் சார்லி.

இதை பக்கத்துக்கு கடையில் இருந்து ஒரு பெண் பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள். அவள்தான் அக்கடையின் முதலாளி. கடைக்கு வரும் பணக்காரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் சார்லியை தேடிக் கொண்டிருக்கிறாள் அப்பெண். அவள் வேறு யாருமல்ல, சாப்ளின் உதவிய அதே பெண்தான். அப்பெண்ணுக்கு இப்பொழுது பார்வை திரும்பி விட்டது.

அவள் சாப்ளினைக் கூப்பிட, சார்லி திரும்பி அவளை பார்த்ததும் புரிந்து கொள்கிறார். அப்பெண் சாப்ளினை அழைத்து காசு கொடுக்க வேண்டாமென்று கூறிவிட்டு கடைக்கு ஓரத்தில் கூச்சமாக நிற்கிறார். அப்பெண் காசுடன் ஒரு ரோஜா பூவையும் எடுத்து கொண்டு வா என்று கூப்பிட, சார்லி தயங்கி தயங்கி நகர்கிறார். அப்பெண் சார்லியின் கையை இழுத்து, கையில் ரோஜாவையும் காசையும் வைக்கும் பொழுது ஏதோ தட்டுப்பட, அதிர்கிறாள் அப்பெண்; தொடுதல் மூலம் இது சார்லிதான் என்று புரிந்துகொள்கிறாள்

"You ? " - அப்பெண்
"You can see now.." - சார்லி
"Yes..i can see now.. " - அப்பெண்இருவர் கண்களிலும் ஒரு ஒளி வந்தது போல இருக்கும் அக்காட்சியில். நமக்கு கண்ணில் நீர் வழிந்து கொண்டிருக்கும் போது படமும் முடிந்து விடுகின்றது.

காதலையும், காமெடியும் கலந்து நமக்கு ஒரு காவியத்தை படைத்து தந்த சாப்ளினுக்கு என்றும் தலை வணங்குவோம்.

சாப்ளின் படங்களைப்  பற்றி நான் எழுதிய பதிவுகளின் சுட்டிகள்:
சினிமா - மாடர்ன் டைம்ஸ் (Modern Times)
தி சர்க்கஸ் (The Circus)
தி கோல்ட் ரஷ் (The Gold Rush - Charlie Chaplin)