Thursday, July 28, 2011

எல்லோருக்கும் மழை


எல்லோருக்கும்
பெய்கிறது மழை

'காலையில் இருந்து இப்படித்தான்
கொட்டிட்டு கெடக்குது
ஒரு வேல செய்ய முடியல'

'எப்பதான்
நின்னு தொலையுமோ'

'இன்னைக்கு ஒண்ணும்
பண்ண முடியாது'

'மழ நின்னாதான்
பொழப்பு ஓடும்'

என்பவர்களுக்கும் சேர்ந்தே
பெய்து கொண்டிருக்கிறது மழை.


படம்: இணையத்தில் இருந்து.. நன்றி.


Wednesday, July 20, 2011

நின்னைச் சரணடைந்தேன்

நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
பொன்னை உயர்வை புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று...
துன்பமினியில்லை.. சோர்வில்லை.. தோற்பில்லை..உச்சி தனை முகர்ந்தால்
கர்வம் ஓங்கி வளருதடி
மெச்சி உனை ஊரார் புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடி

பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதடா நந்தலாலா
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
போனதெல்லாம் கனவினைப் போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஒரு கனவோ?
இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ ? - அங்கு
குணங்களும் பொய்களோ

காண்பவெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ

Friday, July 8, 2011

புகை புகையாக

தூயோன் புத்தகத்தில், கோபிகிருஷ்ணன்...


முயற்சி.. திருவினை


பதினேழு ஆண்டுகள்
முழு மூச்சாக
ஊதித் தள்ளியதில்
உனக்கு நுரையீரல்களில்
அரிப்பு நோய் கண்டிருக்கிறது என்று
வருத்தத்துடன் அவர் சொன்னபோது
இவ்வளவு நாள் பட்ட கஷ்டம்
வீண்போகவில்லை என்றானதில்
ஒரு ஆத்மீக ஆனந்தம்.

**************************************

திருப்தி

புகை புகையாகப்
புகைத்ததில்
ஒரு நுரையீரலை இனி
ஒன்றும் செய்வதற்கில்லை என்று
அவர் சொன்னபோது
ஒரு வேஷ்டி இருக்கும்போது
இன்னொன்றுக்கு ஆசைப்படுவது
ஆடம்பரம் என்று சொன்ன
மகாத்மாவின் நினைவு வந்து
ஆனந்திக்கச் செய்தது.Tuesday, July 5, 2011

நாலணா

கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு.

"காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது.சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா?

நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ஒரு பென்னி, இரண்டு பென்ஸ் என காசுகளும், ஒரு பொருளை 67, 49, 99 காசுகள் என வாங்க முடியும். மீதி சில்லறைக் காசுகளை எண்ணிக் கொடுப்பார்கள்.

ஒரு நாணயம் ஒழிக்கப் படுகிறது என்றால், என்ன பொருள்.. இனிமேல் அந்தக் காசுக்கு எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியாது. அது செல்லாக் காசு. உயர்ந்து வரும் விலை வாசியைக் குறைக்க எந்த வழியும் தெரியவில்லை.

கவிஞர் சொல்வது போல, இன்னும் கொஞ்ச நாளில் ஐம்பது காசு நாணயங்களும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

நூறு காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது அழிந்து, நூறு ஒரு ரூபாய் சேர்ந்து நூறு ரூபாய் எனப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். பேருந்து டிக்கெட்டுகளில் இனி "காசுகள்" என்ற வார்த்தைகள் இருக்காது.

பொருளாதார வேகத்துக்கு, நம்மை இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம் நாட்டின் அறிஞர்கள். அவர்களுக்கு விலைவாசியைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

சத்தமாக சொல்லிக் கொள்ளலாம், எம் நாட்டில் சில்லறைகள் இல்லை என்று. மெதுவாக சொல்லுங்கள், இன்னும் எங்கள் நாட்டில் சோற்றுக்கும் வழியின்றி, உடைக்கும் வழியின்றி, உறங்க இடமின்றி தெருவோரங்களில் லட்ச லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி

Friday, July 1, 2011

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம்.

கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில்.

"மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர்.

"இல்லீங்க.. ஒவ்வொரு தடவ வரும்போதும் ஏதாவது கொடுப்பாங்க"

"கடைக்கு வர்றவங்களுக்கு சில்லற தர்ரதுக்கே சில்லற இல்ல.. இதுல நீங்க வேற"

"இருக்கறத குடுங்க" ராமர் விடவில்லை.

"மொதாலாளி தான் இல்லன்னு சொல்லுரமுள்ள.. இன்னொரு நா வாங்க" - தோசை மாஸ்டரும் சேர்ந்து கொண்டார்.

"அஞ்சு, பத்தாவது குடுங்க" லட்சுமணன் தன் பங்குக்கு பேசினார்.

"காலம் கார்த்தால வந்து வாதிக்கரிங்களே.." முனகிக்கொண்டே கல்லாப் பெட்டியில் ரூபாய் நோட்டுக்களைத் தேடிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.

ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் நீட்டிய புத்தகத்தில் கடைப் பெயரையும், ஊரையும் எழுதி பத்து ரூபாய் என்று எழுதிக் கொடுத்தார் கல்லாக்காரர்.

வெளியே வந்த ராமரைப் பார்த்து, இதுவரைக்கும் வாயே திறக்காத அனுமார் "இங்கயே சாப்பிட்டு போயிரலாண்டா.. பசிக்குதுடா" என்றார். "காலாலே இருந்து இன்னும் முப்பது ரூபா கூட தேரல.. அப்புறம் பார்க்கலாம் வா" என்று முன்னாடி போய்க்கொண்டிருந்தார் லட்சுமணன்.

அவ்வளவு பெரிய மலையைத் தூக்கிய அனுமார், கடல் தாண்டி சென்ற அனுமார், அவர்கள் இருவரின் பின்னால் பசியுடன் போய்க் கொண்டிருந்தார்.