Tuesday, July 5, 2011

நாலணா

கவிஞரும், பதிவுகள் எழுதி வரும் திரு.மகுடேசுவரன் அவர்கள் தனது வலைத் தளத்தில் விலையின் தாழ்நிலை அலகுகள் என்ற பதிவில் இருபத்தைந்து பைசா நாணயம் பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டதைப் பற்றி எழுதியிருக்கிறார். அதைப் படித்ததன் விளைவே இந்தப் பதிவு.

"காலணாவுக்கு தேறாதவன்" என்று நீங்கள் யாரோ ஒருவர் சொல்லிக் கேட்டிருக்கலாம். ஆனால், இப்பொழுது அந்தப் பைசாவே வழக்கத்தில் இல்லாமல் ஆகிவிட்டது. கடந்த சில வருடங்களாகவே, எந்தப் பொருளும் இருபத்தைந்து காசுகள் வைத்து விற்கப்படுவதில்லை. சில சமயங்களில் வெற்றிலை, வாழை இலை என சிலப் பொருட்கள் மட்டுமே அந்த விலையில் விற்கப்படுகிறது. தனியாக கேட்டால் 1.50 எனவும், நிறைய வாங்கினால் நூறு வாழை இலைகள் 125 ரூபாய் எனவும் மாறிவிட்டது.



சின்ன வயதில் இருபத்தைந்து காசுகள் கொடுத்து வெற்றிலை, பாக்கு என்றும், பால் ஐஸ், சேமியா ஐஸ் என்று வாங்கித் தின்றது நினைவுக்கு வருகிறது. நாலணாவுக்கு கடையில் வெற்றிலை கேட்கும் பாட்டிகளுக்கு இது தெரியுமா?

நான் இங்கிலாந்துக்கு சென்றபோது, கண்டு ஆச்சரியப்பட்டது இன்னும் அந்நாட்டில் சில்லறைக் காசுகள் இருப்பதைப் பார்த்து தான். அங்கே, ஒரு பென்னி, இரண்டு பென்ஸ் என காசுகளும், ஒரு பொருளை 67, 49, 99 காசுகள் என வாங்க முடியும். மீதி சில்லறைக் காசுகளை எண்ணிக் கொடுப்பார்கள்.

ஒரு நாணயம் ஒழிக்கப் படுகிறது என்றால், என்ன பொருள்.. இனிமேல் அந்தக் காசுக்கு எந்த ஒரு பொருளையும் நம்மால் வாங்க முடியாது. அது செல்லாக் காசு. உயர்ந்து வரும் விலை வாசியைக் குறைக்க எந்த வழியும் தெரியவில்லை.

கவிஞர் சொல்வது போல, இன்னும் கொஞ்ச நாளில் ஐம்பது காசு நாணயங்களும் நிச்சயமாக ஒழிக்கப்பட்டுவிடும்.

நூறு காசுகள் சேர்ந்து ஒரு ரூபாய் என்பது அழிந்து, நூறு ஒரு ரூபாய் சேர்ந்து நூறு ரூபாய் எனப் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள். பேருந்து டிக்கெட்டுகளில் இனி "காசுகள்" என்ற வார்த்தைகள் இருக்காது.

பொருளாதார வேகத்துக்கு, நம்மை இழுத்துக் கொண்டு போகிறார்கள் நம் நாட்டின் அறிஞர்கள். அவர்களுக்கு விலைவாசியைப் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது?.

சத்தமாக சொல்லிக் கொள்ளலாம், எம் நாட்டில் சில்லறைகள் இல்லை என்று. மெதுவாக சொல்லுங்கள், இன்னும் எங்கள் நாட்டில் சோற்றுக்கும் வழியின்றி, உடைக்கும் வழியின்றி, உறங்க இடமின்றி தெருவோரங்களில் லட்ச லட்ச மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை.

படம்: இணையத்தில் இருந்து.. நன்றி

3 comments:

  1. நாலணா.. எட்டணா பற்றி நானும் ஒன்று எழுதப் போகிறேன்! ;-))
    நல்ல பகிர்வு. ;-)

    ReplyDelete
  2. @RVS
    நன்றிகள் அண்ணா..
    சீக்கிரம் எழுதுங்கள்

    ReplyDelete
  3. ச்சே.. நியாபகார்த்ததுக்குக் கூட எங்கிட்ட ஒரு நாலணா இல்லை..

    ReplyDelete