Monday, July 20, 2015

நிசப்தம் - வா. மணிகண்டன்

சென்ற மாதத்தில், ஒரு மாணவனுக்கு உதவி வேண்டி எழுத்தாளர் வா.மணிகண்டன் அவர்களிடம் பேசினேன். உடனே உதவுவதாக சொல்லிய அவர், கோபி புத்தகத் திருவிழாவில் 18.7.2015 அன்று சந்திக்கலாம் என்றார். 

மணிகண்டன் அவர்களின் பேச்சு நிகழ்வும், கோபி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு, புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் ஐந்தாயிரம் ரூபாய் என ஏழு பள்ளிகளுக்கு வழங்கும் நிகழ்வும் அன்று நடைபெற இருந்தது. .

நானும், நண்பன் கமலக்கண்ணனும் புத்தக கண்காட்சியில் கலந்து கொள்ள கோபி புறப்பட்டோம். கண்காட்சி நடைபெற்ற  மண்டபம் முன்னர் பார்த்ததும், ஒரே கூட்டமாக இருந்தது. 'பரவால்லியே, நம் மக்களுக்கு புத்தகங்கள் வாங்க இவ்வளவு ஆர்வமா'  என்று நினைத்துக்கொண்டு வண்டியை நிறுத்திவிட்டு மேலே பார்த்தால், பேனரில்  'ஆடி தள்ளுபடி விற்பனை விழா' என்று இருந்தது. சப்பென்று ஆகிவிட்டது. அதானே, நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் புத்தகங்கள் வாங்கி விடுவார்களா என்ன?. இரண்டு மண்டபங்களும் சேர்ந்து இருந்தது. பக்கத்து மண்டபத்தில் தான் புத்தக திருவிழா. அங்கே அளவான கூட்டம். 

மணிகண்டன் அவர்களிடம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். தாய்த்தமிழ்ப் பள்ளி குமணன் அவர்களையும் அறிமுகப்படுத்தி வைத்தார் மணிகண்டன். புத்தக அரங்குகளை பார்வையிட்டு , புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வரவும், மாலை நிகழ்வு துவங்கவும் சரியாக இருந்தது. மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பேசி முடித்ததும் மணிகண்டன் அவர்கள் பேசினார். நிசப்தம் அறக்கட்டளை ஏன் துவங்கினேன், என்ன விதமான உதவிகள் செய்கிறோம் என்பது பற்றி பேசியவர், இன்றைய கல்விமுறை, அரசியல் என புயல் போல உரையாற்றத் துவங்கினார். 

நாங்கள் படித்தது பு.புளியம்பட்டி கே.வி.கே அரசு பள்ளியில்.நாங்கள் படித்த காலத்தில், அதாவது 97-99 களில்,  கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளி என்றால் ஆச்சரியமாகப் பார்ப்போம். அங்கே படித்தவர்தான் மணிகண்டன் அவர்களும். அப்பொழுது எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி இருக்கிறது எனத் தன் ஆதங்கத்தைக் கூறினார். (நல்லவேளை, நாங்கள் படித்த பள்ளி.. அப்பொழுதும் அப்படியே இருந்தது.. இப்பொழுதும் அப்படியே இருக்கிறது.. !!)

இப்பொழுது மாணவர்கள் 499 மதிப்பெண்கள் எடுத்தாலும், 'அப்படியா' என்று கேட்டுவிட்டுதான் நகர்கிறோம். இவ்வளவு மாணவர்கள், இவ்வளவு மதிப்பெண்கள் எதற்காக.. எல்லாம் இன்ஜினீயரிங் கல்லூரி சீட்களை நிரப்பத்தான் என்றார். 

அது ஒரு காரணம் என்றாலும், ஒரு வருடம் மட்டுமே படித்த அந்தக் காலங்களில் ஒரு மதிப்பு  இருந்தது. 400 மார்க் என்றாலே அது ஆச்சரியம். பாசா, பெயிலா அதுதான் அப்போதைய கேள்வி. இப்பொழுதோ, எவ்வளவு மார்க்?. பேசாமல், 9 மற்றும் 11 வகுப்புகள் தேவையே இல்லை என்று எனக்குத் தோன்றுகிறது. எந்தத் தனியார் பள்ளியிலும் 9 மற்றும் 11 வகுப்புகள் எடுக்கப்படுவேதேயில்லை. ஒரே பாடத்தை, இரண்டு வருடம் மீள மீளப் படித்து, முக்கி முக்கி மனப்பாடம் செய்து, திரும்பத் திரும்ப கை வலிக்க எழுதிப் பார்த்தால்.. 499 என்ன 500, 1199 என்ன 1200 கூட எடுப்பார்கள். :( 

டாஸ்மாக், சூழல் கேடுகளால் வரும் நோய்கள் பற்றிக் கூறியவர், அரசியல்வாதிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.. அவர்களின் நோக்கம் ஒன்றே, இந்த ஐந்து வருடங்கள்.. அப்புறம், 'அத அப்புறம் பாத்துக்கறது' என்பது போலவே இருக்கிறார்கள் என்றார். 

12 வருடம் பள்ளி, 3 அல்லது 4 வருட கல்லூரிப் படிப்பு படித்த மாணவன், நாம் கேட்கும் சாதாரணக் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடிவதில்லை என்று வருத்தப்பட்டார். நானும் பார்த்திருக்கிறேன், இப்போது இருக்கும் பெரும்பான்மையான மாணவர்களால், நான்கு வரி படிக்க முடியாது. ஆங்கிலம் வேண்டாம்.. தாய்மொழி தமிழில் படிக்கலாமே.. அது அதைவிட மோசம்.  மனப்பாடம் செய்யணும், பரிட்சையில் போய் அப்படியே எழுதணும், அதை அப்படியே மறந்து விட வேண்டும் என ஒரு மந்தைக் கும்பலை உருவாக்கி கொண்டிருக்கிறோமே எனப் பயமாக இருக்கிறது. என்னதான் நீ கற்றாய் என்றால் ஒரு பதிலும் அவர்களிடம் இருப்பதில்லை. 

புயலென உரையாற்றி முடித்த வா. மணிகண்டன், பள்ளிகளுக்குப்  புத்தகங்கள் வாங்க அதற்குரிய கூப்பன்களை வழங்கினார். ஒரு பள்ளிக்கு கூப்பன் வழங்க என்னையும் மேடையேற்றினார். மேடை என்றாலே நடுங்கும் என்னையும் மேடையேற்றிய வா. மணிகண்டன் அவர்களுக்கு என் நன்றிகள். 

சிலரின் பேச்சு முன் தயாரிப்பாக இருக்கும். சில நேரங்களில் தூங்கி கூட விடுவோம். ஆனால், மணி அவர்களின் பேச்சு யதார்த்தம் நிரம்பியதாக இருந்தது. இந்த சமூகத்தின் மீதும், அதன் போக்குகள் மீதும் கோபம் கொண்டு அவர் பேசியது மிக்க மகிழ்வாக இருந்தது. அதுவும் ஒரு மேடையில் அவர் பேசியது ரொம்பவே மகிழ்ச்சி. அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த கொஞ்சம் பேருக்கேனும், மனதில் ஒரு தீக்குச்சி வெளிச்சம் தெரிந்திருக்கும். அந்த வெளிச்சம் பரவட்டும். 

Thursday, April 23, 2015

உடல் எடையைக் கட்டுப்படுத்தும் கைக்குத்தல் அரிசி !

நாம் வழக்கமாக கடைகளில் வாங்கும் வெள்ளை நிற அரிசி நன்றாக பாலிஷ் செய்யப்பட்டு தீட்டப்பட்ட அரிசி ஆகும். அரிசியில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் தீட்டப்பட்டு, பளீரென்ற வெண்மை நிறத்தில் நாம் உண்பது வெறும் மாவுப்பொருளை மட்டுமே. நாம் மெல்லவும் மென்மையாக இருப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிட நேர்கிறது. மேலும் உடம்பில் தேவையில்லாத பிரச்சினைகளை உண்டு பண்ணுகிறது தீட்டப்பட்ட அரிசி(Polished Rice).தீட்டப்படாத அரிசியே கைக்குத்தல் அரிசி. கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து, பி விட்டமின்கள், செலனியம், மாங்கனீஸ், உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்துக்களும் அடங்கியுள்ளன. அரிசியின் முனைகளில் இரண்டு சக்தி வாய்ந்த டையாஸ்டேஸ் மற்றும் பெப்டேஸ் சத்துக்கள் உள்ளன. இந்தச் சத்துக்கள் பட்டை தீட்டப்பட்ட அரிசியில் இருக்காது.

கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:

கைக்குத்தல் அரிசியைச் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம். அதைச் சமைத்து உண்ணும் பொழுது இயற்கையாகவே, நாம் அதை நன்றாக மென்றுதான் உண்ண முடியும். எனவே, எளிதில் உமிழ்நீருடன் கலந்து செரிமானம் ஆகும்.* ஆரோக்கியமான எலும்பு மற்றும் நரம்புமண்டலத்தை உருவாக்கும் 
* நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் 
* மலச்சிக்கலைப் போக்கும் 
* தேவையற்ற கொழுப்பைக் குறைக்கிறது 
* உடல் எடையைப் பராமரிக்கிறது 
* இதய நோய் அபாயம் குறைகிறது
* ஆஸ்துமா மற்றும் பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்கிறது

Friday, April 10, 2015

கருப்பு கொள்ளு

இளைத்தவனுக்கு எள்ளும், கொழுத்தவனுக்கு கொள்ளும் - என்று சொல்லுவார்கள். கால்சியம், இரும்புச் சத்துக்கள் அதிகமாகவும், கொழுப்புச் சத்துக்கள் குறைவாகவும் இருப்பதால் நம் முன்னோர்கள் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். சாதரணமாக நாம் காணக்கூடிய சிவப்பு நிறக் கொள்ளைக் காட்டிலும், அதிக சத்துக்கள் நிறைந்தது கருப்பு நிறக் கொள்ளு.

கொள்ளு ரசம், பருப்பு, துவையல் என சிவப்பு நிறக் கொள்ளைப் போலவே இதிலும் செய்யலாம். சளி, இருமல் போன்ற தொந்திரவுகள் இருக்கும்போது, கிராமப்புறங்களில் இப்பொழுதும் கொள்ளுச் சாறு எனப்படும் கொள்ளு ரசம் அருந்தும் பழக்கம் இருக்கிறது.

இதன் அருமைகள் பற்றித் தெரியாமல், கொள்ளு என்றாலே தள்ளிச் செல்பவர்கள் நிறையப் பேர். இது போன்ற பாரம்பரிய உணவுகளை மறந்து விட்டு, நம் முன்னோர்கள் கேள்விப்பட்டிராத சர்க்கரை நோய், இரத்த அழுத்த நோய் போன்றவற்றுக்கு ஆட்படுகிறோம். பாரம்பரிய உணவுகளை நாம் உட்கொள்ளத் தொடங்குவோம், நோயற்ற வாழ்வை வாழ்வோம்.கருப்பு கொள்ளு சுண்டல் 
---------------------------------------

தேவையானவை:
கருப்பு கொள்ளு - 100 கிராம் 
தாளிக்க - நல்லெண்ணெய், கடுகு, கடலை பருப்பு, வெங்காயம், மிளகாய், தேங்காய் துருவல், கருவேப்பிலை, உப்பு

செய்முறை:
------------------
கருப்பு கொள்ளை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் குக்கரில் தண்ணீர் ஊற்றி, ஊறிய கொள்ளைப் போட்டு 7 அல்லது 8 விசில் வரும் வரை வேக விடவும். விசில் அடங்கிய பின்னர், ஒரு சட்டியில், எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு பொரிந்ததும், கருவேப்பிலை, கடலை பருப்பு போட்டு வதங்கியதும், வெங்காயம், மிளகாயைப் போட்டு வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர், வடித்து வைத்த கொள்ளைக் கொட்டி, கிளறி விடவும். தேங்காய்த் துருவல் சேர்த்து இறக்கவும். சுவையான, சத்தான கருப்பு கொள்ளு சுண்டல் தயார்.கொள்ளு வேகவைத்த தண்ணீர், நிறைய இருந்தால் கீழே கொட்டாமல், கொஞ்சம் எண்ணெயில் கருவேப்பிலை தாளித்து அந்த தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு, மிளகுத் தூள் தூவி சூப்பாக குடிக்கலாம்.


Tuesday, February 24, 2015

தரு இயற்கை அங்காடி(Tharu Organic, Kovai)

தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம். அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம். 

பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது. 

கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பசுமை விகடன் கட்டுரைகள், மசானபு புகோகா அவர்களின் புத்தகங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது. கடை ஆரம்பிக்கலாம் என கடை தேடி அலைந்தோம். ஆனால் வாடகை, இடம் என எதுவும் சரியாக அமையவில்லை. ஏன், நம் வீட்டிலேயே சிறு கடை போல ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். இதோ நேற்று (23/02/2015) அன்று "தரு இயற்கை அங்காடி" என்ற பெயரில், கோவையில் எங்கள் வீட்டின் முன்பாகவே கடையைத் துவங்கி விட்டோம். 

எங்களிடம் அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த நிலக்கடலை, தட்டைப் பயிறு, கொள்ளு போன்ற பருப்பு வகைகளும்,சுத்தமான கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை கிடைக்கும். 

நீங்கள் கோவை மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றால், ஒருமுறை வருகை தந்து பாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 
எங்கள் முகவரி:
தரு இயற்கை அங்காடி 
C-285, சேரன் மாநகர்,
6-வது பேருந்து நிறுத்தம் அருகில்,
விளாங்குறிச்சி,
கோவை - 641 035 

Tharu Organic,
C-285, Cheran Managar,
Near 6th Bus Stop,
Vilankurichi,
Coimbatore - 641 035.

Wednesday, January 21, 2015

கர்ண மகாராஜன் சண்டை

விஜய் டிவியில், மீண்டும் மகாபாரதம் தொடர் வெளியாகப் போகிறது என்று ஓடிக் கொண்டிருந்தது. அக்கா மகனும், நானும் வெண்முரசு பற்றி பேசத் தொடங்கினோம். அப்பா எங்களை ஆழ்ந்து கவனித்தார். 

"அது என்ன கதை புக்கா?" எனக் கேட்டார். நான் பதில் சொல்வதற்குள், "இருங்க அப்புச்சி.. புக்க எடுத்துட்டு வர்றேன்". என்று அறைக்குச் சென்று, நான் வாங்கி இருந்த முதற்கனல், மழைப்பாடல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வந்தான் மருமகன். 

புத்தகங்களைப் பார்த்ததுமே, "என்ன இவ்வளவு பெரிசா இருக்கு" என்றவாறே, புரட்ட ஆரம்பித்தார். என்ன விலை என்றவரிடம், விலையைச் சொன்னதும், இவ்வளவு விலையா என ஆச்சரியப்பட்டார்.  "இல்லப்பா.. ஓவியம் எல்லாம் நல்ல பேப்பர்.. நல்ல அட்டை.. அதுனாலதான்." என்று சமாளித்தேன். 

அப்பொழுதே  புத்தகத்தைப் புரட்ட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில், "புளியம்பட்டி புத்தக கடைல கர்ண மகராஜன் சண்டை-னு ஒரு புக் கேட்டேன். இல்லேன்னு சொல்லிட்டான். அது கெடைக்குமான்னு பாரு" என்றார்.

"அது என்ன புக். எப்போ படிச்சீங்க"

"நான் சின்ன வயசுல படிச்சது".அப்பாவுக்கு வயது கிட்டத்தட்ட 75 ஆகிறது :)


"கடைக்காரன் கிட்ட கேட்டதுக்கு, அது எந்த கம்பெனி போட்ட புத்தகம்-னு சொல்லுங்க. தபால் அனுப்பி வாங்கி தர்றேன் அப்படிங்குறான். கம்பெனி பேர் எல்லாம் யார் கண்டா?. நீ கேட்டுப் பாரு"

"ரொம்ப பெரிய புக்கா அப்புச்சி" பேரன்.

"இல்ல சின்ன புக் தான். பாட்டு மாதிரி இருக்கும். ராகம் போட்டு படிச்சா நல்லா இருக்கும். அப்போ எல்லாம் அந்த மாதரிதான் புக் வரும்" 

சரி, நெட்ல நாளைக்கு தேடிப் பார்க்கலாம் என்றேன். அது எப்படி தேட முடியும் என்று கேட்டார். "ரொம்ப பழைய புக் எல்லாம் கடைக்கு வராது. எங்காவது நெட்ல தேடி பார்த்தா கிடைக்கும்" என்றதற்கு சந்தேகமாகப் பார்த்தார்.

அடுத்த நாள், "என்ன தேடித் பார்த்தியா" என்றார் அப்பா. "என்ன" என்றவாறு நான் பார்க்க, "அதான்.. கர்ண மகராசன் சண்டை" என்றார். "பாக்குறேன்" என்றவாறு தேடத் தொடங்க, தமிழ் மரபு அறக்கட்டளை இணையத் தளத்தில் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், இதே தான் என்று ரொம்ப சந்தோசப்பட்டார். 

இந்த பக்கத்தில் http://www.tamilheritage.org/old/text/ebook/karnama/index.html கர்ண மகராசன் சண்டை புத்தகம் கிடைக்கிறது. புகழேந்திப் புலவர் என்பவரால் பாட்டு நடையில் எழுதப் பட்டுள்ளது. விலை ரூ. 1-75.