Showing posts with label வீட்டு தோட்டம். Show all posts
Showing posts with label வீட்டு தோட்டம். Show all posts

Tuesday, December 26, 2023

மாடித் தோட்டம் : செர்ரி தக்காளி (Cherry Tomato)

கோவை விவசாய கண்காட்சியில் செர்ரி தக்காளி விதைகளை வாங்கி இருந்தேன். நாற்றுக்கு விதைகளை விதைத்து கொஞ்சம் பெரிதான பின்னர் பெரிய பைகளுக்கு மாற்றினேன். 


மழையே இல்லாமல் வெயில் வாட்டிய போன மாதங்களில் சில பைகளில் இருந்த செடிகள் வாடி, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல அப்படியே உயிரை விட்டு விட்டது. 


மற்ற பைகளில் இருந்த செடிகளும் அவ்வாறே இருக்க, கொஞ்சம் ஆட்டு உரம் போட்டு மண்ணை கிளறி விட்டேன். மழைக்காலம் ஆரம்பித்ததும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இப்போது காய் பிடிக்க ஆரம்பித்து விட்டது. குட்டி குட்டியாக பார்ப்பதற்கே அழகாக உள்ளது இந்த செர்ரி  தக்காளி. 



சாதாரண தக்காளிச்  செடி போல இல்லாமல் நன்கு உயரமாக வளர்கிறது. நான் வெறும் குச்சியை ஊன்றி கட்டி வைத்துள்ளேன் இப்பொழுது. பந்தல் மாதிரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். 






Thursday, June 28, 2018

வீட்டுத் தோட்டத்தில் மிளகு

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டில் வளர்ந்திருந்த வெற்றிலையைப் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், 'மிளகு நல்லா வளரும், நான் கொண்டு வர்றேன்' என்றார். அவரின் சொந்த ஊர் வால்பாறை.

சொன்னவாறே நான்கு மிளகு குச்சிகளை ஒடித்துக் கொண்டு வந்தார். அந்த நான்கில் மூன்று குச்சிகள் பட்டுப் போக, ஒன்று மட்டும் எப்படியோ தழைந்து, பக்கத்தில் இருந்த பலாவைப் பற்றிக்கொண்டது.

நீண்ட நாட்கள் கழித்து, இப்பொழுது பூத்திருக்கிறது. இதில் மிளகு காய்க்குமா, இல்லையா எனத் தெரியவில்லை. பார்ப்போம்.








Friday, February 26, 2016

சமையலறைக் கழிவுகளில் உரம்

மண் தொட்டி ஒன்றை எடுத்துக் கொள்ளவும். 

தினமும் சமையலறையில் மீதமாகும் காய்கறிக் கழிவுகளை அதில் போட்டு வரவும். காலிபிளவர் தண்டு போல பெரிய கழிவுகளாக இருந்தால் பொடியாக நறுக்கி போடவும். 

தொட்டி முக்கால் பாகம் நிறைந்ததும், மாட்டுச் சாணத்தில் கொஞ்சம் நீர் ஊற்றி கரைத்து, தொட்டியில் அந்தக் கழிவுகளின் மேலே ஊற்றி விடவும். வளமான மண் கிடைத்தால் கொஞ்சம் தூவி விடலாம். 

சாணத்தில் இருந்து புழுக்கள் உருவாகி கழிவுகள் மக்க ஆரம்பிக்கும். 

தொட்டியில் நீர் வெளியேற கீழே துளைகள் இருப்பது அவசியம். தொட்டியை அப்படியே வைத்திருக்கவும். வாரம் ஒருமுறை கொஞ்சம் நீர் தெளித்து கிளறி விடவும். 

ஒரு மாதம் போனால் கருப்பு நிறத்தில் மக்கிப் போன உரம் கிடைக்கும்.  ரசாயனம் இல்லாத உரம் தயார். இதன் மேல் கொஞ்சம் மண்ணைப் போட்டு இனி செடிகளை வளர்க்க வேண்டியது தான். 

இங்கே படத்தில் உள்ளது புதினா. மக்கிப் போன உரத்தில் விளைந்தது. 



பழைய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால், அடியில் இரண்டு மூன்றுதுளைகள் போட்டுக் கொள்ளவும்.  

மூன்று, நான்கு தொட்டிகளை எடுத்துக் கொண்டு சுழற்சி முறையில் செய்யலாம். 

தொட்டிகளை வெயில் படாத இடத்தில் வைத்து மூடி வைத்தால் விரைவாக மக்கும்.






Tuesday, February 24, 2015

தரு இயற்கை அங்காடி(Tharu Organic, Kovai)

தானியங்களை அதன் மேல் உமி மட்டும் நீக்கி விட்டு, அப்படியே உண்ட அந்தக் காலங்களில் எந்த நோயும் அணுகவில்லை. இப்பொழுது வெள்ளை ஆக்குகிறோம் என்ற பெயரில் "பாலிஷ்" செய்து உண்கிறோம். நார்ச் சத்து எல்லாம் நீக்கி விட்டு, வெறும் மாவை மட்டும் உணவாக உண்கிறோம். மெல்ல வேண்டியதில்லை, உடனே ஒரே கொதியில் சோறு வெந்து விடுகிறது, சுவையாக இருக்கிறது எனப் பல காரணங்கள் சொல்லிக் கொள்கிறோம். 



அது போலவே சிறு தானியங்களும். கேழ்வரகு, தினை, கம்பு, வரகு, பனிவரகு, சாமை என எவ்வளவோ தானியங்கள் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் நாம் உணவாக எடுத்துக்கொள்வதில்லை. தீராத பின் விளைவுகளைத் தரும் ரெடிமேட் உணவுகளின் பின்னர் ஓடிக் கொண்டிருக்கிறோம். 

பலர் இப்பொழுது சிறு தானியங்களை உணவாக எடுத்துக்கொள்ளத் தொடங்கினாலும், அதையும் பாலிஷ் செய்து விற்கிறார்கள். வரகு, குதிரைவாலி போன்ற தானியங்களை நாம் பாலிஷ் செய்வதால், அதில் உள்ள முதன்மையான சத்துக்களை இழக்க நேர்கிறது. 

கடைகளில் சிறு தானியங்களை வாங்கி சமைத்து உண்டிருக்கிறோம் நாங்கள். ஆனால் எல்லாம் பாலிஷ் செய்தவையாக இருந்தது. நாமே ஒரு கடை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. பசுமை விகடன் கட்டுரைகள், மசானபு புகோகா அவர்களின் புத்தகங்கள் என கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வம் அதிகமானது. 



கடை ஆரம்பிக்கலாம் என கடை தேடி அலைந்தோம். ஆனால் வாடகை, இடம் என எதுவும் சரியாக அமையவில்லை. ஏன், நம் வீட்டிலேயே சிறு கடை போல ஆரம்பிக்கக் கூடாது என நினைத்தோம். இதோ நேற்று (23/02/2015) அன்று "தரு இயற்கை அங்காடி" என்ற பெயரில், கோவையில் எங்கள் வீட்டின் முன்பாகவே கடையைத் துவங்கி விட்டோம். 

எங்களிடம் அனைத்து சிறுதானியங்களும் கிடைக்கும். இயற்கை முறையில் விளைவித்த நிலக்கடலை, தட்டைப் பயிறு, கொள்ளு போன்ற பருப்பு வகைகளும்,சுத்தமான கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை கிடைக்கும். 

நீங்கள் கோவை மற்றும் சுற்றுப்பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றால், ஒருமுறை வருகை தந்து பாருங்கள். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். 




எங்கள் முகவரி:
தரு இயற்கை அங்காடி 
C-285, சேரன் மாநகர்,
6-வது பேருந்து நிறுத்தம் அருகில்,
விளாங்குறிச்சி,
கோவை - 641 035 

Tharu Organic,
C-285, Cheran Managar,
Near 6th Bus Stop,
Vilankurichi,
Coimbatore - 641 035.

Wednesday, August 6, 2014

மாடித் தோட்டம் - கீரைகள் (Terrace Garden)

வீட்டுத் தோட்டத்தில் வாழை, தென்னை போன்ற பயிர்கள் இருந்தமையால், போதிய வெயிலும் இடமும் இன்றி கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை வளர்க்க முடியாமல் இருந்தோம். இருந்தாலும், அவரை, பீர்க்கை போன்ற கொடி வகைகளை மொட்டை மாடிக்கு இழுத்து பந்தல் போட்டதில், நன்றாகவே விளைந்தது. இந்த வருடம் அடுத்த முயற்சியாக, மொட்டை மாடித் தோட்டத்தை அமைத்துள்ளோம்.  

தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை மூலமாக, சென்னை மற்றும் கோவைப் பகுதிகளில் மானியத்துடன் கூடிய 'நீங்களே செய்து பாருங்கள் (Do It Yourself kit)' கொடுத்திருந்தார்கள். விலை ரூபாய் 1325. தேர்தல் காரணமாக, சில பொருட்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. ஆனாலும், மாடித் தோட்டம் போடத் தகுந்த காலமான ஜூலையில் எல்லாப் பொருட்களையும் கொடுத்து விட்டார்கள்.

தென்னை நார்க் கழிவுடன், தொழு உரம் சேர்த்து ஒரு வாரம் கழித்து விதைகளை நடத் தொடங்கலாம். அசொஸ்பைரில்லம், சூடோமோனோஸ் போன்ற உயிரி உரங்களையும், நார்க் கழிவுடன்  சேர்க்க வேண்டும்.

தக்காளி, கத்திரி மற்றும் மிளகாய் விதைகளை குழித்தட்டில் விதைத்து வளர்ந்து வருகின்றன. வெண்டை, முள்ளங்கி போன்ற விதைகளை அப்படியே விதைத்து விட்டேன். இப்பொழுது கீரைகள் அறுவடை ஆகிவிட்டது. காய்கறிகள் வளர இன்னும் சில மாதங்கள் ஆகலாம்.

மாடித் தோட்டம் மற்றும் கீரைப் படங்களின் தொகுப்பு.

 (விதைக்கத் தயாராக இருக்கிறது - மாடித் தோட்டம்)

முளைத்து வரும் கீரை விதைகள்..


 வெந்தயக் கீரை 


  வெந்தயக் கீரை - அறுவடைக்குப் பின்னர் 

சிறு கீரை

 பாலக் கீரை 

புளிச்ச கீரை - இந்த பையும், புளிச்ச கீரை விதையும் கோவை அக்ரி இண்டெக்சில் வாங்கியது 


முள்ளங்கி 


Tuesday, June 24, 2014

வீட்டுத் தோட்டத்தில்: வெற்றிலை, பப்பாளி, கேரட்


வெற்றிலை:

 


பப்பாளி:



கேரட்:




மஞ்சள் மற்றும் புதினா:


கற்பூரவள்ளி மூலிகை:

 


Friday, May 9, 2014

வீட்டுத் தோட்டத்தில்: சம்பங்கி, பலா மற்றும் செம்பருத்தி



போன வருடம் கொடிசியாவில் நடந்த விவசாயக் கண்காட்சியில் வாங்கிய சம்பங்கி கிழங்கு அழகாகப் பூத்திருக்கிறது இப்பொழுது.







கடந்த வருடங்களை விடவும்  இந்த வருடம் பலா மரத்தில் பிஞ்சுகள் அதிகம் விட்டது. எப்படியும் ஒன்றிரண்டாவது காய் நிற்கும் என நாங்கள் நினைத்திருக்க, எல்லாப் பிஞ்சுகளும் உதிர்ந்து விட்டது. அடுத்த வருடம் பலா பிடிக்குமா எனத் தெரியவில்லை. 



சிவப்பு செம்பருத்தியை, வைத்த இரண்டு மாதங்களிலேயே பூச்சி பிடித்து வாடி விட்டது. அடித் தண்டுக்கு மேல் முழுவதும் வெட்டி விட, இப்பொழுது தினமும் பூக்கள் பூக்கிறது.  




Tuesday, March 25, 2014

வீட்டுத் தோட்டத்தில்: செவ்வாழை

பள்ளியில் 'செவ்வாழை' கதை பாடமாக இருந்தது. ஓர் ஏழையின் வீட்டில் வளரும் செவ்வாழை குலை தள்ளி இருக்கும். அவனின் குழந்தைகள், மனைவி என அந்தக் குலை பெரிதாகி எப்பொழுது பழம் பழுக்கும், நாம் தின்னலாம் எனக் காத்திருப்பார்கள். ஆனால், அந்த ஊரில் இருக்கும் பெரிய மனிதர், தன் வீட்டு விசேசத்துக்கு, அந்த வாழையை வெட்டிக் கொடுக்கச் சொல்ல, வேறு வழியில்லாமல் வெட்டித் தந்து விடுகிறான் அந்த ஏழை. குழந்தைகள் ஏக்கத்துடன் பார்த்து அழுவார்கள்.

அந்தக் கதையை நீங்களும் படித்திருக்கலாம். சரி, இங்கே எங்கள் வீட்டில் வளர்ந்த செவ்வாழை பற்றி.



ஊரில் இருந்து கொண்டு வைத்த ஒரே வாரத்தில் தேன் வாழை துளிர் விட்டது. செவ்வாழைக் கன்றும் அதனுடனே வைத்ததுதான். வளரலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனைக்குப் பின்னர் கொஞ்சமாக வெளியே எட்டிப் பார்த்தது. தேன் வாழை பழம் பழுத்து குலை வெட்டிய பின்னர்தான், செவ்வாழை குலை தள்ளியது.





குலை தள்ளி நான்கு மாதங்கள் ஆகியும் பழுக்கவில்லை. விவசாயியான நண்பனின் அப்பாவிடம் கேட்டபொழுது, காய் ரோஸ் நிறமாக மாறும்பொழுது வெட்ட சொன்னார். தினமும் நிறம் மாறும் மாறும் என குலையை பார்த்துக் கொண்டே இருந்தோம்.



ஒரு நாள் மேல் சீப்பில் ஒரே ஒரு பழம் மட்டும் ரோஸ்  நிறத்துக்கு மாறி இருந்தது. அன்றே வெட்டி வைக்க, இரண்டு மூன்று நாட்களில் அனைத்து சீப்புகளும் பழுத்து விட்டது. முதல் சீப்பில் பதினேழும், மற்ற சீப்புகளில் 15 முதல் 16 வரையிலும் பழங்கள் இருந்தன. எந்தச்  செயற்கை உரமும் போடாமல் விளைந்த செவ்வாழையின் ருசி பற்றி சொல்ல வேண்டியதில்லை. அடுத்த பக்க கன்று வளர்ந்து வருகிறது, அடுத்த வருடமும் செவ்வாழை உண்டு. :)



Wednesday, December 4, 2013

வீட்டுத் தோட்டத்தில்: தேன் வாழை (கற்பூரவள்ளி)

ஊரிலிருந்து தேன்வாழை மற்றும் செவ்வாழை என இரண்டு வகையான வாழைக் கன்றுகளைக் கொண்டு வந்தார் அப்பா. வைத்த கொஞ்ச நாட்களிலேயே தேன் வாழை துளிர் விட, செவ்வாழை மிகவும் தாமதமாக துளிர் விட்டது. தார் விடுவதிலும் தேன் வாழையே முந்திக் கொண்டது. இந்த வாழையை கற்பூர வள்ளி என்றும் சொல்கிறார்கள்.


தார் விட்டதும், கம்புகளை வைத்து முட்டுக் கொடுக்க எந்தச் சிரமும் இல்லாமல் வளர்ந்தது. தார் சாய்ந்து போன சாயலைப் பார்த்தால், சின்ன காற்றுக்கே விழுந்துவிடுமோ என பயந்து கொண்டிருந்தோம். அப்படி எல்லாம் நடக்காமல் கம்பு தாங்கிக் கொண்டது. சீப்புக்குச்  சராசரியாக 14 காய்கள் என, பத்து சீப்பு பிடித்திருந்தது.



அவ்வப்பொழுது பக்க கன்றுகளை அறுத்து விட்டோம். இரண்டு தடவை வேப்பம் புண்ணாக்கு போட்டு,  மாதம் ஒருமுறை மீன் தொட்டி கழுவிய தண்ணீரை ஊற்றி விட்டோம்.



ஒரு சீப்பில். காய் சிறிதாக மஞ்சள் நிறத்துக்கு மாறியது. இரண்டொரு நாள் கழித்து, நன்றாகப் பழுத்த பின்னர் தாரை வெட்டிக் கொள்ளலாம் என இருந்தோம். அடுத்த நாள் காலை, அந்தச் சீப்பில் ஒரு பழம் மட்டும் யாரோ சாப்பிட்டது போல, வெறும் தோல் மட்டும் இருந்தது. அணில் சாப்பிட்டு போயிருக்கும் என நினைத்துச் சுற்றிலும் பார்த்தால், மேலே வாழை இலையில் ஒரு வௌவால் தலை கீழாக தொங்கிக் கொண்டிருந்தது. எங்கே இருந்துதான் வாசம் பிடித்ததோ, இரவில் முழுப் பழத்தையும் தின்றுவிட்டு ஓய்வு எடுப்பது போல தொங்கிக் கொண்டிருந்தது.



தாரை வெட்டிய பின்னரும் வௌவால் நகரவில்லை. சரி பகலில் ஏன் அதை தொந்தரவு செய்ய வேண்டும் என நினைத்து, மாலையில் இரவான பின்னர் ஒரு கம்பை வைத்துத் தட்ட பறந்து விட்டது வௌவால். அடுத்த நாள் வாழை மரத்தை வெட்டி தண்டுகளைச்  சமைக்க எடுத்துக் கொண்டோம்.

வௌவால் கடித்த சீப்பு சீக்கிரம் பழுக்க, அடுத்து வந்த நாட்களில் ஒவ்வொரு சீப்பாக பழுத்து விட்டது. சொந்தம், அக்கம் பக்கம் என ஒரே தேன் வாழை வாசம்தான். ரசாயன் உரங்கள் இல்லாமல், வீட்டுத்  தோட்டத்தில் விளைந்த பொருளின் சுவை பற்றி சொல்ல வேண்டியதில்லை.

இரண்டு, பக்கக் கன்றுகள் நன்றாக வளர ஆரம்பித்து விட்டன. இன்னும் சில மாதங்களில் அவைகளும் குலை தள்ளத் தொடங்கும்.

குலை தள்ளியுள்ள செவ்வாழை: