எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.
பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை.
உறவுக்கார பெண் சௌதாமிணி, பத்திரிகை அடித்து கல்யாணம் வரை சென்ற காதலி கீதா, தன்னை விட மூத்தவரான திருமதி மூர்த்தி, வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்கு வந்த சுமிதா என அவன் பழகிவிட்டு தப்பித்து ஓடும் விலங்காகவே இருக்கிறான். எதையும் எதிர்கொள்ள அவனுக்கு தயக்கம். பிரான்ஸ் சென்று அங்கே ஒரு வெளிநாட்டு பெண்ணை மணக்கும் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . ஆனால் அவளோ அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள். உண்மையில் இவ்வளவு உறவுகளை அவன் இழந்து விடுவதிலேயே நாட்கள் சென்று விடுகிறது. பாரிஸில் பிறந்த தன் மகன் தன்னுடன் இருப்பான் என நினைத்திருக்க, மனைவியோ அவனை விட்டுப் பிரிந்து போகிறாள்.
இதற்கு நேர் எதிராக மனைவியை இழந்த பின்னர் தனது பெண்ணுக்கு செவிலித் தாயாக வந்த ஒரு பெண்ணை நேசித்து தனது வாழ்வில் முக்கிய இடம் கொடுத்த மனிதராக பேராசிரியர் இருக்கிறார். தன்னுடைய இறப்புக் கு பின்பும் அவள் எந்த இன்னலும் இல்லாமல், தனது பிள்ளைகளால் எந்த கஷ்டமும் அனுபவிக்க விடாமல், உயில் எழுதி வைத்து அவளின் வாழ்க்கையை நடத்த அனைத்தையும் செய்துவிடுகிறார். அந்தப்பெண் அதை எதிர்பார்க்காமல் இருந்தாலும், தன்னால் முடிந்ததை ஒரு பரஸ்பர அன்பு போல செய்கிறார். சுதாகரனுடைய தப்பிப்போதல் இவரி டம் இல்லை.
பேராசிரியரால் முடிந்ததை சுதாகாரனால் செய்ய முடிவதில்லை அல்லது அதற்கான மனத்திடம் இல்லை. போலவே இவன் குணத்தை அறிந்தே அவன் பழகிய பெண்கள் எல்லோரும் அவனிடமிருந்து தப்பித்து போகிறார்கள் என்பது உண்மையா?.
பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு கங்கை கரையில் சுதாகரன் பிண்டம் அளிக்கிறான். அப்பொழுது புரோகிதர் தனக்கு தானே கூட பிண்டம் வைத்துக் கொள்ளலாம், அது ஆத்ம பிண்டம் எனச் சொல்கிறார். சுதாகரன் அதைச் செய்கிறான்.
வாரணாசி என்பது இறப்பை கொண்டாடும் நகரம். அது அங்கே ஒரு தொழிலும் கூட. சுதாகரனின் நண்பன் ஒருவன் சிதையை நிர்வகிக்கும் தொழிலில் இருக்கிறான். சிதைகளுக்கு விறகுகள் போடும் தொழிலை அவனுடைய குடும்பம் செய்து வருகிறது. இன்னொருவர் தனது இறுதி காலத்தில் அங்கே வந்து தங்கியிருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் ஆசிரமம் நடத்தி வருகிறார்.
இந்நாவல் மாறிமாறி வரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. சுதாகரனின் நினைவுச் சிடுக்குகளுக்குள் அலைந்து சென்றாலும், இறுதியில் அது நிலைக்கு வருகிறது. இந்நாவலை தமிழில் வாசிக்க மொழிபெயர்த்த சிற்பி அவர்களுக்கு நன்றிகள்.
வாராணசி
எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில்: சிற்பி

No comments:
Post a Comment