Tuesday, March 26, 2013

மாற்றப்படாத வீடு - தேவதேவன்

கவிஞர் தேவதேவன் அவர்களின் 'மாற்றப்படாத வீடு' தொகுப்பிலிருந்து...

இருள் ஓளி

கேள்வி இருளுக்கு
ஒளி பதிலானது
எவ்விதம் ?
இருளை உற்று நோக்க நோக்க
இருளே ஒளியாயிற்று
ஒளி நோக்கும்
உந்தலற்று அற்று
ஒளியே இருளாயிற்று.
இவ்விதமே
இருளும் ஒளியும் ஒன்றாகி
பேரொளி.
கேள்வியும் பதிலும் இணைந்து
பெருவியப்பு.


===================

துள்ளல்

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்
துள்ளி விழுகையில் கண்டது கடும்பாறை.
மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்.
மேலும் ஒரு துள்ளலில் மரணம்
மரித்த கணமே பறவை.

===================

அழைப்பு

கடைசி மத்தாப்பும் உதிர்ந்து
மரணம் என்னைச் சூழ..
உதிராத மத்தாப்புகள் கோடி ஏந்தி
வானம் என்னை அழைக்கிறது..




Friday, March 15, 2013

பிளாஸ்டிக் பூதம்

இப்பொழுதெல்லாம் சர்வ சாதாரணமாக, அனைத்துக் டீக்கடைகளிலும்  பாலிதீன் பைகளில் டீயை ஊற்றித் தருகிறார்கள். மக்களும் அதைக் குடித்து மகிழுகிறார்கள். பாத்திரம் வேண்டியதில்லை, அதைக் கழுவ வேண்டியதில்லை. ஒரு பார்சல் வாங்கி வந்து(கூடவே இரண்டு பிளாஸ்டிக் தம்ளர்களையும், கடைக்காரரே கொடுப்பார்).. அப்படியே ஊற்றிக் குடித்து விட்டு, வீசி விடலாம். அது மக்கினால் என்ன, மக்காவிட்டால் தான் என்ன?.

சரி, சுற்றுப்புறம் பற்றிதான் கவலையில்லை. பாலிதீன் பைகளில் ஊற்றப்பட்ட டீயைக் குடிப்பதால், அவர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகளைப் பற்றியும் கவலை இல்லை. கொதிக்க கொதிக்க சாம்பாரையும், டீயையும் பாலிதீன் பைகளிலும், பிளாஸ்டிக் பொருட்களிலும் அடைக்கும் பொழுது கண்டிப்பாக அது இளகும். இளகிய கொஞ்சம் பகுதிகள், நாம் உட்கொள்ளும் அந்த உணவுப் பொருட்களில் கலந்து நம் உடலுக்குள் செல்லும். அதைப் பற்றியும் நமக்கு விழிப்புணர்வு இல்லை.

டாக்டர் விகடன்(16-03-13) இதழில், 'உணவே விஷம் ஆகலாமா?' என்ற கட்டுரையில்;

'தற்போது கடினமான பிளாஸ்டிக் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது. பாலிதீன், பாலிப்ரொபைலீன் போன்றவை கொண்டு பிளாஸ்டிக் உருவாகிறது. இவை புற்று நோயை உண்டாக்கக் கூடிய ஆற்றல் பெற்றவை என ஆய்வு குறிப்பிடுகிறது.

பிளாஸ்டிக்கில் 'பிஸ்பெனால் -ஏ'(BISPHENOL-A) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. ரெடிமேட் உணவுகளைச் சுற்றும் தாள்களில் இந்த நச்சு ஊடுருவி இருக்கும். இந்த நச்சுப் பொருட்கள் நமது உடலின் செல் அமைப்பையே மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவை. ஹார்மோன்களின் சம நிலையையும் இவை  பாதிக்கக் கூடும்.

இதேபோல உணவகங்களில் இருந்து காபி, சாம்பார், ரசம் போன்றவற்றையும் பிளாஸ்டிக் உரைகளில் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். உள்ளே இருக்கும் பண்டங்களின் சூட்டினால் பாலிதீன் உரைகளில் இருக்கும் வேதிப் பொருட்கள் கரைந்து, அவற்றைச் சாப்பிடும்போது நமது உடலுக்குள் நேரடியாகக் கலக்கின்றன.

இந்த கெமிகல் கலந்த உணவுப் பொருட்கள் உட்கொள்ளும் போது நம் உடலில் இருக்கும் செல்கள், ஹார்மோன்கள் பாதிப்புக்கு உள்ளாகும். குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டால், அவர்களது மூளையின் செயல்பாடு மந்தமாகும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை, பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். மேலும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு
.'  என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

நீக்கமற நிறைந்து கிடக்கும் பிளாஸ்டிக்கின் பயன்பாட்டைக் குறைப்பது நம் கையில் தான் இருக்கிறது. முடிந்த வரை, பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்ப்போம். நம் உடல் நலனைக் காப்போம்.

பிளாஸ்டிக் எனும் பூதத்தின் வாயில் அகப்பட்டு விட்ட நாம், கொஞ்சம் முயன்றால் வெளியே வந்து விடலாம். இல்லையெனில் அது நம்மை விழுங்கும் நாள் தூரத்தில் இல்லை.

எனது பழைய பதிவுகள்;
பாலிதீன் பைகளில் டீ !
பாலிதீன் என்னும் பிசாசு..

நன்றி: டாக்டர் விகடன்

Tuesday, March 12, 2013

குடி என்பது..

காலை மணி எட்டு. பெட்ரோல் பங்கில், வண்டிக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு ஒரு திருப்பத்தில் திரும்பினேன். ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க நபர், லிப்ட் கேட்பதற்காக கை காட்டினார்.

'EB ஆபீஸ் வரைக்கும் போகணும்'  என்றார்.
'சரி, ஏறுங்க..' என்றேன்.
'நீங்க அங்கேயே போறீங்க?' என்றார்
நான் கடுப்பில், 'வர்றீங்களா... இல்லையா.. ' என்றேன்.
'அய்யா சாமி.. வர்ரேனுங்க' என்று பின்னால் ஏறிக் கொண்டார்.
அப்பொழுதுதான் நான் கவனித்தேன், அவர் குடித்திருப்பதை.

EB ஆபீஸ் வரும்வரைக்கும் நான் எதுவும் பேசவில்லை. அவரும் வாயைத் திறக்கவில்லை.

இடம் வந்ததும், 'இங்க எறங்கிக்குரீங்களா' என்றேன். 
இறங்கியவர், கிளம்ப எத்தனித்த என்னிடம், என்ன நினைத்தாரோ 'மன்னிச்சுக்குங்க.. வீட்ல பிரச்சினை.. அதான் இப்படி' என்று கையெடுத்துக் கும்பிட்டார். 'பரவாயில்லை.. விடுங்க' என்று கூறியவாறு வண்டியை முறுக்கினேன் நான்.

வண்டியின் கண்ணாடியில் பார்த்தேன். தூரத்தில் அவர், கும்பிட்ட கையை கீழே போட்டுவிட்டு சாலையை தாண்டிக் கொண்டிருந்தார்.

குடிப்பது என்பது எப்படி எல்லாம் மனிதனை நடக்க வைக்கிறது. காலை எட்டு மணிக்கு ஒரு குடும்ப மனிதன் குடிக்கிறான் என்றால் அதற்கு யார் காரணம்?.

குடியால் நடக்கும் விபத்துகளும், இறப்புகளும் பெருகிக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் இப்பொழுது குடிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். வீதிக்கு வீதி கடைகள் இருக்கும்போது, எல்லோரும் வாங்கிக் குடித்து போதை ஏற்றுகின்றனர்.

இதில் விழா சமயங்களில் 'டார்கெட்' வேறு. நாட்டு மக்களை குடிக்க வைத்து, அதற்கு 'டார்கெட்' வைக்கும் நாடு இங்குதான் இருக்கும்.

அரிசி, பருப்பு மளிகைக் கடையில் வாங்குவது போல டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ஆகிறது. ஒரு பொருள் எளிதாகக் கிடைத்தால் அதை எல்லா மக்களும் வாங்கவே செய்வார்கள்.

கொஞ்சம் விழிப்புணர்வு இருப்பவன், அளவாகக் குடிப்பவன், பணம் இருப்பவன் குடித்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், நாள் கூலிக்கு சென்று, கஷ்டப்பட்டு அதையும் டாஸ்மாக்கில் தொலைக்கும் சாதாரண மக்களை நாம் என்ன செய்யப் போகிறோம்?.

குடிப்பது, குடிக்காமல் இருப்பது தனி மனித சுதந்திரம் என்றால்.. அவனுக்கு குடும்பம் இல்லை, அவனுக்கு குழந்தைகள் இல்லை, எந்தப் பொறுப்புகளும் இல்லை. அப்படி என்றால் அது அவன் சுதந்திரம். ஆனால், ஒரு தகப்பன், ஒரு கணவன் தன கடமையைச் செய்யாமல் டாஸ்மாக் மதுவுக்கு அடிமை என்றால் அதற்கு பெயர் சுதந்திரம் இல்லை.

என்னைப் பொறுத்தவரை, கடை திறக்கும் நேரத்தை குறைக்கலாம். இப்பொழுது இருக்கும் கடைகளில் பாதியைக் குறைக்கலாம். படிப்படியாக குறைக்கலாம். சாலை ஓரங்களில் இருக்கும் கடைகளை மூட வேண்டும். இதை எல்லாம் செய்வார்களா, நம் அரசியல் வியாதிகள்?. அல்லது நம் மக்கள் சாவதைப் பார்த்துக் கொண்டிருப்பார்களா?. 
 

Monday, March 11, 2013

வளைகள் எலிகளுக்கானவை - நாஞ்சில் நாடன்

நீங்கள் எப்போதாவது அவர்களைப் பார்த்திருக்கலாம். ஆனால், சென்னை, கோவை போன்ற நகரங்களில் நாங்கள் அடிக்கடி அவர்களைப் பார்க்கிறோம். பேருந்துகளில், ரயில் நிலையங்களில் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து இறங்குகிறார்கள், வட நாட்டு மக்கள். மொழி புரியாமல் இங்கே வரும் அவர்கள், குறைந்த கூலிக்கு வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். சின்ன இடத்தில அவ்வளவு பேரும்  தங்குகிறார்கள். குறைந்த சம்பளத்தை வாங்கி, கொஞ்சம் செலவு செய்து மீதியை தங்கள் குடும்பத்துக்கு அனுப்புகிறார்கள்.

ஆனால், அவர்களை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதை நினைத்துப் பார்த்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது. ஒரு நாள், பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது நான்கைந்து பேர் ஏறினார்கள். பயணச் சீட்டும் எடுத்து விட்டார்கள். இரண்டு மூன்று நிறுத்தங்கள் தாண்டியதும், நடத்துநர் அவர்களிடம் 'டிக்கெட் எங்கே?' எனக் கேட்க, உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்தே நின்று விட்டான். அவர் என்ன கேட்கிறார் என்று அவனுக்கு தெரியவில்லை. நடத்துநர் திரும்பவும் சத்தமாக கேட்க,. எல்லாப் பயணிகளும் திரும்பிப் பார்த்தனர். இரண்டு மூன்று முறை கேட்டு, எப்படியோ அவர்கள் புரிந்து கொண்டு பயணச் சீட்டை எடுத்துக் காண்பித்தனர். நடத்துநர் சரி பார்த்து விட்டு, புலம்பிக் கொண்டே சென்றார். என் பக்கத்திலிருந்த ஒரு பயணி 'வந்திர்ரானுகோ கெளம்பி..' என்று, கேவலமாகச் சிரித்தார்.

இன்னொரு நாள் சந்தையில், வட நாட்டு இளைஞர்கள் சிலர் உருளைக் கிழங்கையும், பெரிய வெங்காயத்தையும் ஐந்து கிலோ, பத்து கிலோ என்ற கணக்கில் வாங்கிக் கொண்டிருந்தனர் . 'எப்படித்தான் இத்தன உருளக் கெழங்க தின்கிரானுகளோ' என்று பேசிக்கொண்டு நடந்தார் இன்னொருவர்.

இதற்கும், இந்த ''வளைகள் எலிகளுக்கானவை"  கதைக்கும் என்ன சம்பந்தம் என்ன என்று கேட்கிறீர்களா?. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் - 'சூடிய பூ சூடற்க' கதைத் தொகுதியில், 'வளைகள் எலிகளுக்கானவை' என்ற கதை இருக்கிறது. இந்தக் கதையிலும் எங்கோ வட நாட்டில் உள்ள ஒரு கிராமத்து மக்கள், ரயில் சுற்றுப் பயணச் சீட்டு எடுத்துக் கொண்டு ஒவ்வொரு புண்ணிய நகரங்களுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரி போன்ற இடங்களுக்குச் சென்று விட்டு, ரயிலில் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ரயில் நிலையத்தில் ஏறும் நம் ஊர் மக்கள், அவர்களைப் பார்த்து 'வேறு பெட்டிக்கு போகச் சொல்கிறார்கள்.. கூடவே அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் எனவும் பேசி விடுகிறார்கள். அவர்கள் கோபத்துடன், தங்களிடம் இருந்த பயணச் சீட்டை காண்பிக்கிறார்கள். சிறு கைகலப்பில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டு விடுகிறது. இறுதியில கலெக்டர் வந்து சமாதானம் செய்து ரயிலைப் புறப்பட வைக்கிறார்.

'நாங்க ஏழைங்க சாப்.. கர்சிரோசி விவசாயிங்க.. வித்அவுட் பிச்சைக்காரங்க இல்ல.. போன வருஷம் காசி போனோம்.. அதுக்கு முந்தி காளிகட் போனோம்.. கன்யாகுமரி வந்து நாங்க ரத்தக் கறையோட போறோம்..'  என்று சொல்கிறார்கள் அவர்கள்.

ரயில் நகர்ந்த பின் வழியனுப்ப வந்த இருவர் பேசிக்கொண்டு போனார்கள். 'காஞ்ச ரொட்டியைத் தின்னுக்கிட்டு ஊர்லே கெடக்காம..பொறப்பிட்டு வந்திருக்கானுகோ.. ஊரை நாறடிக்கரதுக்கு..'

அவர்கள் மேற்கில் மேலாங்கோடும் கிழக்கில் முப்பந்தலும் தாண்டியதில்லை. தெற்கே கன்னியாகுமரிக் கடலையும் வடக்கே காளிகேசம் மலைகளையும் தாண்ட முடியாது.


***********

அவர்கள் எங்கேயோ இருந்து கிளம்பி வந்து, இங்கே பிரயாணம் செய்கிறார்கள், கோவிலுக்குப் போகிறார்கள், வேலைக்குப் போகிறார்கள். நாமோ இருக்கும் இடத்தில இருந்து கொண்டு அவர்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆம், எப்போதும் வளைகள் எலிகளுக்கானவை.

Friday, March 8, 2013

சாந்தக்கா

நாலரை மணி ரயிலுக்கு
நாலு மணிக்கே கூடையுடன் வந்து
ஜங்சனில் அமர்ந்திருக்கும்
கொய்யா விற்கும் சாந்தக்கா

மெல்லிய வெள்ளை வேட்டியை
இரண்டாக மடித்து கூடை மேலே போடப்பட்டும்
கொஞ்சம் வாடிய கொய்யா இலைகள்
வெளியே தெரியும்.

கொய்யா வெட்ட பெரிய கத்தியும்
விருப்பமானவர்களுக்கு
உப்பு, மிளகாய்ப் பொடி கலந்த
பிளாஸ்டிக் டப்பாவும்
கூடையில் இருக்கும்.

வண்டி வந்து நின்றவுடன்
யாரோ ஒருவர் தூக்கி விட
கூடையுடன் வந்து பெட்டிக்குள் வந்து நிற்கும் சாந்தக்கா
திரும்ப இறக்கி வைக்கவும் ஏற்றவும்
யாரோ ஒருவர் உதவுவர்

வண்டி கிளம்பியதும்
கூடையை நகர்த்திக்கொண்டு
கொய்யா விற்க ஆரம்பிக்கும் சாந்தக்கா

அடுத்த ஸ்டேசனில்
அடுத்த பெட்டி என்று
ஒவ்வொரு பெட்டியாய்
கொய்யா மணம் பரவும்

ஒருநாள் சுமையைத் தூக்கிவிடும்போது
'சொமையா இல்லியா அக்கா?' என்றேன்.
'ம்.. இதென்ன சொமை..
குடிகார புருசனும்
ரெண்டு புள்ளை,  ஒரு பையனையும் விடவா
பெரிய சொமை'
என்று சொல்லிவிட்டு..
'கொய்யாக் காயேய்..' எனக்  கூவிக் கொண்டு
அடுத்த பெட்டிக்கு
அவசரமாகப் போனது சாந்தக்கா..

சிக்னல் இன்னும் சிவப்பில் தான் இருந்தது.