Friday, August 10, 2012

சினிமா: A Separation


விவாகரத்துப் பெற விண்ணப்பம் செய்திருக்கிறார்கள் ஒரு தம்பதியினர். அவர்கள் வாழ்வது ஈரான் நாட்டில். பதினோரு வயதில் பள்ளி செல்லும் மகள். கணவன் - நடேரின் தந்தை அல்சீமர் என்னும் மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்.  சுய நினைவில்லாத அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அது போலவே எதையும் புரிந்து கொள்ளவும் முடியாது. மனைவி - சிமின், வெளிநாடு செல்ல வேண்டும் என்று கேட்க, நடேர் தன் வயதான தந்தையை விட்டு வர முடியாது என்று சொல்கிறான். எனவே, சிமின் விவாகரத்து வேண்டி மனுச் செய்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.


சிமின், தனது பொருட்களுடன் தன் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். மகள் - டெர்மி, தன் தாயுடன் செல்ல மறுத்து தன் தந்தையுடனே தங்கி விடுகிறாள். நடேர் வேலைக்குப் போன பின்னர் தன் தந்தையைக் கவனித்துக் கொள்ள ஒரு பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்துகிறான். அப்பெண்ணின் பெயர் ரசியாக். டெர்மியின் ஆசிரியைக்கு பழக்கமானவள் அப்பெண்.
முதல் நாள் வேலைக்கு வருகிறாள் ரசியாக். அவளுடன் கூடவே அவளின் சிறு மகளும். அவள் தன் தாயின் வயிற்றில் தலையை வைத்து ஏதாவது சத்தம் வருகிறதா என காத்து வைத்து கேட்கிறாள். ரசியாக் கர்ப்பமாக இருக்கிறாள். நடேரின் தந்தை, அவரின் அறையை விட்டு 'நான் பேப்பர் வாங்க கடைக்கு போகிறேன்' என்று கதவைத் திறக்க முயல, அவரைச் சமாளித்து அறைக்குப் போகச் சொல்கிறாள். அப்பொழுதுதான் அவர் தன் உடையிலேயே சிறுநீர் போயிருப்பதைப் பார்க்கிறாள். அவரிடம், அந்த உடையை மாற்றச் சொல்கிறாள். அவருக்கோ எதுவும் புரியவில்லை. அவரைக் கூட்டிக்கொண்டு போய் கழிவறையில் நிறுத்தி, அவரின் உடையை மாற்றச் சொல்கிறாள். ஆனால் அவரோ அப்படியே நிற்கிறார். தன் மகளை கொஞ்சம் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு, கையில் உறையை மாட்டிக்கொண்டு அவருக்கு உடை மாற்றி விடுகிறாள். அச்சிறு பெண் 'நான் அப்பாவிடம் சொல்ல மாட்டேன்' என்கிறாள்.

அவள் உள்ளே வீட்டை சுத்தம் செய்து கொண்டிருக்கும்போது, ரசியாக்கின் பெண் முதியவரை காணவில்லை எனக் கூறுகிறாள். உடனே, அவரைத் தேடி சாலையில் ஓடுகிறாள். அவர் ஒரு நியூஸ் பேப்பர் கடையில் நிற்பதைப் பார்க்கிறாள். நிறையக் கார்கள் போய்க் கொண்டிருக்கும் அந்தச் சாலையை கடக்க அவர் முற்பட, ரசியாக் திகைத்து நிற்கிறாள்.பணி முடிந்து வந்த நடேரிடம், தன்னால் இந்த வேலைக்கு வர முடியாது என்றும், மிகக் கடினமான வேலை, ஒரு பெண் இன்னொரு முதியவருக்கு உடை மாற்றிவிடுவது மிக கடினம் என்று கூறுகிறாள். நடேருக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. வேண்டுமானால் என் கணவரை நாளைக்கு உங்களைப் பார்க்க வரச் சொல்கிறேன், அவர் இப்பொழுது வேலை இல்லாமல்தான் இருக்கிறார் என்று கூற, நடேர் சரி என்கிறான்.

அடுத்த நாள், பள்ளியில் இருந்து மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்புகிறான் நடேர். அழைப்பு மணியை அழுத்துகிறான். பெயர் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். பதிலில்லை. மேல் வீட்டில் குடியிருக்கும் பெண்ணைக் கேட்க, 'காலையில் ரசியாக் இருந்தாளே.. எங்கே என்று தெரியவில்லை' என்று சொல்கிறார். காரில் இருக்கும் இன்னொரு சாவியைக் கொண்டு, வீட்டைத் திறக்கிறார்கள். அங்கே, நடேரின் அப்பா கட்டிலில் இருந்து கீழே பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறார். ஒரு கயிற்றில் அவர் கை கட்டிலுடன் சேர்த்துக் கட்டப் பட்டிருக்கிறது. கட்டை அவிழ்த்து, அவரைத் தூக்கி படுக்கையில் படுக்க வைத்து அவரை மெதுவாகக் கூப்பிட அவர் விழித்துக் கொள்கிறார்.

நடேர், ரசியாக்கின் மீது கோபம் கொள்கிறான். அப்பாவைக் கட்டிப்போட்டு எங்கோ வெளியில் கிளம்பிவிட்டாள் என்று நினைக்கிறான். கொஞ்ச நேரம் கழித்து வந்த ரசியாகிடம், 'இன்னும் கொஞ்ச நேரம் நான் வராமல் இருந்தால் அப்பா செத்திருப்பார்.. உன்னை வேலைக்கு வைத்ததே அவரைக் கவனித்துக் கொள்ளத்தான்.. ஆனால் அவரை விட்டு விட்டு வெளியே போயிருக்கிறாய்.. அதுவும் இல்லாமல் அவரை கயிற்றில் கட்டி போட்டிருக்கிறாய்.. மேசையில் இருந்த பணத்தை வேறு காணவில்லை.. ' எனச் சொல்ல, ரசியாக் 'கடவுள் சாட்சியாக பணத்தை நான் எடுக்கவில்லை' என்று கூறுகிறாள். 'முதலில் இங்கே இருந்து வெளியே போ' என்கிறான். அவள் தயங்கிக் கொண்டே நிற்க, அவளை வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறான் நடேர். திரும்ப உள்ளே வரும் ரசியாக், 'இன்றைய சம்பளத்தைக் கொடுங்கள்' எனக் கேட்க, 'ஏற்கனவே பணத்தை எடுத்து விட்டு, அதுவும் அப்பாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்ட பின்னர். .என்னால் சம்பளம் கொடுக்க முடியாது' என்று வெளியே தள்ளி கதவைச் சாத்தி விடுகிறான்.


அடுத்த நாள், சிமினின் தாய் வீட்டுக்குச் செல்கிறான் நடேர். அங்கு சிமின், ரசியாக் இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறாள் எனக் கூறுகிறாள். ஏன் என அவன் கேட்க, நீங்கள் அவளைப் பிடித்து தள்ளி இருக்கிறாய் என சிமின் சொல்லுகிறாள். இருவரும் ரசியாக்கைப் பார்க்க ஹாஸ்பிடல் செல்கிறார்கள். அங்கே, ரசியாக்குக்கு அபார்சன் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். எனவே,  ரசியாக்கின் கணவனுக்கும் நடேருக்கும் சண்டை ஏற்படுகிறது.

நீதி மன்றத்தில், நாலரை மாதக் குழந்தையின் கருக்கலைப்புக்கு அவன்தான் காரணம் என்கிறாள் ரசியாக். ரசியாகின் கணவனும் அதை ஆமோதிக்கிறான். அவளை வெளியே தள்ளி கதவைச் சாத்தும்போதுதான் தான் அடிபட நேர்ந்ததாகவும், அதுவே கருகலைப்புக்கு காரணம் என்கிறார்கள் இருவரும். அதை ஏற்க மறுக்கிறான் நடேர்.  ரசியாக் கர்ப்பமாக இருந்தது தனக்குத் தெரியாது என்கிறான் அவன். வழக்குப் போய் கொண்டிருக்கிறது. ரசியாக்கின் கணவன், நடேரின் மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று ஆசிரியை மிரட்டுகிறான். பள்ளிக்கு வெளியே எப்பொழுதும் நின்றுகொண்டிருக்கிறான். தன் மகளை அவன் ஏதாவது செய்து விடுவான் என்று பயக்கும் சிமின், அவனுக்குப் பணம் கொடுத்து சமாதானம் செய்ய முயல்கிறாள். முதலில் மறுக்கும் அவன், பின்னர் சரி எனச் சொல்லிவிடுகிறான்.பணம் தந்து அவனைச் சரிக்கட்ட மறுக்கிறான் நடேர். சிமின் எவ்வளவோ கூறிப் பார்க்கிறாள். அவன் மறுத்துவிடுகிறான். கோபப்படும் அவள், டேர்மியை அழைத்துக்கொண்டு போகிறாள். சிமினைப் பார்க்க வரும் ரசியாக், 'எனக்கு சந்தேகமாக இருக்கிறது. முந்தின நாளே எனக்கு வலி இருந்தது. நான் யாரிடமும் சொல்லவில்லை.' என்கிறாள். சிமின், 'அது எப்படி நடந்தது.. அதை ஏன் யாரிடமும் சொல்லவில்லை?' என்கிறாள். நடேரின் அப்பா, ஒருநாள் வெளியே போன பொழுது, சந்தடி மிகுந்த சாலையில் ஒரு கார் தன்னை இடித்து விட்டதைச் சொல்கிறாள். 'இது என்னுடைய தவறே. இதை நீங்கள் பணம் கொடுத்து சரி பண்ண வேண்டாம்.. நீங்கள் எங்கள் வீட்டுக்கு வரவும் வேண்டாம்' என்று சொல்லி விட்டுச் சொல்கிறாள்.


ரசியாக்கின் வீட்டுக்குச் செல்கிறார்கள், நடேரும் சிமினும். கூடவே டேர்மியும். ரசியாக்கின் பக்கத்து வீட்டு பெரியவர்கள் என நாலைந்து பேர் இருக்கிறார்கள். உள்ளூர பயந்து கொண்டிருக்கிறாள் ரசியாக். பணம் கொடுக்க தயாராக செக் புத்தகத்தில் கையெழுத்துப் போடுகிறான் நடேர். தன் மகளையும் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்ளும் அவன், ரசியாக்கிடம் 'உங்கள் மேல் தவறில்லை என்றால்... போய் குர்ஆன் எடுத்துக் கொண்டு வாருங்கள்.. அதற்குப் பின்னர் நான் இந்தப் பணத்தைத் தருகிறேன்..' என்கிறான். எழுந்து போகும் ரசியாக், திரும்பி வர தாமதமாக, கணவன் அவளைத் தேடி உள்ளறைக்கு வந்து விடுகிறான். அங்கே ரசியாக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறாள். கணவனிடம் உண்மையைச் சொல்ல. அவன் வெறி பிடித்தவன் போல தன்னைத் தானே அறைந்து கொண்டு வீட்டை விட்டு வெளியே போகிறான். பின்னாலே ஓடி வரும் ரசியாக், சிமினிடம் 'நான் தான் உங்களை வர வேண்டாம் என்று சொன்னேனே. இப்பொழுது இப்படி ஆகிவிட்டதே' என்று பின்னாலேயே ஓடுகிறாள். நடேர் வெளியே வந்து பார்த்தால், அவன் கார் கண்ணாடி உடைந்து கிடைக்கிறது.


நீதி மன்றத்தில், இப்பொழுது விவாகரத்து வழக்கு. கூடவே டேர்மியும். அவள் யாரிடம் இருக்கப் போகிறாள் என்பதை அவள் முடிவு செய்ய வேண்டும். நடேரிடமும், சிமினிடமும் விசாரணை முடிந்து அவர்களின் மகளை உள்ளே கூப்பிடுகிறார் நீதிபதி. உள்ளே செல்லும் டெர்மி, நீதிபதி முன் அழுது கொண்டிருக்கிறாள். வெளியே பெற்றோர் இருவரும் காத்திருக்கிறார்கள். அவர்களைப் போல நிறையப் பேர் எதிரும் புதிருமாக அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள். படம் அத்துடன் முடிகிறது.

உள்ளே சென்ற டெர்மி என்ன முடிவை எடுத்திருப்பாள் என்பது நமக்குத் தெரியாமலேயே படம் முடிகிறது.

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல விமர்சனம்... பகிர்வுக்கு நன்றி... (TM 1)

கோவி said...

திரைப்படம் பார்த்தது போன்ற உணர்வு.. அருமை நண்பரே..

ezhil said...

நம்ம ஊர் கதையை போலத்தான் தெரிகிறது.ஏதோ ஒரு தொடர்ச்சி இல்லாதது போல் ஒரு உணர்வு. பகிர்தலுக்கு நன்றி

இரா.எட்வின் said...

படத்தைப் பார்க்க வேண்டும்

ஹாலிவுட்ரசிகன் said...

டெர்மி யாரிடம் தங்கியிருப்பாள் என்பது உங்கள் சாய்ஸ். நல்ல விமர்சனம். நன்றி.

இளங்கோ said...

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி நண்பரே..

இளங்கோ said...

@கோவி
நன்றிங்க..

இளங்கோ said...

@ezhil
நன்றிங்க.. இரண்டு மூன்று பத்தியில் பிழைகள் இருந்தன.. சரி பண்ணிவிட்டேன்..

இளங்கோ said...

@இரா.எட்வின்
கண்டிப்பாகப் பாருங்கள்..
நன்றிங்க

இளங்கோ said...

@ஹாலிவுட்ரசிகன்
நம்முடைய முடிவு என்பது தான் இங்கே...
அங்கே டெர்மி மட்டுமில்லை, நம் பிள்ளையை அந்த நிலைமைக்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும்..
நன்றிங்க..

Post a Comment