Monday, January 6, 2014

குடைநிழல் - தெளிவத்தை ஜோசப்

அரசன் குடை கொண்டு ஆட்சி செய்ய வேண்டியவன். இதோ இந்தக் குடை நம்மைக் காப்பது போல, நான் உங்களைக் காப்பேன் என்று அதற்கு அர்த்தம். அந்தக் குடை நிழலில் மக்கள் எந்தத் தொந்தரவும் இல்லாமல் இருக்கலாம். அந்தக் கால மன்னர் இந்தக் குடையை வைத்துக் கொண்டு மக்களை இரட்சித்தது எல்லாம் சரி, இப்பொழுது மன்னன் கிடையாது என்ற கேள்வி வரலாம். அப்பொழுது மன்னர்கள் என்றால் இப்பொழுது அரசியல்வாதிகள், நம்மை ஆள்பவர்கள். குடை மட்டும் தான் அவர்கள் கைகளில் இல்லை, மற்றபடி அவர்களும் மன்னர்களே!.

குடைநிழலும் குஞ்சரமும்(அவர்கள் வரும் வண்டி) இருந்து ஆட்சி செய்பவர்கள், நீதி, நியாயம் என்றா பார்க்கிறார்கள்?. அதெல்லாம் அவர்களுக்கு ஒத்து வராத விஷயம்.

********

கதை நடக்கும் இலங்கையில், இரவு வேளையில் தன் குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கிறான் ஒருவன். இந்த ஒருவன் என்பவன் 'எவனோ ஒருவன்', 'உங்களில் ஒருவன்' என யாராகவோ இருக்கலாம். அயர்ந்து தூங்கும் நடு இரவில், கதவைத் தட்டி உள்ளே வருகிறது போலிஸ். 'உன் வீட்டில் யார் யாருக்கோ தஞ்சம் கொடுக்கிறாய். எங்களுடன் வா' என்று அவனை அழைத்துச் செல்கிறார்கள். எங்கே, எதற்கு.. எந்த பதிலுமில்லை. அம்மா, மனைவி, தங்கை, பிள்ளைகள் என இவனைச் சுற்றியே இருந்தவர்கள், கலங்கிப் போகிறார்கள்.

இவனுக்கு என்ன என்னவோ நினைவுக்கு வருகிறது. போகிற இடத்தில் வைத்து, தற்கொலை செய்து கொண்டான் அல்லது தப்பி ஓடும்போது சுடப்பட்டு இறந்தான் என பேப்பரில் செய்தி வருவது போல் நினைத்துக் கொள்கிறான். எதற்காக தன்னை இங்கே இழுத்து வந்திருக்கிறார்கள் என்று புரியவில்லை. தமிழ் பேசுபவனாக இருப்பதுதான் பிரச்சினை என்றும் நினைக்கிறான்.சிங்களப் பள்ளியில் சிங்களர் பெருமைகளும், தமிழ் பள்ளியில் தமிழர் பெருமைகளும் பாடமாக இருக்க, இருவருக்குமிடையே எங்கே இருந்து வரும் ஒற்றுமை. சிங்களப் பள்ளி இல்லாமல்,  பையனுக்கு வேறு நல்ல தமிழ் பள்ளி பார்க்க வேண்டும் என நினைத்து, வீடு மாற்ற முடிவு செய்கிறான். ஒரு வீட்டையும் பார்த்து பிடித்திருக்க, அந்த வீட்டையே முடிவு செய்கிறான். இப்பொழுது இருக்கும் வீட்டு உரிமையாளரிடம் சொல்லி, முன்பணமாக குடுத்திருந்த பணத்தை வாங்கி புது வீட்டுக்குத்  தந்தாகி விட்டது.

புது வீட்டு உரிமையாளர், கொஞ்சம் பழுது பார்ப்பு வேலைகள் இருப்பதாகச் சொல்லி இருப்பதால், வாரமொரு முறை சென்று பார்க்கிறான். வேலைகள் நடந்து கொண்டுதான் இருந்தன. அப்படி எதேச்சையாக ஒருமுறை செல்லும் போது, தோரணம்,  வாழை மரம் கட்டி, வேறு யாரோ அங்கே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அவனுக்கு மயங்கி விழாத குறை. அந்தப் புது வீட்டு உரிமையாளர், அந்த வீட்டை இன்னொருவருக்கு விற்று இருக்கிறார். அவர்கள்தான் அந்த வீட்டுக்கு குடி வந்திருக்கிறார்கள். அந்த உரிமையாளரைப் பார்த்தால், நீங்கள் வந்து போனதைப் பற்றி சொல்லுகிறேன் என்று கூறுகிறார் வீட்டை வாங்கியவர்.

வேறு வழியில்லாமல் அவரிடம் விடைபெற்று, வீதியில் நடந்து வரும்பொழுது தனது பழைய நண்பனைச் சந்திக்க நேர்கிறது. அவன் வழக்கறிஞர் என்பதால், போலீசில் வழக்குப்  பதியச் சொல்கிறான். அவனும் அவ்வாறே வழக்குப் பதிந்து காத்திருக்கிறான். தான் கனடா செல்லவிருப்பதால், அதற்கு முன்னர் நான் உனக்கு உதவி செய்து அவனிடம் பணத்தை வாங்கிய பின்னரே  நான் புறப்படுவேன் என்கிறான் நண்பன். இடையில் அந்த முன்பணம் வாங்கிய உரிமையாளர், வழக்கை வாபஸ் வாங்கச் சொல்கிறார், இவன் தன் நண்பனின் அறிவுரைப்படி வாபஸ் வாங்க மறுக்கிறான். இது எதுவும் அவன் வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி ஆகியோருக்குத் தெரியாது.

அன்று அவனை அழைத்த, அந்த வழக்கறிஞர் நண்பன் தான் இன்று கனடா செல்வதாகவும், இந்த போலிஸ் உனக்கு உதவி செய்வார்கள் எனச் சொல்லி விடை பெறுகிறான். அதற்கப்புறம் தான் தன்னை, போலிஸ் இரவில் கைது செய்து காவலில் வைத்திருக்கிறது. இப்பொழுது இருக்கும் வீட்டுக்காரரிடம் இருந்து முன்பணம் வேறு வாங்கியாயிற்று, அந்த வீட்டைக் காலி செய்ய வேண்டும். அது இல்லாமல், போலிஸ் வேறு இவனை அழைத்து வந்து விட்டதை அறிந்த வீட்டுக்காரர், என்ன சொல்கிறாரே தெரியவில்லை. பிள்ளை, மனைவி, அம்மா, தங்கை என எங்கே செல்வார்கள் என நினைத்துப் பார்க்கிறான்.

பிடிக்க வேண்டும் என்பதற்காக பிடித்துக் கொண்டு வந்திருப்பதைப் போல, அடிக்க வேண்டும் என்பதற்காக அங்கே இருக்கும் சுவர் கடிகாரம் மணி அடித்து ஓய்கிறது.நல்லவேளையாக, ஒரு காவல்காரன் இவனுக்கு உதவி செய்கிறான். அவன் குடும்பம் பற்றிய தகவல்களை அறிந்து அவனிடம் சொல்கிறான். அவன் இங்கே வந்து இருப்பதற்கான காரணமும் பெரிதாக ஒன்றுமில்லை. அதை அறிந்த அவன் மனம் வேதனை அடைகிறது.

இப்படி நினைத்துப் பார்க்கிறான், "குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது நடை மெலிந்து நலிவுறும் எங்களின் நிலைமை. அதனால்தான் சொல்கிறோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று. குடையை மட்டுமல்ல, குஞ்சரத்தையும் சேர்த்தே என்கிறது மனம். "

********

அதிகாரத்தாலும், ஆட்சிப் பீடங்களாலும் நசுக்கப்படும் ஒரு எளிய  மனிதனின் கதை. படிக்க வேண்டிய நாவல்.


2 comments:

Chellappa Yagyaswamy said...

கதைச் சுருக்கமே மனதை உருக்குகிறதே! நூல் முழுதையும் படிக்கவேண்டும். புத்தகக் கண்காட்சியில் கிடைக்கக்கூடும்.
தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது நியாயமே!

இளங்கோ said...

@Chellappa Yagyaswamy

ஆமாங்க, தமிழ் பேசுபவனாக இருப்பது மட்டுமே பிரச்சினையாக இருக்கிறது. பக்கத்தில் உட்கார்ந்து ஒருவர் கதை சொல்வது போல இருக்கும். அதுவும் நாவலில் வரும் அம்மாவைப் பற்றிய நினைவாக வரும் பகுதியைப் படிக்க வேண்டும்.

நன்றிங்க

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...