Wednesday, September 22, 2010

பாதி உடல் தங்கமாக அலையும் நரி.. !

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் உப பாண்டவம் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கதை நாம் ஏற்கனவே கேட்ட கதைதான். அந்தக் கதை இதோ மீண்டும்.

கொடும் பஞ்சம் சூழ்ந்த முன்னொரு காலத்தில், ஒருவன் தன் மனைவி மகன் மருமகளோடு ஒரு ஊரில் வசித்து வந்தான். பஞ்சத்தால் எதுவும் கிடைக்காத ஒரு நாளன்று வெளியே சென்ற அவன் கொஞ்சம் சோள தானியத்தோடு தன் வீட்டுக்கு வருகிறான். அவன் மனைவி அதை அரைத்து மாவாக்கி கஞ்சி சமைக்கிறாள். சமைத்த பின்னர் அதை அருந்தும்பொழுது ஒரு துறவி பசியால் அவன் வீட்டுக்கு வருகிறார். துறவியின் பசியை அறிந்த அவன் தனக்கான உணவின் பங்கை அவருக்கு கொடுக்க, அதைத் துறவி அருந்துகிறார். மீண்டும் அவர் பசியடங்காமல் இருக்க, மனைவி மகன் மற்றும் மருமகள் ஆகியோரும் தங்கள் பங்கை அந்த துறவிக்கு அளிக்க பசியடங்கிய அவர் அந்த இடத்தை விட்டுப் போகிறார்.

இவர்களின் செயலால் மனம் மகிழ்ந்த தேவதை ஒன்று இனி அவர்கள் எப்போதும் செல்வத்தில் திளைப்பார்கள் என வரம் தந்து விட்டுச் செல்கிறது. அப்பொழுது அங்கே வந்த நரி ஒன்று, சோளம் அரைத்த இடத்தில் படுத்துப் புரள அதன் உடல் பாதி தங்கமாக மாறிவிடுகிறது. எந்தப் பிரதிபலனும் இல்லாமல் தானம் தரும் யாக சாலைக்குச் சென்றால் தன் மீதிப் பாதி உடல் தங்கமாகும் என்ற நம்பிக்கையில், இன்னும் அந்த நரியானது பாதித் தங்கமான தன் உடலுடன் அலைந்து கொண்டிருக்கிறது.

'அலைந்து கொண்டே இருக்கிறது நரி' என கதையை முடித்திருப்பார் எஸ்.ராமகிருஷ்ணன்.

கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் அந்த நரி எங்காவது நம்மைச் சுற்றிக் கொண்டு கூட இருக்கலாம் !!. பெரிய தான தர்மங்கள் வேண்டாம். அதற்காக நேரம் ஒதுக்க வேண்டாம். நாம் போகும் வழியில் சின்ன சின்ன உதவிகள் செய்யக் கூட மறந்து போனது எதனால்?.

சாலையைக் கடக்க ஒரு மூதாட்டி நின்று கொண்டிருக்கும்பொழுது இன்னும் சேர்த்து ஆக்சிலாட்டரை முறுக்க விளைவது எதனால் ?. படிக்கத் தெரியாதவர்கள் பேருந்து வழித்தடம் கேட்டால் கோபம் வருவது எதனால்?. பேருந்தில் குழந்தையோடு ஒருவன்/ஒருத்தி நின்று கொண்டிருக்கும் போது முகத்தை வேறெங்கோ செலுத்துவது எதனால்?. ஒரு கல்லோ முள்ளோ கிடந்தால் அதைக் கடந்து போவது எதனால்?. அலுவலகத்தில் யாரேனும் சந்தேகம் கேட்டால் தெரிந்திருந்தாலும் நேரமில்லை எனச் சொல்வது எதனால்?.

இந்த சின்ன உதவிகள் அவர்களுக்கு அந்த நேரத்தில் மிகப் பெரிதாக இருக்கும். இதனால் என்ன பயன்? .

போன வாரம் பேருந்தில் வரும்பொழுது, பேருந்து கிளம்பி இரண்டு நிறுத்தங்கள் தாண்டி ஒரு முதியவர் ஏற அவருக்கு நான் இடத்தைக் கொடுத்தேன். இன்னும் இரண்டு நிறுத்தங்கள் தாண்டி குழந்தையோடு ஒருவர் ஏற அந்தக் குழந்தையை முதியவர் வாங்கி வைத்துக் கொண்டார். என்னைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினார்.

நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பினனால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம்.

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது !.

9 comments:

சசிகுமார் said...

கதையில் உள்கருத்து மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்.

Chitra said...

நீங்கள் ஒரு உதவி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக இன்னொருவருக்கு அது திரும்பச் செய்யப்படும். அது ஒரு சங்கிலி மாதிரி. ஏன் பினனால் நீங்கள் கூட அந்த சங்கிலியால் பயன் அடைபவராக இருக்கலாம்.

......பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் மனங்கள் வாழ்க!

இளங்கோ said...

// சசிகுமார் said...
கதையில் உள்கருத்து மிக அருமை நண்பா வாழ்த்துக்கள்.//
நன்றி சசிகுமார்.

//Chitra said...
......பிரதிபலன் எதிர்பாராமல் உதவும் மனங்கள் வாழ்க! //
நன்றி சித்ரா அக்கா.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் சகோதரம்...
தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Gnana Prakash said...

உண்மை இளங்கோ . நல்ல பதிவு

தியாவின் பேனா said...

வாழ்த்துக்கள்

இளங்கோ said...

@ ம.தி.சுதா

ம.தி.சுதா தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்.

@ Gnana பிரகாஷ்

நன்றி பிரகாஷ்.

@ தியாவின் பேனா

தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி தியாவின் பேனா.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

ஹி ஹி... இந்த சாமக் கோடங்கி எப்போதும் கொஞ்ச லேட்டுதான்.. நல்ல சிந்தனைகளை போகிற போக்கில் பதித்து விட்டுச் செல்லும் உங்களைப் போன்றோர் நாட்டுக்கு நிறைய தேவை இளங்கோ..

ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்ததும் உங்களை நேரில் சந்திக்கிறேன்... (இந்த இன்டலி இல எப்படி அன்லைக் ஒட்டு விழுதுன்னே தெரியலை நண்பரே..)அதா எப்படி மாத்துரதுன்னும் தெரியலை..

மற்றபடி நாவல்களில் அதிகம் மூழ்கி விட்டாற்போல..? புகைப்படங்கள் ஒன்றையும் காணவில்லையே...?

இளங்கோ said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

// ஹி ஹி... இந்த சாமக் கோடங்கி எப்போதும் கொஞ்ச லேட்டுதான்.. நல்ல சிந்தனைகளை போகிற போக்கில் பதித்து விட்டுச் செல்லும் உங்களைப் போன்றோர் நாட்டுக்கு நிறைய தேவை இளங்கோ.. //

லேட்டா வந்தாலும் உங்கள் கருத்துக்கள் எனக்கு தேவை. :)

//ஜெர்மனியில் இருந்து திரும்பி வந்ததும் உங்களை நேரில் சந்திக்கிறேன்... (இந்த இன்டலி இல எப்படி அன்லைக் ஒட்டு விழுதுன்னே தெரியலை நண்பரே..)அதா எப்படி மாத்துரதுன்னும் தெரியலை..//

கண்டிப்பா சந்திப்போம் பிரகாஷ். ஜெர்மனி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

// மற்றபடி நாவல்களில் அதிகம் மூழ்கி விட்டாற்போல..? புகைப்படங்கள் ஒன்றையும் காணவில்லையே...? //
புகைப்படங்கள் போடலாம் என்றுதான் இருந்தேன். அவசரத்தில் மறந்து விட்டேன்.

Post a Comment