Thursday, September 16, 2010

கஞ்சி குடிப்பதற்கு இலார் - வீணாகும் உணவு தானியங்கள்

இரவு மீதமான இரண்டு இட்லிகளை, காலையில் வந்து பசிக்கு கேட்கும் பிச்சைக்காரனுக்குப் போடாமல், சாக்கடையிலோ அல்லது குப்பையிலோ கொண்டுபோய்க் கொட்டும் செயலுக்கு நிகரானது வீணாகும் உணவு தானியங்களை வறுமையால் வாடுவோருக்கு அளிக்காமல் வீணாக்குவது.

சரி அந்த தானியங்களை என்ன அவர்கள் காசிலா வாங்கினார்கள். ஒரு லிட்டர் பெட்ரோல் அடித்தால் வரி, தலை வலிக்கு மாத்திரை வாங்கினால் வரி, சோப்பு வாங்கினால் வரி என எல்லாவற்றிலும் வரியை வாங்குகிறார்கள். அப்புறம் அதுவும் பத்தவில்லை என்று, எங்கள் மக்களைக் காண்பித்து 'எங்களுக்கு கடன் கொடுங்கள்' என்று உலக வங்கிகளிடமும் வாங்கி விடுகிறார்கள். ஆக இந்த பணத்தை வைத்து அவர்கள் எங்கள் விவாசாயிகளிடம் தானியங்களை பெரிய கொள்முதல் பண்ணி வாங்கி விடுகிறார்கள். (இதில் எத்தனை பேர் ஊழல் செய்கிறார்களோ).வாங்கிய தானியங்களை வைத்து பாதுகாக்க போதுமான கிடங்குகள் இல்லை என்று சொல்லுகிறார்கள். ஒரு அமைச்சர் வருகிறார் என்றால் ஒரு வாரத்தில் இடம் பிடித்து, பெரும் மேடை அமைத்து, புதிய சாலை போட்டு, தோரணம் கட்டி அவரை வரவேற்க முடிகிற இவர்களால் ஒரு கிடங்கை அமைக்க முடியவில்லை என்பது எப்படி இருக்கிறது?.

சரி அப்படிதான் கிடங்கு கட்ட இடமில்லை !. பணம் இல்லை !. நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். ஆனால் அவற்றை வீணாகாமல் ஏழை மக்களுக்கு அளிப்பதில் என்ன கஷ்டம். தேர்தல் வரும் நேரங்களில் மட்டும் ஏழை மக்களைக் காப்பாற்றுவேன் என்று தொண்டை வரள நீங்கள் கத்துவது வெறும் வாய்ப் பேச்சு மட்டும்தானே?. அடுத்த தேர்தல் வந்தால் திரும்பவும் பேசுவீர்கள், நாங்களும் எந்தக் கொள்ளியில் எது நல்ல கொள்ளி எனத் தெரியாமல் வாக்களிப்போம்.

சாப்பிடும் போது இரண்டு பருக்கை கீழே சிந்தினால் அடிக்க வரும் எங்கள் தாய், தந்தையர் இத்தனை தானியங்கள் வீணாவது தெரியாமல்தான் இருக்கின்றனர் அமைச்சர்களே. அதுதானே உங்களுக்கும் நல்லது, அடுத்த தேர்தலைச் சந்திக்க.

'கஞ்சி குடிப்பதற்கு இலார்.. அதன் காரணங்கள் என்ன என அறியும் அறிவும் இலார்.. ' என வருந்திப் பாடிவிட்டு போய்விட்டார் எங்களுக்காக வருத்தப்பட்ட கவிகளில் ஒருவர். எங்களுக்கு உங்கள் அறிக்கைகள் புரியாது. விவாதங்கள் புரியாது. ஏனெனில் நாங்கள் படிக்காதவர்கள், இன்னும் ஏழையாகவே கிராமத்திலும், நகரத்திலும் வசித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் தொலை நோக்கு (!!) பார்வைகளுக்கு பசித்திருக்கும் எங்களின் வாடிய வயிறுகள் தெரியப் போவதில்லை.

10 comments:

சசிகுமார் said...

அவுங்களுக்கு என்ன நாம தானே கஷ்ட்ட படுறோம்

Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க...... ஆனால், புரிய வேண்டியவங்க இன்னும் புரிந்து கொள்ளாமல் உணவு தானியங்களை வீணாக்கி கொண்டு இருக்கிறார்களே!
ம்ம்ம்ம்ம்ம்.... நேரம் இருக்கும் போது:

http://konjamvettipechu.blogspot.com/2010/09/blog-post_07.html வாசித்து பாருங்க.

Chitra said...

I checked your blog post from the comment that you have left for my blog post. Thank you for visiting my blog.
You have a very nice blog. Following from now on. Best wishes!

இளங்கோ said...

@ சசிகுமார்
ஆமாங்க சசி, நாமதான் புலம்பிக்கணும். நம்ம கஷ்டங்கள் அவர்களுக்கு ஒரு நாளும் தெரியப் போவதில்லை.

இளங்கோ said...

@ சித்ரா
பலமுறை உங்கள் பதிவுகளைப் படித்திருக்கும் எனக்கு, பதிவுகளில் காணும் நகைச்சுவை எனக்கு பிடிக்கும். ஆனால், ஒரு பின்னூட்டம் கூட இட்டதில்லை. எனது பதிவையும் படித்து பின்னூட்டம் இட்டு என்னை ஊக்கப் படுத்தியமைக்கு நன்றிகள் பல.
நீங்கள் குறிப்பிட்ட பதிவையும் படித்து விட்டேன். பார்க்கலாம், நம் அரசியல் வாதிகள்(வியாதிகள்) என்ன செய்கிறார்கள் என்று?.

சௌந்தர் said...

பசியை பற்றி அவர்களுக்கு தெரியாது, அவர்கள் பசியால் கஷ்டப்பட்டார்கள் என்றால் உணவின் அருமை அவர்களுக்கு தெரியும்

இளங்கோ said...

@ சௌந்தர்
தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் என் நன்றிகள்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தினம் தூங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் தூங்கப் போகும் வரை எழுபத்து எட்டு பேர் உதவிக்கு இருக்கிறார்கள். கவலை என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தவர்கள், அவர்களிடம் போய் பசி பட்டினி, உணவு விரயம் என்றெல்லாம் பேசினால்.... போங்க இளங்கோ.. காமெடி பண்ணிக்கிட்டு.. நாமளும் ரொம்ப நாளா தோண்டத் தண்ணி வற்றுகிற மாறி கத்திகிட்டு இருக்கோம்.. என்ன பலன்..? நாம தான் மாற்றணும் நண்பரே..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

//Chitra said...

நல்லா எழுதி இருக்கீங்க...... ஆனால், புரிய வேண்டியவங்க இன்னும் புரிந்து கொள்ளாமல் உணவு தானியங்களை வீணாக்கி கொண்டு இருக்கிறார்களே!
ம்ம்ம்ம்ம்ம்.... நேரம் இருக்கும் போது:

http://konjamvettipechu.blogspot.com/2010/09/blog-post_07.html வாசித்து பாருங்க.
//

சித்ரா அக்கா.. இளங்கோவைப் பற்றி நான் ஏற்கனவே நிறைய பேருக்குச் சொல்லி உள்ளேன்.. அவரது கருத்துக்கள் அமைதியாக உக்கார்ந்து படிக்க எதுவாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறேன்.. என்னுடைய இனிய நண்பராகவே அவர் இருக்கிறார். பல நல்ல காரியங்களை அமைதியாக செய்து வருகிறார். அவரது எழுத்துக்களை நிறைய பேருக்குக் கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி..

இளங்கோ said...

@ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி

//தினம் தூங்கி எழுந்ததிலிருந்து மீண்டும் தூங்கப் போகும் வரை எழுபத்து எட்டு பேர் உதவிக்கு இருக்கிறார்கள்// மீதி ??

//சித்ரா அக்கா.. இளங்கோவைப் பற்றி நான் ஏற்கனவே நிறைய பேருக்குச் சொல்லி உள்ளேன்.. அவரது கருத்துக்கள் அமைதியாக உக்கார்ந்து படிக்க எதுவாக இருக்கும் என்றும் சொல்லி இருக்கிறேன்.. என்னுடைய இனிய நண்பராகவே அவர் இருக்கிறார். பல நல்ல காரியங்களை அமைதியாக செய்து வருகிறார். அவரது எழுத்துக்களை நிறைய பேருக்குக் கொண்டு செல்லுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.. நன்றி.. //

நன்றி பிரகாஷ்.

Post a Comment