Thursday, May 19, 2011

எனது டைரியிலிருந்து - 2

குறையொன்றுமில்லை
சு.வெங்குட்டுவன் (ஆனந்த விகடன்)

வழக்கம்போல் இம்முறையும்
வானம் பொய்த்திருக்கும்

இருக்கும் தண்ணிக்கு
வெச்சுள்ள கத்தரியில்
இலைச்சுருட்டை விழுந்திருக்கும்

நிலவள வங்கியின்
நகை ஏல அறிவிப்பு
தபால்கார்டில் வந்து சேரும்

காதுகுத்தும் பிள்ளைக்கு
தோடு போடவேண்டுமென
இளைய தங்கை சொல்லிப்போவாள்

முகங்கண்ட மறுகணமே
அம்மாவென குரலெழுப்பும்
காளைகளை விற்றுவிட்டு
ஊர் திரும்புவாய்

நீ விரும்பிய பெண்
தான் விரும்பும் புருசனுடன்
பஸ் ஸ்டாண்டில் எதிர்ப்படுவாள்

திரும்பி நிற்கும்
உன்னிடத்தே
வலிய வந்து உரையாடி
சௌக்கியமா எனக் கேட்பாள்

நல்ல சௌக்கியம் என்று சொல்.

**********************************************************************

பாலபாரதி
ஆனந்த விகடன்

ஜிலீர்

ஆசிரியராகும் கனவு
உடைந்து நொறுங்கியது
அரசு மது பாட்டில்களை
அடுக்கி வைக்கும்
வேலையில்...

**********************************************************************

மறதி

கற்புக்கரசி
கண்ணகி, சீதை
நளாயினி
பெயரெல்லாம்
நினைவில் நிற்கிறது

கற்றுக்கொடுத்த
தமிழ் ஆசிரியை
பெயர்தான்
மறந்துவிட்டது

**********************************************************************

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்
கைப்பிள்ளையின்
கால் கொலுசைத்
தடவியபடி!

**********************************************************************

அடிதடி விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவமனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழி விடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

**********************************************************************

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்
காம்ப்ளான்
பாட்டில்கள்....

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக !

**********************************************************************

4 comments:

  1. கவிதைகள் ஆறும்
    மிக அருமை அருமை
    மீண்டும் மீண்டும்
    படித்து ரசித்தேன்
    தொடர்ந்து தர வேண்டுகிறேன்

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி. மாற்று: சிறப்பு!

    ReplyDelete
  3. ஆறும் ஆறு முத்துத் தொகுப்புகள். அருமை. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஆனந்த விகடனில் வரும் கவிதைகளுக்காக 15 ரூபாய் கொடுக்க (வேறு என்ன உருப்படி?) மனம் வரவில்லை.

    ReplyDelete