Sunday, August 1, 2010

சினிமா - விர்டியானா (Viridiana)


நானும் என் நண்பனும் சென்னையில் இருந்த நாட்களில், ரயில் நிலையப் படிகளில், தி.நகர். கடை வீதிகளில், பேருந்து நிறுத்தங்களில் என எங்கெங்கு பார்த்தாலும் கையேந்தி நிற்கும் பிச்சைக் காரர்களைப் பற்றி விவாதித்தது உண்டு. நண்பன் சமூகவியலில் டிப்ளமோ பண்ணிக் கொண்டிருந்தான். எவ்வளவோ பெரிய ஆட்கள், பெரிய முதலாளிகள் சென்னையில் இருக்கிறார்கள், கொஞ்சம் உதவி செய்தால் இவர்களும் நிம்மதியாக வாழலாமே என்று அவனிடம் கூறினேன். அதற்கு அவன் பின்வருமாறு பதில் அளித்தான்; 'நிறைய தொண்டு நிறுவனங்கள் இருக்குது. ஆனால், பிச்சை எடுத்து வாழ்பவர்கள் சொகுசு வாழ்க்கை போல வாழ்ந்து பழகி விட்டார்கள். கையில் கொஞ்சம் ரூபாய் இருந்தால், கஞ்சா, பீடி, தண்ணி என அடிக்க கிளம்பி விடுகிறார்கள்(பெண்களும்). இவர்களைக் கொண்டு போய் தொண்டு இல்லங்களில் சேர்த்து விட்டால், மீறிப் போனால் ஒரு வாரம், ரெண்டு வாரம் இருப்பார்கள். அதற்க்கு அப்புறம் கெளம்பிடுவாங்க. ஏன்னா, அங்கே உணவு கிடைத்தாலும் காசு கிடைக்காது, சிறு வேலைகளும் செய்ய வேண்டும். இதில் கொடுமை என்னவெனில், பிள்ளைகளை ஊனமாக்கி பிச்சை எடுப்பது. அவர்களாக திருந்தினால்தான் உண்டு' என்றான்.

அவன் சொல்லுவதை நான் அப்படியே ஏற்றுக்கொண்டேன். ஏனெனில், நாங்கள் பேசிக் கொண்டிருந்த அந்த மாதத்தின் முதல் நாளில், வீதியில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியை ஒரு தொண்டு நிறுவனத்தில் கொண்டு போய் சேர்த்திருக்கிறான். ஒரு வாரம் கழித்து யாரிடமும் சொல்லாமல் அந்த மூதாட்டி அங்கே இருந்து போய்விட்டது. அங்கே காசு கிடைக்காததே காரணம்.

விர்டியானா படம் பற்றி இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கயோ படித்திருந்தேன். இன்று காலை படத்தைப் பார்த்தும் விட்டேன். படத்தின் கதை சாதரணமானதாக இருந்தாலும், படத்தின் தாக்கம் மிகப் பெரியது.

ஒரு பள்ளியில் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் சிஸ்டர்.விர்டியானாவுக்கு அவள் மாமாவிடமிருந்து கடிதம் வருகின்றது, அவளை வரச் சொல்லி. இத்தனை நாட்களாக அவள் மாமாவைச் சந்தித்ததே இல்லை. எனவே போக மறுக்கிறாள். தலைமை சிஸ்டர், 'நீ கண்டிப்பாக போக வேண்டும். நீ இங்கே தங்கி இருக்கும் அனைத்துச் செலவுகளையும் அவர்தான் பார்த்துக் கொள்ளுகிறார்' எனச் சொல்ல, விர்டியானா மாமாவைப் பார்க்க கிளம்புகின்றாள்.



மாமாவின் மனைவி இறந்து விட்டாள். வயது சுமார் ஐம்பது இருக்கலாம். அவரின் மகனிடம் தொடர்பு இல்லை. பணிப்பெண் ரோமனா, அவள் மகள் ரீட்டா, பணியாளர்கள் இருவர் எனத் தனிமையில் வாழ்ந்து வருகிறார். மிகப் பெரிய பண்ணை வீடும், நிலங்களும் இருக்கின்றன. மாமாவைப் பார்க்க வந்த விர்டியானா இன்னும் சில நாட்களில் திரும்பி விடுவேன் என்கிறாள். ஆனால் மாமாவுக்கோ தனிமையில் இருப்பது பிடிக்காமல் விர்டியானாவைக் கல்யாணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சிஸ்டர் ஆகப் பணிபுரியும் அவள் மறுக்கிறாள்.

ஓரிரவு, அதாவது விர்டியானா ஊருக்கு கிளம்பும் நாளுக்கு முன்தினம் காப்பியில் தூக்க மாத்திரை கலந்து பணிப்பெண் கொடுக்கிறாள். மயங்கி கிடக்கும் அவளை அறைக்கு எடுத்துசெல்லும் அவர், குற்ற உணர்ச்சியில் எதுவும் செய்யாமல் திரும்பி விடுகிறார். ஆனால், காலையில் தூக்கம் கலைந்து எழும் அவளிடம் 'நான் உன்னை அடைந்து விட்டேன். இனிமேல் நீ காண்வென்ட்கு திரும்ப முடியாது' என்கிறார். அவள் எதையும் கேட்காமல், கிளம்புகிறாள். கிளம்பும்பொழுது, 'நீ என்னை மன்னிப்பாயா' எனக் கேட்கிறார். அவள் அழுதுகொண்டே சென்று விடுகிறாள்.




அந்த ஊரின் பேருந்து நிலையத்தில் அவள் பேருந்து ஏறப் போகும்பொழுது, 'ஒரு தவறு நிகழ்ந்து விட்டது' எனக் கூறி அழைத்துச் செல்கிறார்கள். அங்கே சென்றால், அவள் மாமா தூக்கில் தொங்குகிறார். கொஞ்ச நாட்கள் கழித்து, தலைமை சிஸ்டர் வந்து 'திரும்பவும் நீ அங்கே வர வேண்டும்' எனச் சொல்ல, அவள் மறுத்து விடுகிறாள். இறந்து போன மாமாவின் மகனும் தன் காதலியுடன் அங்கேயே வந்து தங்கி கொள்கிறான். கொஞ்ச நாளில் அவன் காதலி பிரிந்து சென்று விடுகிறாள். அதற்க்கு அவள் சொன்ன காரணம் 'நீ விர்டியானாவை காதலிக்கிறாய்' என்பது.

விர்டியானாவோ தன் சேவை நோக்கத்தில் குறியாக இருக்கிறாள். ஊரில் உள்ளே பிச்சைக் காரர்களைத் அழைத்து வந்து, ஒரு இல்லம் மாதிரி ஆரம்பிக்கிறாள் மாமாவின் வீட்டை ஒட்டி இருந்த ஓர் அறை ஒன்றில். ஒன்றாக இருக்கும் அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடக்கிறது. கையில் ஒரு தொற்று நோய் போல வந்த ஒருவனை அடித்து விரட்டுகிறார்கள். சிறு சிறு வேலைகளைச் செய்ய விர்டியானா அவர்களைப் பழக்கப் படுத்துகிறாள். இவர்களின் தொந்தரவு தாங்க முடியாமல், அங்கே பணி செய்து கொண்டிருக்கும் பணியாளர்களும் விலகி விடுகிறார்கள். ரோமனா மட்டும் தன் மகளுடன் அங்கேயே வசிக்கிறாள்.

ஒருநாள், வழக்கறிஞரைக் காண மாமாவின் மகன் ஜார்ஜ், விர்டியானா, ரோமனா மற்றும் ரீட்டா அனைவரும் வீட்டை பூட்டி விட்டு கிளம்பி விடுகின்றனர். அடுத்த நாள் காலையில் தான் வருவோம் எனக் கூறி விட்டு செல்கின்றனர். சந்தோசபட்ட பிச்சைக் காரர்கள், வீட்டுக்குள் சென்று எல்லாவற்றையும் எடுத்துப் பார்க்கின்றனர். இரவு விருந்தும் அங்கேயே நடக்கிறது. டேபிள் முழுவதும் உணவுகளும், மது வகைகளும் நிரம்பி இருக்க எல்லாரும் சந்தோசமாக இருக்கின்றனர். சிறு சிறு சண்டைகளும் நடக்கின்றன. இதில் கண் தெரியாத ஒருவனின் மனைவியை, இன்னொருத்தன் தள்ளிக் கொண்டு போக, இதை அவனிடம் இன்னொருவன் சொல்லிவிட, அவன் கோபத்தில் டேபிளில் இருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்குகிறான்.



கொஞ்ச நேரத்தில், அடுத்த நாள் வருவோம் என்று சொன்னவர்கள் அந்த இரவே அங்கே வந்துவிடுகிறார்கள் அப்பொழுது. ஜார்ஜைக் கண்டதும் ஒவ்வொருவராக வெளியேறுகின்றனர், மது குடித்த மயக்கத்தில். இன்னொரு அறைக்கு செல்லும் ஜார்ஜை மறைந்து இருந்த இரண்டு பிச்சைகாரர்கள் தலையில் அடிக்க, அவனும் மயங்கி விழ, அங்கே வருகிறாள் விர்டியானா. விர்டியானாவைக் கண்டதும் அவர்கள் இருவரும், அவளை அடைய முயல்கிறார்கள். அவள் மயங்கி கட்டிலில் விழுகிறாள். மயக்கம் தெளிந்த ஜார்ஜ், இன்னொரு பிச்சைகாரனிடம், விர்டியானா மேல் கிடக்கும் அவனை கொன்றால் உனக்கு பணம் தருவேன் எனக் கூற, அவனும் இன்னொருவனை அடித்துக் கொல்கிறான்.

போலீசைக் கூட்டி வரச் சென்ற ரோமனாவும், ரீட்டாவும் திரும்பி வர அடுத்த காட்சிக்கு படம் நகர்கிறது. ஜார்ஜை விட்டு, விலகி விலகிப் போகும் விர்டியானா, தன் மீது தானே விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளைத் துறந்து விட்டு ஜார்ஜுடன் நெருங்கிப் பழகுவதுடன் படம் முடிவுக்கு வருகிறது.



சிறுமியான ரீட்டா, எப்பொழுதும் ஒரு மரத்தினடியில் கயிறு தாண்டிக் குதித்து விளையாடிக் கொண்டிருப்பாள். அந்தக் கயிற்றில்தான் மாமா தூக்கு போட்டு இறந்திருப்பார். அதே கயிற்றில் திரும்பவும் விளையாடுவாள் ரீட்டா. அதே கயிற்றை, விர்டியானா கூட்டி வரும் பிச்சைக்காரன் ஒருவன் இடுப்பில் கட்டிக்கொள்வான். விர்டியானாவை அந்தப் பிச்சைக்காரன் பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் பொழுது அந்தக் கயிறு விர்டியானவின் கையில் இருக்கும்.

அந்தப் பிச்சைகாரர்கள் உணவருந்தும் அந்தக் காட்சியை, இயேசுவின் இரவு விருந்தை நினைவுக்கு கொண்டுவருவது போல இருக்கும். அவரையும் சிலுவை சுமக்க வைத்தார்கள். அதற்க்கு பதிலாக, இத்தனை நாட்களாக கட்டுப்பாடுடன் இருந்த விர்டியானவை, அவள் சோறு போட்டு தங்க வைத்திருந்த ஒருவனே அடைய முயல்வான்.

படத்தின் இறுதியில், ரீட்டா பழைய பொருட்கள் எரிந்து கொண்டிருக்கும் தீயில், விர்டியானா வைத்து வணங்கிக் கொண்டிருந்த இயேசுவின் முள் கிரீடத்தை வைத்து விளையாடும்போது, அதில் இருந்த முள் குத்திவிட, தீயில் வீசி விடுவாள். இனி, ரீட்டா போன்ற சிறுமிகள் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள், விர்டியானாவைப் போல.



ரோமனா, ஜார்ஜ் மற்றும் விர்டியானா மூவரும் சீட்டு விளையாடுவதுதான் இறுதிக் காட்சி. நமது வாழ்க்கையும் சீட்டாட்டம் போலத்தான், நாம் எடுக்கும் வரை சீட்டில் இருப்பது என்ன என நமக்குத் தெரியாவிட்டாலும் சீட்டுகள் நம்  கையில்தான் இருக்கின்றன.

9 comments:

  1. I see !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet's best Social community. www.jeejix.com .

    ReplyDelete
  2. Hai Elango, nalla padam, nalla vimarsanam ipothaan akthikaipaandiyanum ithai eluthirukkaar.... avasiyam paarkkiren. muthali cd yai thedanum. hi hi hi.....

    ReplyDelete
  3. முரளி, கண்டிப்பாக பாருங்கள்.. தவற விடக் கூடாத படம்..

    ReplyDelete
  4. சொல்லீடிங்க இல்ல.. உடனே பாத்துடறோம்... ரொம்ப நன்றி இளங்கோ...

    ReplyDelete
  5. //பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

    சொல்லீடிங்க இல்ல.. உடனே பாத்துடறோம்... ரொம்ப நன்றி இளங்கோ... //

    நன்றி பிரகாஷ்

    ReplyDelete
  6. இளங்கோ, மேற்கண்ட பதிவைப் படித்ததும் எனக்கு ஒன்று நன்கு புரிந்தது. மனிதர்களில் பலபேர் தன் குணத்தை எப்போதும் மாற்றிக் கொள்வதே கிடையாது. நான் என் அனுபவத்தில் அறிந்து கொண்டது. மாறிபவர்கள் மாற்றங்களுக்கு தங்களை தயார் செய்து கொள்கின்றார்கள். விர்டியானாவின் முயற்சியைப் போல பலரும் இங்கே செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஆனால் பெரும்பாலானவை மாறப்போவதில்லை நமது சில மூடப்பழக்க வழக்கங்களைப் போல

    ReplyDelete
  7. @ தங்கவேல் மாணிக்கம்
    ஆமாம் அண்ணா.

    ReplyDelete