Friday, October 15, 2010

எல்லாம் யோசிக்கும் வேளையில்...


புயலிலே ஒரு தோணி நாவலைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. எல்லாக் கதைகளையும் படமாக எடுத்து விட்டார்கள், ஒரு கதையும் கிடைப்பதில்லை எனப் பலர் சொல்லி நீங்கள் கேட்டிருக்கலாம். 1984 வருடத்தில் ந.முருகேசபாண்டியன் என்பவர் ப.சிங்காரம் அவர்களை நேர்கொண்டு பேசியுள்ளார். புயலிலே ஒரு தோணி புத்தகத்தில் இவர்களின் பேச்சு இடம் பெற்றுள்ளது.

அந்தப் பேட்டியில் அவர் பேசியுள்ள சிலவற்றை இங்கே தருகிறேன்;

"புயலிலே ஒரு தோணி நாவலைப் போட்டால் இன்னிக்கி யாரு காசு கொடுத்து வாங்கி படிப்பாங்க.. இங்க சீரியசாப் படிக்கிற வழக்கமே இல்லாம போச்சு. சீரியசா எழுதத்தான் எவ்வளவோ விசயமிருக்கு. இன்னக்கி நம்ம ஆளுக இல்லாத இடம் உலகத்தில் எங்க இருக்கு? ஆனால் போன இடத்துல என்ன இருக்குன்னு கூர்மையாப் பார்க்க மாட்டாங்க.. அப்படிப் பார்த்திருந்தாங்கன்னா இன்னக்கித் தமிழில ஏகப்பட்ட புத்தகம் வந்திருக்கும்... பாருங்க புயலிலே ஒரு தோணி நாவல்ல தோணில போறதப்பத்தி ஒரு இடம் வருது. அது நாங்க யுத்த நேரத்ல இந்தோனேஷியாவாலிருந்து மலேயாவுக்கு சரக்குகளோட போனதுதான். நாவல் எழுதறப்போ தோணுன சில சந்தேகங்களைக் கூட வந்தவங்க கிட்ட கேட்டேன். ஆமா போனோம் வந்தோம். கூட யாரு வந்தா, என்ன நடந்ததுன்கிறதெல்லாம் ஞாபகம் இல்லேன்னுட்டாங்க. அது எதுக்கு... வெள்ளைக்காரன் மூணு வருஷம் நம்ம நாட்ல வந்து தங்கினாப் போதும். நம்ம வாழ்க்கையை வச்சு நாவல் எழுதிப் போடுவான். மதுரை டவுன்ஹால் ரோட்ல சாயங்காலம் நடக்கிறதப் பார்த்திங்களா? மூணு சீட்டு போடுறவன், திரி குத்துறவன், முடிச்சவிழ்க்கிறவன், கூவி ஏலம் போடுறவன், பிராத்தலுக, மாமாகாரனுக... நிறைய எழுதலாம். அதுமாதிரி கீழ மாசி வீதிப் பலசரக்கு கடைகள்.. அது ஒரு தனி உலகம். அங்க நடக்கிறத வச்சு எவ்வளவு எழுதலாம் தெரியுமா? உண்மையச் சொன்னா நம்ம வாழ்க்கையிலதான் எழுத எவ்வளவு விசயமிருக்கு? ஆனால் கூர்மையாகப் பார்த்து எழுதுற வழக்கம் நம்ம ஆளுகளுக்குக் கிடையாது. "

"அப்புறம் எந்த நாவலாக இருந்தாலும், எழுத்தாளன் சொல்லக் கூடிய உலகம் ரொம்பப் புதிதாக இருந்தாலும், அவன் சரியாக ஒழுங்குடன் சொல்லியிருந்தால் அந்த உலகம் வாசிக்கிற யாருக்கும் தெளிவாப் புரியும். அப்படித்தான் நான் சொல்லியுள்ளவை. போர், வெளிநாட்டுச் சூழல் சம்பந்தப்பட்ட விசயங்கள் - தமிழ் ஆளுகளுக்குப் புதிசு என்றாலும் - நிச்சயம் விளங்கும். ஆனா அந்த நாவல் கவனிக்கப்படவில்லை"
Justify Full
நாவலிலிருந்து;

"எல்லாம் யோசிக்கும் வேளையில் உண்பதும் உறங்குவதுமாக முடிகிறது".

******

"நாம் எதை நம்புவது"
"இருள் விலகி ஒளி பிறக்கும் என்பதை"
"ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது"

******

"சந்திப்பதும் பிரிவதும் மனிதனின் தலைவிதி"
"சந்திப்பின் விளைவே பிரிவு..."

******

எஸ். சம்பத்தின் 'இடைவெளி', ப. சிங்காரத்தின் 'புயலிலே ஒரு தோணி', ஜி. நாகராஜனின் 'நாளை மாற்றுமொரு நாளே' ஆகிய மூன்று நாவல்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படுவது உலக இலக்கியத்திற்கு நம்முடைய பெறுமதியான கொடையாக இருக்கும்...

- இந்த மாத குமுதம் தீராநதியில் - சி. மோகன் அவர்கள்.

5 comments:

  1. //"நாம் எதை நம்புவது"
    "இருள் விலகி ஒளி பிறக்கும் என்பதை"
    "ஒளி பிறக்காவிடின், இருளையே ஒளியென நம்புவது"//
    அருமையான வரிகள்! நல்ல அறிமுகம்!

    ReplyDelete
  2. நாவல் அவசியம் படிக்கிறேன் இளங்கோ...கட்டுரை அருமையா இருக்கு ...பதேர் பாஞ்சாலி ரொம்ப மெனக்கெட்டு, நல்லா எழுதி இருக்கீங்க, படமெல்லாம் பிரமாதம்..

    ReplyDelete
  3. நன்றிங்க எஸ்.கே .
    நன்றிங்க ஷஹி .

    ReplyDelete