Tuesday, September 19, 2017

பின்தொடரும் நிழலின் குரல்

அன்புள்ள ஜெயமோகன்,

புத்தக கண்காட்சிகளில் பின்தொடரும் நிழலின் குரல் நாவலை வாங்க விரும்பியதுண்டு. ஆனால், பல வருடங்களாக வாங்கவேயில்லை. சென்ற கோவை புத்தக கண்காட்சியில், முதல் புத்தகமாக வாங்கி உங்களிடம் கையெழுத்தும் பெற்றுக்கொண்டேன். ஒரு நாவலை வாங்குவதற்கும், படிப்பதற்கும் தக்க தருணம் அமையவேண்டும் போலிருக்கிறது.


வாங்கின நாளிலிருந்தே படிக்கத்தொடங்கி, இப்பொழுதுதான் முடித்தேன். இத்தனை நாட்களில் கம்யூனிசம், ரஷ்யப்புரட்சி போன்றவை பற்றி அங்கங்கு கேள்விப்பட்டதுதான். பெரிதாக ஒன்றும் தெரியாமல் தான் இந்நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.
அருணாச்சலம், கே.கே.எம்.. எனத் தொடங்கிய நாவலில், வீரபத்ர பிள்ளை எழுதியதாக வரும் பகுதிகளைப் படிக்கும்பொழுது உண்மையிலேயே மனதில் குழப்பங்கள் தோன்றி குழம்பிப்போனேன். நாவலில் கடைசிப் பகுதியான ‘உயிர்த்தெழுதல்’ படித்த பின்னர்தான் அமைதி ஏற்பட்டது.
விவாதங்களும், சித்தாந்தங்களும் என எவ்வளவோ இருந்தாலும் அவை அறத்தைச் சார்ந்தே இருக்கவேண்டும். போர் என்றாலும் அது அறத்தின் பொருட்டே நிகழ வேண்டும். ‘அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே செல்வத்தை தேய்க்கும் படை’ – அறமில்லையெனில் அது நிலைக்காது எனச் சொல்லும் இக்குறள் நாவலின் முதல் பக்கத்தில் இருந்ததற்கு, இறுதியில் விடை கிடைத்தது.
பால் சக்கரியாவின், ‘அன்னம்மா டீச்சர் பற்றிய நினைவுக் குறிப்புகள்’ என்ற கதையில், அன்னம்மா டீச்சர் இயேசுவை தம்பி என்றே அழைக்கிறார். திருமணமாகாமல் முதிய வயதில் இறக்கும் அன்னம்மா, ஒரு இளைஞனை சந்திக்கிறார். அந்த இளைஞன் இப்படிச் சொல்வதுடன் கதை முடிகிறது. “நன்றாக ஓய்வெடுத்துக்கொள் அக்கா. எனக்கு இன்றும் சக்தியொன்றும் இல்லை. நீ தளர்வுற்று விழும்பொழுது தாங்குவதற்காக மட்டுமே நான் வந்திருக்கிறேன்”. அந்த இளைஞன்தான் இயேசு என கதை முடியும்போது புரியும்.
அதுபோலவே இந்நாவலின் உயிர்த்தெழுதல் பகுதியில், இயேசு எளிமையாக வருகிறார். பகட்டான ஆடைகளோடு, கையில் செங்கோல் ஏந்திக்கொண்டு, புரவிகள் பூட்டிய தேரில் வருவார் என எல்லோரும் எதிர்பார்க்க, அதே கிழிசல் ஆடைகளோடு, காயங்களோடு தோன்றுகிறார். போரால் இறந்த குழந்தைகளை காட்டி, இதுதான் உன் கருணையா என அவர்கள் கேட்கும்பொழுது, அவர் சொல்கிறார்: “தண்டம் என்பது என் நீதியென்றால், இக்குழந்தையின் பொருட்டு இந்த உலகத்தை மும்முறை அழிப்பேன்”. இயேசு அப்படித்தானே இருக்க முடியும். தல்ஸ்தோய், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, காந்தி, புகாரின் போன்றவர்களும் அப்படித்தானே. அவர்களால் அன்பையும், அறத்தையும் சார்ந்திருக்கவே முடியும்.
தோழர் கே.கே.எம்., வீரபத்ர பிள்ளை, அருணாச்சலம், பாஸ்கரன் என நாவலில் வரும் ஆண்கள் சித்தாந்தங்களுடனும், விவாதங்களுடனும் போராடிக் கொண்டிருக்க, நாகம்மை, எஸிலி போன்ற பெண்கள் எளிமையாக அறத்தை பேசுகிறார்கள். ஓரிடத்தில், ‘ஒரு முரடன் ஒரு குழந்தையை அடித்தே கொல்லப் போகிறான். அவனிடம் வாள் இருக்கிறது. நீ தடுத்தால் உன்னையும் கொல்வான். நீ பார்த்துக் கொண்டு இருப்பாயா? ‘ என அருணாச்சலம் கேட்க, நாகம்மை ‘நான் அவனைக் கடிச்சுத் துப்பிர மாட்டேன். நான் போனாலும் பரவாயில்லை.’ என்கிறாள். ‘உன் குழந்தை அநாதை ஆகிடுமே..’ என அருணாச்சலம் திரும்பவும் கேட்க, ‘என் குழந்தைக்கு தெய்வம் துணை’ என்கிறாள்.
மனிதர்களும் புனிதர்களும் பகுதியில், துறவியாகவும், சூதாடியாகவும் வரும் தல்ஸ்தோயுக்கும்
தஸ்தயேவ்ஸ்கிக்கும் இடையேயான உரையாடல் மிகச்சிறப்பு.

==

அன்புள்ள இளங்கோ
அவ்வப்போது வரும் வாசகர்கடிதங்கள் பின் தொடரும் நிழலின் குரலை எனக்கு மீளமீள நினைவுறுத்துகின்றன. நான் எதைக் கண்டடைந்தேன் என. நாவல்களினூடகக் கண்டடைந்தவற்றையே கட்டுரைகளின் வழியாகச் சொல்லமுயல்கிறேன். ஆனால் நாவல்களை வாசித்தவர்கள் கட்டுரைகளில் நான் அவற்றை ஒருபோதும் முழுமையாகவோ நிறைவாகவோ சொல்லவில்லை என்றே சொல்கிறார்கள். நன்றி
ஜெ

No comments:

Post a Comment