Monday, April 25, 2011

சாப்பாடு

இந்தப் பெருநகரத்தில் உணவுக்கு அலைவதென்பது தினசரி வாடிக்கையாகி விட்டது. என்ன செய்தாலும் ஒரு நல்ல உணவகத்தை கண்டு பிடிக்க முடிவதில்லை. அப்படியே இருந்தாலும் மாதத்தில் பெரும் பணம் அதுக்கே கொடுக்க வேண்டிய அளவு விலைப்பட்டியல் இருக்கிறது. அப்படியே நமது பணம் காலியானாலும், அடுத்த நாள் நமது வயிறு ஓர் ஆட்டம் ஆடி நிற்பதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் மீறிப் போனால் மருத்துவமனைக்குச் சென்று காட்டக் கூடிய அளவு நிலைமை மோசம் ஆகலாம்.

சைவ, அசைவ உணவகம் என்று இல்லை. எல்லா இடத்திலுமே நாம் வாயைப் பிளக்கும் அளவுக்கு விலைகள். இதில் அசைவ உணவகம் பக்கம் சென்றால் இப்பொழுது இருக்கும் பெரிய ரூபாய் நோட்டு மதிப்பு இல்லாமல் ஒருவர் பசியாறுவது சிரமம். உணவக முதலாளிகளைச் சொல்லியும் குறையில்லை, குளிரூட்டப் பட்ட அறைகள், வாசலிலேயே சலாம் போடும் பணியாளன்(அந்தக் காலத்து ராஜா உடை முரண்), மேசைக்கு ஒரு ஆள், துடைக்க ஒரு ஆள், குழந்தைகள் விளையாட தனியாக ஒரு இடம், சிறு சிறு தொட்டி அழகுச் செடிகள், கிளம்பும் போது இலவசமாக வைக்கப் படும் வாழைபழம் (ரொம்ப சிறுசாக இருக்கும்), பீடா, இனிப்பு சோம்பு என அவ்வளவையும் அவர்கள் செலவில் செய்ய வேண்டியுள்ளது. இதற்கெல்லாம் சேர்த்து நம்மிடம் அவர்கள் விலைப்பட்டியல் நீட்டத் தானே செய்வார்கள்.



எனவே நண்பர்கள் பேசி, இனிமேல் வெளியில் சாப்பிடக் கூடாதென்றும், வீட்டிலியே நாமே சமைத்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. சமைப்பது, பாத்திரம் கழுவுவது, கடைக்குப் போவது, காய்கறி நறுக்குவது என யார் யார் எந்த வேலை செய்வதென்றும் பிரித்துக் கொண்டோம். அறையுள் உள்ள நால்வரில், எல்லோருமே வேலைக்குப் போவதால் முறை வைத்து சமைப்பது என முடிவானது. ஒரு வாரம் சுமூகமாகப் போனது. உப்போ, காரமோ எதுவும் தெரியாமல் விழுங்கி வைத்தோம். ஆனால் என்ன, இப்போதெல்லாம் வயிறு கடமுடா இல்லை. நாமே சுத்தமாக செய்தது என்று நல்ல விசயங்களும் நடந்தன. இதையெல்லாம் விட, பணம் மிச்சமானது.

அடுத்த வாரத்திலிருந்து, ஒரு நாள் அவன் பாத்திரம் கழுவவில்லை என்பதால், இன்னொருவன் சமைக்கவில்லை என்றும்,.. இன்னொரு நாள் சமைக்க வேண்டியவன் இரவு தாமதமாக வந்ததால் அன்று... என மீண்டும் உணவகங்களை நோக்கி படையெடுத்தோம். ஒரு நாள் சாப்பிடப் போகும்போது, யானையை விட்டு நெற்போர் அடித்த நம் முன்னோரின் வாரிசுகள் நாம் எனச் சொல்ல, நண்பன் என்னை அடிக்க வந்தான். எப்படியோ நமக்கு நாமே திட்டம் கைவிடப்பட்டு, வழமை போல உணவகங்களில் தொடர ஆரம்பித்தோம்.

ஒருநாள், பக்கத்துக்கு அறை நண்பன் அடுத்த வீதியில் ஒரு அய்யர் வீட்டில் சாப்பாடு சுவையாக இருப்பதாகவும், போய் சாப்பிட்டு வாருங்கள் எனச் சொன்னதும் கிளம்பிப் போனோம். அன்று சனிக்கிழமை, அந்த அய்யர் வீட்டில் மதியம் மட்டும் சாப்பாடு கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் நண்பன். நாங்கள் அங்கே போனதும் "கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க" என்றார் ஒருவர். பார்த்தவுடனே அவர்தான் நண்பன் சொன்னவர் என்று தெரிந்தது. உள்ளே இரண்டு சின்ன உணவக மேசையில் எட்டு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் நாங்கள் உள்ளே சென்று அமர்ந்தோம்.




உள்ளே சென்று அமர்ந்ததும் தான் அந்தப் பெரியவரைப் பார்த்தேன். தனது பருத்த உடம்போடு அங்கேயும் இங்கேயும் என மெதுவாக நடந்து கொண்டிருந்தார். முன்னே சாப்பிட்டவர்களிடம் அய்யர் பணம் வாங்கிக் கொண்டிருந்தார், இந்தப் பெரியவர் வாழை இலையை எங்களுக்காக எடுத்து வந்தார். தலை வாழை இலையைப் பிரிக்க அவர் கஷ்டப்பட, நாங்களே அதை வாங்கி பிரித்து மேசையில் விரித்தோம். பக்கத்தில் தண்ணீர் குடுவையிலிருந்து தண்ணீர் தொளித்துக் காத்திருக்க, பெரியவர் பொரியல் எடுத்துக் கொண்டு வந்து பரிமாற ஆரம்பித்தார் மெதுவாக.

பணத்தை வாங்கி முடித்த அய்யர், திரும்பி வந்து இலையை நோட்டமிட்டார்.

"மாமா.. இங்க பாருங்கோ.. பொரியலை இந்த ஓரம்தான் வைக்கணும்.. அந்தப் பக்கம் வைக்கதிங்கன்னு எத்தன தடவ சொல்லுறது"

பெரியவரிடமிருந்து பதிலில்லை. மற்ற இலைகளுக்கும் பரிமாறி விட்டு அப்பளம் எடுக்கப் போனார். அதற்குள் அய்யரும் பரிமாற வந்து விட்டார். சாப்பாடு பிரமாதமாக இருந்தது. இரண்டு பொரியல், அப்பளம், சாம்பார் என வீட்டு சமையல்.

அதற்குள் நண்பன் புளிக்குழம்பு வேணுமென பெரியவரிடம் கேட்கப் போக, பெரியவர் ரச வாளியோடு வந்தார். அய்யர் அதைப் பார்த்து "மாமா.. அவர் கேட்டது புளிக் கொழம்பு.. ரசமில்ல" என்று ரச வாளியை வாங்கிக் கொண்டு, புளிக்குழம்பை எடுத்து வரும்போது முணுமுணுத்துக் கொண்டே வந்தார். பெரியவரைத் தான் பேசிக்கொண்டு வந்தார் என்பது நன்றாகவே தெரிந்தது. எதுவும் சொல்லாமல் பெரியவர் தள்ளாடிக் கொண்டே வெளியே வாசப்படி அருகில் கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தார்.

நாங்கள் சாப்பிட்டு முடித்து ஏதோ ஒரு நினைவில் சாப்பிட்ட இலையை எடுக்க மறந்து, கைகழுவப் போக அய்யர் "சார்.. இலையை எடுத்துருங்க". என்றார். நாங்கள் இலையை எடுத்து வெளியே இருந்த கூடையில் போட்டுவிட்டு, கை கழுவி விட்டு வரும்போது பெரியவர் உள்ளே சென்று அடுத்த பந்திக்கான இலையை எடுக்க ஆரம்பித்தார்.

அய்யர் சாப்பிட்டு முடித்த எங்களிடம் பணம் வாங்கிக் கொண்டே பெரியவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் எனப் பார்த்துக் கொண்டே இருந்தார். பெரியவர் இன்னும் தள்ளாடி தள்ளாடிக் கொண்டே ஒவ்வொரு வேலையாகச் செய்து கொண்டிருந்தார். நாங்கள் பணம் கொடுத்துவிட்டு வெளியே கொஞ்ச தூரம் நடந்து கொண்டிருக்கும் போது திரும்பவும் கேட்டது அய்யரின் பேச்சு; "மாமா.. பொரியலை அந்தப் பக்கம் வைங்க.. இந்தப் பக்கம் வைக்காதீங்கன்னு எத்தன தடவ சொல்லுறது".

பெரியவர் நிச்சயமாக இதற்கும் பதில் சொல்லியிருக்க மாட்டார்.

படங்கள்: இணையத்திலிருந்து, நன்றி.

15 comments:

  1. பெரியவரை நினைக்க சிரிப்பாக இருந்தாலும் பரிதாபம் தான் அதிகரிக்கிறது.


    உங்கள் அனுபவத்தை ரசிக்கும் படியாக எழுதியுள்ளீர்கள்.....

    ReplyDelete
  2. இது மீள்பதிவா இளங்கோ? இன்னமும் கடையில் சாப்பிட வேண்டிய கட்டாயமென்ன?

    மேலும் நண்பர்கள் கூடி சமையல் என்பது, ஒரு வரம், அதைவிட்டு இவ்வளவு சிக்கிரம் வெளியே வந்து விட்டதற்காக வருந்துகிறேன். இங்கேயெல்லாம் இன்னமும் போயிட்டு இருக்கு, நேற்று கூட நண்டு செய்தோம்... :-)

    எனிவே, பிறந்தநாள் வாழ்த்துகள் இளங்கோ.... ட்ரீட்டை மறந்துடாதிங்க....

    ReplyDelete
  3. //முரளிகுமார் பத்மநாபன் said...
    எனிவே, பிறந்தநாள் வாழ்த்துகள் இளங்கோ.... ட்ரீட்டை மறந்துடாதிங்க....//
    நானும் வாழ்த்து கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அடுத்த மாதம் பதினாறாம் தேதி கோவை SRKV கல்லூரியில் GUEST LECTURE கொடுக்க வரும்போது பார்ட்டி கொடுத்திடுங்க, நண்பரே!

    ReplyDelete
  5. @கந்தசாமி
    நன்றிங்க

    ReplyDelete
  6. @முரளிகுமார் பத்மநாபன்
    வாழ்த்துக்கு நன்றிகள் முரளி. கண்டிப்பா ட்ரீட் உண்டு. :)

    இது மீள் பதிவில்லை. பழைய கதை, அதை இப்போ சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  7. @FOOD
    நன்றிங்க தலைவரே.. நீங்கள் கோவை வரும்பொழுது நானும் கலந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  8. நல்ல பகிர்வுங்க இளங்கோ.. பேச்சிலர்னாலே நல்ல கடைய தொழாவி, தொழாவித்தான் சாப்பிடனும்னு விதிப்போலங்க.. அதும் ஞாயித்துக்கிழம படுற பாடு இருக்கே.. ஒண்டிக்கட்டையா சமைச்சி சாப்பிட ஒரு அலுப்புவேற...

    இந்த மாதிரி பெரியங்வங்க எல்லா ஹோட்டல்களிலேயும் இருக்காங்க நண்பரே, எதோவொரு வேலை அவர்களுக்காக இருக்கிறது..

    ReplyDelete
  9. புகைப்படத்தைப் பார்த்தால் பசியைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  10. ஐ ஐ ஐ சாப்பாடா அப்படியே இலையோட தந்திடுங்க... சுடு சோறு போல இருக்கே...


    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

    ReplyDelete
  11. மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை. - ப.சிங்காரம்.

    இந்த வரிகள் நம்பிக்கை வரிகள். ஏற்கனவே வந்து படித்தே போதே இது உங்கள் பழைய கதை என்பதை தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  12. @க.பாலாசி
    நீங்க சொன்ன மாதிரி ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை என்பதால் நாங்கள் வெளுத்துக் கட்டி விடுவோம்.

    நன்றிங்க பாலாசி.

    ReplyDelete
  13. @இந்திரா
    நன்றிங்க

    ReplyDelete
  14. @♔ம.தி.சுதா♔
    நன்றிங்க நண்பரே.

    ReplyDelete
  15. @ஜோதிஜி
    //மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவும் இல்லை. மனதை இழக்காத வரையில் நாம் எதையும் இழப்பதில்லை//

    இந்த வரிகள் 'புயலிலே ஒரு தோணி' நாவலில் வரும். எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.

    நன்றிங்க ஜோதிஜி.

    ReplyDelete