Wednesday, April 4, 2012

அது அப்படித்தான்

வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. வெள்ளை வெளேர் என்ற சாரல். ஊரில் காணக் கிடைக்காத பனிமழை. இந்த பிரிட்டிஷ் நாட்டுக்கு வந்து நான்கைந்து மாதங்கள் ஆகி விட்டன. வாரம் முழுவதும் வேலையும், வெள்ளிக்கிழமை அன்று வெளியே செல்வதும்  கூட தங்கி இருப்பவர்களின் வழக்கம். நான் அங்கே போனதும், அவர்களுடன் செல்ல நானும் பழகிவிட்டேன்.

கண்டிப்பாக வெள்ளிக்கிழமை அன்று செல்வது 'பப்'(pub) ஆகத்தான் இருக்கும். முதல் நாள் சென்றபோது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. வந்தவர்களின் செல்ல நாய்களும், ஒரு சிலர் குழந்தைகளுடனும், குறை ஆடை அழகிகளும், போதை சிரிப்புகளும், இசையும், சிறு சிறு விளையாட்டுகளும் என தனி உலகமாக இருந்தது. சும்மா நின்று வேடிக்கை பார்த்தாலே நேரத்தை முழுங்கிவிடும். அடுத்த நாள் விடுமுறை என்பதால், பின்னிரவு நேரம் அறைக்கு திரும்புவதும் அடுத்த நாள் காலை பத்து மணிக்கு மேல் விழிப்பதும் பழகிப் போனது.

அந்த வார வெள்ளியும் அப்படித்தான் நேரமாகவே கிளம்பி விட்டோம். ஆளுக்கொரு பியருடன் நின்றும், நடந்தும், அமர்ந்தும் பேசிக்கொண்டே அருந்தினோம். ஒரு கோப்பையை குடித்து முடிக்க ஒரு மணி நேரத்துக்கும் மேல் ஆனது. வழக்கமாக அங்கே வரும் ஒன்றிரண்டு பேர் நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். வெறும் முகமன் மட்டும் சில சமயங்களில் பரிமாறிக் கொண்டு நகர்ந்து விடுவோம் பெரும்பாலும். அன்று மெக்கின்சன் என்பவன், கையில் கோப்பையுடன் அருகில் வந்து அமர்ந்து பேசத் தொடங்கினான்.

முதலில் எந்த ஊர், என்ன வேலை, குடும்பம் என பேசத் தொடங்கி மேலே போய்க் கொண்டிருந்தோம். திடீரென, 'உங்களுக்கும் பாகிஸ்தானுக்கும் என்னதான் பிரச்சினை?' என்றான்.

'இந்தியனாகிய எனக்கோ அல்லது பாகிஸ்தானிய மக்களுக்கோ இதில் எந்த சம்பந்தமும் இல்லை. எல்லாம் எங்கள் அரசியல்வாதிகள் செய்யும் வேலை' என்றேன்.

'எஸ்.. இட்ஸ் ஒன்லி பொலிடிகல்' என்றான் அவனும்.

'எனக்கு ஷில்பா ஷெட்டியைப் பிடிக்கும்' என்றான் கண்களைச் சுருக்கிக்கொண்டே. 'அவள் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறாயா?' எனக் கேட்டேன். 'சில படங்கள்' என்றான். 'நீங்கள் எத்தனை படங்கள் பார்த்திருக்கிறீர்கள்' எனக் கேட்டான்.
'ஷில்பாவின்  படம் ஒன்று கூட பார்த்தது இல்லை'.

'அப்படியென்றால், நீங்கள் படமே பார்ப்பது இல்லையா'
'இல்லையே, நிறையப் படங்கள் பார்ப்போமே'
 
'அப்புறம் ஏன் ஷில்பாவின் படங்கள் பார்த்ததில்லை'
'தமிழ்ல அவங்க நடிக்கறது இல்ல'
 
'தமிழா?'
'ஆமாம் தமிழ் சினிமாவில்'
 
'அப்படியென்றால், நீங்கள் ஹிந்தி படம் பார்க்க மாட்டீர்களா?' எனக் கேட்டான்.
'ஒரு சிலர் பார்ப்பார்கள், ஏனெனில் நாங்கள் தமிழர்கள். எங்களுக்கென்று தனியாக தமிழ் சினிமாக்கள் எடுப்பார்கள்' என்றேன்.

கையில் இருந்த கோப்பையை மேசை மீது வைத்துவிட்டு, 'ஓ கிரேட்.. இத்தனை நாட்களாக இந்தியா என்றால், ஹிந்தி சினிமா என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்... வெகு ஆச்சரியம் எனக்கு' என்றான்.

'தமிழ் மட்டுமில்லை.. மலையாளம், தெலுங்கு என நிறைய சினிமாக்கள் உண்டு'
'ஐ சீ...' என்றவாறே, கோப்பையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டான்.

'உங்களுக்கு பெண் தோழிகள் உண்டா?' என்றான்.

'இல்லை'
 
'என்ன பெண் தோழிகளே இல்லையா?' எனத் திரும்பவும் ஆச்சரியப்பட்டான்.
'கல்லூரிக் காலத்தில் உண்டு.. இப்பொழுது இல்லை' என்றேன்.
 
'சரி, எப்பொழுது திருமணம் செய்வீர்கள்?'
'இன்னும் கொஞ்ச நாளாகும்'
'அப்படியென்றால்.. நீங்கள் பெண் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்'
 
'நான் எங்கே போய்த் தேடுவது, எல்லாம் என் பெற்றோர்கள் செய்வார்கள்'
'என்ன பெற்றோரா?' என்று வாயை பிளந்தான்.
 
'ஆம். என் பெற்றோர்தான் பெண் பார்ப்பார்கள்'
'அது எப்படி, பெற்றோர் உங்களுக்கு பெண் பார்க்க முடியும்'
 
'ஜாதகம் எல்லாம் பார்த்து என்னிடம் சொல்வார்கள், எனக்குப் பிடித்தால் கல்யாணம் நடக்கும்'
 
'என்ன... ஜாதகம் பார்த்து கல்யாணம் செய்வீர்களா.. அதன் மூலம் பெண் பார்க்கப் போவீர்களா?'
 
'ஆம்'
'அது எப்படி'
 
எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. அவனிடம் இப்படிச் சொன்னேன்,
'அது அப்படித்தான்' .

**************************************

நீண்ட விடுமுறையில் ஊருக்குத் திரும்பி இருந்தேன். சித்தப்பாவிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது,அவர் எதேச்சையாக;

'ஏண்டா, அங்க கல்யாணம் எல்லாம் எப்படி?'

'அங்க எங்க கல்யாணம், கொஞ்ச நாள் சேர்ந்து வாழ்வாங்க. பிடிச்சதுன்னா கல்யாணம் பண்ணிக்குவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி அங்க குழந்தை எல்லாம் பொறக்கும் சித்தப்பா..' என்றேன்.

'அது எப்படிடா.. கல்யாணம் ஆகாம கொளந்தை பெத்துக்குவாங்க'

அவரிடமும் இப்படித்தான் சொன்னேன்.. 
'அது அப்படித்தான்' .

8 comments:

  1. இரண்டு வாழ்க்கை முறைகளுக்கு இடையே வானமளவு வேறுபாடு இருக்கிறது. இவர்களுக்கு அது ஆச்சர்யமாய்; அவர்களுக்கு இது ஆர்ச்சர்யமாய்..

    ReplyDelete
  2. நேர்த்தியான வார்த்தைகளால் கோர்த்தியிருக்கிறீர்கள் இளங்கோ.பாராட்டுகள்..

    ReplyDelete
  3. நண்பரே ஒரு வேண்டுகோள்..

    இந்த பதிவு மூலம், உங்கள் வலைப்பூவை தமிழ்மணம் திரட்டியில் இணைப்பதில், ஓட்டுப்பட்டையில் வாக்களிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்யவும்.
    http://ethirneechal.blogspot.in/2012/02/blogger-domain.html

    ReplyDelete
  4. @பாரத்... பாரதி...
    உங்களின் பாராட்டுக்கு எனதன்பு நன்றிகள் நண்பரே...

    நீங்கள் கொடுத்த பதிவின் மூலம் எனது தமிழ் மணம் பிரச்சினை சரியாகி விட்டது. இவ்வளவு நாட்களாக எப்படி இதைச் செயல்பட வைப்பது எனத் தெரியவில்லை. உங்களின் உதவிக்கு மிகுந்த நன்றிகள்.

    ReplyDelete
  5. சின்னப்புள்ளத்தனமாவுல்ல இருக்கு ? குளிருக்கு பீரா?

    ReplyDelete
  6. பழைய பதிவா...???? இப்போது எந்த ஊரில் இருக்கிறீர்...???

    ReplyDelete
  7. @சாமக்கோடங்கி
    பழைய பதிவு இல்லை.. முன்னர் நடந்ததை இப்போ எழுதியிருக்கிறேன்..
    நன்றிங்க

    ReplyDelete