Sunday, December 19, 2010

சலூன்


சுத்தற சேரும், மேல காத்தாடியும் இருந்த அந்த 'ராஜா' சலூனுக்குள் போகலாமா, வேண்டாமா என்று மனசுக்குள் ஒரே குழப்பம். சலூனுக்குள் போகவே பயமாக இருந்தது. வருவது வரட்டும்னு உள்ளே போயிட்டேன். உள்ளே போனால், ஒருவருக்கு முடி வெட்டிட்டு இருந்த கடைக்காரர் என்ன என்பது போலப் பார்த்தார். "கட்டிங் பண்ணனும்" என்றவுடன், "அங்க உட்காரு" என்றார். உட்கார்ந்த இடத்தில் இரண்டு மூன்று நியூஸ் பேப்பர்கள் கிடந்தன. டேப்பில் ஏதோ ஒரு பாட்டு பாடிக் கொண்டிருந்தது.

முன்னாடி, பின்னாடி எனப் பெரிய பெரிய கண்ணாடிகள சுவத்துல மாட்டி இருந்தன. காலி இடத்தில் ஒரு பக்கம் விஜயகாந்தும், இன்னொரு பக்கம் ரஜினி காந்தும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நியூஸ் பேப்பரில் வந்த சில நடிகைகளின் படத்தை ஒரு இடத்தில் ஒட்டி வெச்சிருந்தாங்க. ஒரு இருபது நிமிசம் கழிச்சு, முடி வெட்டிட்டு இருந்தவர் கிளம்ப, என்னைப் பார்த்து "வாங்க.." என்று சேரைத் தட்டினார் கடைக்காரர்.

இது வரைக்கும் அந்த மாதிரி சேர்ல உக்காந்தது இல்ல, அதுனால ஒரு மாதிரியா இருந்துச்சு. ஏறி உட்கார்ந்ததும், கடைக்காரர் அழகா ஒரு பாட்டில்ல இருந்து தண்ணிய தலைக்கு அடிக்க ஆரம்பித்து, முடி வெட்ட ஆரம்பித்தார். தலை குனிஞ்சிருந்த எனக்கு அப்பா கூட நேத்து சண்டை போட்டது நினைவுக்கு வந்தது.

நேத்து அப்பா, "டேய்.. நாளைக்கு பள்ளிக்கோடம் முடிஞ்சு, முடி வெட்டிட்டு வந்திரு. கரடிக் குட்டி மாதிரி எத்தன முடி பாரு. பஸ் ஸ்டாண்ட்ல இருந்து சந்தைக்கு போற ரோட்ல, காப்பிக் கடை முக்குல இருக்குற பழனிச்சாமி கிட்ட வெட்டு. அவன்தான் அஞ்சு ரூவா வாங்குவான். மத்தவங்க எல்லாரும் அதிக ரூவா வாங்குவாணுக" என்றார்.

"போப்பா.. எனக்கு அந்தக் கடைய பிடிக்கவே இல்ல" என்றேன். போன வாரம், மூர்த்தி ஒரு கடைக்கு அவனுக்கு முடி வெட்டும்போது கூட்டிட்டுப் போனான். பெரிய கண்ணாடி, காத்தாடி அப்படின்னு அழகா இருந்துச்சு. அடுத்த தடவை முடி வெட்டுனா, அங்கதான் போகணும்னு முடிவு பண்ணிட்டேன் அன்னைக்கே. அந்த சலூன் பேரு 'ராஜா சலூன்'.

"முடி வெட்டுறதுல என்னடா.. பிடிக்கறது.. பிடிக்காதது. எதைச் சொன்னாலும் மூஞ்சிய ஒரு மாதிரி வெச்சுக்க" என்று ஒரு சத்தம் போட்டார்.

அடுத்த நாள் காலையில் மறக்காமல், பத்து ரூபாய் குடுத்தார். திரும்பவும் பழனிச்சாமி கடைக்கே போகச் சொல்ல, ஏதாவது சொன்னால் அடி விழுகும் என்று நினைத்து "சரிப்பா " என்றேன்.

கடைசிப் பீரியட் முடிந்து வெளியே வந்ததும், அந்தக் கடைக்கே போகணும்னு முடிவு பண்ணிட்டேன். போன தடவ வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லாமத்தான் போச்சு முடி வெட்டுறது. வழக்கமா, மணியன் வீட்டுக்கு வந்து முடி வெட்டிட்டு போயிருவாப்ல, நான் சின்னப் பையன்ல இருந்து அவருகிட்டதான் வெட்டிட்டு இருக்கேன். வீட்டுக்கு வெளியே இருக்குற வேப்ப மரத்தடியில ரெண்டு முக்காலிகளப் போட்டு உட்கார்ந்து முடி வெட்டி விட்டுட்டுப் போயிடுவார். அதுவும் குனிய வெச்சு, பின்னாடி கழுத்துக்கு கீழே கத்தி படும்போது ஒரு மாதிரியா குறுகுறுப்பா இருக்கும். "ஆடாத தம்பி" என்று சொல்லிக்கொண்டே தலையை கெட்டியாப் பிடிச்சுக்குவார்.

பள்ளிக்கோடம் போனா பசங்க எல்லாம் முடி வெட்டுனத பார்த்து கிண்டல் அடிப்பாங்க. ஆனா, ஒண்ணு ரெண்டு வாரத்துல முடி வளர்ந்து 'கிராப்' சரியாப் போயிடும். இந்த கிண்டலுக்கு வேண்டியே அடுத்த தடவ மணியன் கிட்ட முடி வெட்டக் கூடாது அப்படின்னு நெனப்பேன், ஆனா அப்பா விட மாட்டார். ஏதோ ஒரு அதிசயம் போல, இந்த தடவ ஒரு மாசத்துக்கும் மேல ஊருக்குப் போன மணியன் திரும்பவே இல்ல. அப்பாவே வளர்ந்த முடியப் பார்த்துட்டு, டவுன்ல வெட்டிட்டு வரச் சொல்லிட்டார்.

எந்தக் கடைக்கு போகலாம்னு ஒரே கொழப்பமா இருந்துச்சு, 'ராஜா' சலூன்ல பணம் அதிகம் வாங்கிட்டா என்ன பண்ணுறது. அப்பா திட்டுவாரேன்னு பயம் வேற. ஆனா, இன்னைக்கு மட்டும் அந்த முக்கு கடைக்கு போகவே கூடாது. மூர்த்தி கிட்டயாவது எவ்ளோ பணம் ஆகும்னு கேட்டிருக்கலாம், அவன் கிட்டயும் கேட்கல. அவன் இன்னைக்கு லீவு. பத்து ரூபாதான் இருக்குதுல்ல, அதுக்கு மேல கேட்க மாட்டாங்க அப்படின்னு எனக்கு நானே நெனச்சுட்டு, 'ராஜா' கடைக்குள்ளே வந்தாச்சு.

'ராஜா' கடைக்காரர், எனக்கு முடி வெட்டிட்டு இருந்தார். மேல போர்த்துன துண்டு, சுத்திலும் கண்ணாடி, டேப் பாட்டு அப்படின்னு நல்லாத்தான் இருந்தாலும், எவ்ளோ பணம் கேப்பாங்களோ அப்படின்னு பயம்தான். பத்து ரூபாய்க்கு உள்ளே கேட்டா பரவா இல்ல, பத்து ரூபாய்க்கு மேல கேட்டா என்ன பண்றது. வெட்டி முடிச்சுட்டு, இன்னொரு துண்டால முடிய தட்டி விட்டார் கடைக்காரர். "எந்திரி தம்பி.. இந்தா சீப்பு" என்று ஒரு சீப்பை கையில் கொடுத்து சீவச் சொன்னார். சீவி முடித்ததும், மேலே இருந்த முடிகளை தட்டி விட்டேன். அப்பவும் சட்டையில் இருந்து ஒரு சில முடிகள் போகவே இல்ல.

கொஞ்சம் பயமாகவே "அண்ணா.. எவ்ளோங்க.. " என்றேன். "ஏழு ரூவா தம்பி" என்றார். "அப்பாடா" என மனசுக்குள் நினைச்சிட்டு, மீதி சில்லறைய வாங்கிக் கொண்டு "நான் வர்றேனுங்க.." என்று சொல்லி விட்டு வீட்டுக்கு கிளம்பினேன். பஸ்ல வரும்போது அப்பா கிட்ட என்ன சொல்லுறதுன்னு பயம் வேற.

வீட்டுக்கு வந்ததும் "முடி அப்படியே இருக்கு.. இன்னும் ஒண்ட வெட்டச் சொல்லி இருக்கலாம்ல... எங்கடா முடி வெட்டுன.. " என்று கேட்டார் அப்பா.
"ராஜா சலூன்ல" என்றேன்.
"அது என்ன பழனிசாமி கடையா? "
"இல்லப்பா.. இது வேற கடை"
"நெனச்சேன்.. நீ அங்க போக மாட்டேன்னு.. இவன் எவ்ளோ வாங்குனான்.."
"ஏழு ரூவாப்பா.. "
"ம்ம்... பத்து ரூபாயையும் குடுக்காம வந்தியே. அதுவரைக்கும் நல்லது"
"ஏங்க.. அவனப் போய்த் திட்டிட்டு.. நான் வெந்தண்ணி காய வைக்கிறேன்..." என்று துணைக்கு வந்தார் அம்மா.

அதோடு பிரச்னை முடிந்தது. அடுத்த தடவை முடி வெட்டிட்டு வரும்போது எவ்ளோ ஆச்சு என்று அப்பா கேட்கவே இல்லை. பல வருடங்கள் கழித்து வெளிநாட்டில் ஆறு மாதம் தங்க நேர்ந்த போது முடி வெட்ட குடுத்த காசு, இந்திய மதிப்பில் சுமார் அறுநூறு ரூபாய் என்பது அப்பாவுக்கு இன்னும் தெரியாது.

படம்: http://www.lonelyplanetimages.com தளத்தில் இருந்து. நன்றி.

14 comments:

Chitra said...

தலை முடி வெட்டுவது - ஒரு அனுபவம்தான். அருமையான பதிவு.

பாரத்... பாரதி... said...

ஐந்து ரூபாய், ஏழு ரூபாயாக மாறி ஆறு நூறு என வளர்ந்திருக்கிறது செலவளித்த பணம். முடி வளரும் வேகத்தை விட அதற்கென செலவளித்த தொகை வளர்ந்திருக்கிறது.
நல்ல பகிர்வு, இயல்பா சொல்லியிருக்கீங்க...

RVS said...

கதையா.. சுயசரிதமா.. சுவாரஸ்யமாக இருந்தது. கடையை பற்றியும் வீட்டுக்கு வரும் வரை பயந்ததையும் இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம். ;-)

சாமக்கோடங்கி said...

இளங்கோ.. உங்கள் வரிகள் அப்படியே என் மன அலைகளுடன் ஒன்றிப் போகிறது.. நானும் இதே போல முடி வெட்டிய அனுபவங்கள் உண்டு.... ஆனால் வெளிநாடு போவதற்கு முன்னரே ஓட்ட வெட்டி விட்டேன். நாங்க வெவரம்லா....?!?!?!

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃ"முடி வெட்டுறதுல என்னடா.. பிடிக்கறது.. பிடிக்காதது. எதைச் சொன்னாலும் மூஞ்சிய ஒரு மாதிரி வெச்சுக்க" என்று ஒரு சத்தம் போட்டார்.ஃஃஃஃ

சொல்லியிருக்கலாமே எனது சொத்தை இழக்கப் போகிறோமே என்ற கவலை தான்...

ஷஹி said...

பிரமாதம் இளங்கோ..இந்த மாதிரி இயல்பா, பணப்பிரச்சினை,தயக்கங்கள் பத்தி எல்லாம் பேசவும் ,ஒரு மனசு வேணும்...

இளங்கோ said...

@சித்ரா
ஆமாங்க. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். :)

இளங்கோ said...

@பாரத்... பாரதி..

ஆமாங்க, அதுக்கு தகுந்த மாதிரி நம்ம விலைவாசியும் ஏறி இருக்குதுங்க. :)
நன்றிங்க.

இளங்கோ said...

@RVS
அண்ணா, சொந்தக் கதை பாதி, யோசித்த கதை பாதி. (50 /50 ). :)

பார்ட் - 2 எழுதிரலாம் அண்ணா. !!
நன்றிங்க.

இளங்கோ said...

@சாமக்கோடங்கி

மன அலைகள் ஒன்றிப் போவதனால்தானே நண்பர்களாக இருக்கிறோம். :)

உங்களுக்கு ஒரு மாசம், எனக்கு ஆறு மாசம். மொட்டையே அடிச்சுட்டு போயிருந்தாக் கூட முடி வளர்ந்திருக்கும் பிரகாஷ். :)

இளங்கோ said...

@ம.தி.சுதா
ஆமாங்க நண்பரே, தினமும் தலைக்கு குளித்து, அழகாச் சீவி மாசமொரு தடவை முடி வெட்டுறது, சொத்தே போற மாதிரி தானே :).

நன்றிங்க

இளங்கோ said...

@ஷஹி

ஆமாங்க, இந்த மாதிரி பதிவு எழுதினாலும் பாராட்ட நண்பர்களின் நல்ல மனசு இருக்கும்போது எனக்குப் பிரச்சனையே இல்லீங்க. :)

நன்றிங்க ஷஹி.

ஷஹி said...

கிண்டல் பண்றீங்களா இளங்கோ? ஹூம்...இனிமே பாராட்டிடுவேனா? யதார்த்தமா, உண்மையா எழுதியிருக்கீங்களேன்னு ரசிச்சா... உங்களுக்கு கிண்டலா போச்சு!

இளங்கோ said...

@ஷஹி

கிண்டல் எல்லாம் இல்லீங்க ஷஹி.

எப்பவும் "நன்றிங்க" அப்படிங்கற டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்டுட்டு இருந்தேன்.
சும்மா இப்படி முயற்சி பண்ணினேன்.

நன்றிங்க நண்பரே.

Post a Comment