Friday, December 10, 2010

பனைமரத்து நிழலின் சிரிப்பு


குறிப்பு: கொஞ்சம் நீண்ட கதை. ரொம்ப வருடங்கள் முன்னர் எழுதியது. பழைய காகிதங்கள் கிடைக்க வலையில் ஏற்றி விட்டேன். !

*********************************

ஏதாவதொரு காலைப்பொழுது எனக்கு பனைமரத்தின் கீழ்தான் விடியும். அப்படிப்பட்ட நாட்கள் அநேகமாக சித்திரை மாத வெயில் சுழற்றி அடிக்கும் நாட்களாக இருக்கும். ஊரிலிருந்து சொந்தக்காரர்கல் யாராவது வந்தாலோ, இல்லை அம்மா ஊருக்குப் போனாலோ “நொங்கு” இருக்கும். ஏதொ பிள்ளையார் கோயிலில் பொங்கல் வாங்கற மாதிரி விடிஞ்சும் விடியாத காலங்கார்த்தால பெரிய போசியோட நொங்கு வாங்கப் போயிரணும்.

ஊரில் எத்தனையோ பேர் நொங்கு எடுத்தாலும், எங்க அம்மாவுக்கு ஊமையனிடம் தான் வாங்க வேண்டும் என்ற வைராக்கியம். அதற்கு காரணம், மத்தவங்க ஒரு ருபாய்க்கு இரண்டு நொங்கு என்றால் இவன் மூன்று போட்டுக் கூடவே நாலைந்து சேர்த்தும் தருவான். சீசன் சூடு பிடிக்கும் நாட்களில் கூட ஒன்றிரண்டு கொரைப்பானே தவிர மத்தபடி போசியை நப்பியே தருவான் என்பதால் அம்மாவுக்கு சந்தோசம். அதனால், எங்க ஊட்டு கிழிந்த துணிகளும், பழைய கொழம்பும் கொஞ்சம் தள்ளி இருக்கிற அவனின் குடிசைக்குள் தஞ்சமடையும்.

பட்டப்பேரு தான் ஊமையனே தவிர, அவனோட பேரு கருப்புசாமி. பேச முடியாது என்பதால்தான், அவனுக்கு முன்னால் ஊரார் அப்படிக் கூப்பிட மாட்டார்கள். ஆனால், ஊமையன் என்பது அவனுக்கு சுட்டுப் பெயராகவே மாறிவிட்டது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே சண்டையும், சச்சரவும் நிரம்பிய குடிசையாகத்தான் ஊமையனின் குடிசை இருக்கும். குடிசையைப் பிய்த்துக் கொண்டு, கருப்பனின் குலசாமி கருப்பராயன் கொட்டியதில் அவனுக்கு என்னவோ ரெண்டு பையனும் நாலு புள்ளையும் தான். மூத்த பொண்ணுங்க இரண்டையும் சொந்தத்திலேயே கட்டிக் கொடுத்துவிட மீதி ரெண்டு பையனும் ஒரு புள்ளையும் தான் சத்துணவுக்காக பள்ளிக்கோடத்துக்கும், விளையாட்டுக்காக அப்பனுக்கும், ஆத்தாளுக்கும் உதவிக் கொண்டிருந்தார்கள்.

கருப்பன் பொண்டாட்டி பேரு காளியம்மா. பேரு மட்டும் தான் காளியம்மா, மத்தபடி கோவமெல்லாம் வராது. புள்ளைங்க போடற சண்டையைத் தீர்த்து வைக்கவே அப்பப்போ காளியாத்தா அவதாரம் எடுப்பா. கருப்பட்டி கூடையைத் தூக்கி தலையில் வைத்துக்கொண்டு சந்தைக்குப் போகும் போது கூடவே ஒரு புள்ளையையும் கூட்டிக் கொண்டு போவாள். அதற்கும் யார் அவள் கூடப் போவது என்று சண்டையாகவே இருக்கும்.

நொங்கு வாங்கப் போறன்னிக்கு, சேவக் கூவுற நேரத்துல கெளம்பிடணும். இல்லாட்டி கருப்பன் நொங்க எடுத்துட்டு சைக்கிள்ல பக்கத்து டவுனுக்குப் போயிருவான்.

பல்லு கூட வெளக்காம, அன்னிக்கு எந்தக் காட்டுல அவன் நொங்கு எடுக்கறானோ அங்க போயிரணும். அவன் வீட்டில் வளரும் எலும்பு நாய் உட்பட கூப்பன் கார்டில் உள்ள அத்தனை பேரும் அந்த காட்டுல இருகிறதால, காடே திருவிழா கண்ட இடம் போல இருக்கும்.

கயிற்றை காலில் கட்டிக்கொண்டு, பனை மரத்தில் சரசரவென ஏறி குலை குலையாய் தொங்கும் காய்களில் பதம் பார்த்து வெட்டி போடுவான் ஊமையன். மரமேறும் போதே, கை சாடையிலேயே எல்லாரையும் தள்ளிப் போகச் சொல்லிருவான். மேலிருந்து குலை விழுந்த வேகத்தில் காய்கள் தனியாக பிரிந்து நாலாப் பக்கமும் உருண்டோடும். ஒவ்வொரு மேலிருந்து குலையை கயித்தில் கட்டி கீழே இறக்குவான். அப்போது காய்கள் தனியாக ஓடாது. காளியம்மாளும், அவளின் வாரிசுகளும், காடு பூர எறைஞ்சு கெடக்கும் குலைகளையும், காய்களையும் ஒரே இடத்தில் போட்டு வெப்பாங்க.


முனியப்பன் கோவிலில் கெடா வெட்டும்போது ஒரே வீச்சில் வெட்டற அருவா மாதிரியே ரெண்டு மூணு அருவாள கருப்பன் வெச்சிருப்பான். பாறையில அரச்ச மண்ணுல தான் அந்த அருவாள பட்டை தீட்டுவான். அப்படியே வெளக்கி வெச்ச குத்து வெளக்கு மாதிரி தகதகன்னு இருக்கும் பட்டை தீட்டுனதுக்கு அப்புறம். தொட்டாலே சீவிருமோ அப்படிங்கற பயம் அந்த அருவாளப் பாத்தாலே வந்திரும்.

குமிச்சு வெச்ச பனங் குலைகள தனித் தனிக் காய்களா மொதல்ல பிரிச்சிட்டு, அருவாளக் கையில எடுத்தா அப்புறம் முடியற வரைக்கும் விசுக்.. விசுக்.. அப்படிங்கற சத்தம்தான் கேக்கும். காய எடுத்து அப்படியே ஒரு சுத்து உருட்டி, குல்லா போட்ட மாதிரி இருக்கற தொக்க எடுத்துட்டு, அளந்து வெச்ச மாதிரி சுத்தியும் மூணு வெட்டு. அத அப்படியே திருப்பி வெச்சு, கைப்புள்ளையோட கன்னத்த தட்டற மாதிரி மூணு வெட்டு வெட்டி நெம்புனா நொங்கு வெளியில எட்டிக் குதிச்சிரும். அத அப்படியே பனை ஓலை வெச்ச கூடையிலே போட்ருவான் கருப்பன்.

இதுல என்னன்னா, நொங்கு ஒடையாம எடுக்கரதுலதான் இருக்கு எல்லாமே, நொங்கு உடைஞ்சு தண்ணி வெளியில வந்துட்ட அதக் கழிச்சு உட்ருவாங்க அப்படிங்கரதாலே, உடைஞ்சதுகள வேடிக்கை பாத்துட்டு இருக்கற எங்களுக்கு குடுத்துருவாங்க. இது ஒருபுறமிருக்க, அவன் ஊட்டு கத்துக் குட்டிகளெல்லாம் மொண்ண அருவாள வெச்சுட்டு பிஞ்சுக் காய்களா வெட்டிட்டு இருப்பாங்க. பிஞ்சுக் காயிலிருந்து நொங்கு எடுக்க முடியாது, மேலே ஒரு வெட்டு வெட்டி கொடுத்தா, பெருவிரல உட்டு, வாய் பக்கத்துல வெச்சு உறிஞ்சுனா, காலைல சோறே நொங்குதான் . சூப்பிப் போட்ட பிஞ்சுப் புருடைகளப் பொடிப் பொடியா வெட்டி மாட்டுக்கு போட்ருவாங்க. மாடுகளும் அதத் தின்னு அசை போட்டு சீரணிக்கும். ஒரு கண்ணு ரெண்டு கண்ணுள்ள நொங்க விட மூணு கண்ணுள்ள நொங்கு எடுக்கறது சுலபம்.இப்படித்தான் போயிட்டிருந்துச்சு அவங்களின் பொழப்பும். நொங்கு சீசனெல்லாம் முடிஞ்சு போயி தெளுவு எறக்கிட்டு இருந்தான் கருப்பன். நொங்கு வாசம் போயி கருப்பட்டி மணக்க ஆரம்பிச்சது அவனோட சாலைல. அப்பா நடந்ததுதான் இது.

"ஏண்டி, அந்தப் பொடாக்காநில தண்ணி ஊத்தச் சொன்னேனே? ஊத்துனியா ? இந்தா உங்கப்பனுக்கு இந்த காப்பித் தண்ணிய குடுத்துட்டு வெரசா வா" அப்படின்னு கத்திட்டே வந்த கெழவிதான் கறுப்பனப் பெத்த ஆத்தா. பல்லுப் போனாலும் சொல்லுப் போகாதும்பாங்க மாதிரி கெழவிக்கு நாக்கு மட்டும் அப்படியே இருக்கு. வாயில வர்றதெல்லாம் மொளகாப் பொடி தடவுன மாதிரி காரசாரம்தான் இருக்கும்.

"கொண்டா" அப்படின்னு, தூக்குப் போசிய வாங்கிட்டு போறவதான், அடுத்த கண்ணாலத்துக்கு காத்துட்டு இருக்கற கருப்பனோட மூணாவது புள்ள ஈசுவரி. தெளுவு எறக்கிட்டு இருந்த அப்பனுக்கு காப்பி கொடுக்கப் போனவ, பக்கத்துக் காட்டுல மரம் ஏறிட்டிருந்த குப்பன்கிட்ட மனசக் கொடுத்துட்டா.

அவ பண்றது ஒண்ணும் தப்பில்லைதான். ஆனா கருப்பனும், குப்பனோட அப்பனும் கீரியும் பாம்பும் மாதிரி. அவன் போறபக்கம் இவனும், இவன் போறபக்கம் அவனும் போக மாட்டாங்க. அதென்ன பகையோ, என்னமோன்னு ஊருக்கே மறந்து போச்சு. ஆனா சிறுசுக ரெண்டு பேருக்கும் பகையும் தெரில, சொந்தமும் புரில. பெருசுக ரெண்டும் வானத்தையும், பூமியையும் பார்த்துட்டு நிக்க இவங்க ரெண்டு பேரும் மனசப் பரிமாறிட்டாங்க.

இப்படித்தான் ஒரு நா, ஊரே தூங்கி எந்திரிக்காத வேளையில மசமங்க ரெண்டு பேரும் கெளம்பிட்டாங்க. எங்க போனாங்க, என்ன ஆனாங்கன்னு ஆருக்கும் தெரில. ஊருல உள்ளவங்க, சொந்த பந்தம்னு எல்லாரும் வந்துட்டுப் போயிட்டு இருக்காங்க ரெண்டு ஊட்லயும். கலியாணம் கண்ட இடமா இல்ல எழவு கண்ட கண்ட இடமான்னு எல்லாருக்கும் சந்தேகம். யாரு யாரைத் திட்டறாங்கன்னு புரிபடாத மாதிரி ஒரே சத்தம். திடு திப்னு பொம்பளைகளோட ஒப்பாரிச் சத்தம் வேற. கெழவி போட்ட ஒப்பாரிதான் ரொம்ப சத்தம்.

"ஊரெல்லாம் சொத்து வாங்கி
பாரெல்லாம் பார்த்து நிக்க
பாவி மக போனாளே
சொல்லாம கொள்ளாம.. "

"பெத்த மனசு கதிகலங்க
வளர்த்தெடுத்த உசுரு உருக
காணமப் போனாளே
எங்க மகராணி.. "

வந்தவங்கள ஒக்காரச் சொல்லி, காப்பித்தண்ணியக் கொடுத்து, எப்படிக் காணமப் போனாங்கன்னு சொல்லி சொல்லியே சடைஞ்சு போயிட்டாங்க ரெண்டு ஊட்டு ஆளுகளும். வந்தவங்க துக்கத்த கேட்டுட்டு சும்மா போகாம "எனக்கு அப்பவே தெரியும். ஆனாலும் வெளிய சொல்லல" அப்படின்னு குசுகுசுன்னு பேசிக்கறாங்க. கண்ணுல தண்ணி ஒழுக, எல்லாத்தையும் அமைதியாப் பார்த்துட்டு இருந்தான் கருப்பன். வெளியூர்ல கட்டிக் கொடுத்த மூத்த பொண்ணுங்க ரெண்டும் வந்து ஆத்தாளையும், அப்பதாளையும் கட்டிட்டு அழுகுறாங்க.

"எங்க போயி தேட, பேசாம வகுராம்பாளயத்துப் பூசாரிகிட்ட போயி மை வாங்கிட்டு வந்து தடவிப் பார்த்துர வேண்டியதுதான்" அப்படின்னு குரலேடுத்தது ஒரு பெருசு. மை போட்டுப் பார்த்தா திருட்டுப் போன பொருளோ இல்ல காணமப் போனா பொருளோ எங்கிருந்தாலும் கண்டு பிடிச்சுர்லாம்னு ஊர்ல பேசிக்குவாங்க.

"ரெண்டு நாள் பார்த்துட்டு போலீசுல சொல்லிரலாம்" இது காளியாத்தாளின் தம்பி.

"திக்குக்கு நாலு பேரு போயி தேடிக் கண்டுபிடிச்சு, அவங்க ரெண்டு பேரையும் வெட்டி பொலி போட்டுறனும்" அப்படின்னு சொன்னவன் ஈசுவரியின் மொறை மாமன்.

ஊருப் பொம்பளைக அத்தன பேரும், வெத்தலயப் போட்டு மென்னுக்கிட்டே குசுகுசுன்னு காதுக்கு உள்ளையே பேசிக்கறாங்க. என்னதான் பேசுராங்கலோன்னுட்டு ஒண்ணு ரெண்டு சிறுசுக 'ஆ' னு பார்த்துட்டு இருக்குதுக. மேச்சலுக்குப் போகாத ஆடு மாடுகளுக்கு காஞ்ச சோளத் தட்டையும், கழு தண்ணியையும் வெச்சிட்டு இருந்தா கடைசி மக. அந்த அஞ்சறிவு சீவனுக கூட மூச்சு உடாம, அசை போட்டுட்டு இருக்குது தட்டப்பயிர. அப்பப்போ, தலயத் தூக்கி புதுசு புதுசா வர்ற மனுசங்களப் பார்த்து அதுகளோட கண்ணுல கூட ஒரு பயம்.

அந்தி சாயற நேரத்துல, தேடிப்போன ஆளுக எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க. தேடாத எடமே இல்லியாம். தேடிப் போன ஆளுக எல்லாம் தண்ணியப் போட்டுட்டு மப்புலையே பேசினாங்க. சீமண்ண கொலாப்பு ரெண்டு திகுதிகுன்னு எறிஞ்சுட்டு இருக்குது சாலையில. காத்தாலே இருந்தே சோறு தண்ணி இல்லாததால ஆளாளுக்கு அங்கங்க சாஞ்சுட்டும் கால நீட்டியும் உக்காந்துட்டு இருந்தாங்க. அந்திப் பொழுதுக்காகவாவது எதாச்சும் பண்ணலாம்னுட்டு வெங்காயத்த தொளிச்சிட்டு இருந்தாங்க சொந்தக்காரப் பொம்பளைங்க.

"சரி, போனவ போயிட்டா. அழுதுட்டே ஒக்காந்துட்டு இருந்தா பொழப்பு நடக்குமா?. அடுத்த சோலியப் பார்க்க வேண்டியதுதானே. போனவ திரும்பி வந்தா சேர்த்துக்குங்க" ன்னு ஒரத்த கொரல்ல சொல்லுச்சு தூரத்துப் பெருசு ஒன்னு.

அதக் கேட்டவுடனே, சாஞ்சு உக்காந்துட்டு இருந்த கருப்பன் விறுவிறுன்னு எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தான். பார்த்துட்டு, பக்கத்துல இருந்த சொம்புத் தண்ணிய எடுத்து தல மேல ஊத்திட்டான். ஊத்துன வேகத்துலேயே அந்த சொம்ப விட்டெரிய, அது போயி நங்குன்னு ஒரு ஓரமா உக்காந்துடுச்சு. காத்திருந்த கூட்டத்துக்கு திக்குன்னு ஆகிப் போச்சு நெலம. கெழவியும், காளியாத்தாலும் இந்தக் காட்சியப் பார்த்துட்டு குய்யோ முறையோனு கத்தி அழுகை ஆரம்பிச்சுட்டாங்க. நனைஞ்ச தலையோட பித்துப்பிடிச்ச மாதிரி முழிச்சுப் பார்த்துட்டே உக்கார்ந்தான் கருப்பன். 'தலை முழுக்கிட்டேன்னு சொல்லாம சொல்லிட்டன் கருப்பன்' ன்னு ஊரே பேசிட்டு இருக்குது.

உறவும் சொந்தமும் ரெண்டொரு நாளுலேயே சொல்லிட்டு சோலியப் பாக்க கெளம்பிட்டாங்க. ரெண்டு மூணு நாளா வெளிய தல கட்ட முடியல. அப்படியே வெளிய போனாலும் பாக்கற ஊர்க்காரங்க பார்வையில கரிசனமா இல்ல பழிப்பான்னு புரிபடல. ரெண்டு வாரம் கழிச்சு எங்க இருக்குராங்கற விசயம் தெரிஞ்சு போச்சு. ஆனாலும், யாரும் போய்ப் பார்க்க ஆசப் படவே இல்ல.

கோயம்புதூருக்குப் பக்கத்துல ஒரு ஊருல குப்பனோட தூரத்துச் சொந்தக்காரன் ஒருத்தன் இருந்தான். அவனோட ஊட்டுக்குதான் அடக்கலம் போனாங்க ரெண்டு பேரும். பெத்தவங்க வந்து பாப்பங்கனுட்டு நாலு மாசமா பாத்துட்டு இருந்தாங்க. ஆனா, அவங்க யாரும் வரவே இல்ல. இந்த இடப்பட்ட காலத்துல ஏதோதோ வேலைக்கு ரெண்டு பேரும் போயி குடும்ப வண்டி ஓடிட்டு இருந்துச்சு. அடுத்த வாரம் வந்தா மார்கழி போயி தை மாசம் பொறக்குது. பொங்கலுக்கு என்ன ஆனாலுஞ் செரி ஊருக்குப் போலாம்னு முடிவு பண்ணிட்டாங்க.

ஆறாம் நம்பர் பஸ்ஸ விட்டு எறங்கினவுடனே, ஏர்ற ஆளுக ஒரு மாதிரி பாத்துட்டே சிரிச்சாங்க. ரெண்டு பேருக்கும் என்ன சொல்றதுன்னு தெரியாம வெறும் தலைய மட்டும் மாடு மாதிரி ஆட்டிட்டு விறுவிறுன்னு நடக்க ஆரம்பிச்சுட்டாங்க. "இப்பதான் வர்றீங்களா?" கேட்டாங்க வழியில பார்த்த ஊர்க்காரங்க. ஒன்னு ரெண்டு பேரு சிரிச்சாங்க. என்ன கேட்டாலும் "ஆமா" ன்னு மட்டும் சொல்லிட்டு வந்துட்டே இருக்காங்க.

சால வாசலுக்கு வந்ததும் நின்னுட்டாங்க ரெண்டு பேரும். வெளையாடிட்டு இருந்த தம்பியும், தங்கச்சியும் இவங்களப் பார்த்துட்டு போலாமா, வேண்டாமான்னு நெனச்சிட்டே "அம்மா" னு கத்திட்டாங்க. "என்னாடா" னுட்டு வெளிய வந்த காளியாத்தா ரெண்டு பேரையும் பார்த்ததும், கைய ஓங்கிட்டு அடிக்க வந்துட்டா பெத்த மகள. சத்தம் கேட்டு பொடக்காநில இருந்த கெழவி ஒருபக்கம், காளியாத்தாள தடுத்துட்டு வெச்ச ஒப்பரில ஊரே கூடிருச்சு.

"என்னதான் இருந்தாலும், வளர்த்த பாசம் போயிடுமா? திரும்பி வந்திருக்காங்க. உள்ள கூப்பிட்டுப் போ காளியாத்தா" அப்படின்னு சொன்னாங்க ஊர்ப் பெருசுங்க. விஷயம் தெரிஞ்சு தெளுவு எறக்கப் போன கருப்பன் திரும்பி வந்து, ரெண்டு பேரையும் வெறிச்சு வெறிச்சுப் பார்த்தான்.

கறுப்பனப் பார்த்ததும் பயந்து போனாங்க ரெண்டு பேரும். எந்த அருவா எந்த தலைய வெட்டுமொன்னு பார்த்துட்டு இருந்துச்சு ஊரு. கெழவி அழுகுர சத்தத்த விட வேறெந்த சத்தமும் கேக்கல. நாய் கூட வாய்க்குள்ளேயே உருமிட்டு நிக்குது. கொஞ்ச நேரம் பார்த்துக்கிடேயிருந்த ஈசுவரி "அப்பா" னுட்டு ஓடிப்போயி கால்ல உளுந்துட்டா. பின்னாடியே போன புருசனும் கால்ல உளுலாமா, வேண்டாமான்னு யோசனை பண்ணிட்டிருந்தான். கீழ உளுந்தவ இன்னும் எந்திருக்கவே இல்ல.

"தப்புத்தாம்பா. நான் பண்ணினது தப்புதான். என்ன மன்னிச்சிருப்பா" புலம்பி அழுகுறா ஈசுவரி. பின்னாலிருந்த காளியாத்தா, ரெண்டு கையையும் தூக்கிட்டு அடிக்க வந்தவ, அவ வயித்துப் பக்கம் பார்த்துட்டா. கொஞ்சம் பூசுன மாதிரி இருந்துச்சு வயிறு. அடிக்க வந்தவ அடிக்காம அப்படியே நின்னு போயிட்டா. அப்பன் காலப் புடிச்சுட்டு இருந்தவ, அப்படியே பின்னாடி திரும்பி பெத்தவள கட்டிப் பிடிச்சிட்டு அழுகுறா. காளியாத்தாளும் கீழ உக்காந்துட்டு மகள கட்டிப் புடிச்சுட்டு அழுகுறா.

"இப்படியே மாத்தி மாத்தி அழுதுட்டேயிருந்தா எப்படி? நல்லா நாளும் அதுவுமா வந்திருக்கற புள்ளைக்கு கோழியடிச்சு கொளம்பு வெச்சு ஊத்து" அப்படிங்குது பல்லுப்போன ஒரு பெருசு.

கருப்பன் காளியாத்தாளப் பார்த்து ஒத்தக் கையத் தூக்கி உள்ள கூட்டிட்டுப் போன்னுட்டான். இதுக்குதான் காத்திருந்த மாதிரி அவளும் மகளக் கூட்டிட்டுப் போயிட்டா. "ஹ்ம்ம்... என்னென்னவோ நடக்கும், செத்த நேரமாவது போகும்னு வந்தா பொசுக்குன்னு போயிருச்சு" ன்னு பேசிட்டே கலைஞ்சு போறாங்க ஊருசனம் மொத்தமும்.

குப்பனோட ஊட்டுக்குத் தெரிஞ்சு போயி ரெண்டு மூணு பேரு வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க. "நாளைக்கு நாள் நல்லாயிருக்கறதால புள்ளையும் மருமவளும் வரட்டும்"னு ஆசப் படறாங்களாம் குப்பனோட ஊட்டுல. அதையும் சொல்லிட்டுப் போனாங்க வந்தவங்க.

வெளிய வந்த ஈசுவரி திண்ணைல ஒக்காந்துட்டு இருந்த அப்பனையே பார்க்குறா. போன நாலு மாசத்துக்கு முன்னாடி, ஓடிப்போறதுக்கு மொத நா உக்காந்து அழுதது நெனவுக்கு வருது.

எங்கியோ வெறிச்சுப் பார்த்துட்டு இருந்த கருப்பன் ஒண்ண நெனச்சு உள்ளுக்குள்ளேயே சிரிச்சிட்டு இருக்கான். நரம்பில்லாத நாக்கு நாலையும் பேசும், அதுனால பேச வேண்டியத மட்டும் பேசுன்னு பெரியவங்க சொல்லுவாங்க. ஆனா, மக ஊட்ட விட்டுப் போன அன்னிக்கும் கருப்பன் கெட்டதா பேச முடியல. அன்னிக்கு எதாவது அவன் பேசற மாதிரி இருந்து எதையாவது சொல்லியிருந்தா இன்னுக்கு மகளப் பார்க்கும்போது அது நெனவுக்கு வராமலா போயிருக்கும் ?. மத்தவங்க எல்லாம் தான் பேசுனத அப்புறமா நெனச்சுப் பார்ப்பாங்களா?. அந்த விதத்துலா, தான் கொடுத்து வெச்சவந்தான்னு நெனச்சுட்டு, தூரத்தில தெரிஞ்ச பனை மரத்தப் பார்த்து சிரிச்சிட்டு இருக்கான் கருப்பன்.

படங்கள்: இணையத்தில் இருந்து. நன்றி.

23 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
சீமானின் விடுதலையின் பின்னணி ரகசியம்

ம.தி.சுதா said...

அருமை சகோதரா மீண்டும் என் ஊரை நினைவு படுத்திப் போகிறது

(உங்கள் ஊரில் கிளை விட்ட பனையிருக்கா..?? நம்ம இடத்தில் இருக்கிறது.)

ஆமினா said...

பெரிய கதையாக இருந்தாலும் அலுப்பு தெரியவே இல்லை. கிராமத்தையும் பனைமரக்காடும் கண்முன்னே வந்துபோனது

RVS said...

யப்பா... வட்டார வழக்கு பேச்சுல சடசடன்னு ஓடி வருதுப்பா கதை.. எப்போ எழுதினது? ரொம்ப நல்லா வந்திருக்கு இளங்கோ. இதே பாணியில் கொஞ்சம் சிறுசா வேற கதைக்களன் முயற்சி பண்ணி பாருங்க. ஹிட் ஆவும். ;-)

RVS said...

ஊமைப்பனை - தலைப்பு இன்னும் பொருந்தி இருக்குமோ? என்ன சொல்றீங்க? ;-) ;-)

இளங்கோ said...

@ம.தி.சுதா
நன்றி நண்பரே.
எல்லா ஊர்களும் ஒரே மாதிரி தான் இருக்கிறதோ?
கிளை விட்ட பனையின் புகைப்படம் இருந்தால் தெரியப் படுத்துங்கள் சகோ.

இளங்கோ said...

@ஆமினா
நன்றிங்க ஆமினா.

இளங்கோ said...

@RVS
ஒரு ஐந்து அல்லது ஆறு வருஷம் இருக்குங்க அண்ணா.

எங்க கிராமத்த வெச்சு எழுதினேன். தலைப்பு நல்லா இருக்குதுங்க அண்ணா, எனக்கு தோணவே இல்ல.
அடுத்த தடவை ஏதாவது கதை எழுதுனா, உங்க கிட்ட தலைப்பு வாங்கிட்டு தான் பதிவுல போடணும். :)

நன்றிங்க RVS அண்ணா.

Chitra said...

கதையை முழுக்க படித்ததற்கு ஒரு நுங்கு சர்பத், ப்ளீஸ்!

இளங்கோ said...

@Chitra

அப்பா, முழுசாப் படிச்சுட்டீங்க.

உங்களுக்கு இல்லாத சர்பத்தா, ஊருக்கு வாங்க, நுங்கு விழாவே கொண்டாடிலாம்.
நன்றிங்க அக்கா.

nis said...

எங்களின் ஊரை நினைவு படுத்திவிட்டீர்கள் :))

ஷஹி said...

ரொம்ப நல்லா இருக்கு இளங்கோ...மத்த கதையெல்லாம் எங்க?

Gnana Prakash said...

நல்லா இருக்கு கதை இளங்கோ

சாமக்கோடங்கி said...

பெரிய கதை.. முழுசா படிச்சிட்டு வர்றேன்..(இப்பத்திக்கு கரண்ட் போகறதுக்குள்ள பின்னூட்டம் போட்டு வெச்சுடறேன்..)

பத்மநாபன் said...

கருப்பனின் ஊமை கடைசியில் வரமாக அமைந்த கதையை சொன்ன விதம் அருமையாக இருந்தது..

நொங்கு ஞாபகங்கள் நிறைய வெளிய கொண்டுவந்துட்டிங்க..இப்படி நொங்குகளை பிரிக்கறதெல்லாம் இல்லிங்க . சீவி கையில குடுத்திட்டே இருப்பாங்க ,பெருவிரல் தான் ஆயுதம்..
பதமான நொங்கு பெரு விரல் பட்டவுடன் தெரிக்கும் நீர், கண்ணில் படும் ஆனந்தம் ,இளய நொங்குகள் கணக்கில்லாமல் சொர் சொர் என்று உள் போகும் சுகம் நிச்சயமாக இப்ப கிடைக்காது......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

நன்றி!

இளங்கோ said...

@nis
நன்றிகள் நண்பரே.

இளங்கோ said...

@ஷஹி
மத்த கதைகள இனிமேல்தாங்க எழுதணும். :)

நன்றிங்க.

இளங்கோ said...

//சாமக்கோடங்கி said...

பெரிய கதை.. முழுசா படிச்சிட்டு வர்றேன்..(இப்பத்திக்கு கரண்ட் போகறதுக்குள்ள பின்னூட்டம் போட்டு வெச்சுடறேன்..)
//

பரவா இல்லீங்க, மெதுவா படிச்சுட்டு திரும்ப வாங்க. :
நன்றிங்க.

இளங்கோ said...

@பத்மநாபன்

கிராமம் எப்பொழுதும் கிராமமாகவே இருக்கிறதுங்க அண்ணா.

எப்பொழுதும் அந்த நாட்களை நினைத்துப் பார்த்தால், 'அது ஒரு கனாக் காலம்' என்றுதான் பாடத் தோன்றுகிறது.

நன்றிங்க அண்ணா.

இளங்கோ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_12.html

நன்றி!
//

அறிமுகம் செய்ததற்கு நன்றிகள் நண்பரே.

சாமக்கோடங்கி said...

//"ஹ்ம்ம்... என்னென்னவோ நடக்கும், செத்த நேரமாவது போகும்னு வந்தா பொசுக்குன்னு போயிருச்சு" ன்னு பேசிட்டே கலைஞ்சு போறாங்க ஊருசனம் மொத்தமும்.//

அப்பாவும் பிரச்சனை இல்லை, மகளும் பிரச்சினை இல்லை,.. மேலே சொன்ன இந்த மனுசப் பய புள்ளைகளை முதலில் வெட்டி பொலி போடோணும்..

இளங்கோ said...

//சாமக்கோடங்கி said...

அப்பாவும் பிரச்சனை இல்லை, மகளும் பிரச்சினை இல்லை,.. மேலே சொன்ன இந்த மனுசப் பய புள்ளைகளை முதலில் வெட்டி பொலி போடோணும்..

//

பிரகாஷ், ஏதாவது நடக்காதா என்று காத்துக் கொண்டிருப்பவர்களே இங்கு அதிகம்.

இந்த மாதிரி கூட்டம் கூடினா, உங்களுக்கு போன் பண்ணுறேன். அருவாளோட வந்திருங்க, பொலி போடுறதுக்கு. :) :)

Post a Comment