Monday, July 19, 2010

சினிமா - லைப் இஸ் பியுட்டிபுல் (Life Is Beautiful)



பரந்து விரிந்த இந்த பூமியில், எவ்வளவு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொருவரின் பின்னாலும் மிக நீண்ட கதை இருந்திருக்கும். ஒரு சிலர் தங்கள் கதைகளை சொல்லிவிட்டு சென்றார்கள். மற்றவர்கள் மண்ணில் புதைக்கப் படும்போதே, அவர்களின் வரலாறும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. சொல்லப்பட்ட கதைகளை விட, சொல்லாமல் விட்ட கதைகள் தான் அதிகமாக இருக்கும்.

உலகம் அழகானது. வாழ்க்கையும் கூட அழகானதுதான். ஆனால், வாழ்க்கையே போராட்டமாக மாறினால்?. 'Life Is Beautiful' படம் பற்றி நிறையத் தடவை கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்க்க முடிந்தது. 'இது ஒரு சாதாரணக் கதை.. ஆனால் அவ்வளவு எளிதாக சொல்லிவிட முடியாது.. .' என படத்தின் ஆரம்பித்திலேயே சொல்லிவிடுகிறார்கள்.

உலகப் போரின்போது சித்திரவதை செய்யப்பட்ட யூத மக்களின் கண்ணீர் துளிகளில், ஒரு துளி இந்தக் கதை. பல வருடங்கள் ஓடியும் இன்னும் இந்த சமுதாயம் திருந்தவில்லை, அதற்கு சான்று இலங்கை. பட்டியில் அடைப்பது போல அடைக்கப்பட்ட மக்களின் குடும்பம் என்ன ஆனது, குழந்தைகள் என்ன ஆனார்கள், வயதான பெற்றோர் என்ன பண்ணியிருப்பார்கள். இதைவிடக் கொடுமை,யூதர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் எனப் பிரித்து அடைத்து வைத்து அழித்தொழிக்க அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள்.

'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்தின் நாயகன், கைடோ இத்தாலியில் புத்தக கடை வைத்து நடத்தி வருகிறான். படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்புடனே நகர்கின்றது. அங்குதான் அவனின் மாமாவும் இருக்கிறார். இவர்கள் யூதர்கள் என்பதால் அடிக்கடி அவமானப்படுத்த படுகிறார்கள். டோரா எனும் இத்தாலிப் பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. டோராவின் அம்மா இன்னொருவருக்கு அவளை நிச்சயம் செய்ய முயற்சிக்க, கைடோ அவளைத் திருமணம் செய்துகொள்ளுகிறான். மகிழ்ச்சியான வாழ்கையில், அழகான ஒரு குழந்தை. பெயர் ஜோசுவா. நான்கு வயதான ஜோசுவாவின் பிறந்த நாள் அன்று, அவனின் பாட்டியான டோராவின் அம்மா அவனை வாழ்த்த வீட்டுக்கு வர விரும்புகிறார்.

பிறந்த நாள் அன்று காலையில், அம்மாவை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வரும் டோரா, வீட்டுக்குள் பொருட்கள் சிதறிக் கிடைப்பதை பார்த்து ஏதோ புரிந்து கொள்ளுகிறாள். நேராக ரயில் நிலையம் சென்று கைடோவும், மகனும் இருக்கும் ரயிலில் தன்னையும் அனுப்புமாறு அதிகாரியிடம் கேட்க, அவனும் அவளை இன்னொரு பெட்டியில் ஏற்றிவிடுகிறான். ரயில் ஒரு இடத்தில நிற்க, பெண்கள், ஆண்கள், முதியவர்கள் எனத் தனி தனியாகப் பிரித்து அந்த வளாகத்தில் அடைக்கிறார்கள். கைடோவும், ஜோசுவாவும் ஓரிடத்தில், டோரா இன்னொரு இடத்தில்.

அந்தக் குழந்தையை கைடோ சமாளிப்பதும், ஜோசுவா கேட்கும் கேள்விகளுக்கு போர், ரத்தம் என பயம் காட்டாமல் 'இது ஒரு விளையாட்டு' எனச் சொல்வதும், ஒரு தகப்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளம் கைடோ. மூவரும் என்ன ஆனார்கள் ?, படத்தைப் பாருங்களேன். எவ்வளவு அழகான வாழ்க்கை நமக்கெல்லாம் என்று தோன்றும்.



கண்ணீர்த் துளிகள்;
துளி 1 :
'Dogs and Jewish are not allowed' என ஒரு கடையில் எழுதியிருக்கும். அதைப் பற்றி ஜோசுவாவும், கைடோவும் பேசும்பொழுது சிந்தியது. கவனிக்க, நம் நாட்டில் இன்னும் தீண்டாமை ஒழியவில்லை. எல்லா சாதியினர் வீட்டுக்குள், எல்லா சாதியினரும் செல்ல முடிவதில்லை என்பதை நினைத்துப் பார்க்கவும்.

துளி 2 :
தனியாக கடையில் அமர்ந்திருக்கும் ஜோசுவாவை அவன் பாட்டி பார்க்க வரும்பொழுது.

துளி 3 :
இப்படி அடைத்து வைத்திருப்பது, சாப்பாடு இல்லாமல் இருப்பது இதெல்லாம் எதற்கு என ஜோசுவா கேட்க 'இது ஒரு விளையாட்டு' என கைடோ சொல்லுமிடம். ஆம், ஆட்சியில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு தானே என எனக்கு நினைவுக்கு வந்தது.

துளி 3 :
கைடோ தான் கொல்லப்படும் சமயம், பையனுக்கு தெரியாமல் இருக்க வீர நடை நடந்து போகும் பொழுது.

துளி 4 :
போட்டியில் வெற்றி பெற்றால் பையனுக்கு ஒரு 'Tank' கிடைக்கும் எனச் சொல்லியிருந்தான் கைடோ. இறுதியில் 'Tank' மேலமர்ந்து வரும் வீரர், ஜோசுவாவை தூக்கி வைத்துகொள்ள அவன் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ளும்பொழுது.

முடிவாக, 'அன்பே சிவம்' படத்தின் இறுதியில் 'இந்த உலகத்தில் மறைந்து கிடக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்' என ஒரு வரி வரும். அந்த ஆச்சரியங்களை பார்த்து ஆனந்தப் படாமல், மனிதர்களை காவு வாங்க வைக்கும் போர்களை நடத்தும் மனிதர்களை என்ன செய்யலாம்?.


18 comments:

  1. ulakin mikathuyaraaana thiraippadangalil ondru.. nalla eluthiyirukkinga, Boy with stripped Pyjama paarunga...

    ReplyDelete
  2. அருமையான வீமர்சனம். இன்றே நான் பார்த்து பார்துவீடுகீறேன்

    ReplyDelete
  3. அந்தப் படத்தைப் பார்த்த பொது தான் கடவுள் நமக்கெல்லாம் எவ்வளவு ஒரு அழகிய வாழ்க்கையைக் கொடுத்து இருக்கிறான் எனப் புரிகிறது.. அதுவும் அந்தத் தந்தை தன மகனிடம் இருந்து பல விஷயங்களைக் கடைசி வரையில் மறைப்பது கண்களில் நீர் சிந்த வைக்கும் தருனங்களே.. எப்படியும் துன்பம் வந்து விட்டது.. தான் வருந்தப் போகிறோம்.. தன மகனாவது சந்தோஷமாக இருந்து விட்டுப் போகட்டுமே என்ற எண்ணம் தந்தைக் குலத்தைப் பெருமைப் படுத்துகிறது... வாழ்க்கை என்பது நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது..

    ReplyDelete
  4. அந்தப் படத்தைப் பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது.. கட்டாயம் ஒரு முறை பார்க்க வேண்டும். நாம் இருக்கும் இந்தத் தருணம் எவ்வளவு மகத்தானது என்பது அப்போது தான் புரியும்..


    நன்றி நினைவுகளைத் தூண்டி விட்டதற்கு..

    ReplyDelete
  5. //முரளிகுமார் பத்மநாபன் said... ulakin mikathuyaraaana thiraippadangalil ondru.. nalla eluthiyirukkinga, Boy with stripped Pyjama paarunga...//
    ஆம் முரளி அண்ணா , துயர் நிரம்பிய படம்தான்... 'Boy with stripped Pyjama' - பார்த்துவிட்டு பிறகு சொல்லுகிறேன்...
    தங்களின் வருகைக்கு நன்றி...

    ReplyDelete
  6. // Gnana Prakash said... அருமையான வீமர்சனம். இன்றே நான் பார்த்து பார்துவீடுகீறேன்
    //
    பார்த்து விட்டு சொல்லுங்கள் ஞானம்...

    ReplyDelete
  7. @ பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி;

    பிரகாஷ், ஒரு துளி ரத்தத்தை நமக்கு காட்டாமல் படத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அதன் வலியையும், ரணங்களையும் நாம் உணர முடிகின்றது. அதுதான் இந்த படத்தின் வெற்றி.

    //வாழ்க்கை என்பது நாம் அதனை எப்படிப் பார்க்கிறோம் என்பதை பொருத்து இருக்கிறது.. //
    ஆம் பிரகாஷ்....

    ReplyDelete
  8. அருமையான படம்.. அருமையான விமர்சனம்... இது பிடிச்சுருந்தா, கண்டிப்பா ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாருங்க... இதே கதைக்களம்... ஆனால் அது உண்மைக்கதை... என்னைப்போறுத்தவரை உலக சினிமா வரலாற்றில் மிகக்கச்சிதமான இயக்கம் என அந்த படத்தைதான் சொல்லுவேன்... கண்ணீர்த்துளிகள்னு சொல்லியிருக்கீங்களே... அதுல கண்ணீர் கொட்டும்... அதுனால எல்லாம் அழுகை படம்னு பார்க்காம விட்டுடாதீங்க...

    ReplyDelete
  9. // ஜெய் said... அருமையான படம்.. அருமையான விமர்சனம்... இது பிடிச்சுருந்தா, கண்டிப்பா ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பாருங்க... இதே கதைக்களம்... ஆனால் அது உண்மைக்கதை... என்னைப்போறுத்தவரை உலக சினிமா வரலாற்றில் மிகக்கச்சிதமான இயக்கம் என அந்த படத்தைதான் சொல்லுவேன்... கண்ணீர்த்துளிகள்னு சொல்லியிருக்கீங்களே... அதுல கண்ணீர் கொட்டும்... அதுனால எல்லாம் அழுகை படம்னு பார்க்காம விட்டுடாதீங்க... //
    அன்பு ஜெய், தங்களின் வருகைக்கு என் நன்றிகள்..
    உங்களைப் போன்றவர்களைப் பார்த்தே எனக்கும் நான் விரும்பிய சினிமாக்களைப் பற்றி எழுதத் தோன்றியது. உங்களின் பதிவுகளின் ரசிகனான என்னை நீங்கள் பாராட்டியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கண்டிப்பாக ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் பார்க்கிறேன்.

    ReplyDelete
  10. நண்பா!இந்தப் படமும்,pursuit of happiness படமும் ஒரு தந்தை,தன் மகனின் நன்மைக்காக போராடும் கதையை எடுத்துச் சொல்கின்றன.
    ஆனால் இந்தப் படத்தில் எந்த அளவு நகைச்சுவை உண்டோ,அந்த அளவுக்கு வலி உண்டு.தாங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பது தெரிந்தால் அந்தப் பிஞ்சு மனம் என்ன கலவரத்துக்கும் உள்ளாகுமோ,பின்னாளில் இந்த நினைவுகள் அவன் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய கொடூர தாக்கங்கள் தாங்கக் கூடியவையாக இருக்குமோ என்று எண்ணி பயப்படும் ஒரு தந்தையின் கதை இது.எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு படம்.

    ReplyDelete
  11. @ ILLUMINATI

    தங்களின் வருகைக்கு நன்றி ILLUMINATI.
    'pursuit of happiness' படமும் எனது லிஸ்ட்-ல் இருக்கின்றன. போன மாதத்தில் ஒரு நாள் ஏதோ ஒரு தொலைக் காட்சியில் இப்படத்தைப் போட்டிருந்தார்கள். என் கெட்ட நேரம் பார்க்க முடியவில்லை. கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

    //ஒரு தந்தையின் கதை இது.எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு படம். //
    ஆம்..

    ReplyDelete
  12. கண்டிப்பா பாருங்க.வில் ஸ்மித் வாழ்ந்து இருப்பார் அதுல.உணர்ச்சிகள் நிறைந்த ,ஒரு தந்தையின் போராட்டத்தை சொல்லும் படம்..

    ReplyDelete
  13. //ILLUMINATI said... கண்டிப்பா பாருங்க.வில் ஸ்மித் வாழ்ந்து இருப்பார் அதுல.உணர்ச்சிகள் நிறைந்த ,ஒரு தந்தையின் போராட்டத்தை சொல்லும் படம்..//

    பார்த்துவிட்டு ஒரு பதிவு எழுதுகின்றேன்.. நன்றி ILLUMINATI.

    ReplyDelete
  14. துளி 3 :
    கைடோ தான் கொல்லப்படும் சமயம், பையனுக்கு தெரியாமல் இருக்க வீர நடை நடந்து போகும் பொழுது.
    ///

    YAA I TOO FEEL THAT SCENE
    VERY NICE IN THAT MOVIE

    ReplyDelete
  15. //பிரியமுடன் பிரபு said...
    YAA I TOO FEEL THAT SCENE
    VERY NICE IN THAT MOVIE //

    நன்றி நண்பரே.

    ReplyDelete
  16. மிக அருமையான படம். வீட்டில் தனியாக ஒரு இரவில் பத்து மணிக்கு மேல் டி வி டி இல படம் பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்ப்பதற்கு முன் நான் விமர்சனம் படிக்கவில்லை. அதனால் அன்ன கதை என்று தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஏதோ காமெடி படம் போல் இருந்தது. ஆனால் கைடோவை ரயிலில் ஏற்றி அவரை தேடி மனைவி சென்றவுடன் கதை சூடு பிடித்தது. அஹ்ட்ன பின்னர் படம் போனதே தெரியவில்லை. சாதரணமாக அழுகாத நான் அன்று என்னை அறியாமல் கண்ணில் தானே கண்ணீர் வந்தது. அவ்வளவு அருமையாக செதுக்கி இருந்தார்கள் படத்தினை. நான் ஏற்கனவே Fredrick Forsyth Odyssa File நாவலை படித்ததனால் படம் மிகுந்த ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்.

    ReplyDelete
  17. மிக அருமையான படம். வீட்டில் தனியாக ஒரு இரவில் பத்து மணிக்கு மேல் டி வி டி இல படம் பார்க்க ஆரம்பித்தேன். படம் பார்ப்பதற்கு முன் நான் விமர்சனம் படிக்கவில்லை. அதனால் அன்ன கதை என்று தெரியாமல் பார்க்க ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் ஏதோ காமெடி படம் போல் இருந்தது. ஆனால் கைடோவை ரயிலில் ஏற்றி அவரை தேடி மனைவி சென்றவுடன் கதை சூடு பிடித்தது. அஹ்ட்ன பின்னர் படம் போனதே தெரியவில்லை. சாதரணமாக அழுகாத நான் அன்று என்னை அறியாமல் கண்ணில் தானே கண்ணீர் வந்தது. அவ்வளவு அருமையாக செதுக்கி இருந்தார்கள் படத்தினை. நான் ஏற்கனவே Fredrick Forsyth Odyssa File நாவலை படித்ததனால் படம் மிகுந்த ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அனைவரும் பார்க்க வேண்டிய சிறந்த படம்.

    ReplyDelete
  18. @C.P.Palanichamy
    நன்றிங்க...

    ReplyDelete