Tuesday, July 27, 2010

சினிமா - ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் (Schindler's List)


உலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றான 'ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்' படத்தை இந்த வாரம் பார்த்து விட்டேன். 'லைப் இஸ் பியுட்டிபுல்' படத்துக்கு நான் எழுதிய பதிவுக்கு பின்னூட்டம் இட்டிருந்த திரு.ஜெய் அவர்கள் இப்படத்தைப் பார்க்குமாறு பரிந்துரைத்தார். ஏற்கனவே படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், படம் பார்க்க தூண்டிய திரு.ஜெய் அவர்களுக்கு என் நன்றிகள். நண்பர் திரு.முரளி பரிந்துரைத்த ' Boy with stripped Pyjama' பார்க்க வேண்டும்.

படத்தின் ஆரம்பத்தில் ஒரு மெழுகுவர்த்தி உருகி, அணைந்த பின்னர் வரும் புகையை மேலே காட்டி அப்படியே போய் ரயிலில் வரும் புகையில் போய் முடிகின்றது. கூடவே வண்ணத்தில் இருந்த காட்சிகள் கருப்பு, வெள்ளைக்கு மாறுகின்றன.

ஆறு மில்லியன் மக்கள் கொல்லப்பட்ட வருடத்துக்கும், இடத்துக்கும் படம் நம்மை இழுத்துச் செல்கின்றது. போலந்து நாட்டில் தங்கி இருந்த யூத மக்கள் குடியிருந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டு, ரயிலில் நாஜி முகாம்களுக்கு அனுப்பி வைக்கபடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயர்களைச் சொல்லி முகாம்களில் அடைக்கப் படுகிறார்கள்.

முகாம்களில் இருந்த மக்களை என்ன செய்வார்கள்?. சித்ரவதை செய்து இறுதியில் கொல்லுவார்கள், ஒரு சிலருக்கு முதல் நாளே தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறது. முகாம்களுக்கு வர மறுத்தால், வீட்டிலேயே கொன்று விட்டு செல்வார்கள்.

இந்த நேரத்தில் 'ஷிண்ட்லெர்' என்னும் ஜெர்மன் நாஜி கட்சியை சேர்ந்த ஒருவன் போலந்து நாட்டில் இருக்கும் ஜெர்மன் அதிகாரிகளோடு பழகி, ஒரு தொழிற்சாலையைக் கட்டுகிறான். தனது நிறுவனத்துக்கு வேலை செய்ய ஆட்களை நாஜி முகாம்களில் இருந்து அழைத்து வருகிறான். நாஜிக்கள் உடனே விட்டு விடுவார்களா என்ன?. ஆகவே, அவன் அழைத்து வரும் யூத மக்களுக்கு இந்தத் தொழிலில் ஏற்கனவே அனுபவம் உள்ளது போல சான்றுகளைக் காண்பித்து அழைத்து வரப்படுகிறார்கள்.

எதற்காக 'ஷிண்ட்லெர்' அங்கே போய் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும், அதுவும் கொல்லபடவேண்டிய யூத மக்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும், அனுபவம் இல்லாதவர்களை ஏன் அவன் தேர்வு செய்தான், ஒரு நாஜியாக இருந்து கொண்டு யூத மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும். மனிதர்கள் மேல் உள்ளே பாசம் தவிர வேறெதுவும் இல்லை.

தங்கள் வீடுகளில் இருந்து, ஒரு யூதர் கெளம்பும்போது தனது வீட்டின் கதவில் பதித்த ஒரு சின்னத்தை பிடுங்கி செல்லும் பொழுது, மனிதனுக்கு மனிதன் தான் எதிரி எனத் தோன்றியது.

சின்னா பின்னமாகி கிடக்கும் தெருவில், அனைவரும் கருப்பு வெள்ளையில் நடக்க, ஒரு சிறுமி மட்டும் வண்ண உடையில் உலாவிக் கொண்டிருப்பாள். சில காட்சிகள் தாண்டி, அந்தக் குழந்தையும் கொல்லப்பட்டு தள்ளு வண்டியில் தள்ளிக் கொண்டு போவார்கள். அப்பொழுதும் அந்தக் குழந்தை வண்ண உடையில்தான் இருக்கும். அந்தக் குழந்தைக்கு மட்டும் ஏன் வண்ண உடை என எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்களேன்.


ஒரு இன்ச் கூட விடாமல் எல்லோரையும் ரயில் பெட்டியில் அடைத்து வைத்து விட்டு, அவர்களைக் காப்பாற்ற ஷிண்ட்லெர் தண்ணீர்க் குழாயை பீச்சும் பொழுது, நாமும் இந்த உலகத்தில் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் எனத் தோன்றும். ரயிலில் அம்மக்கள் செல்லும்பொழுது, தண்ணீருக்காக ரயில் பெட்டியில் மேலே உறைந்திருக்கும் பனியை உடைத்து ஒரு குண்டாவில் போட்டுக் குலுக்கும் போது நம் கண்களில் நீர் உறைந்திருக்கும்.

உடலில் ஒரு பொட்டுத் துணி கூட இல்லாமல், நாஜி மருத்துவர்கள் தேர்வு செய்ய வரிசையில் நிற்கும் கிழவர், கிழவிகள், ஆண்கள், பெண்கள்.. . என அனைவரும் நிற்கும் இடத்தில் கண்களில் நீர் கொட்டியது. இன்னொரு இடத்தில் எல்லாப் பெண்களையும் துணியில்லாமல், ஒரு அறையில் அடைத்து கதவை மூடி விடுகிறார்கள். விளக்கு அணைந்து, மீண்டும் எரிய அனைவரும் உயிர் பயத்தில் அலறிக்கொண்டு மேலே நீட்டிக் கொண்டிருக்கும் ஷவரை பார்த்துக் கொண்டிருக்க, அதில் இருந்து விஷ வாயு வருமா இல்லை வேறு எதாவது வருமா என அவர்கள் அடையும் கலவரத்தை முகத்தில் கொண்டு வந்திருப்பார்கள். சிறிது நேரம் கழித்து அதில் இருந்து தண்ணீர் வர, அவர்கள் அழும் அழுகையை விளக்கவே முடியாது.

நாஜிக்களின் ஆட்சி முடிவுக்கு வந்த தினத்தில், ஷிண்ட்லெர் ஜெர்மனிக்கு புறப்படும் பொழுது, ஷிண்ட்லெர் காப்பாற்றி வைத்திருந்த யூத மக்கள், தங்கள் பரிசாக ஒரு பெரியவரின் பற்களில் இருந்து தங்கத்தை எடுத்து ஒரு மோதிரம் செய்து அளிக்கிறார்கள். அதை வாங்கிப் பார்த்த ஷிண்ட்லெர், 'இதோ இந்தக் கார், இந்தக் காரை Goeth- க்கு அளித்திருந்தால் அவன் இன்னும் பத்து மக்களை எனக்கு கொடுத்திருப்பான். ஏன் இந்த காரை நான் வைத்திருந்தேன்?. இது பத்து உயிர்களுக்குச் சமம். இந்த தங்க மோதிரம், இதை வைத்து இரண்டு பேரைக் காப்பாற்ற முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் ஒரு உயிரையாவது நான் காப்பாற்றி இருப்பேன். நான் இன்னும் நெறையப் பேரை காப்பாற்றி இருக்க வேண்டும்..' என அழுகும் காட்சியில், அந்த மாமனிதன் மனிதர்கள் மேல் வைத்த அன்புக்கு நாம் தலை வணங்க வேண்டும்.

'ஷிண்ட்லெர்' காப்பாற்றிய மக்கள் 'Schindler's Jews' என அழைக்கப்பட்டார்கள். ஷிண்ட்லெர் காப்பாற்றிய மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூறு. கருப்பு வெள்ளை காட்சி முடிந்து, படத்தின் இறுதியில், 'Oskar Schindler' என எழுதப்பட்ட ஒரு கல்லறையில், உண்மையான மனிதர்கள்(தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும், ஷிண்ட்லெர் காப்பாற்றிய யூதர்கள்) வரிசையாக யூத மக்களின் வழக்கப்படி ஒவ்வொருவரும் ஒரு கல்லை வைக்கிறார்கள். அதில் ஷிண்ட்லெர் மனைவி, திருமதி.எமிலி அவர்களும் வருவார்கள்.

'ஷிண்ட்லெர்' என்னும் மாபெரும் மனிதனை திரையில் அறிமுகப்படுத்திய 'ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்' பெயரும், படத்துக்கு உழைத்தவர்களின் பெயர்களும், கொல்லப்பட்ட யூத மக்களின் சமாதிகளின் மேல் ஒளிர்ந்து படம் முடிகின்றது. 'ஷிண்ட்லெர் லிஸ்ட்' - போரின் கொடுமையையும், உயிர்களின் அருமையையும் உணர்த்திய படம்.7 comments:

ஜெய் said...

இளங்கோ... முதலில் இப்படி ஒரு படத்தை எழுதியதற்கு நன்றி... :)
சொன்னா நம்புவீங்களான்னு தெரியல... போன வெள்ளிக்கிழமை ஒரு தடவை, முந்தாநாள் ஒரு தடவை பார்த்தேன்... மொத்தமா 15 தடவையாவது பார்த்திருப்பேன்... பல டயலாக்ஸ் மனப்பாடம் பண்ணற அளவுக்கு பைத்தியம் நான்...

மிகச்சரியா எந்தெந்த காட்சிகள் தேவையோ அதை மட்டும் விவரிச்சு இருக்கீங்க...

// எதற்காக 'ஷிண்ட்லெர்' அங்கே போய் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும், அதுவும் கொல்லபடவேண்டிய யூத மக்களை ஏன் தேர்வு செய்ய வேண்டும், அனுபவம் இல்லாதவர்களை ஏன் அவன் தேர்வு செய்தான், ஒரு நாஜியாக இருந்து கொண்டு யூத மக்களை ஏன் காப்பாற்ற வேண்டும். மனிதர்கள் மேல் உள்ளே பாசம் தவிர வேறெதுவும் இல்லை. //

இது மட்டும் கொஞ்சம் வேற மாதிரின்னு நினைக்கிறேன்... ஷிண்ட்லர் முதலில் காசை மட்டுமே பார்த்தே தொழிலை ஆரம்பிக்கிறார்... யூதர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும்... அனுபவமில்லாதவர்கள் மீது பாவப்பட்டு, முதலில் ஸ்டெர்ன்-தான் அவர்களை தேர்வு செய்கிறார்... அது ஷிண்ட்லருக்கு பிடிக்கவில்லை.. ஆனால், முதலில் இப்படி வியாபாரத்தையே பார்க்கும் ஷிண்ட்லர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்... பின்னர் வியாபாரத்தை விட மக்களை காப்பாற்றுவதே அவருக்கு முக்கியமாகிறது.. அவரும் அனுபவம் இல்லாதவர்களை காப்பாற்றுகிறார்...

// அந்தக் குழந்தைக்கு மட்டும் ஏன் வண்ண உடை என எனக்குப் புரியவில்லை. தெரிந்தவர்கள் எனக்குச் சொல்லுங்களேன். //
இதுதான் ஷிண்ட்லர் முதல்முறை மனம் உடைந்து அழும்காட்சி... அந்தக்குழந்தையையும் விட்டுவைக்காத கொடுமைதான் அவரை மொத்தமாகவே மனம் மாறச்செய்கிறது...
ஏன் சிவப்பு உடை? படம் முழுவதுமே உண்மைச்சம்பவங்களே... எல்லாமே உண்மை கதாபாத்திரங்களே... ஸ்பீல்பெர்க் நேரிலேயே முகாமில் இருந்தவர்களை சந்தித்து பல சம்பவங்களை எடுத்திருக்கிறார்... நாசி முகாமில் சிவப்பு உடை அணிந்த குழந்தை பல நாட்கள் சுற்றி வந்ததாக, அந்த முகாமில் இருந்து உயிர்பிழைத்து வந்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்...

ஜெய் said...
This comment has been removed by the author.
இளங்கோ said...

ஜெய், இந்தப் படத்தைப் பார்க்குமாறு சொன்னதே நீங்கள்தான். எனவே உங்களுக்கு என் நன்றிகள்.

//இது மட்டும் கொஞ்சம் வேற மாதிரின்னு நினைக்கிறேன்... ஷிண்ட்லர் முதலில் காசை மட்டுமே பார்த்தே தொழிலை ஆரம்பிக்கிறார்... யூதர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும்... அனுபவமில்லாதவர்கள் மீது பாவப்பட்டு, முதலில் ஸ்டெர்ன்-தான் அவர்களை தேர்வு செய்கிறார்... அது ஷிண்ட்லருக்கு பிடிக்கவில்லை.. ஆனால், முதலில் இப்படி வியாபாரத்தையே பார்க்கும் ஷிண்ட்லர் கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறார்... பின்னர் வியாபாரத்தை விட மக்களை காப்பாற்றுவதே அவருக்கு முக்கியமாகிறது.. அவரும் அனுபவம் இல்லாதவர்களை காப்பாற்றுகிறார்...//

நீங்கள் சொன்ன பிறகு, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. மொத்தம் 15 தடவைகளுக்கு மேல் இப்படத்தைப் பார்த்தவர் நீங்கள். நான் ஒரே தடவைதான் பார்த்தேன். :( . எனவே பிழை ஏற்பட்டு விட்டது.

//ஏன் சிவப்பு உடை? படம் முழுவதுமே உண்மைச்சம்பவங்களே... எல்லாமே உண்மை கதாபாத்திரங்களே... ஸ்பீல்பெர்க் நேரிலேயே முகாமில் இருந்தவர்களை சந்தித்து பல சம்பவங்களை எடுத்திருக்கிறார்... நாசி முகாமில் சிவப்பு உடை அணிந்த குழந்தை பல நாட்கள் சுற்றி வந்ததாக, அந்த முகாமில் இருந்து உயிர்பிழைத்து வந்தவர்கள் சொல்லியிருக்கின்றனர்... //
நான் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த தங்களுக்கு என் நன்றிகள் ஜெய்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

மாமனிதர்கள் எப்பொழுதுமே காலம் கடந்தே மதிக்கப் படுவார்கள்.. மனிதனுக்கும் மாமனிதனுக்கும் தமிழில் ஓரெழுத்து மற்றுமே வித்தியாசம்.. அதாவது நம்முள் இருக்கும் ஒரு சிறு சுடரை நன்கு தீண்டி ஒளிரவிட்டால் நாமும் மாமனிதன் ஆகலாம்.. ஒரு மேதைக்கு கிடைக்கும் அதே 24 மணி நேரம் தான் கடவுள் நமக்கும் கொடுத்துள்ளான்.. எனவே வாய்ப்புகளும் நமக்கு சமமாகவே கொடுக்கப் பட்டுள்ளன என்பதை உணர்த்தும் படம்.. ஸ்பீல்பெர்க் ஒரு படைப்பாற்றல் ஞானி என்பதை உணர்த்தும் படம்..

நன்றிகள் பல..

இளங்கோ said...

//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said... மாமனிதர்கள் எப்பொழுதுமே காலம் கடந்தே மதிக்கப் படுவார்கள்.. மனிதனுக்கும் மாமனிதனுக்கும் தமிழில் ஓரெழுத்து மற்றுமே வித்தியாசம்.. அதாவது நம்முள் இருக்கும் ஒரு சிறு சுடரை நன்கு தீண்டி ஒளிரவிட்டால் நாமும் மாமனிதன் ஆகலாம்.. ஒரு மேதைக்கு கிடைக்கும் அதே 24 மணி நேரம் தான் கடவுள் நமக்கும் கொடுத்துள்ளான்.. எனவே வாய்ப்புகளும் நமக்கு சமமாகவே கொடுக்கப் பட்டுள்ளன என்பதை உணர்த்தும் படம்.. ஸ்பீல்பெர்க் ஒரு படைப்பாற்றல் ஞானி என்பதை உணர்த்தும் படம்..//

வாழ்க்கை அவ்வளவு எளிதாக யாருக்கும் அமைந்து விடுவதில்லை பிரகாஷ்.. அம்மக்கள் பட்ட துயரங்களைப் பார்த்தபிறகு, எனக்கு இருந்த சிறு துயரங்கள் எல்லாம் ஒன்றுமே இல்லை போலத் தோன்றுகிறது.. நன்றிபிரகாஷ்

இராயர் மாலதி said...

intha padam oskar award petrathu

இளங்கோ said...

@இராயர் மாலதி
ஆமாங்க. வருகைக்கு நன்றிங்க இராயர் மாலதி.

Post a Comment