Friday, April 22, 2011

பெண்ணும் எழுத்தும்

'தீராத விளையாட்டுப் பிள்ளை' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன்.

ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்னும் சமூகம், ஒரு போதும் கோவலனை கெட்டுப் போனவனாக எண்ணுவதில்லை. அது எப்படி முடியும், கண்ணகியை பண்பாட்டுச் சின்னமாக என்னும் தலைவர்கள் வீட்டில் எத்தனை பெண்டாட்டிகள். பெண்களை நாம் கண்ணகியாகவோ, மாதவியாகவோ எண்ணாமல், ஒரு பெண் ஆக எப்போது பார்க்கப் போகிறோம்?.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத் தளத்தில் 'சொந்தக்குரல்' என்கிற கதை வெளியாகி இருக்கிறது. இந்தக் கதையில், அம்மா தன் மகனிடம் கதை சொல்வதாக இருக்கும். தனது கணவன் செய்த கொடுமைகளையும் தாண்டி ஒரு கதை எழுத அவள் கஷ்டப் பட்டதையும், இன்னும் ஒரு கதை எழுதப் படாமல் இருப்பதாகவும், அதை சொல்லப் போவதாகும் சொல்லிக் கொண்டே உறங்கிப் போகிறாள். இந்த அம்மாவைப் போலவே, ஊரில் உள்ள அத்தனை பெண்களிடமும் ஒரு நீள் கதை உறங்கிக் கொண்டிருக்கும் அல்லவா? .

பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அனுராதா ரமணன், சிவசங்கரி மற்றும் வாஸந்தி ஆகியோரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதிலும் மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் அனுராதா ரமணன் அவர்களின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். இப்பொழுது வாஸந்தி அவர்கள் எழுதி வரும் 'பெற்றதும் இழந்ததும்' தொடர் குமுதம் தீராநதியில் வெளிவருகிறது. ஒரு திறந்த கோணத்தில் எழுதப் படும் தொடராகவே இது எனக்கு பிடித்திருக்கிறது. ஆண்களில் எல்லோருமே பெண்களைப் பற்றி எழுதாமல் கடந்து போக முடிவதில்லை. நான் படித்த அனைத்து எழுத்தாளர்களுமே பெண்களை உயர்வாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

எழுத்து என்று வரும்போதும் நினைத்ததை எல்லாம் எழுத முடிவதில்லை. ஒரு ஆண் காமம் பற்றியோ அல்லது பாலியல் பற்றியோ விவரமாக எழுத முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி எழுதும் அனைத்துப் பெண் எழுத்தாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.

இறுதியாக, மலையாளக் கவிஞர் கமலாதாஸ் அவர்களின் கவிதை ஒன்றை, எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் இந்த மாத குமுதம் தீராநதியில் தனது 'பெற்றதும் இழந்ததும்' பகுதியில் எழுதியிருக்கிறார்.

தூக்கணாங்குருவியை உன் உள்ளங்கைக்குள்
பொத்தி வைக்கத் திட்டமிட்டாய்
உனக்குத் தெரியும்,
உனது அன்புப்பிடியில் இறுக்கிக் கொண்டால்
அவளது இயல்பு மாறுமென்று
பருவங்களும் சொந்த வீடும் மட்டும் மறக்கவில்லை,
போயின மறதியில்..
பறக்கும் ஆர்வமும் முடிவற்ற வானத்தின் எல்லைகளும்..




இந்தப் பதிவை தொடர விருப்பமுள்ள அனைத்து நண்பர்களும் எழுதவும்.


20 comments:

  1. அற்புதம் இளங்கோ. ;-)
    கண்ணகியை கொண்டாடும் அரசியல்வாதிகளை கேள்வி கேட்கிறாய்.
    பெண்களை எந்த முகமூடியும் போடாமால் பெண்களாகப் பார்க்கச் சொல்கிறாய். நன்று.
    நல்ல பதிவு. ;-))

    ReplyDelete
  2. //ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம்.//

    நானும் படிச்சிருக்கேன்....

    ReplyDelete
  3. //தூக்கணாங்குருவியை உன் உள்ளங்கைக்குள்
    பொத்தி வைக்கத் திட்டமிட்டாய்
    உனக்குத் தெரியும்,
    உனது அன்புப்பிடியில் இறுக்கிக் கொண்டால்
    அவளது இயல்பு மாறுமென்று
    பருவங்களும் சொந்த வீடும் மட்டும் மறக்கவில்லை,
    போயின மறதியில்..
    பறக்கும் ஆர்வமும் முடிவற்ற வானத்தின் எல்லைகளும்..//

    இதை நீங்கள் மலையாளம் எழுத்தில் படித்தால் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்....

    ReplyDelete
  4. அருமையா எழுதி இருக்கீங்க வாழ்த்துகள்.....

    ReplyDelete
  5. ஓட்டும் போட்டாச்சி....

    ReplyDelete
  6. போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள்//

    சரியான பாயிண்ட்.
    சகோ, உங்கள் கருத்துக்களோடு நானும் உடன்படுகிறேன். எமது சமூகத்தில் பெண் எழுத்து என்றால் இப்படித் தான் இருக்க வேண்டும் என்கின்ற கொள்கையுடன் பலரது வரையறைகள், வரம்புகள் இருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் இருக்கும் வரை, பெண் எழுத்தானது பிறிதோர் கண்ணோட்டத்தினூடாக மட்டுமே நோக்கப்படும் என்பதில் ஐயமில்லை.

    ஆண் மட்டும் பல விடயங்களிலும் உள் இறங்கி எழுதலாம், ஆனால் பெண் மட்டும் ஒரு வட்டத்திற்குள் நின்று எழுத வேண்டும் எனும் மறைமுக வரம்பினைத் தான் எமது சமூகம் போட்டு வைத்திருக்கிறது, இது என்று மாறுகிறது, அப்போது ஆண் எழுத்து, பெண் எழுத்து எனும் பேதம் நீங்கி, எழுத்துக்கள் பொதுவான நோக்கில் நோக்கப்படும்,

    ReplyDelete
  7. இந்த அம்மாவைப் போலவே, ஊரில் உள்ள அத்தனை பெண்களிடமும் ஒரு நீள் கதை உறங்கிக் கொண்டிருக்கும் அல்லவா?//

    ஆம் சகோ, ஆனால் இந்த விடயங்களை எழுத எல்லோரும் முன் வருவதில்லை, காரணம் பெண்கள் ஒரு விசித்திரமான பார்வையினூடாக அவர்களது எழுத்துக்களின் விமர்சனங்களுக்கு அப்பால் தனி மனித விமர்சனங்களுக்கு ஆளாவது தான் என்று நினைக்கிறேன்.

    பெண் எழுதினால்,- அவளின் எழுத்தை விமர்சிப்பதை விடுத்து, அவளின் பின்னணியை விமர்சிப்பார்கள். அதே நேரம் ஆண் எழுதையில் எமது சமூகத்தவர்கள் ஏற்றுக் கொள்வது போல பேசாதிருப்பார்கள்.

    ReplyDelete
  8. உங்களின் அலசல் அருமை, எங்கள் சமூகம் எழுத்துக்களைப் பொதுவான ஒரு எழுத்துக்களாக நோக்கும் வரை, பெண்களின் எழுத்தானது புறக்கணிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் என்பது தான் என் கருத்து.

    ReplyDelete
  9. சுருக்கமான தெளிவான பதிவு
    ஆணுக்கு ஏற்புடைய அனைத்தும் ஏற்கப்படுகின்றன
    போற்றப் படுகின்றான
    மற்றவை புறக்கணிக்கப்படுகின்றன
    அல்லது மறுக்கப்படுகின்றன
    சிந்தனையைத் தூண்டிச் செல்லும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. நல்லா இருக்கு பாஸ்! தொடருங்கள்!

    ReplyDelete
  11. சுறுசுறுப்பாக பதிவைப் போட்டு ஆர்.வி.எஸ்ஸிடம் முதல் மார்க் வாங்கி விட்டீர்கள்.என்னையும் அழைத்திருந்தார்.பதிவு போடும் விஷயத்தில் நான் கடைசி பெஞ்சு....

    தேனீக்களில் பெண் தான் பாஸ்... ராணித்தேனீ...

    மனித இனமும் தொடக்கத்தில் பெண்ணை முதன்மையாக கொண்டுதான் ஆரம்பித்திருக்கிறது..

    பெண்ணின் எழுத்துதான் அத்தனையும் என்று சொன்னால் அது மிகையாகாது..

    ReplyDelete
  12. பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. //
    நல்ல பதிவு. ;-)வாழ்த்துகள்...)

    ReplyDelete
  13. சகோ, நான் இப் பதிவிற்கு அனுப்பிய என் பின்னூட்டங்களைக் காணவில்லையே, ப்ளீஸ் Spam பெட்டியினுள் தேடிப் பார்க்க முடியுமா?

    ReplyDelete
  14. @RVS
    இந்தத் தொடருக்கு என்னை அழைத்ததோடு, முதல் ஆளாக வந்து வாழ்த்தியதற்கு நன்றிகள் அண்ணா.

    ReplyDelete
  15. @MANO நாஞ்சில் மனோ
    தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் மனோ....

    //இதை நீங்கள் மலையாளம் எழுத்தில் படித்தால் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்.... //
    எனக்கு மலையாளம் தெரியாது தலைவரே.. :)

    ReplyDelete
  16. @நிரூபன்

    //ஆண் மட்டும் பல விடயங்களிலும் உள் இறங்கி எழுதலாம், ஆனால் பெண் மட்டும் ஒரு வட்டத்திற்குள் நின்று எழுத வேண்டும் எனும் மறைமுக வரம்பினைத் தான் எமது சமூகம் போட்டு வைத்திருக்கிறது, இது என்று மாறுகிறது, அப்போது ஆண் எழுத்து, பெண் எழுத்து எனும் பேதம் நீங்கி, எழுத்துக்கள் பொதுவான நோக்கில் நோக்கப்படும், //

    //பெண்களின் எழுத்தானது புறக்கணிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் என்பது தான் என் கருத்து. //

    அருமை நண்பரே..

    இவ்வளவு பெரிய கருத்துக்களுக்கு எனதன்பு நன்றிகள். கொஞ்சம் வெளியே சென்று விட்டதால் உங்கள் பின்னூட்டங்களை வெளியிட முடியவில்லை. தாமதிதத்துக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete
  17. @ரமணி
    தங்கள் வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும் எனது நன்றிங்க.

    ReplyDelete
  18. @ஜீ...
    நன்றிங்க ஜீ.

    ReplyDelete
  19. @பத்மநாபன்

    //சுறுசுறுப்பாக பதிவைப் போட்டு ஆர்.வி.எஸ்ஸிடம் முதல் மார்க் வாங்கி விட்டீர்கள்.என்னையும் அழைத்திருந்தார்.பதிவு போடும் விஷயத்தில் நான் கடைசி பெஞ்சு....//
    நேரம் கிடைத்தது.. எழுதி விட்டேன். நீங்கள் மெதுவாகவே எழுதுங்கள் அண்ணா.

    தொடர்ந்த தங்கள் ஊக்கத்துக்கு எனதன்பு நன்றிகள்.

    ReplyDelete
  20. @இராஜராஜேஸ்வரி
    நன்றிங்க.

    ReplyDelete