Tuesday, August 10, 2010

குறும்படம் - மற்றவள்

ஒரு பக்கம் பள பளக்கும் துணியுடன், முதுகில் புத்தக மூட்டையுடன் பள்ளிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். இன்னொரு பக்கம் எதற்கும் வழியின்றி தெருவோரங்களில் பல குழந்தைகள். காலை நேரங்களில், தெருவின் ஓரங்களில் நடத்தப் படும் பூக் கடை, இட்லிக் கடை, தள்ளு வண்டிக் கடை, சிறு காய்கறி கடைகள் என சிறுவர்களைப் பார்க்கலாம்.

கொஞ்சம் வசதி இருப்பவர்கள் அரசுப் பள்ளிகளுக்காவது தங்கள் குழந்தைகளை அனுப்பி விடுகிறார்கள். அந்த வசதி கூட இல்லாமல் இருக்கும்பொழுது, மூன்று வேலை உணவா இல்லை கல்வியா என்று வரும்போது அங்கே கல்வி பின்னுக்கு தள்ளப்படுகிறது. பெரும்பாலும், குழந்தை தொழிலாளர்கள் சம்பாதிப்பது கொஞ்சம் தான் என்றாலும் அதுவே அவர்களின் குடும்பத்துக்கு பெரிய உதவியாய் இருக்க கூடும். பெற்றோரை இழந்தவர்கள், மறுமணம் செய்து விட்டு குழந்தைகளைத் தனியாக விட்டு விட்டு செல்பவர்கள் என ஆதரவில்லாமல் இருப்பவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் சிறு சிறு வேலைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இதில் தாத்தா, பாட்டி போன்றவர்களும், உறவினர்களும் அடக்கம். இதில் தந்தை குடும்பத்தை விட்டு ஓடி விட்டான் என்றால், தாயால் உடம்புக்கு முடியவில்லை என்றால், குடும்ப பாரம் அந்தப் பிஞ்சுகளின் கையில்.

குழந்தைத் தொழிலாளர்களைப் பற்றி எவ்வளவோ எச்சரிக்கைகள் இருந்தாலும், திரை மறைவில் அவர்களைப் பயன் படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் கதையை திரு.லோகேஷ் அவர்கள் குறும்படமாக எடுத்திருக்கிறார். திரைக் கதையையும், வசனத்தையும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களே எழுதியுள்ளார். 'மற்றவள்' ஒரு சிறுமியின் கதையைச் சொல்லும் குறும்படம்.

ஒரு வீட்டில் வேலை செய்து கொண்டிருக்கும், ஈசல் என்கிற மகேஸ்வரி, தன் டீச்சருக்கு ஒரு கடிதம் எழுதுகிறாள். அதில், தான் இனிமேல் பள்ளிக்கு வரமாட்டேன் என்றும், பள்ளிக்கு லேட் ஆனதால் முட்டி போடச் சொன்ன நீங்க, நான் ஏன் லேட்டா வந்தேன்னு கேட்கவே இல்லை என்கிறாள். மீன் வியாபாரம் செய்யும் என்னோட அம்மா, கடைசி மீனை வித்ததுக்கு அப்புறம்தான் வீட்டுக்கு வருவாங்க, அதுக்கு அப்புறமா நான் ஸ்கூல்-க்கு வர லேட் ஆயிடுது. ரெண்டு நாள் லீவு போட்டா லீவ் லெட்டர் கேப்பிங்க, இனிமேல் நான் வரமாட்டேன் என்று எழுதிக் கொண்டே போகிறாள். தனக்கு ஒரு பணக்காரத் தோழி இருப்பதாகவும், அவளிடம் தான் நான் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுவேன் என்று சொல்லுமவள், கடைசியில் அது தானே என்றும் கடிதத்தில் குறிப்பிடுகிறாள்.

தான் வேலை செய்யும் வீட்டின் கழிவறையில் அமர்ந்து இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறாள் ஈசல். அவளைத் தேடி வரும் வீட்டின் தலைவி அந்தக் கடிதத்தை வாங்கிக் கிழித்து விட்டு 'போய் உருபடர வழியைப் பாரு' என்று திட்டி விட்டுச் செல்கிறாள். கீழே கிடக்கும் அந்தக் காகிதத் துண்டுகளை அவளே சுத்தம் செய்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறுவதுடன் படம் முடிகின்றது.நாளைக் காலையும் ஈசல் அந்த வீட்டுக்கு வேலைக்கு வருவாள் என்பது மட்டும் நிச்சயம்.

இச் சிறுமியைப் போல நாம் வாழும் இடங்களில் எவ்வளவோ பேர் உண்டு. அதனால்தான் என்னவோ, தலைப்பு கூட 'மற்றவள்'. இதற்கு முன்னர் திரு. முரளி மனோகர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த 'கர்ண மோட்சம்' திரைப்படம் பெரிய விருதுகளையும், தேசிய விருதையும் வென்ற படம். அப்படத்திலும் ஒரு வேலைக்கார சிறுமி இருப்பாள். கலையை நேசிக்கும் அவளுக்கும் கல்வி என்பது எட்டாக் கனியாகவே இருக்கிறது.

'கர்ண மோட்சம்' குறும்படம் போல, 'மற்றவள்' படமும் பல விருதுகளை வெல்ல அப்படத்தின் திரைப் படக் குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவு : மற்றவள்

மற்றவள்:



2 comments:

  1. அழகான ஒரு "கதை சொல்லியை", அந்தக் காகிதத்தோடே சேர்த்துக் கிழித்து விட்டார்கள். கனம் கொள்ளுது மனம். நிறைய குறும்படப் பதிவுகள் கொடுங்கள் இளங்கோ..

    ReplyDelete
  2. //ஷஹி said...
    அழகான ஒரு "கதை சொல்லியை", அந்தக் காகிதத்தோடே சேர்த்துக் கிழித்து விட்டார்கள். கனம் கொள்ளுது மனம். நிறைய குறும்படப் பதிவுகள் கொடுங்கள் இளங்கோ..
    //

    ஆம், மனம் கனக்கிறது. குறும்படப் பதிவுகள் எழுத முயற்சி செய்கிறேன்.
    நன்றிகள்.

    ReplyDelete