Monday, August 9, 2010

காம்பஸ் ஊசியும்.. தோஷ நிவர்த்தியும்...

குழந்தையை கிழக்கு முகமாக உட்கார வைத்து, சாம்பிராணி தூபம் காட்டி, பின்வரும் மந்திரத்தை 108 முறை ஜெபித்து, பூசைக்கு வைத்த பொருட்கள் அனைத்தையும் கிணற்றில் போட வேண்டும். 'ஓம் ஐயும் கிலியும் சவ்வும், சகல தோஷம் நிவர்த்தி...'

இது, சகல தோஷ நிவர்த்தி என்ற புத்தகத்தில் காணப்படும் வரிகள். எங்கள் கிராமத்தில் இதை ஏட்டுப் புத்தகம் என்பார்கள். அந்தப் புத்தகத்தின் விலை இரண்டு ரூபாயாக இருந்தது. மீறிப் போனால் ஒரு இருபது பக்கமிருக்கும். குழந்தை பிறந்த 1-நாள் 1-மாதம் 1-வருடம், 2-நாள் 2-மாதம் 2-வருடம் என பன்னிரண்டு வருடங்களுக்கு, அந்த வருடங்களுக்குரிய தேவதைகளுடன், சக்கரங்களும் மூல மந்திரங்களும் இருக்கும்.

எங்கள் வீட்டில் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால் தலையணைக்கு அடியில் வைத்து விடுவார்கள். கைக் குழந்தையாக இருந்தால் தொட்டிலில் கட்டி விடுவார்கள். இந்த மந்திரங்களை ஒரு பனையோலையில் எழுதி, நூல் போட்டு இறுக்கி கட்டி, மஞ்சள் பூசி கையிலும் கட்டிருவாங்க. ஊரில் ரெண்டு, மூன்று பேர் இந்த ஏடுகளை எழுதிக் கொடுப்பார்கள் மற்றவர்களுக்கு. அதற்கு காணிக்கையும் வாங்கிக் கொள்வார்கள்.

எங்கப்பாவும் ஏடு எழுதிக் கொடுப்பார். ஆனால் காசு வாங்க மாட்டார். எனக்கு நன்றாக எழுத வந்தபொழுது, நான் வீட்டிலிருந்தால் என்னை எழுதச் சொல்லுவார். அப்பா கோனூசியில் எழுதுவார். எனக்கு அதில் எழுதினால், எழுத்தே வராது. முனை மழுங்கிப்போய் அதைப் பார்த்தாலே எரிச்சலாக வரும். அப்பா "உன்னோட காம்பஸ் ஊசியில் எழுது" என்பார். கணக்கு பரிட்சையில் மார்க் வருதோ, இல்லியோ இந்த காமப்ஸ் ஊசி ஏடு எழுதவும் பயன்பட்டது. கோனூசியை விட இதில் என்னால் நன்றாக எழுத முடிந்தது.

சிலர் வரும்போதே எங்காவது பனை மரத்தில் இருந்து குருத்தை வெட்டிக் கொண்டுவருவார்கள். ஒரு ஓலை போதும் ஏடு எழுத, ஆனால் ஒரு சிலர் ஊருக்கே ஏடு எழுதுமளவுக்கு வெட்டிக் கொண்டுவருவார்கள். இன்னும் ஒரு சிலரோ, சும்மாவே வந்து "ஏடு எழுதிக் குடுங்க" என்பார்கள். எங்கள் வீட்டின் பினால் ஒரு சின்ன பனைமரம் இருந்தது. சுற்றிலும் வெட்டபடாத பழைய ஓலைகள் காய்ந்து தொங்கிக் கொண்டிருக்கும். ஏடு எழுதவதற்கு எப்பவுமே, குருத்தோலை தான் தேவை. முற்றியவை என்றால் எழுதும்போது உடைந்து விடும். எட்டிப் பிடித்து குருத்தோலை அறுக்க வேண்டும், கொஞ்சம் தவறினால் காய்ந்த ஓலைகளின் கருக்குகள் பதம் பார்த்து விடும்.

ஓலையை சரியாக கத்தரித்து, நடு நரம்பை நீக்கி விட்டு புத்தகத்தை பார்த்து எழுத ஆரம்பிப்பேன். "எழுதறப்போ மனசுக்குள்ளயே சொல்லிட்டு எழுதுடா" என்பார் அப்பா. ஒரு சிலர் மத்தியானமே வந்து ஏடு எழுதிக் குடுங்க என்பார்கள். சாயந்திரமா வந்து வாங்கிக்குங்க என்று அனுப்பிவிடுவார் அப்பா. சாயந்திரம் திரும்ப வருபவர்கள் "ஏடு கேட்டு மத்தியானம் வந்ததுக்கபுறம் புள்ளைக்கு கொஞ்சம் காய்ச்சல் கொறைஞ்ச மாதிரி தெரியுது" என்பார்கள். இது ஏட்டுக் குணம் என்பார்கள் எங்கள் ஊரில். என்ன நம்பிக்கையோ என நினைத்துக் கொள்வேன்.

நான் பள்ளியிலிருந்து வருவதற்கு நேரமானால், நான் வரும்வரை காத்திருப்பார்கள் ஏடு எழுத வந்தவர்கள். அப்பாவும், 'அவன் வரட்டும்' என்று சொல்லிவிடுவார். நான் எழுதிக் கொடுத்த பிறகு அவர் நூலில் கட்டிக் கொடுத்துவிடுவார். நான் ஒரு தடவை, ஏட்டைக் கட்ட முயன்று கடைசியில் நூலை இறுக்கினால், நூல் தனியாகவும், ஏடு தனியாகவும் கையில் வந்து விட்டது. ஓலையை நன்றாக இறுக்கிக் கட்ட வேண்டும், கடைசிவரை எனக்கு வரவே இல்லை.

முதன்முறையாக ஏடு எழுத வருபவர்கள், எப்படிக் கட்டுவது எனக் கேட்பார்கள். "கொழந்தையை கிழக்கு முகமா உக்கார வச்சு, இந்த ஏட்டை மஞ்சத் தூளில் பூசி, சாம்பிராணி காட்டி.. "

"சாம்பிராணி இல்லிங்களே.. "

"சாம்பிராணி இல்லைன்னா, ரெண்டு ஊது வத்தி காட்டி, கழுத்திலோ கையிலோ கட்டிரு"

"சரிங்க.. காணிக்கை"

"அதெல்லாம் இங்க வாங்கிறதில்ல"

"காணிக்க வாங்கினத்தான் பலிக்கும்னு சொன்னாங்க"

"இங்க வாங்குறது இல்ல. எங்க வாங்குறாங்களோ அங்க போய் வாங்கிக்குங்க" என்பார் அப்பா.

"சரிங்க. நான் போயிட்டு வர்றேன்"

"ஏடு வாங்கிட்டு போகும்போது சொல்லிட்டு போக கூடாது. திரும்பி பார்க்காம போயிட்டே இருக்கணும்"

தலையாட்டி விட்டுத் திரும்பி பார்க்காமல் போய் விடுவார்கள். அடுத்த நாள் அல்லது இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் வந்து, இன்னும் உடம்பு சரியாகவில்லை என்றால் 'டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்க' என்று சொல்லிடுவார் அப்பா. ஏடு எழுதிக் குடுத்ததுக்கு பிரதிபலனாய், தங்கள் காடு தோட்டங்களில் ஏதேனும் விளைந்தால் கொண்டு வந்து குடுத்து விட்டுப் போவார்கள்.

தற்போது எல்லாம் தொலைகாட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து பயம் கொள்ள வேண்டியிருக்கிறது. ராசிக்கல் மோதிரம், தாயத்து, வாஸ்து பிள்ளையார், வாஸ்து மீன் தொட்டி, எண் சோதிடம், காந்த படுக்கை.. எனப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். நம்மை ஏமாற்றும் இந்த போலிகளிடம் இருந்து எப்பொழுது தப்பிக்கப் போகிறோம்.

முக்கிய குறிப்பு:

* ஆகவே, இதனால் தெரிவிப்பது யாதெனில், நானும் காம்பஸ் ஊசியைக் கொண்டு புதிய தாயத்து முறையைக் கண்டு பிடிக்க போகின்றேன். (முதலில் காப்பி ரைட்ஸ் வாங்க வேண்டும் !!!!).

* முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை. (முதல் ஆடு எதுன்னு தெரில !!!)

* பனை ஓலையில் எழுத பட மாட்டாது. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் போன்ற பொருட்களில் மட்டும் எழுதப்படும். (அப்பதான் பெரிய ஆளுக எல்லாம் வருவாங்க !!!)

* முதலில் பதிவு செய்பவர்களுக்கு, திரைக்கு வந்து ஓடாமல் திரும்பிய, வெற்றிப் படத்தின்(!!!) திருட்டு DVD கொடுக்கப்படும்.

* இதைக் கட்டி விட்டால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும். (இந்த நல்ல காதல், கள்ளக் காதல் எல்லாம் என்னாகும்னு கேட்க கூடாது !!!)

* ஒரு தடவை என்ட்ரி போட்டுவிட்டு, இந்த தாயத்தைக் கட்டி விட்டால், மாதம் ஒரு முறை கண்டிப்பாக வர வேண்டும் (அப்பதான் மாச மாசம் வரும்படி வரணும் !!!)

* தொழில் முறை கற்றுக் கொடுக்கப் பட மாட்டாது (நமக்கே ஒன்னும் தெரியாது !!!)

* கண்டிப்பாக, 'முன் அனுமதி தேவை' போர்டு மாட்டப் படும் (அதாங்க அப்பாயன்ட்மென்ட் !!!)

4 comments:

  1. // சசிகுமார் said...
    super friend //
    தங்களின் வருகைக்கு நன்றிகள். தேங்க்ஸ் நண்பரே...

    ReplyDelete
  2. Nice... Intha work illam panniinya.... Good

    ReplyDelete
  3. //Karthikeyan said...
    Nice... Intha work illam panniinya.... Good //

    Thanks Karthi

    ReplyDelete