Friday, December 5, 2025

வாராணசி - எம்.டி.வாசுதேவன் நாயர்

எப்பொழுதும் சிதை எரிந்து கொண்டிருக்கும் நகரம் வாராணசி. ஆனால் அதன் முகம் அது மட்டும் அல்ல. அமைதியையும், காமத்தையும் இன்னொரு முகமாக கொண்டிருக்கும் நகரம் வாரணாசி. பேராசிரியர் ஸ்ரீனிவாசன் என்பவரின் அழைப்பை ஏற்று வாரணாசி நகருக்கு செல்கிறான் சுதாகரன். சுதாகரன் அங்கே செல்லும் அந்த குறிப்பிட்ட தேதியின் முன்னரே பேராசிரியர் இறந்துவிடுகிறார். அங்கே சில நாட்கள் தங்கி இருக்கும்போது அவனுடைய கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறான்.


பெண்களுடன் சுதாகரனுக்கு எளிதில் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அந்த உறவுகளைத் தொடர இவன் விரும்புவதில்லை. எதற்கோ பயந்து தப்பித்துப் போகிறான். அதனை ஒருவாறு அந்தப் பெண்களும் அறிந்திருப்பார்கள் போல. இவன் விட்டுவிட்டு போன பின்னர் அவர்கள் அவனைத் தேடுவதில்லை. தங்களது பயணத்தில் ஒரு சிறு இளைப்பாறல் போல அமைகின்றன அவனுடனான உறவுகள். வயதான காலத்தில், முன்னர் சிலநாட்கள் ஈருடல் ஓருடலாக பழகிய சுமிதாவை கங்கை கரையில் சந்திக்கிறான். அவளோ அவனை யாரோ ஒரு வழிப்போக்கன் என நினைத்து போகிறாள். உண்மையாகவே அவளுக்கு அவனை நினைவில் இல்லை. 




உறவுக்கார பெண் சௌதாமிணி, பத்திரிகை அடித்து கல்யாணம் வரை சென்ற காதலி கீதா, தன்னை விட மூத்தவரான திருமதி மூர்த்தி, வெளிநாட்டிலிருந்து ஆய்வுக்கு வந்த சுமிதா என அவன் பழகிவிட்டு தப்பித்து ஓடும் விலங்காகவே இருக்கிறான். எதையும் எதிர்கொள்ள அவனுக்கு தயக்கம். பிரான்ஸ் சென்று அங்கே ஒரு வெளிநாட்டு பெண்ணை மணக்கும் அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கிறது . ஆனால் அவளோ அவனை விட்டுவிட்டு குழந்தையுடன் அமெரிக்கா சென்றுவிடுகிறாள். உண்மையில் இவ்வளவு உறவுகளை அவன் இழந்து விடுவதிலேயே நாட்கள் சென்று விடுகிறது. பாரிஸில் பிறந்த தன் மகன் தன்னுடன் இருப்பான் என நினைத்திருக்க, மனைவியோ அவனை விட்டுப் பிரிந்து போகிறாள். 


இதற்கு நேர் எதிராக மனைவியை இழந்த பின்னர் தனது பெண்ணுக்கு செவிலித் தாயாக வந்த ஒரு பெண்ணை நேசித்து தனது வாழ்வில் முக்கிய இடம் கொடுத்த மனிதராக பேராசிரியர் இருக்கிறார். தன்னுடைய இறப்புக்கு பின்பும் அவள் எந்த இன்னலும் இல்லாமல், தனது பிள்ளைகளால் எந்த கஷ்டமும் அனுபவிக்க விடாமல், உயில் எழுதி வைத்து அவளின் வாழ்க்கையை நடத்த அனைத்தையும் செய்துவிடுகிறார். அந்தப்பெண் அதை எதிர்பார்க்காமல் இருந்தாலும், தன்னால் முடிந்ததை ஒரு பரஸ்பர அன்பு போல செய்கிறார். சுதாகரனுடைய தப்பிப்போதல் இவரிடம் இல்லை. 


பேராசிரியரால் முடிந்ததை சுதாகாரனால் செய்ய முடிவதில்லை அல்லது அதற்கான மனத்திடம் இல்லை. போலவே இவன் குணத்தை அறிந்தே அவன் பழகிய பெண்கள் எல்லோரும் அவனிடமிருந்து தப்பித்து போகிறார்கள் என்பது உண்மையா?.


பேராசிரியர் ஸ்ரீனிவாசனுக்கு கங்கை கரையில் சுதாகரன் பிண்டம் அளிக்கிறான். அப்பொழுது புரோகிதர் தனக்கு தானே கூட பிண்டம் வைத்துக் கொள்ளலாம், அது ஆத்ம பிண்டம் எனச் சொல்கிறார். சுதாகரன் அதைச் செய்கிறான். 


வாரணாசி என்பது இறப்பை கொண்டாடும் நகரம். அது அங்கே ஒரு தொழிலும் கூட. சுதாகரனின் நண்பன் ஒருவன் சிதையை நிர்வகிக்கும் தொழிலில் இருக்கிறான். சிதைகளுக்கு விறகுகள் போடும் தொழிலை அவனுடைய குடும்பம் செய்து வருகிறது. இன்னொருவர் தனது இறுதி காலத்தில் அங்கே வந்து தங்கியிருக்கும் வயதானவர்களை பராமரிக்கும் ஆசிரமம் நடத்தி வருகிறார். 


இந்நாவல் மாறிமாறி வரும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டது. சுதாகரனின் நினைவுச் சிடுக்குகளுக்குள் அலைந்து சென்றாலும், இறுதியில் அது நிலைக்கு வருகிறது. இந்நாவலை தமிழில் வாசிக்க மொழிபெயர்த்த சிற்பி அவர்களுக்கு நன்றிகள். 

வாராணசி 

எம்.டி.வாசுதேவன் நாயர் 

தமிழில்: சிற்பி 

Thursday, December 4, 2025

கொற்கை - ஜோ டி குருஸ்

2013 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருது பெற்றது கொற்கை நாவல். கடலையும், கடல் சார்ந்து இருப்போரின் வாழ்க்கையையும் பின்னிக்கொண்டு நெய்தது கொற்கை நாவல். 1900 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கும் நாவல் 2010 ஆம் ஆண்டில் முடிகிறது. மற்ற நாவல்கள் போல, கொற்கையில் குறிப்பிட்டுச் சொல்ல முக்கியமான கதாபாத்திரங்கள் இல்லை. ஆனால் நிறைய மாந்தர்கள் உண்டு. 

"காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறிஸ்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திர போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குருஸ்"  என்று புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகிறார் அரவிந்தன். 



மேலும் " கிறிஸ்தவ சமயத்தின் வரவு, உள்ளூர்ச் சாதிகள் கிறிஸ்தவத்தை எதிர்கொண்ட விதம், சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம், நவீன வாழ்வும் அரசியலும் உள்ளூர்ச் சமூகங்களைப் பாதிக்கும் விதம் என்று நாவலின் எல்லையைக் குறுக்கும் நெடுக்குமாக விஸ்தரித்துக் கொண்டு போகிறார் ஜோ டி குருஸ். பரதவர்கள், நாடார்கள் போன்ற சில பிரிவினரின் வாழ்வு, அவர்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, அரசியல், மொழி ஆகியவற்றைப் பதிவு செய்யும் இந்நாவல் சமூக, மொழியியல் ஆய்வுக்கும் பயன்படக்கூடிய ஆவணமாகவும் விளங்குகிறது.  குறிப்பாக பேச்சு மொழியைப் பதிவு செய்திருக்கும் துல்லியமும், பேச்சினூடே வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகளின் அடையாளங்களும் மிக முக்கியமானவை." எனச் சொல்கிறார் அரவிந்தன். 

நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை கூட்டிச் செல்லும் இந்நாவல், முக்கியமான கதாபாத்திரம் என்று ஒருவரும் இல்லை. தண்டல் பிலிப்பும் அவரின் வாழ்க்கையும் மட்டுமே நாவலில் அங்கங்கே தொடர்ந்து வருகிறது. பல தலைமுறைகளின் வாழ்க்கை சொல்லப்படுவதால் நாவல் தாவித் தாவி செல்வது போல தோற்றம் கொள்கிறது. ஏதோ ஒரு அத்தியாயத்தை தனியாக படித்தாலும் ஒரு சிறுகதை போலவே அது தனியாகவே இருக்கும். அத்தனை வருடங்களையும், மக்களையும், நிகழ்வுகளையும் கோர்த்துக் கொடுத்த ஒரு பெரிய மாலை இது. 

சில இடங்களில் வலுக்கட்டாயமாக அந்த வருடங்களில் நடந்த முக்கிய நிகழ்வை சொல்ல ஒருவர் சொல்வது போலவே அல்லது நினைப்பது போலவோ வந்து போகிறது. சில நிகழ்வுகள் நாவலின் போக்கிலேயே சொல்லப்படுகிறது. இலங்கைக்கு செல்லும் தோணிகள், இங்கே இருந்து அங்கே சென்று தொழில் நடத்தும் மக்கள், தோட்ட வேலைக்கு செல்லும் மக்கள், அங்கே நடக்கும் சண்டைகள் என நிறைய தகவல்கள். 



கடலில் பயணம் செய்யும் தோணி தான் கொற்கை நாவலின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம். புயல் அடிக்கும் சமயம் தண்ணீர் உள்ளே வந்து பண்டல்கள் நனைந்து போவது, பாய்களை மாற்றிக்காட்டுவது, சில விபத்துகளில் உயிரிழப்பு, தொழில் பழக சிறு வயதிலேயே தோணிக்கு வேலைக்கு வரும் சிறுவர்களை பாலியல் இச்சைக்கு பயன்படுத்தும் தண்டல்கள் என எதையும் விடாமல் சொல்லிச் செல்கிறார் ஜோ டி குருஸ். போலவே கிறிஸ்தவ மதத்தில் இப்போது இருந்தாலும், சந்தன மாரியம்மனையும், திருச்செந்தூர் முருகனையும் வழிபடும் மக்களையும் குறிப்பிட அவர் தவறுவதில்லை. 

புத்தகத்தின் இறுதியில் நாவலில் சொல்லப்பட்ட மக்களின் தலை முறைகளின் வரைபடம், தோணிகள் பற்றிய வார்த்தைகள் என கொடுக்கப்பட்டுள்ளது. 


Wednesday, August 13, 2025

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன்.

தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.



நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவுக்கு இவன் நண்பன். அரசனான அவன் தனது நண்பன் நாகபட்டனை வணிகக் குழுவோடு சேர்ந்து பயணித்து அவர்கள் எவ்வாறு வணிகம் செய்கிறார்கள், சுங்க வரிகள் மற்றும் மற்ற நாடுகளின் வணிக நிலைமை என அறிந்து வருமாறு சொல்கிறான். வணிகம் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று சார்த்தாவிடம் சொன்னால், அவர்கள் அவனைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தக் குழுவுடன் கல்வி கற்க செல்பவர்கள், கலை ஆர்வம் கொண்டவர்கள், வேறு ஊர்களுக்கு குடி பெயர்பவர்கள் என பயணிகளாகச் செல்ல முடியும்.  'காசி சென்று வைதீக மேல் படிப்பு படிக்கப் போகிறார், எனவே உங்கள் குழுவுடன் இவரை அழைத்துச் செல்லுங்கள்' என அரசனே ஒரு குழுவிடம் சொல்லிவிடுவதால், மறுக்காமல் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.  

போகும் வழியில் அவன் எவ்வளவு முயன்றாலும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதில்லை. குழுவில் பொன்னும் பொருட்களும் பாதுகாப்பாக செல்கின்றன. திருடர் பயம் காரணமாக அதற்கு காவலர்களும் உண்டு. இந்த சார்த்தா வேறு மார்க்கமாக பயணிப்பதால், காசி செல்லும் இன்னொரு சார்த்தாவுடன் பயணிக்குமாறு கூறி மதுராவில் இருக்கும் ஒரு புத்த விகாரையில் நாகபட்டனை இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர்.  வணிகம் பற்றிய சில தகவல்களை அந்த புத்த விகாரையில் இவன் பெறுகிறான். 

புத்த விகாரையில் தங்கி இருக்கும்பொழுது அந்த ஊரில் இருக்கும் ஒரு நாடகக் குழுவுடன் நாகபட்டனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம் அவன் நாடக நடிகனாக நடிக்கிறான். ஒரு நாடகம் மட்டுமே என்று இருந்த அவனிடம், நன்றாக நடிப்பதால் சுற்றி இருக்கும் ஊர்களிலும் அதே நாடகம் போடப்பட்டு நாகபட்டன் புகழ் அடைகிறான். தனது நாட்டில் இருந்து வந்து பல வருடங்கள் ஆனபோதிலும், அவன் திரும்பி போகாமல் நாடகம் நடிப்பிலேயே குறியாக இருக்கிறான். நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் என்பதால் அவனை எல்லோரும் கிருஷ்ணானந்தர் என்றே அழைக்கிறார்கள். அவனுக்கு ஜோடியாக நடிக்கும் சந்திரிகையின் மேல் காதல் வந்தாலும் அவள் அதனை கண்டுகொள்வதில்லை. அவனின் நட்பு, பேச்சு என அவள் விரும்பினாலும் அவளை அடைய அவள் விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அவனை விட்டு அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். 



சந்திரிகை விலகிச் சென்றாலும் நாகபட்டனுக்கு அவள் மேல் இருக்கும் காதல் மறக்க முடிவதில்லை. அவன் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க நேர்கிறது. மேல் படிப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பல வருடங்கள் திரும்பாமலே இருந்ததால் அவனின் இளவயது மனைவி சாலினி, அரசனுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஒரு குழந்தையும் பிறந்திருப்பதாகச் சொல்கிறான். தனது மருமகளின் நடவடிக்கைகள் கண்டு கவலைப்பட்டு  அவனது அம்மா இறந்துவிட்டதாகவும் கேள்விப்படுகிறான்.  பின்னர் யோகம், தாந்திரீகம் என ஆன்மிகத்தில் நாட்டம் கொள்கிறான். தனது மனைவியையும், அரசனையும் தனது யோக சக்திகள், தாந்திரீக மந்திரங்கள் மூலம் வெல்ல வேண்டும் என நினைக்கிறான். 

நாவலில் சந்திரிகைக்கு ஒரு பழைய கதை சொல்லப்படுகிறது. தனக்கு பாட்டு குருவாக இருந்த இளைஞன் ஒருவனையே அவள் மணந்து இருக்கிறாள். அவளின் கணவனுக்கு கண் பார்வை இல்லை. மிகவும் அழகியான இவளை அவன் புகழ முடிவதில்லை. பிரச்சினை அவள் கணவனின் மருமகன் வடிவில் வருகிறது. பாட்டு கற்றுக்கொள்ள வந்த அவன் சந்திரிகையின் அழகை வர்ணிக்கிறான். இருவரும் எல்லை மீறிப் போக, அதனை அறிந்த கணவன் அவளிடம் விசாரிக்கிறான். பின்னர் மருமகன் சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஊரை விட்டுச் செல்ல, கண் பார்வை இல்லாத அவளின் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் மனமுடைந்த சந்திரிகை ஒரு யோக குருவின் மூலம் தியானம் கற்றுக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து தள்ளியே இருக்கிறாள். அதனால்தான் அவள் நாகபட்டனை விட்டுச் சென்று விட்டாள்.  

நாகபட்டன் தாந்திரீக நாட்டம் கொண்டு அதில் சில முயற்சிகளைச் செய்கிறான். அவனுக்கு சொல்லிக் கொடுத்த குரு, எல்லாம் உனக்கு சொல்லிக் கொடுத்தாகி விட்டது, நீ தனியே செல் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். எனவே அவன் மீண்டும் சந்திரிகையை சந்திக்கச் செல்கிறான். அவளைக் கருவியாகக் கொண்டு தன் சாதனையை நிகழ்த்த வேண்டும் எனச் சொல்ல, முதலில் தயங்கும் அவள் பின்னர் சம்மதிக்கிறாள்.  நாட்கள் செல்லச் செல்ல அவள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் தவறான வழியில் சென்றதாகக் கருதி, சந்திரிகை சொல்வதைக் கேட்கிறேன் என்கிறான். அவளோ இல்லறம் மட்டும் வேண்டாம் என உறுதியாக இருக்கிறாள். 

அதன் பின்னர் புத்த குருவின் மூலம் நாளந்தாவிற்கு படிக்கச் செல்கிறான். புத்த மதக் கருத்துக்களை அறிந்து கொள்ளவே அவன் அங்கே செல்கிறான். அங்கே தனது குரு மண்டன மிஸ்ரருக்கு குருவாக இருந்த குமரிலபட்டரைச் சந்திக்கிறான். கொஞ்ச நாட்களில், வேத குருவாக இருந்துகொண்டு புத்த மதத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ள புத்த சீடன் போர்வையில் அங்கே வந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் குமரிலபட்டர். குமரிலபட்டரோ தனது நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனைத் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த புத்த குருவிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும், நான் பொய் சொன்னதால் பிராயச்சித்தமாக தான் வேள்வி மூட்டி இறக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு அவ்வாறே இறந்தும் போகிறார். நாளந்தா பள்ளியில் இருந்து கிளம்பும் நாகபட்டன் அரச முறைப் பயணமாக தனது குரு மண்டன மிஸ்ரரைச் சந்திக்க தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். 

அங்கே மண்டன மிஸ்ரரைச் சந்திக்க சங்கரர் வருகிறார்.  கல்வியில் சிறந்தவரான மண்டனருடன் விவாதம் செய்து வெற்றி பெற வேண்டும் என்பது யதியின் விருப்பம். அதற்கு நடுவராக மண்டனரின் மனைவியும், குமரிலபட்டரின் சகோதரியுமான பாரத தேவி இருக்கிறார். இருவருக்கும் விவாதம் நடக்கிறது. இறுதியில் மண்டனர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரருடன் சேர்ந்து துறவறம் மேற்கொள்வதாகச் சொல்கிறார். ஆனால் பாரத தேவி, காமம் பற்றி ஒரு கேள்வி கேட்க அது பற்றி அறியாத சங்கரர் சிறிது நாட்கள் சென்று இதற்கு பதில் அளிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அதன் பின்னர் கூடு விட்டு கூடு பாய்தல் மூலமாக அதற்குரிய பதிலை அறிந்து வந்து அதனை கூறிவிட்டு மண்டன மிஸ்ரரை அழைத்துச் செல்கிறார். பாரத தேவி, நாகபட்டனிடம் 'இல்லற வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத ஞானம் வெளியே கிடைக்குமா?' எனக் கேட்கிறார். இவை எல்லாமே நாகபட்டனின் பார்வையில் சொல்லப்படுகிறது. 

பின்னர் அங்கிருந்து கிளம்பும் நாகபட்டன், சந்திரிகையுடன் சேர்ந்து பகைவர்களான மிலேச்சர்கள் படையெடுப்பில் நாடு படும் துயரம் கண்டு நாடகம் மூலமாக எச்சரிக்கை செய்ய நினைக்கிறார்கள். அவ்வாறே நாடகங்களை நடிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பிணையாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இறுதியில் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்துவதென முடிவு செய்கிறார்கள். முன்பு பாரத தேவி நாகபட்டனிடம் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. 

நாகபட்டனின் பயணம் பற்றி சார்த்தா நாவலில் சொல்லப்பட்டாலும் அவனுடைய உள் நோக்கிய பயணத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. வேதம், சாக்தம், புத்தம், யோகம், தியானம் எனப் பல வழிகளில் அவன் முன்னேற முயன்று கொண்டே இருக்கிறான். அவனுடைய உள் நோக்கிய பயணத்தில் இடையூறு ஏற்படும் போதெல்லாம் சிறிது இளைப்பாறவோ, ஆறுதல் பெறவோ, அவனை தக்க வழியில் திரும்பச் செய்யும் ஒரு தோழியாக சந்திரிகை இருக்கிறாள். 

சார்த்தா - எஸ். எல். பைரப்பா
தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம் 
 

Wednesday, July 9, 2025

என் சரித்திரம் - உ.வே.சா

அச்சு பதிப்பு புத்தகங்கள் பதிப்பதற்கு முன்பு, நம்முடைய தமிழ் இலக்கியங்கள், இலக்கண நூல்கள், செய்யுள், உரைகள் போன்றவை ஓலையில் எழுதி பாதுகாக்கப்பட்டன. ஓலைச் சுவடிகளை படியெடுத்தே ஒவ்வொருவரும் படித்திருக்கிறார்கள். தமிழ் அறிஞர்களிடம் இருந்து வாய்மொழிப் பாடமாகவும் ஒவ்வொரு தலைமுறையாக நூல்கள் கற்பிக்கப்பட்டன. ஓலைச் சுவடியில் மெய்யெழுத்து, கால், வல்லினம் போன்றவை இருக்காது. அதனால் இன்னொருவர் படியெடுக்கும் பொழுது இயல்பாகவே பிழைகள் ஏற்பட்டு விடும். அதனால் பல ஆண்டுகள் கழித்து ஒரு செய்யுளானது பல பிழைகளுடன் இருக்கும், அதனை ஒப்பு நோக்க நல்ல மூலம் உள்ள சுவடி வேண்டும். 

தமிழ்த் தாத்தா என்றழைக்கப்படும் உ.வே.சா கும்பகோணம் அருகில் உள்ள உத்தமதானபுரம் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் தந்தை வேங்கட சுப்பையர் கர்நாடக பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகளைச் சொல்வபராகவும் இருந்துள்ளார். கதை பிரசங்கம் செய்வதே குடும்ப வருமானம். சிறுவயதில் இருந்தே உ.வே.சா, குடும்ப பாரம்பரியம் காரணமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்கிறார். ஆனால், அவருக்கு தமிழ் மீதே ஆர்வம் ஏற்படுகிறது. கணிதமோ, ஆங்கிலமோ அவருக்கு நாட்டத்தை ஏற்படுத்தவில்லை. பக்கத்தில் இருக்கும் சில தமிழ் அறிஞர்களிடம் பழம் பாடல்களை பாடம் கேட்கிறார். இவர் கற்றுக்கொள்ளும் வேகத்தை பார்த்து அவர்கள் பெரிய தமிழ் பண்டிதரிடம் சென்று உ.வே.சா கற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்கிறார்கள். 


அந்த காலத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தில்  மகாவித்துவானாக இருந்த  மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் மிகச்சிறந்த தமிழ் அறிஞராகவும், பாடல்கள் புனைவதிலும், புராணங்களை இயற்றுவதிலும், இலக்கணம் அறிந்தவராகவும் இருந்திருக்கிறார். முதலில் அவர் மறுத்தாலும் சிறு வயது உ.வே.சாவின் ஆர்வத்தைப் பார்த்து தன்னுடன் இருந்து படித்துக்கொள்ள சம்மதிக்கிறார். மிகச்சிறந்தவரான பிள்ளை அவர்களே உ.வே.சா-விற்கு குருவாக அமைகிறார். ஆதீன மடத்துக்கு சென்றால் அங்கே சாப்பாட்டுக்கு  பிரச்சினை இருக்காது, ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இந்த  ஊரில் நீங்களே ஏற்பாட்டை செய்து கொள்ள வேண்டும் எனச் சொல்ல, அதற்கு சம்மதித்து பாடம் கற்றுக்கொள்கிறார். 

திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு தனது ஆசிரியருடன் செல்லும்பொழுது, அப்பொழுது அங்கே மடாதிபதியாக இருந்த சுப்பிரமணிய தேசிகர் உ.வே.சா அவர்களின் தமிழ் அறிவையும், அவர் பாடல்களை இசையோடு பாடுவதிலும் உள்ள தேர்ச்சியை அறிந்து அவரைப் பாராட்டுகிறார். மடத்தில் உள்ளவர்களும் உ.வே.சா அவர்களுடன் நட்புடன் இருக்கிறார்கள். ஆதீனம் உ.வே.சா வின் பெற்றோரை திருவாவடுதுறைக்கே அழைத்து வந்து ஒரு வீடு பார்த்து கொடுத்து என அனைத்து உதவிகளையும் செய்கிறார். குருவுடன் எங்கே சென்றாலும் கூடவே செல்லும் உ.வே.சா வை அனைவரும் விரும்பினாலும், ஒரு சிலர் சிறு வயதில் அவருக்குள்ள தேர்ச்சியையும், குரு அவரிடம் வைத்துள்ள அன்பையும், ஆதீனம் அவர் மேல் வைத்துள்ள மதிப்பையும் அறிந்து சிலரால் சில நேரங்களில் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிக்கிறார். 



ஆதரவாக இருந்த குரு மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் இயற்கை எய்த உ.வே.சா கலங்கிப் போகிறார். ஆதீன தலைவர் சுப்பிரமணிய தேசிகர் அவருக்கு ஆறுதல் அளித்து, மடத்திலேயே இருக்க வேண்டும் எனவும், நானே உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பேன் எனவும் சொல்கிறார். அவர் கற்றுக்கொள்ளவும், கற்றதை மடத்தில் உள்ள சிலருக்கு பாடம் சொல்லவும் என அந்த நாட்களை பயன்படுத்துகிறார் உ.வே.சா. ஆதீனத்துக்கு அடிக்கடி வந்து போகும் தியாகராச செட்டியார் என்பவர் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அவர் ஓய்வு பெறுவதையொட்டி அவருடைய இடத்தை உ.வே.சா பெற்று கல்லூரியில் பணிபுரிய வேண்டும் என ஆதீன சந்நிதானத்திடம் சொல்ல, அவரோ நல்ல அறிஞராக உள்ள  உ.வே.சா வை மடத்தில் இருந்து அனுப்ப முடியாது எனச் சொல்கிறார். நன்றாக சிந்தித்து முடிவெடுங்கள், உ.வே.சா-வுக்கு இந்த பணி கிடைத்தால் அவருக்கு நல்லது, கல்லூரி விடுமுறை நாட்களில் மடத்துக்கு வந்துவிடலாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிடுகிறார். 

தியாகராச செட்டியார் சென்ற பின்னர் ஆதீனம், உ.வே.சா-வை கல்லூரியில் பணிக்கு அனுப்ப சம்மதிக்கிறார். நமக்கு பின்னர் இந்த ஆதீன மடத்துக்கு பொறுப்புக்கு வருகிறவர்கள் நம்மை போலவே இந்த பிள்ளையிடம் ஆதரவாக இருப்பார்கள் எனச்  சொல்ல முடியாது, உ.வே.சா கல்லூரி பணியை ஏற்றுக் கொண்டால் அவருக்கு நன்மையே கிடைக்கும் எனச் சொல்லி அனுப்பிவைக்கிறார். கல்லூரிப் பணியில் சேர்வதற்கு முன்னர் அங்குள்ளவர்கள் அவருடைய தகுதியையும், தமிழ் புத்தகங்களில் உள்ள தேர்ச்சியையும், அவர் பாடம் நடத்தும் விதத்தையும் வியந்து பாராட்டுகிறார்கள். கல்லூரிப் பணி அவர் விரும்பும் வண்ணமே இருக்க, விடுமுறை நாட்களில் மடத்துக்கு சென்று ஆதீனத்திடம் பாடம் கேட்டும் வருகிறார். ஒருநாள் ஆதீனம் கும்பகோணத்தில் இருக்கும் அதிகாரி ஒருவரை சென்று சந்திக்கச்  சொல்கிறார். 

கும்பகோணம் முன்சீப் அதிகாரியாக இருக்கும்  சேலம் இராமசுவாமி முதலியார் என்பவரே அவர். அவரைச் சந்திக்க உ.வே.சா செல்கிறார். தமிழில் ஆர்வமுள்ள இராமசுவாமி முதலியார், உ.வே.சா விடம் என்ன படித்துள்ளீர்கள் என வினவுகிறார். அவரிடம் தான் கற்ற அந்தாதி, கலம்பகம், புராணம், செய்யுள்கள் என அனைத்தையும் சொல்கிறார். அவரோ இன்னும் என்ன, என்ன எனக் கேட்கிறார். அவரும் தனக்குத் தெரிந்த அனைத்து நூல்களையும் சொல்கிறார். இராமசுவாமி முதலியாருக்கோ அவர் சொல்வதில் ஒரு ஆர்வமும் ஏற்படவில்லை. பின்னர் தனது குருவிடமும், ஆதீனத்திடமும் கற்ற அனைத்து நூல்களையும் பட்டியல் போடுகிறார். அப்பொழுதும் அவர் மசியவில்லை. இவ்வளவு நூல்களைச் சொல்லியும், நீங்கள் ஏன் ஒரு வியப்பும் அடையவில்லை என அவரிடமே கேட்க, ராமசுவாமி அவர்கள் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற நூல்களை நீங்கள் படித்து இருக்கிறீர்களா என்று கேட்க, உவேசா-வோ 'எனது குருவே இந்த நூல்களை எல்லாம் படித்ததில்லை, நான் எப்படி' என மனதுக்குள் நினைத்துக்கொண்டு, அந்த நூல்கள் என்னிடம் இல்லை, கிடைத்தால் படித்துக்கொள்வேன் எனச் சொல்கிறார். 

இராமசுவாமி அவர்கள் கொடுத்த சுவடியில் இருந்து சிந்தாமணியின் சிறப்பையும் நூல் நயத்தையும் அறிந்து கொள்கிறார். ஆனால் பிழைகள் மலிந்து இருக்கின்றன. நல்ல படியை எடுத்து சீவக சிந்தாமணியை பதிப்பிக்க வேண்டும் என நினைத்து அந்தச் செயலில் இறங்குகிறார். ஒரு சிலர் இது ஆகக்கூடிய வேலை இல்லை, பலரும் அதை பதிப்பிக்க நினைத்து முடிக்க முடியாமல் பாதியில் விட்டுவிட்டனர் எனச் சொல்கிறார்கள். தான் நிச்சயம் சிந்தாமணியை பதிப்பிப்பேன் அதுவும் பிழைகள் இல்லாத நல்ல பதிப்பாக இருக்க வேண்டும் என நினைத்து, பல ஊர்களில் தேடுகிறார். சமண மதத்தை சேர்ந்தவர்களிடம் பழகி அவர்களிடம் இருக்கும் சுவடிகளை வாங்கி ஒப்பீடு செய்கிறார்.  பத்துக்கும் மேற்பட்ட சிந்தாமணி நூல்களை வைத்து ஒப்பீடு செய்து மிகச் சிறந்த முறையில் சிந்தாமணியை நூல் வடிவில் கொண்டு வருகிறார். 

அவரின் முயற்சியை அனைவரும் பாராட்ட, ஒரு சிலரோ சைவ சமய ஆதீனத்துடன் தொடர்புடைய உவேசா சிந்தாமணியை பதிப்பாக்கம் செய்ததை விரும்பவில்லை. பொய்களை கலந்து செய்த மணி சீவக சிந்தாமணி எனப் பேசிக்கொண்டு, அதை ஆதீனத்துடனும் சொல்லி விடுகிறார்கள். ஆதீனமோ உவேசா-விடம் அவர்களை நினைத்து பயப்பட வேண்டாம், உங்கள் தமிழ்ப்பணி தொடர வேண்டும் எனச் சொல்கிறார். 'பொய்யே கட்டிய மணியாக' இருந்தாலும் சிந்தாமணியில் நமக்குத் தேவை அதில் உள்ள தமிழ்ச்சுவையும், செய்யுள் அமைப்பும் தான் என இந்த நூலில் எழுதுகிறார் உவேசா. 

பின்னர் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற பழைய இலக்கியங்களைத் தேடி அலைகிறார். யாராவது எங்கோ ஓலைச் சுவடிகள் இருக்கின்றன எனச் சொன்னால் அங்கே செல்கிறார். சில பயணங்களில் நல்ல பதிப்புகள் கிடைக்கின்றன. பல நேரங்களில் அவருக்கு தோல்வியே ஏற்படுகிறது. ஆனால் அவர் அதைப் பற்றி கவலைப்படாமல் தனது தேடுதலைத் தொடர்கிறார்.

என் சரித்திரம் - என்ற இந்த நூலை, ஆனந்த விகடனில் தொடராக எழுதி இருக்கிறார். 1940-ல் ஆரம்பித்த இந்த தொடரை முடிக்கும் முன்பே 1942-ல் இயற்கை எய்திவிட்டார் நம் தமிழ்த் தாத்தா உவேசா. அவர் தொடர்ந்து இத்தொடரை எழுதி நிறைவு பெற்று இருந்தால் இன்னும் நமக்கு நிறையத் தகவல்கள் கிடைத்திருக்கும். தன்னுடைய வயதான காலத்தில் இந்த நூலை எழுதி இருந்தாலும், அபாரமான நினைவாற்றல் கொண்டவரான அவர் ஒவ்வொரு நிகழ்வையும் இப்பொழுது நடந்தது போலவே சொல்லிச் செல்கிறார். சிறு வயது முதல் தனக்கு கல்வி போதிக்க தான் சந்தித்த ஒவ்வொரு மனிதரின் பெயரையும், தனக்கு வாய்ப்பளித்து ஆதரவளித்த அனைவரையும் நினைவு கூர்கிறார். 

எந்த போக்குவரத்து வசதிகளும் இல்லாத அந்த காலத்தில் அவர் காலால் நடந்தே ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று பழம்  இலக்கியங்களைத் தேடி இருக்கிறார். தமிழின் மேல் தணியாத ஆர்வம் கொண்டு தேடியதால் அவர் என்றென்றும் நமக்கு தமிழ்த் தாத்தா. 




Monday, May 5, 2025

போரும் அமைதியும் (War And Peace) - லியோ டால்ஸ்டாய்

'போரும் அமைதியும்' நாவல் மிகப்பெரிய மூன்று பாகங்களைக் கொண்டது. அனைத்து நிகழ்வுகளையும் நாவல் விரிவாகவே கொண்டு செல்கிறது. நெப்போலியன் ரஷ்யா மீது போர் தொடுத்து, நிறைய இழப்புக்கு பின்னர் போரில் பின்வாங்கிய 1800-ன் ஆண்டுகளை அடிப்படையாக கொண்டு நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுடன் புனைவையும் கலந்து படைக்கப்பட்ட இந்நாவல் வரலாற்று நாவல் அல்ல என்று டால்ஸ்டாய் அவர்களே குறிப்பிட்டுள்ளார். இந்நாவலை எழுதுவதற்கு உண்டான வரலாற்று  தகவல்களை சேகரிக்க நீண்ட நாட்கள் ஆகியிருக்கிறது அவருக்கு. 


ஒரு வருடம் முன்பாகவே இந்நாவலை படிக்க ஆரம்பித்து 100 பக்கங்கள் மேல் போன பின்னரும் குழப்பங்கள் காரணமாக பிடி கிடைக்காமல் அப்படியே வைத்துவிட்டேன். இம்முறை எப்படியேனும் படிக்க எண்ணி வலைத் தளங்களில் தேட, எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் ஒரு பதிவில், 'ரஷ்யப் பெயர்கள் குழப்பமாக இருக்கும். ஒருவருக்கே மூன்று பெயர்கள் இருக்கும். எனவே பெயர்களை கவனித்து வந்தால் கதாபாத்திரங்கள் புரியும்.' என எழுதி இருந்தார். ஒவ்வொரு முறையும் பெயர்கள் வரும்போது தனியாக குறிப்பெடுக்க ஆரம்பித்தேன். நாவலின் கதைப்போக்கும், கதா பாத்திரங்களும் புரிய ஆரம்பித்த பின்னர் அந்தக் குறிப்பும் தேவையில்லாமல் போனது. உலகின் மிகச் சிறந்த நாவல் எனப் பலரும் போற்றிய இந்த ஆக்கத்தை நானும் படித்து முடித்தேன். இதை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்கள் மிக கடினமான இப்பணியை முடித்து நம் கையில் தவழ வைத்துள்ளார். 

எண்ணற்ற கதை மாந்தர்களும், நீண்ட விவரிப்புகளும் கொண்ட இந்நாவல் விளக்கும் போர் பற்றிய சித்தரிப்புகள் நாம் நினைத்து பார்த்திராதவை. போர் வீரர்கள் தங்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கு கூட தீர்வுகள் கிடைப்பதில்லை. மேலே இருப்பவர்கள் கொடுத்தாலும் கீழே வந்து சேரும்போது அது ஒன்றுமில்லாமல் போகிறது. சில தளபதிகள் தீர்வுகள் ஏற்பட முனைந்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். காயம் பட்ட போர் வீரர்களுக்கான மருத்துவமனையில், நிறைய வீரர்கள் கை, கால்களை இழந்து, ரத்தத்துடன் மருத்துவம் பார்க்க காத்திருக்க, காயம்பட்ட ஒரு பிரபு வந்ததும் அவரைத்தான் முதலில் கவனிக்கிறார்கள். சிலர் போரை பயன்படுத்தி புது செல்வந்தர் ஆகவும், புதிய பதவிகளைப் பிடித்து மன்னரிடம் செல்வாக்கு பெறவும் முயற்சி செய்கிறார்கள்.



ரஷ்யாவில் உயர் குடி மக்கள் கூடும் விருந்துகளின் வழியாக கதை மாந்தர்கள் நமக்கு அறிமுகமாகிறார்கள். அந்த விருந்துகளே ஒருவரின் செல்வத்தை வெளிப்படுத்துவதாகவும், பெரிய குடும்பங்களின் கதைகளை பேசுவதாகவும், திருமண வயது வந்தோரின் திருமணத்தை முடிவு செய்யும் இடமாகவும் இருக்கிறது. அரசில் அங்கம் வகிப்பவர்கள் கலந்து கொள்வதால் நடப்பு நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ள முடிகிறது. 

இளவரசர் ஆண்ட்ருவின் மனைவி ஒரு மகனைப் பெற்றெடுத்த பின்னர் இறந்து விடுகிறாள். அவரின் தங்கை மேரி அந்த குழந்தையை பார்த்துக்கொள்கிறாள்.  இருவரின் தந்தையும்  வயதானவருமான பால்கோன்ஸ்கி தற்கால நிகழ்வுகளை விரும்புவதில்லை. அவரின் மனம் போன போக்கில் கோபப்படுகிறார். கொஞ்சம் அழகு குறைந்திருக்கும் தன் மகளை எப்போதும் திட்டிக்கொண்டே இருக்கிறார். ஆண்ட்ரு தன்னால் முடிந்த அளவு அப்போதிருந்த அடிமைக் கூலி மக்களை சீர்திருத்த, அவர்களை முன்னேற்ற  சில முயற்சிகளை எடுக்கிறார்.

ஆண்ட்ருவின் நண்பர் பீயர் செல்வம் மிக்கவர். மேம்போக்காக ஆண்ட்ருவைப் போன்றே கூலி மக்களின் முன்னேற்றத்தை அவர் விரும்பி பணம் செலவிடுகிறார். ஆனால் அது ஒரு கனவு போலவும் அமைந்து விடுகிறது. இடையில் இருப்பவர்கள் அவரை ஏமாற்ற பார்க்கிறார்கள். மிக அழகானவளான ஹெலன் குராகின் என்பவள் பீயரின் செல்வத்துக்காக அவரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள். பின்னர் அவரை மதிப்பது கூட இல்லை. காதலும் இல்லை. பீயர் பிரீமேசன் என்னும் அமைப்பில் ஆர்வம் கொள்கிறார். அவர்களின் கொள்கைகளால் ஈர்க்கப்படுகிறார். 

ராஸ்டோவ் குடும்பம் நாவலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேரா, நிக்கோலஸ், நட்டாஷா, பெட்டியா என நான்கு பிள்ளைகள் கொண்ட குடும்பம்.  செல்வந்தர்களான இக்குடும்பம் மற்றவர்களுக்கும், விருந்துகளுக்கும்  தாரளமாக செலவு செய்கிறது, திருமதி ராஸ்டோவுக்கு செலவு பண்ண மட்டுமே தெரிகிறது, கணக்கு வழக்கு பற்றி ஒன்றுமே தெரியாது. இவர்களின் ஆதரவில் வளர்ந்து பின்னர் பெரிய பதவிக்கு வந்த போரிஸ் என்பவன் இவர்களுக்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

மருமகள் முறை கொண்ட சோனியா என்னும் பெண்ணும் இவர்களுடன் வசித்து வருகிறாள். சோனியா நிக்கோலஸ் மீது காதல் கொள்கிறாள். எந்த நிலையிலும் அவள் நிக்கோலஸ் மீது தன் காதலை திணிப்பதில்லை. முதலில் சோனியா மீது ஈர்ப்பு கொண்ட நிக்கோலஸ், பின்னர் தன் குடும்ப சூழலை நினைத்து பெரிய இடத்துப் பெண்ணை மணந்தால் தமது குடும்பத்தின் நிலை உயரும் என நினைத்து, மேரி பால்கோன்ஸ்கியை மணந்து கொள்கிறான். 




சோனியாவுக்கு நேர் எதிராக நட்டாஷா இருக்கிறாள். அவளின் சிறுவயதும், கள்ளமில்லாத பண்பும் அனைவரையும் ஈர்க்கிறது. சிலரைக் காதலிக்கவும், அதிலிருந்து விலகவும் அவளால் முடிகிறது.  அவளை பொறுத்தவரை அதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் தனது இளமை காரணமாக ஒரு வண்ணத்து பூச்சி போல பறக்கிறாள். ஆண்ட்ருவை நிச்சயம் செய்த பின்னர், இன்னொருவனுடன் ஏற்பட்ட தற்காலிக ஈர்ப்பால் அவளின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. திருமணமும் நின்று போகிறது. பின்னர் போரில் காயம்பட்ட ஆண்ட்ருவை அவள் சந்திக்கும்போது பழைய காதல் இருவருக்கும் பூக்கிறது. ஆனால் ஆண்ட்ருவின் உடல் நிலை மோசமாகி கொண்டே வர, அவர் இறக்கும் வரை ஆண்ட்ருவை தன்னுடனே வைத்து பார்த்துக்கொள்கிறாள் நட்டாஷா. 

முதலில் இருந்தே பீயருக்கும், நட்டாஷாவுக்கும் இடையில் நல்ல நட்பு இருக்கிறது. போர் சமயத்தில் பீயரின் மனைவி ஹெலன் இறந்து போக, போர் முடிந்த பின்னர் பீயர் நட்டாஷாவை மணந்து கொள்கிறார். பிரெஞ்சு படையிடம் பீயர் மாட்டிக்கொண்டு பல நாட்கள் அவர்களுடனேயே பயணிக்கிறார். அப்பொழுது அவர் சந்திக்கும் மக்கள், வீரர்கள் என அவர் மனம் அலைபாய்கிறது. மேலும் போரில் அவர் களம் காணவேண்டிய அவசியம் இல்லை என்றபோதிலும், பயப்படாமல் போர் முனையில் நின்றுகொண்டு போரை கவனிக்கிறார்

மன்னர் நெப்போலியன் ஏன் ரஷ்யா மேல் போர் தொடுத்தார் என்பதை இந்நாவல் விளக்கி கொண்டே போகிறது. பின்னர் அவர் பின் வாங்க வேண்டிய அவசியம் என்ன, பல்லாயிரம் வீரர்களை இழந்து திரும்ப வேண்டிய அவசியம் என்ன என்று விரிவாகவே ஆய்வு செய்கிறது நாவல். மாஸ்கோ நகரத்தை கைப்பற்றிய பிரஞ்சு படைகள் அதன் பின்னர் வலிமை இழந்து போனது எப்படி, ஒரு நாட்டுக்குள் அவ்வளவு தூரம் தனது படையை நடத்திக் கொண்டு வந்த நெப்போலியனை எது அவ்வாறு செய்ய சொன்னது என்றெல்லாம் பல பக்கங்கள். பிரஞ்சு படையிடம் முதலில் பின்வாங்கிய ரஷ்ய படைகள், பின்னர் கொரில்லா முறையில் தாக்கத் தொடங்கியதையும் விவரிக்கிறார் தல்ஸ்தோய்.

ரஷ்ய தளபதி குட்டுசோவ் நாவலில் முக்கிய இடம் பெறுகிறார். வயதானவரான இவர் 'எதற்கும் கலங்காதவர்' எனப் பெயர் பெற்றவர். போர் முனையில் ஒவ்வொருவர் சொல்லுவதையும் காது கொடுத்து கேட்கும் குட்டுசோவ், எதையும் செயல்படுத்துவதில்லை. அது போலவே மேலிடத்திலிருந்து வரும் சில கருத்துக்களையும் அவர் ஏற்பதில்லை. இங்கே நடப்பது வேறு, அதை அவர்கள் அரண்மனையில் அமர்ந்து புரிந்து கொள்ள முடியாது என்கிறார். 



ஐநூறுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் நாவலில் வந்து போகின்றனர். சில கதாபாத்திரங்கள் உண்மையிலேயே அக்கால கட்டத்தில் வாழ்ந்து மறைந்தவர்கள். நாவல் முழுவதுமே மகிழ்ச்சி, ஆசைகள், துரோகங்கள், காதல்கள், பிரிவுகள், வீரம், வீழ்ச்சி என பரந்து கிடக்கிறது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகில் அங்கங்கே இயல்பாகவே இருக்கிறது நாவலில். நாம் பார்த்தவை சிலவே, நாம் பார்க்காதவை பல உள்ளன என்பது போல ஒவ்வொருவரின் பக்கத்திலிருந்தும் அவர்களின் நோக்கம் என்னவென்றும் விரிவாகவே பேசுகிறது நாவல். 

காலங்கள் பல கடந்தும் மனித குலம் போரை இன்னும் கைவிடவில்லை. தல்ஸ்தோய் போர் தவறென்றோ, சரியென்றோ விளக்கவில்லை. நடந்தது என்ன என்பதையே சொல்லிச் செல்கிறார். ஏதோ ஒருவகையில் போர் என்பது எல்லாரையும் ஒரு கண்ணியில் இணைக்கிறது, எல்லோரும் அதனால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் சிலர் ஆதாயமும் அடைகிறார்கள்.

உலகின் மிகச் சிறந்த நாவலை நாமும் படித்துவிட்டோம் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதற்கு காரணம் தமிழில் படிக்க முடிந்ததே. முக்கியமான இந்நாவலை, இவ்வளவு பெரிய ஆக்கத்தை தமிழில் மொழிபெயர்த்த டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களுக்கு நன்றியும், வணக்கமும். 

போரும் அமைதியும் (War And Peace)  
லியோ டால்ஸ்டாய் 
தமிழில்: டி.எஸ். சொக்கலிங்கம் 
மூன்று பாகங்கள் 
சீதை பதிப்பகம், சென்னை

Tuesday, November 19, 2024

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

சிப்பாய் கலகத்தின் போது இறந்த ஐரிஷ் பெற்றோரின் ஆண் குழந்தையை தம்பதிகளான கிருஷ்ணதயாளும், ஆனந்தமாயியும் எடுத்து வளர்க்கிறார்கள். குழந்தை இல்லாத காரணத்தால் அவனை வளர்த்து கோர்மோகன் பாபு என்ற பெயரும் வைக்கிறார்கள். சுருக்கமாக கோரா. பிராமண குடும்பம் என்பதால் முதலில் எந்த ஆச்சாரமும் பார்க்காத கிருஷ்ணதயாள் கோரா வளர வளர எல்லாச் சடங்குகளையும் கடைபிடிக்கிறார். ஆனந்தமாயி அதற்கு எதிராக எல்லாச் சடங்குகளையும் விட்டுவிட்டு, மனிதர்களே முக்கியம் என்று வாழ்ந்து வருகிறார். 



கோராவுக்கு அவர்கள் தன் பெற்றோர் அல்ல என்பது தெரியாது. கோரா நல்ல உயரமும், ஆங்கிலேய நிறமும் கொண்டு விளங்குகிறான். தன் அம்மாவுக்கு நேர் மாறாக அவன் இந்து சமய சடங்குகளை கடை பிடிக்கிறான். மற்றவர்களையும் அவன் தனது கொள்கைகளை விளக்கி ஒப்பு கொள்ள வைக்கிறான். அதற்காக அவன் மற்ற சாதி மக்களை ஒதுக்கி வைப்பதில்லை. அவர்களின் நிலைமை முன்னறேவும் விரும்புகிறான். தன் நாட்டு மக்களை யாரேனும் இழிவு செய்தால் கோரா கோபம் கொள்கிறான். தன் கருத்துகள் பற்றி இதழ்களில் கட்டுரைகளும் எழுதும் கோராவுக்கு நிறைய நண்பர்களும் அவனைப் பின்பற்றும் சிறு கூட்டமும் உண்டு. 

கோராவின் அம்மாவுக்கு லச்சுமியா என்ற பெண் பணிவிடை செய்து வருகிறாள். அப்பெண் வேறு சாதி என்பதால் கோரா தன் அம்மாவின் அறைக்குச் சென்று உணவு அருந்துவதில்லை. தண்ணீர் கூட குடிக்க மாட்டான். இத்தனைக்கும் அவனை சிறு வயதில் இருந்து வளர்த்தவள்  லச்சுமியா .ஆனந்தமாயிக்கு அதைப் பற்றிய வருத்தம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிடும் என நினைக்கிறாள். கோராவின் அம்மா ஆனந்தமாயி ஓரிடத்தில் இப்படிச் சொல்கிறார்; "சாதி முக்கியம் என்று நான் நினைத்திருந்த காலத்தில், அந்த சாதியின் பழக்க வழக்கங்களையும், ஆச்சாரங்களையும் கடை பிடித்தேன். சாதியை விட மனிதர்களே முக்கியம் என பின்னர் நான் உணர்ந்து விட்டேன். அதனால் இப்பொழுது என்னால் யார் கையால் கொடுத்த உணவுகளையும் சாப்பிட முடியும். ஈஸ்வரனின் அன்பையும் கருணையையும் மட்டுமே நான் நம்புகிறேன். சாதியை அல்ல."

கோராவுக்கு பினய் என்றொரு நண்பன் உண்டு. சிறு வயதில் இருந்தே பழக்கம் என்பதால் மற்ற எல்லோரையும் விட ஒருபடி மேலாக இருவருமே நட்பாக இருக்கிறார்கள். பினய்க்கு பெற்றோர் இல்லை. உறவினர்களும் அவனுடன் இல்லை. பெற்றோர் இல்லாத பினய்க்கு கோராவும், ஆனந்தமாயி அம்மாவும் உறவுகளாக இருக்கிறார்கள். கோராவும், பினயும் இந்துக்கள் என்றாலும் இருவருமே இருவேறு பார்வை கொண்டவர்களாக இருக்கிறார்கள். கோரா பின்பற்றும் ஆசாரங்களை பினய் பின்பற்றுவதில்லை. மேலும் எல்லோருடனும் எளிதில் பழகும் குணம் பினய்க்கு உண்டு. தன்னை பெறாத தாயாகவே ஆனந்தமாயி அம்மாவை அவன் எண்ணுகிறான். தன் மகன் கோரா தன்னுடன் உணவு உண்ணுவதில்லை என்ற குறையை ஆனந்தமாயிக்கு பினய் தீர்த்து வைக்கிறான். அவளின் அறையில் உணவு உண்ணுவதில் அவனுக்கு எந்த சங்கடமும் இல்லை. கோராவின் வீட்டில் பினயும் ஒருவனாகவே இருக்கிறான். 

தனது வாரிசு இல்லை என்ற உண்மையை கோராவிடம் சொல்லிவிடலாம் என்று ஆனந்தமாய் சொல்லும்போது, எனக்கு பிரச்சினைகள் வரலாம் என்று சொல்கிறார் கிருஷ்ணதயாள். அவரின் பென்சன் நிறுத்தப்படக் கூடும், மேலும் இன்னொருவரின் குழந்தையை எடுத்து வளர்த்து அதை அரசிடமோ, காவல் துறையிடமோ சொல்லாததால் இன்னல்கள் நேரும், தாக்குப்பிடிக்க முடியும் வரை பார்ப்போம் முடியவில்லை என்றால் என்றாவது ஒருநாள் கோராவிடம் உண்மையை சொல்லிவிடலாம் என்கிறார். 

க்ரிஷ்ணதயாளின் முன்னாள் நண்பரான பொரேஷ் பாபு குடும்பத்துக்கும் பினய்-கோராவுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொரேஷ் பாபு குடும்பம் பிரம்ம சமாஜத்தை பின்பற்றுகின்றனர். அவருக்கு மூன்று பெண் பிள்ளைகள். மனைவியின் பெயர் பரதசுந்தரி. மேலும் அவரின் இறந்து போன இந்து நண்பரின் பிள்ளைகள்  சுசாரிதா, சதீஷ் ஆகிய  இருவரை அவர் வளர்த்து வருகிறார். சதீஷ் சிறுவன். எல்லோருக்கும் மூத்தவளான சுசாரிதா அந்த வீட்டில் எந்த பாகுபாடும் இல்லாமல் இருக்கிறாள். அவளை பிரம்மோ சமூகத்தைச் சேர்ந்த ஹரன் பாபுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறாள் பரதசுந்தரி. 




பொரேஷ் பாபு, ஆனந்தமாயி, பினய், சுசாரிதா, லொலிதா போன்றோர் அனைத்து மக்களும் நம் சொந்தங்களே, நமக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை என நினைக்க, பரதசுந்தரி, ஹரன், ஹரிமோகினி  போன்றோர் சாதிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். கோரா இதில் கொஞ்சம் வித்தியாசப்படுகிறான்.  தனது சாதியின் ஆசாரங்களை பிறழாமல் கடைபிடிக்கும் அதே வேளையில், அடுத்தவரின் துன்பங்களை புரிந்து கொள்ளவும், நாடு சுதந்திரம் பெற்று எல்லோரும் மேன்மை அடைய வேண்டும் என விரும்புகிறான். கிராமம் கிராமமாகச் சென்று ஏழை மக்களைச் சந்திக்கிறான். ஏழை இளைஞர்களை காவலர் அடிப்பதைப் பார்த்து, சண்டைக்கு போகிறான். பின்னர் அதே பிரச்சினையில் நீதிபதி சிறை தண்டனை விதிக்கவும் தயங்காமல் அதை ஏற்றுக்கொள்கிறான். உண்மையும், நேர்மையுமே தனக்கு அழகு என்று எங்கேயும் தலை நிமிர்ந்து நிற்கிறான் கோரா. 

பினய்-லொலிதா காதலால் பிரச்சினைகள் வருகின்றது. ஆனால் இருவருமே தமது சமூக பழக்க வழக்கங்களை மதித்து மதம் மாற முடியாதென தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு எதிர்ப்பும் வலுக்கிறது. கோரா கூட அந்த திருமணத்தை எதிர்க்கிறான். இதற்கிடையில் ஹரிமோகினி என்னும் பெண் சுசாரிதாவுக்கு பெரியம்மா என கூறிக்கொண்டு வருகிறாள். ஹரிமோகினியால் பொரேஷ் பாபுவின் வீட்டில் இருந்து தனியே வருகிறாள் சுசாரிதா. ஹரிமோகினி இந்து ஆச்சாரங்களை வன்மையாக கடைபிடிக்கிறாள். எங்கே சுசாரிதா கோராவின் மேல் காதல் கொண்டு கல்யாணம் செய்து விடுவாளோ என்று பயந்து தனது கணவனின் வழியில் ஒரு வரனை பார்த்து வைக்கிறாள். அவளின் திட்டங்களுக்கு சுசாரிதா மறுப்பு தெரிவிக்கிறாள். 

கோரா-சுசாரிதா காதல் நேரடியாக இருவருமே தெரிவிக்காவிட்டாலும், சுசாரிதா கோராவை ஒரு குருவாக நினைத்திருக்க, தனது வழியை பின்பற்றும் சிறந்த பெண்ணாக கோரா நினைக்கிறான். 

ஒரு துறவியாக செய்யக்கூடிய சடங்குகளை கோரா ஒரு விழாவின் மூலம் நடத்த நினைக்கிறான். ஆனால் கிருஷ்ணதயாள் அவனை செய்ய வேண்டாம் என்கிறார். அவன் திருப்பி ஏன் என்று கேட்க, சொன்னால் உனக்கு புரியாது அதை விட்டு விடு என்கிறார். சடங்கு செய்ய கொஞ்ச நேரம் இருக்கும்போது  கிருஷ்ணதயாள் மயக்கமாகி உடல்நிலை கெட்டு கோரா பற்றிய உண்மைகளைச் சொல்லிவிடுகிறார். கோரா திகைத்து நிற்கிறான். 

பின்னர் கோரா தன்னை ஒரு சீடனாக ஏற்றுக்கொள்ளுமாறு பொரேஷ் பாபுவிடம் கேட்கிறான். எல்லோருடைய சமூக வழக்கங்களுக்கும் மரியாதை கொடுக்கும் அவரை விட சிறந்த குரு அமைய மாட்டார் எனச் சொல்கிறான் கோரா. ஆனந்தமாயி அம்மாவின் அறைக்கு வரும் கோரா, 'நான் வெளியில் தேடிய தெய்வம் எனது வீட்டிலேயே இருந்திருக்கிறது. அத்தெய்வம் நீங்கள் தான் அம்மா. லட்சுமியாவை அழைத்து ஒரு குவளை தண்ணீர் எனக்கு கொண்டு வரச் சொல்லுங்கள்' என்கிறான். 

கோரா - இரவீந்திரநாத் தாகூர்

தமிழில்: கா.செல்லப்பன் 


Monday, October 28, 2024

ஒரு குடும்பம் சிதைகிறது - எஸ்.எல். பைரப்பா

தொடர்ந்து வரும் இழப்புகளும், உறவுகளின் பிரச்சினைகளும், சகிக்க முடியா வறுமையுமே வாழ்க்கை என்று ஒரு சிலருக்கு அமையுமென்றால் அப்படிப்பட்ட வாழ்க்கையின் பொருள்தான் என்ன, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பதே இந்த பூமியில் கிடைக்காத ஒன்றா என்ற கேள்வியில் இந்த நாவல் அமைகிறது. அதன் விடை இந்த நாவலிலும் இல்லை, நாமும் தேடினால் கண்டறிய முடியாத ஒன்று அது. 


தாய் கங்கம்மாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள். பிராமண குடும்பம். அவளின் கணவர் ராமண்ணா ஊரில் கணக்குப்பிள்ளையாக இருந்து இறந்துவிட்டார். கொஞ்ச நிலமும் உண்டு. இரண்டு பிள்ளைகளும் சிறியவர்கள் என்பதால் தற்காலிகமாக அந்த வேலையை இன்னொருவர் பார்த்து வருகிறார். இரண்டு பிள்ளைகளில் மூத்தவர் சென்னிகராயன், இளைய மகன் அப்பண்ணய்யா. இருவருமே வீட்டுக்கு அடங்காத பிள்ளைகள். அதற்கு காரணம் கூட தாய் கங்கம்மா தான். எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும், யாரையும் மதிக்காத குணம் என அவள் ஒரு தனிப்பிறவி. எப்பொழுதும் கெட்ட வார்த்தைகள் மூலமாகவே பேசுகிறாள். புரோகிதர்கள் மற்றும் ஒருசில பெரிய மனிதர்களுக்கு அவள் பயப்படுகிறாள். ஆனால், அறிவு என்றால் என்ன விலை என்று கேட்கக்கூடிய அவள், பிள்ளைகளையும் அப்படியே வளர்த்து விட்டாள். 

சின்ன வயதில்  ஒருநாள் இரண்டு பிள்ளைகளும்  தாய் திட்டினாள் என்பதற்காக  கரும்புக் காட்டுக்கு தீ வைத்து விட பக்கத்து காடுகளில் உள்ள பயிர்களும் அழிகின்றன. அதற்கு நஷ்ட ஈடாக சிவேகவுடன் என்பவன் பணத்தைக் கொடுத்து நிலத்தை அடமானம் எடுத்துக் கொள்கிறான். அந்த பணம் கட்ட முடியாமல் வட்டி ஏறிக்கொண்டே வருகிறது. இருந்த நிலமும் போனதால் இருக்கும் பொருளை வைத்து நாட்களை கடத்துகிறார்கள் அம்மாவும் மகன்களும். 

கண்டி ஜோசியர் என்பவர் தனது மகளான நஞ்சம்மாவை சென்னிகராயனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். இன்னொரு மகன் கல்லேசன் போலீசாக இருக்கிறான். கண்டி ஜோசியர் அந்த பகுதியில் கொஞ்சம் பிரபலமானவர். யாருக்கும் பயப்படாத அவரைக் கண்டு கங்கம்மா முதலில் பயப்படுகிறாள். ஆனால் வழக்கம் போல மருமகளை கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பிக்கிறார். கணவனும் அம்மா போலவே இருக்கிறான், திட்டுவதும் மீதி நேரம் எப்பொழுதும் சோறு பற்றிய நினைப்பு தான். கணக்குப் பிள்ளை வேலையை திரும்பவும் கண்டி ஜோசியர், தன் மகன் கல்லேசனுடன் அவனுக்கு வாங்கித் தருகிறார். கணக்கு பற்றி ஒன்றும் தெரியாத சென்னிகராயன், பக்கத்து ஊரில் இருக்கும் இன்னொருவரிடம் சென்று எழுதி வாங்கி வருகிறான். சம்பளத்தில் பாதிப் பணம் அவருக்கே போகிறது. 

மிகுந்த பொறுமைசாலியான நஞ்சம்மாவுக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதால் கணக்குகளை அவளே எழுத ஆரம்பிக்கிறாள். முதலில் மறுக்கும் சென்னிகராயன், வேறு வழியில்லாமல் அதற்கு ஒத்துக்கொள்கிறான். கொஞ்சம் முயற்சி செய்து சம்பளப் பணத்தையும் தன் குடும்பத்துக்கே வருமாறு செய்கிறாள். சென்னிகராயனிடம் கிடைத்தால் பக்கத்து நகரத்துக்கு சென்று பணம் தீரும்வரை எல்லா உணவகங்களிலும் சென்று தீர்த்து விட்டே வருகிறான். நிலம், வீடு அடமானத்தில் போகும்போது கூட எவ்வளவோ முயன்றும், அவளால் மீட்க முடியவில்லை. தன் மாமியார் கங்கம்மாவை மீறி அவளால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது. தனது கொழுந்தனார் அப்பண்ணய்யா கூட ஒருநாள் அவளை அடித்து விடுகிறான். சட்டி நிறைய உணவு இருந்தால் நீ உண்டாயா, பிள்ளைகள் உண்டார்களா என்று ஒருநாளும் கேட்காமல் அனைத்தையும் உண்டு விடும் கணவன், அடக்க முடியாத மாமியார் என அவள் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போகிறாள். 

இதற்கு நேர் எதிராக அப்பண்ணய்யாவின் மனைவி சாதம்மா இருக்கிறாள். நஞ்சம்மா கணக்கு எழுதுதல், புரச இலைகளை தைத்து வருமானம் பார்த்தல் என பல வேலைகளை செய்கிறாள். வெறும் ராகியை கொண்டே அவளால் குடும்பத்தை நடத்த முடியும். ஆனால் சாதம்மா அந்த கஷ்ட வாழ்க்கைக்கு பழக்கப்படாதவள். அரிசிச் சோறும், காப்பியும் சாப்பிட்டு பழகியவள். அப்பண்ணய்யா நல்லவன் என்றாலும் கோபம் வந்தால் அடிக்கிறான், வருமானம் இன்மை, மாமியாரின் கெட்ட பேச்சு என சாதம்மா அப்பண்ணய்யாவை பிரிந்து போகிறாள். 

நஞ்சம்மாவும், சாதம்மாவும் ஒரே வீட்டுக்கு மருமகளாக வந்தவர்கள். நஞ்சம்மா எதையும் தாங்கி கொண்டு குடும்பத்துடன் இருக்கிறாள். சாதம்மாவோ தனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு கிளம்பி விடுகிறாள். அண்ணனை திருத்தவே முடியாது, தம்பியை கொஞ்சம் திருத்த முடியும். ஆனால் தம்பி அப்பண்ணய்யாவின் குடும்பம் பிரிந்து போகிறது. 

நாம் கடந்த வருடங்களில் கொரோனா என்ற நோயிடம் அகப்பட்டு வீட்டுக்குள் அடைந்து கிடந்தோம். இந்த நாவல் நடக்கும் இடமான கர்நாடகத்தில் அந்த காலத்தில் பிளேக் நோய் பரவி இருக்கிறது. மக்கள் கொத்து கொத்தாக மடிந்து இருக்கிறார்கள். கொரோனா காலத்தில் நாமாவது வீட்டுக்குள் இருந்தோம். பிளேக் நோய் ஊரில் பரவினால் எல்லோரும் அவரவர் வீட்டை காலி செய்து ஊருக்கு வெளியே தங்குகிறார்கள். நோய் முற்றிலும் ஒழிந்த பிறகே ஊருக்குள் வரமுடியும்.  நாவலில் பலமுறை ஊரை  காலி செய்து செல்லும் காட்சி வருகிறது. யார் வீட்டிலாவது எலி செத்து விழுந்தால் அவர்கள் அடையும் பதட்டம் அளவில்லாதது. கொஞ்ச வருடங்கள் கழித்து தடுப்பூசி போடுவதும் நாவலில் வருகிறது. 

இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் என மூன்று பேர் நஞ்சம்மாவுக்கு.  சில நாட்கள் இடைவெளியில் தனது மகளையும், பெரிய மகனையும் பிளேக் நோயால் இழக்கிறாள். பெண் பிள்ளைக்கு இரண்டு மாதம் முன்புதான் திருமணம் செய்து வைத்தாள்.  தனது இளைய மகன் விசுவனை காப்பாற்ற எண்ணி அவ்வூரில் இருக்கும் நரசி என்பவளிடம் 'இவன் என் மகன் இல்லை, இனிமேல் உன் மகன்' என்று சொல்கிறாள். தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கடவுள் பிடுங்கிக்கொள்ள நினைக்கிறார், அதனால் நீயே அவனைப் பார்த்துக்கொள், அவனாவது பிழைக்கட்டும் என்கிறாள். விசுவன் தப்பித்துக்கொள்கிறான். பின்னர் அந்த வருடம் அவனை தன் அப்பாவின் வீட்டுக்கு அனுப்பி விடுகிறாள். அங்கே சில பிரச்சினைகள் இருந்தாலும் தன் பாட்டி அக்கம்மா இருப்பதால் அவனைப் பார்த்துக்கொள்வாள் என நினைக்கிறாள். 



அடுத்த வருடத்தில் கொஞ்சம் கணக்கு போட்டு பணம் சேர்த்து வீடு கட்டுகிறாள் நஞ்சம்மா. வீட்டு வேலை முடியும் நிலையில் திரும்பவும் ஊருக்குள் பிளேக் வந்து நஞ்சம்மா இறந்து போகிறாள். இறப்பதற்கு முன்னர் அந்த ஊரில் அவளுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த சாமியார் மாதவைய்யாவிடம் 'அண்ணன் வீட்டில் என் மகன் விசுவன் இருந்தால் சோறு கிடைக்கும். அறிவு வளராது. நீங்கள்தான் அவனைப் பார்த்துக்கொள்ள வேண்டும் ' என்கிறாள். நஞ்சம்மாவின் இறப்புக்கு வந்த, அவளின் பாட்டி அக்கம்மா ஊரில் இருக்கும் பிளாக் மாரியம்மனின் கோவில் கதவை செருப்பால் அடித்து அம்மனை திட்டுகிறாள். தன் பேத்தி பட்ட கஷ்டங்கள் பத்தாது என்று அவளையும் கொன்று விட்டாயா என்று கேள்வி கேட்கிறாள். ஆனால் பாட்டியும் இரண்டே நாளில் இறந்து போகிறாள். 

அப்பண்ணய்யாவுக்கு அண்ணியும் பிள்ளைகளும் இறந்தது கவலை அளிக்கிறது. அவன் இப்பொழுது அம்மா கங்கம்மாவை விட்டு தனியே வசிக்கிறான். கங்கம்மா இன்னும் அப்படியே தான் இருக்கிறாள். நஞ்சம்மா கட்டிய புது வீட்டுக்கு சென்னிகராயனும், கங்கம்மாவும் குடி போகிறார்கள். நஞ்சம்மாவின் கணவன் சென்னிகராயனோ அடுத்த திருமணம் செய்ய பெண் பார்க்கிறான். தரகருடன் சென்று பெண் பார்த்து திருமணத்துக்கு நாளும் குறித்துவிட்டு வருகிறான். சென்னிகராயனை பற்றி கேள்விப்பட்டு பெண் தரமாட்டோம் என்று சொல்லிவிடுகிறார்கள். 

நஞ்சம்மாவுக்கு எல்லா வகையிலும் உதவியாக இருந்த மாதேவய்யா, விசுவனை எப்படியாவது மேலே கொண்டு வந்து விடவேண்டும் என நினைக்கிறார். அவனை நானே வளர்க்கிறேன் என்று, அவன் தந்தையான கண்டி ஜோசியரிடமும், மாமன் கல்லேசனிடமும் கேட்கிறார். முதலில் யோசிக்கும் அவர்கள் பின்னர் ஒத்துக்கொள்கிறார்கள். விசுவனை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார் அய்யா. 

வரும்வழியில் அவர்களின் ஊருக்கு போகிறார்கள். விசுவனுக்கு தன் அம்மாவின் நினைவு வருகிறது. அய்யா தங்கி இருந்த இடத்தில் இருப்பதை எடுத்துக்கொண்டு போகும் வழியில் விசுவனின் அப்பா சென்னிகராயனை சந்திக்கிறார்கள். அய்யாவுக்கோ பயம், என் மகனை கூட்டிக்கொண்டு எங்கே போகிறாய் என தடுப்பானோ என்று. ஆனால் கணக்கு தெரியாமல் வேலையை இழந்த சென்னிகராயன் இப்போது தாய் கங்கம்மாவிடம் இருக்கிறான். வருமானம் கொஞ்சம் கூட இல்லை. யாரோ கொடுத்த புகையிலையை வாயில் போட்டு மென்று கொண்டிருக்கிறான். வாயைத் திறந்து அய்யாவிடம் பேசினால் புகையிலையின் ருசி போய்விடும் என்று வாய் மூடியே இருக்கிறான். 

உணவைப் பொறுத்தவரை சென்னிகராயனுக்கு  தன் மகனே என்றாலும் தள்ளியே நிற்கவேண்டும். முன்பு ஒருமுறை கோவிலுக்கு போன இடத்தில் பாகற்காய் பச்சடி செய்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்கிறான். கோவிலில் போடும் சாப்பாடு உறைப்பு இல்லாமல் இருக்கிறது. அதற்கு வைத்து கொள்கிறேன் என்கிறான். கோவிலுக்கு வரும் அத்தனை பேரும் சாப்பிடும் உணவை குறை சொல்கிறானே என்று நஞ்சம்மா கவலைப்படுகிறாள். அப்படிப்பட்டவன் இப்பொழுது மகன் போவதையே பார்த்துக்கொண்டிருக்கிறான். 


ஒரு குடும்பம் சிதைகிறது 
எஸ்.எல். பைரப்பா 
தமிழில்: எச்.வி. சுப்ரமணியம்
நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா  


Tuesday, October 15, 2024

நளபாகம் - தி. ஜானகிராமன்

காமேச்வரன் தன்னுடைய சிறு வயதிலேயே அன்னையை இழந்து, பின்னர் தந்தை கல்யாணம் செய்துகொண்ட சித்தியின் கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறுகிறான். ரயிலில் அவனை சந்திக்கும் வத்சன் என்பவர் அவனைக் கூட்டிச்செல்கிறார. அவருக்கு சமையல் கலை தெரியும் என்பதால் ஒரு கோவிலில் சமைக்கும் வேலை அவருக்கு. அவருடனேயே தங்கி கொள்ளும்  காமேச்வரன், சமையலைக் கற்றுகொண்டு அவரையே குருவாக எண்ணிக் கொள்கிறான். அவரின் இறப்புக்கு பின்னர் அவனுடைய நினைவுகளில் அவர் எப்பொழுதும் இருந்து கொண்டிருக்கிறார். 



காமேச்வரன் இப்பொழுது காசி, பத்ரிநாத் எனச் செல்லும் யாத்ரிகர்களுக்கு சமைப்பவனாக தனி ரயிலில் வேலைக்கு இருக்கிறான். அவன் சமையலை அனைவரும் புகழ்கிறார்கள். அப்படி ஒரு பயணத்தில்தான் ரங்கமணி அம்மாள், ஜோதிடர் முத்துசாமி என அவனுக்கு அறிமுகமாகிறார்கள். 


ரங்கமணி அம்மாவுக்கு கணவர் இல்லை. கல்யாணம் ஆன சில வருடங்களிலேயே கணவனை இழக்கிறார். குழந்தை இல்லாததால் தன்னுடைய மாமியார் சுவீகாரம் எடுத்துக் கொள்ள வற்புறுத்துவதால் சொந்தத்தில் துரை என்பவனை மகனாக ஏற்றுக் கொள்கிறார். ரங்கமணி கணவரின் குடும்பத்தில் சில தலைமுறைகளாகவே குழந்தை பாக்கியம் இல்லை. அதற்கு ஒரு கதையும் சொல்கிறார்கள். இப்பொழுது துரைக்கு திருமணம் ஆகி ஏழாண்டுகள் கழிந்தும் குழந்தை இல்லை. 

யாத்திரை ரயிலில் போகும்பொழுது எங்களின் குடும்பத்துக்கு பிடித்த பாவம் போகுமா, குழந்தை பாக்கியம் கிடைக்குமா என ஜோதிடர் முத்துசாமியிடம் ரங்கமணி அம்மாள் ஜோசியம் கேட்கிறார். ஜோசியம் பார்க்கும் முத்துசாமி, துரைக்கு புத்திர பாக்கியம் இல்லை, ஆனால் அவனின் மனைவி பங்கஜத்துக்கு பாக்கியம் உண்டு என்கிறார். ரங்கமணி அம்மாள் ஜோதிடரை வியந்து பார்க்கிறாள். 

பக்தியும், நல்ல அழகும் உள்ள இளைஞன் காமேச்வரனை தனது வீட்டுக்கு அழைக்கிறாள் ரங்கமணி. ரங்கமணிக்கு அவன் மேல் ஏற்பட்ட பிரியம் என்ன வகையானது என்பதை நாவல் விளக்கவில்லை. தான் அடையாத ஒன்றை தன் மருமகள் அடையட்டும் என்ற எதிர்பார்ப்பா என்பதும் அப்படியே. தனது தத்து பிள்ளையாக என் வீட்டில் வந்து இருந்து, உன்னுடைய பூஜைகளை நடத்து என அழைக்கிறாள். முன்பே ஒரு பிள்ளை உங்களுக்கு இருக்க, நான் அங்கே வந்து இருந்தால் பிரச்சினை வரும், என்னால் உங்கள் சொல்லையும் தட்ட முடியாது.. வேண்டுமானால் ஒரு சமையல்காரனாக நான் வந்து இருக்கிறேன் என்கிறான் காமேச்வரன். எப்படியோ நீ வந்து இருந்து, உன்னால் சில நல்ல விஷயங்கள் நடந்தால் நல்லதே என்கிறாள் ரங்கமணி. 

துரையின் மனைவி பங்கஜத்துக்கு காமேச்வரன் மேல் மோகம் தோன்றியது  போல் இருந்தாலும், அவள் தனது கணவனை நேசிக்கிறாள். சக்தி உபாசகனாக இருக்கும் காமேச்வரனை அவள் மிகவும் மதிக்கிறாள். மாமியார் ரங்கமணியின் நோக்கம் புரிந்தாலும் அதற்கு இடம் கொடுக்காமல் துரையுடன் நெருங்குகிறாள். இதற்கு முன்னரே இருவரும் கணவன் மனைவி என்றாலும், இப்பொழுதுதான் காதல் செய்வது போல பழகுகிறார்கள். அதன் விளைவாக பங்கஜம் தாய்மை அடைகிறாள். 




அதற்கு முன்பாகவே காமேச்வரன் பிடி அரிசி என்ற திட்டத்தின் மூலம் ஊரில் உள்ள பள்ளியில் பயில வரும் குழந்தைகளுக்கு நல்ல உணவு கொடுக்கிறான். அதற்காக எல்லோரிடமும் உதவி கேட்கிறான். அந்த ஊரில் உள்ள சில இளைஞர்கள் அவனுக்கு உதவுகிறார்கள். தொடர்ந்து ரங்கமணி அம்மாவின் வீட்டில் பூஜை செய்கிறான், ஊரில் உள்ள சிலர் அவனிடம் வந்து குங்குமம் வாங்கிச் செல்கிறார்கள். 

ஆனால் ஊரில் உள்ளோர் வதந்தியை கிளப்புகின்றனர். பங்கஜம் தாய்மை அடைய காரணம் காமேச்வரன் தான் என பேசுகின்றனர். இதை அறிந்த காமேச்வரன், ஜோசியர் முத்துசாமியிடம் சென்று கேட்கிறான். அவரோ, உண்மையாய் நடந்தால் என்ன, நடந்தது போல பேச்சு கிளம்பினால் என்ன இரண்டும் ஒன்றுதான். ஜோசியர்களைப் பொறுத்தவரை எல்லாவற்றுக்கும் ஒரு விளக்கம் சொல்வார்கள். அப்படிச் சொன்னீர்களே, இப்படியாகி விட்டது என்றால் அதற்கும் ஒரு காரணம் சொல்லி தான் சொன்னதே சரி என்று நிற்பார்கள். 

காமேச்வரன் பின்னர் தான் ரங்கமணி வீட்டை விட்டு போக முடிவு செய்கிறான். முன்பு செய்த வேலையான ரயிலில் சமைக்கும் வேலைக்கு திரும்ப போகிறான். அத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்ட காமேச்வரன், தனக்குப் பெண் பார்க்குமாறு ரயில் யாத்திரையை நடத்தும் நாயுடுவிடம் சொல்கிறான். 

ஒரு நல்ல விஷயம் நடக்கிறதென்றால் அதற்கு காரணம் நம்மைச் சுற்றியும் நடக்கும் நல்ல நிகழ்வுகள் மற்றும் நல்ல மனிதர்களே என்பதை நளபாகம் நாவல் சுட்டிக் காட்டுகிறது. ஆன்மிகம், பக்தி என்று ஒருபக்கம் இருந்தாலும் நாம்  மனிதர்கள் மேல் வைக்கும் அன்பே நம்மை கடைத்தேற்றுகிறது. யார் செய்த பாவமோ என்று நாம் நினைக்கும் அனைத்தும் அந்த அன்பின் முன்னால் அழிந்து போகின்றன.

 


Monday, September 23, 2024

கார்மலின் - தாமோதர் மௌசோ - தமிழில்: கவிஞர் புவியரசு

கொங்கணி நாவலான கார்மலின் கவிஞர் புவியரசு அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டது. பெற்றோரை சிறுவயதிலேயே இழந்த கார்மலின் என்ற பெண் தன்னையும், தான் பெற்ற மகளையும் இந்த நிலத்தில் காலூன்ற செய்ய சந்திக்கும் இடர்கள் பற்றிய கதை. 

கோவா கடற்கரை பகுதியில் பிறந்த கார்மலின், தனது சிறு வயதிலேயே பெற்றோர் மற்றும் உடன்பிறந்த சகோதரனை இழக்கிறாள். பின்னர் தனது அத்தை வீட்டில் வளர்கிறாள். அவளின் அத்தைக்கு கார்மலினை வளர்ப்பது பிடிக்கவில்லை என்றாலும் அவளுடைய கணவர் இது நம்முடைய கடமை எனச் சொல்லி அவள் மேல் பாசம் காட்டுகிறார். மாமா அவள் மேல் பாசத்துடனும், அவளை பள்ளிக்கும் அனுப்புகிறார். அத்தை மாமாவின் மகன் அழகியான  கார்மலின் மேல் காதல் வயப்படுகிறான். கார்மலினுக்கும் அவன் மேல் ஆசையாக இருக்கிறாள். மாமாவுக்கு கார்மலினை தனது மருமகளாக பார்க்க வேண்டும் என ஆசை இருந்தாலும், அத்தை பணக்கார மருமகள் வேண்டும் என்கிறாள். சொன்னதுபோலவே அவனுக்கு ஒரு பணக்கார பெண்ணைப் பார்த்து கட்டி வைத்து விடுகிறார்கள். அவளின் முதல் காதல் உடைந்து போகிறது. 


கால்பந்து அணியில் விளையாடும் ஜோஸ் என்பவனை கார்மலினுக்கு கட்டி வைக்கிறார் அவளின் மாமா. சரியான கோபம் கொண்ட அவன் அந்த அணியில் தொடர்ந்து விளையாட முடிவதில்லை. குடிப் பழக்கம் கொண்ட அவன் சம்பாதிக்கும் காசை எல்லாம் குடித்தே அழிக்கிறான். இருந்த வேலையும் போய்விடுகிறது. குடிகாரர்களுக்கே உண்டான கோபம், நிதானம் இன்மை எல்லாம் அவனை ஆட்கொள்ள தன்னிலை மறந்து திரிகிறான் ஜோஸ். ஒரு பெண் குழந்தையும் பிறக்க, அதற்கு பெலின்டா என பெயர் வைக்கிறாள் கார்மலின். 

தனது மகளை நன்றாக வளர்க்க வேண்டும் என விரும்பும் கார்மலினுக்கு, குழந்தைக்கு உணவூட்ட முடியாமல் வறுமை தள்ளுகிறது. ஜோஸின் அண்ணண் மனைவி இசபெல் அவளுக்கு உதவுகிறாள். அரிசி, பணம், குழந்தைக்கு உடைகள் என தன்னால் முடிந்த உதவிகளை இசபெல் செய்கிறாள். 

ஒருமுறை ஜோஸ் வேலை பார்க்கும் இடத்துக்கு செல்லும் கார்மலின்   தனது கணவனின் நண்பனிடம் தன்னை இழக்கிறாள். அவளின் கணவன் ஜோஸ் குடிபோதையில் கிடக்கிறான். ஜோஸிடம் எந்த இன்பத்தையும் காணாத அவளுக்கு இது தற்காலிக இன்பமாக அமைகிறது. இரண்டாவது முறையும் தவறிய பின்னர், அவள் இந்த உறவு வேண்டாம் என ஊர் திரும்புகிறாள். ஆனால் அந்த உறவின் விளைவாக பிறந்த ஆண் குழந்தையை அவள் வெறுக்கிறாள். பின்னர் அந்த குழந்தை கட்டிலில் இருந்து கீழே தவறி விழுந்து இறக்கிறது. அதன் பின்னரே அவள் நிம்மதியடைகிறாள். தான் செய்த பாவம் கழுவப்பட்டு விட்டது என நினைக்கிறாள். 


பக்கத்தில் இருக்கும் நிலத்தை குத்தகைக்கு பிடித்து விவசாயம் செய்கிறார்கள் கார்மலினும், இசபெல்லும். ஜோஸ் எதற்கும் உதவாமல் தனது குடியே முக்கியம் என்று இருக்கிறான். அறுவடைக்கு பின்னர் கொஞ்சம் உணவு பற்றிய கவலை தீர்கிறது. ஆனால் அதற்கடுத்த வருடங்களில், யார் நிலத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கே நிலம் சொந்தம் என்ற சட்டம் வர விவசாயமும் செய்ய முடியாமல் போகிறது. 

வறுமை தொடர்ந்து வர, கடன் தொகையும் அதிகமாகி கொண்டே போகிறது. ஜோஸினால் எந்த பயனும் இல்லை. குவைத்தில் வேலை பார்க்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்பட அங்கே செல்ல முயல்கிறாள் கார்மலின். இசபெல்,   பெலிண்டாவை   நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய்வா என்கிறாள். அவள் கொடுத்த நம்பிக்கையால் கார்மலின் குவைத் நாட்டுக்கு வீட்டு வேலைக்குப் போகிறாள். 

அவள் குவைத் நாட்டுக்கு செல்லும் முன்பே அந்த நாட்டைப் பற்றியும் அவள் பார்க்கப் போகும் வேலை பற்றியும் சொல்கிறார்கள். நல்ல முதலாளி அமைந்தால் உனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பு என்கிறார்கள். சில பெண்கள் பாலியல் ரீதியில் கஷ்டப்படவும் செய்கிறார்கள், சிலர் அதையே ஒரு வாய்ப்பாக்கி பணம் சம்பாதிக்கிறார்கள் எனச் சொல்ல கார்மலின் திட மனதுடன் செல்கிறாள். அங்கே போன பின்னர் நல்ல முதலாளியும் குடும்பமும் அமைகிறது. 

அவளின் முதலாளி பெயர் நுஸார். அவர்கள் என்ன செய்தாலும் எதிர்த்துக் கேள்விகள் கேட்க முடியாத சூழலில் கார்மலின் பணியாற்றுகிறாள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து தருகிறாள். எல்லோரும் வெளியே சென்றிருக்கும் ஒரு நாள் அவளின் முதலாளி அவளை அடைகிறார். உறவு முடிந்த பின்னர் அவளுக்கு கொஞ்சம் பணம் தருகிறார். நுஸார் நல்லவர் என்றாலும், பணமே கொடுக்கவில்லை என்றாலும் நாம் தப்பிக்க முடியாது எனத் தெரிந்துகொள்கிறாள் கார்மலின். அத்தை மகன், ஜோஸ், அவனின் நண்பன் என அவளுடன் தொடர்பு கொண்டிருந்தவர்களிடம் காணாத ஒன்றை நுஸாரிடம் கண்டுகொள்கிறாள். அந்த உறவில் அவள் மகிழ்ச்சியும் அடைகிறாள். 

ஒருநாள் செய்த சிறு தவறால் முதலாளியின் மனைவி அவளை சிறைக்கு அனுப்பி விடுகிறாள். பின்னர் அவளை திரும்ப அழைத்து 
வந்து விடுகிறார்கள். ஜோஸ் அதிக குடியினால் கோவாவில் இறக்கிறான். அவன் இறப்புக்கு கூட அவள் வரமுடியாமல் போகிறது. போய்  வந்தால் செலவு அதிகமாகும் என நினைத்து போகாமல் இருக்கிறாள். உடனே கிளம்பினாலும் அவன் அடக்கத்துக்கு போக முடியாது. 

சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு கார்மலின் எல்லாக் கடனையும் அடைக்கிறாள். நகரத்தில் புதிய வீடு கூட அவள் வாங்குகிறாள். அவளைப் பொறுத்த வரை,  தான் பட்ட துயரங்கள் தன்னோடு போகட்டும்,  தன் மகள் பெலிண்டா எந்த கஷ்டமும் படக் கூடாது என நினைக்கிறாள். அவள் படித்து முடித்தால் நல்ல இடத்தில அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என முடிவு செய்கிறாள். 

பள்ளி இறுதித் தேர்வில் தோற்றுப் போகும் பெலிண்டா, அடுத்த முறையும் முயன்று கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் தன் அம்மாவுடன் அவள் பேசும் பேச்சு கார்மலினை கோபம் கொள்ளச் செய்கிறது. எந்த வாழ்க்கை தன் மகள் வாழக் கூடாது என எண்ணுகிறாளோ அதனை அவள் சொன்னதும் தாயாக அவளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. 

"கார்மலின்" - நாவல் ஒரு காலகட்டத்தின் கதை, ஒரு பெண் எவ்வளவு அடக்கு முறைகளுக்கு உள்ளாகிறாள், கொஞ்சம் அழகாக இருந்தால் அவளை வளைக்க எத்தனை பேர் முயல்கிறார்கள், பெண்ணின் ஆசைகளை, அவளின் தாபங்களை அறியாத ஆண்கள், அயலகப் பணியில் அவர்கள் படும் துயர் என சொல்லும் கதை. சில உறவுகள் விலகிப் போக, இசபெல், நுஸார் போன்ற சில உறவுகள் அணைக்க வருகிறார்கள். 

 
கார்மலின் - தாமோதர் மௌசோ 
தமிழில்: கவிஞர் புவியரசு
சாகித்திய அகாதெமி 

Monday, September 16, 2024

நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். 


விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.


மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. 

நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று  எதற்கெடுத்தாலும்  சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. 

குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம்  பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். 

பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. 



நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். 

நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு.

சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான்.  இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். 

"நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க  காத்திருக்கிறாள். 


Monday, September 9, 2024

கங்கைப் பருந்தின் சிறகுகள் - லக்ஷ்மிநந்தன் போரா

அஸ்ஸாமிய நாவலான கங்கைப் பருந்தின் சிறகுகள், நவீனத்தால் ஏற்படும் மாற்றங்களையும், ஒரு காதல் - முக்கியமாக காதலித்தவள் படும் துயரங்களையும் சொல்லும் நாவல். 

போக்ராம் ஒரு சந்தை வியாபாரி. சணல் அறுவடை நடக்கும் காலங்களில் அதை வாங்கி விற்பான். மற்ற மாதங்களில் துணிகளை வாங்கி விற்பான். பக்கத்து ஊர் சந்தைகளில் அவன் வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவன் குடும்பம் நடத்த உதவுகிறது. வாரத்தின் எல்லா நாளுமே அவன் சந்தைக்குப் போய்விடுகிறான். போக்ராமுக்கு மனைவி, பிள்ளைகள், தங்கை வாசந்தி, வயதான தாய் என பெரிய குடும்பம். வறுமை இல்லை என்றாலும் குடும்ப சக்கரம் போக்ராமுடைய வருமானம் கொண்டே ஓடுகிறது. 



நாவல் முழுவதும் சோனாய் ஆறு கூடவே வருகிறது. அவர்கள் இருக்கும் கிராமம் சோனாய் பரியா என்ற ஊர். அந்த ஊரில் தனஞ்ஜெயன்  என்னும் இளைஞன் ஹோமியோபதி மருத்துவம் பார்க்கிறான். தன்னால் முடிந்த உதவிகளை அவன் அந்த ஊர் மக்களுக்குச் செய்கிறான். போக்ராமும் அவனும் நண்பர்களாக இணைகிறார்கள். வாசந்திக்கு தனஞ்ஜெயனை பிடித்து போவதால் அவனை காதலிக்கிறாள். இருவரும் வீட்டாருக்குத் தெரியாமல் சந்தித்துக் கொள்கிறார்கள். வாசந்தியின் அண்ணி தருலதாவுக்கு அது தெரிந்து போக, உன் அண்ணனிடம் சொல்லி அவனையே உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன், அது வரைக்கும் நீ பொறுமையாக இரு என்கிறாள். 

சரியான சாலை வசதிகள் இல்லாத அவர்களின் ஊருக்கு, நவீன சாலைகள் போடப்படுகிறது. நவீனம் என்பது வளர்ச்சிக்கான அறிகுறி என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சிலர் அதில் பாதிப்படைகிறார்கள். போக்ராம் இதுவரை கிராமத்தில் பொருளை வாங்கி பெரிய வியாபாரிகளுக்கு விற்று வந்தான். இப்பொழுது நவீன சாலைகள் மூலம் மோட்டார் வண்டிகள் வருவதால் பெரிய ஆட்களே நேரடியாக வந்து கொள்முதல் செய்து விடுகிறார்கள். சில சந்தைகளில் துணி விற்று வந்த போக்ராம் அதுவும் செய்ய முடிவதில்லை. போக்குவரத்து வசதி வந்துவிட்டதால் பெரிய கடைகளைத் திறந்து நிறைய துணிகளை கொண்டு வந்து மக்களை ஈர்க்கிறார்கள். இவனிடம் துணி வாங்க ஒருவரும் வருவதில்லை. அவனுக்கு அந்த நவீன சாலை, கொல்ல வந்த கருப்பு பிசாசு போல தோன்றுகிறது. வங்கி லோன் வாங்கி தொழில் செய்யலாம் என்றால்  அது நடைபெறாமல் போய்விடுகிறது. 



குடும்பத்தை நடத்த பணமில்லாமல் கஷ்டப்பட்ட போக்ராமுக்கு ஒரு அரசியல்வாதியின் நட்பு கிடைக்கிறது. அந்த நேரத்தில் தேர்தல் வர, அவருக்கு பிரச்சாரம் செய்கிறான் போக்ராம். எதிர் கட்சி வேட்பாளரை தனஞ்செயன் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறான். நண்பர்களாக இருந்த இருவரும் இப்போது எதிரிகள் ஆகிவிட, வாசந்தியின் காதல் கைகூடாமல் போகிறது. போக்ராம் ஆதரவு தெரிவித்தவரே தேர்தலில் வெல்வதால் அவனுக்கு வருமானம் வருகிறது. கூடிய விரைவிலேயே அவன் ஊரில் பெரிய பணக்காரனாகி விடுகிறான். 

வாசந்தியின் அண்ணி தனது கணவனிடம் வாசந்தியின் காதலைப் பற்றிச் சொல்கிறாள். அவனோ இப்போது எதிரியாகி விட்ட தனஞ்செயனுக்கு என் தங்கையை குடுக்க மாட்டேன், வேறு இடத்தில் அவளை கட்டி வைப்பேன் எனச் சொல்கிறான். சொன்னது போலவே மதுரா என்னும் வரனை அவனுக்கு கொண்டு வருகிறான். முதலில் மறுக்கும் வாசந்தி பின்னர் தனது அண்ணியின் கட்டாயத்தின் பேரில் திருமண நிச்சயம் செய்ய சம்மதிக்கிறாள். தனது அப்பா மறைந்த பின் குடும்பத்தை தன் தோளில் சுமந்து, யாருக்கும் எந்த கஷ்டமும் கொடுக்காமல் இருந்த தன் அண்ணன் மேல் உள்ள பாசத்தால் அவள் சம்மதித்து மோதிரம் மாற்றிக் கொள்கிறாள். 

நிச்சயம் செய்த பின்னர் வாசந்தி தடுமாறுகிறாள். அண்ணனை மீறி எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறாள். கல்யாணத்துக்கு நாட்கள் நெருங்கி கொண்டிருக்கிறது. தனஜெயனிடம் இருந்து அவளுக்கு கடிதம் வருகிறது. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம், நீ ஆற்றுத் துறைக்கு இரவில் வந்துவிடு, நாம் இந்த ஊரை விட்டுப்போய் நிம்மதியாக வாழலாம் என்று கடிதத்தில் கூறியிருக்கிறான். வாசந்திக்கு அண்ணன் காட்டிய வரனை திருமணம் செய்வதா அல்லது காதலனுடன் வீட்டை விட்டுப் போய் திருமணம் செய்வதா என்ற குழப்பத்தில் இருக்கிறாள். அன்றிரவு  தன் காதலன் வரச் சொன்னவாறு ஆற்றுக்கும் போய்விடுகிறாள். தூரத்தில் அவளுக்காக படகில் தனஜெயன் காத்திருக்கிறான். அப்பொழுது வாசந்தி தன் விரலில் போட்டிருக்கும் மோதிரத்தை பார்க்கிறாள், குடும்பத்துக்கு இழிவை தேடி தர துணிந்த பெண்ணாக நான் மாறி விட்டேன் என நினைத்தவாறு திரும்ப வீட்டுக்கே ஓடிப் போய் விடுகிறாள். 

வாசந்தி அன்று எடுத்த அந்த முடிவு அவளுக்கு வாழ்க்கையில் வேறு பாதையை காட்டுகிறது. அந்த பாதை கல்லும் முள்ளும் கலந்த கடினமான பாதையாக அவளுக்கு மாறிவிட்டது. கட்டிய கணவனின் சந்தேகம், அவள் கர்ப்பமாக இருக்கும்போது அவன் இறப்பு, பின்னர் குழந்தையின் இறப்பு என பல இன்னல்கள்.  அவள் எடுத்த முடிவால் வாசந்தி பல இன்னல்களுக்கு உள்ளாகிறாள். 

எல்லாவற்றுக்கும் மேலாக தான் ஒரு விதவையாக இருந்து தமது சமூகத்தின் மதிப்பையும், தனது இறப்புக்கு பின் சொர்க்கம் பெற வேண்டும் என அவள் நினைப்பதில்லை. தனஜெயனிடம் ஒரு கடிதத்தில், "இந்த உலக வாழ்க்கையில் இவ்வளவு துன்பங்களை எனக்கு வைத்த கடவுள், நான் இறந்த பின்னர் என்னை சொர்க்கத்தில் சுகமாக வைத்திருப்பார் என்பதை நான் எப்படி நம்ப முடியும்" எனச் சொல்கிறாள். அவள் சமூகம் போட்ட தடைகளை உடைத்து தனது மனத்தை வெளிப்படுத்துகிறாள். ஆனால் அவளின் பழைய காதலன், சாதாரண மனிதன் போல அவளைத் துறந்து அந்த ஊரை விட்டே போய்விடுகிறான், 

அவளின் மாமனார் வைத்திருந்த புத்தகங்களை தனது அறைக்கு மாற்றி படிக்கிறாள். ஒரு காதல் ஜோடி திருமணம் செய்து ஊரை விட்டுப் போக உதவுகிறாள் வாசந்தி. அந்த காதல் ஜோடியிடம் சொல்கிறாள்; "வாய்ப்பு என்பது ஒரு முறைதான் வரும். அதனை நீங்கள் தவற விட்டால் திரும்ப பெற முடியாது".  இழந்தவர்களுக்கு தானே அதன் வலி தெரியும். 

கங்கைப் பருந்தின் சிறகுகள் 

லக்ஷ்மிநந்தன் போரா 

நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 

தமிழாக்கம் - துளசி ஜெயராமன் 



Monday, September 2, 2024

வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

அம்புலி மிகச் சிறந்த ஜல்லிக்கட்டு வீரர். எத்தனையோ மாடுகளைப் பிடித்த அவர் காரி என்ற காளையால் காயம்பட்டு இறக்க நேர்கிறது. அந்தக் காளையை அவரின் மகனான பிச்சி அடக்குவது தான் வாடிவாசல் என்னும் குறுங்கதை. மிகவும் மெதுவாக கதையைச் சொல்லாமல், பேச்சின் மூலமாகவே பழைய கதை வேகமாகச் சொல்லப்படுகிறது. காளைகள், ஜல்லிக்கட்டு, வாடிவாசல் பற்றியே கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பிச்சி சல்லிக்கட்டுக்கு அந்த ஊருக்கு போகும்பொழுது ஆரம்பிக்கும் கதை அங்கேயே முடிவது போல வாடிவாசல் கதையை சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதியுள்ளார். 


மூன்று வருடங்களுக்கு முன் தன் அப்பாவை கொம்பில் தூக்கிய காரி காளையை பக்கத்து ஊர் ஜமீன்தார் நிறைய பணம் கொடுத்து வாங்கிவிட்டார். பக்கத்து ஊர் ஜல்லிக்கட்டுக்கு அந்தக் காளை  வருவதை அறிந்த பிச்சி அங்கே செல்கிறான். அவனுடன் பிச்சியின் மச்சினன் மருதனும் உடன் செல்கிறான். 


அங்கே சென்ற பிச்சிக்கு ஒரு கிழவருடன் நட்பு உருவாகிறது. அந்தக் கிழவருக்கு பிச்சியின் தந்தை பற்றியும், அவரைக் காயப்படுத்திய காரி காளை பற்றியும் தெரிந்திருக்கிறது. ஜமீன்தார் அந்த காளையை இங்கே கொண்டுவந்த பின்னர், யாருமே அந்தக் காளையை அடக்க முடியவில்லை என்று அவர் சொல்கிறார். ஜமீன் காளையை அடக்கி விட்டு பின்னர் ஊரில் இருக்க முடியுமா என்றுதான் யாரும் அந்த மாட்டை தொடுவதில்லை எனச் சொல்கிறான் பிச்சி. அந்தக் காளை வாடிவாசலுக்கு வரும்போது நீயே பார், ஆமாம் நீ அதை பிடிக்கப் போகிறாயா என கிழவர் கேட்கிறார்.

நான் காரியை பிடிக்கப் போகிறேன் என்று அவன் சொன்னதும், கிழவர் உயிரை பணயம் வைக்காதே, அது வீரமுள்ள காளை, உன்னை ஒரே குத்தில் குத்தி தூக்கி போட்டு விடும் தம்பி.. விலகி ஊருக்குப் போய்விடு என்கிறார். அந்தக் காளையை பிடிக்க வேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை, எனவே நான் அதைப் பார்க்கிறேன் என்கிறான். சல்லிக்கட்டுக்கு வந்துவிட்டால் ஜமீன் மாடாய் இருந்தால் என்ன, இங்கே போட்டி தான் இருக்கும் என்கிறான் பிச்சி.  கிழவரும் ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை பற்றி தனக்குத் தெரிந்தவற்றை பிச்சி, மருதன் ஆகிய இருவருக்கும் சொல்கிறார். 



ஜல்லிக்கட்டில் ஜமீன் காளையான காரி உள்ளே வருவதற்கு முன்னரே பிச்சி அந்த மாட்டை பிடிக்க வந்திருக்கிறான் என்ற செய்தி பரவ எல்லோரும் ஆர்வமாய் அவனையே பார்க்கின்றனர். ஜமீன்தார், முடிந்தால் அந்த மாட்டை அவன் பிடித்துக்கொள்ளட்டும் என அவனை உற்றுப் பார்க்கிறார். கதையில் பிச்சியும், ஜமீனும் நேருக்கு நேராக பார்த்துக் கொள்வதை அழகாக கொண்டு போயிருப்பார் செல்லப்பா. 

இந்தக் கதையின் இறுதியில் காரிக்கு நடப்பது போல இப்போது செய்ய முடியாது. தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றிய பிச்சிக்கு தொடையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்கிறான். 

மனிதனுக்கு ஜல்லிக்கட்டு என்பது விளையாட்டு எனத் தெரியும். ஆனால் மாட்டுக்கு அது தெரியாது. தன்னைச் சீண்ட வரும் எதிரி என்றே அதற்கு புரியும். இந்தக் கதையில் வருவது போல, வாலை பிடிப்பது, மாட்டை கீழே தள்ளுவது போன்ற செயல்கள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. திமிலை மட்டுமே பிடிக்க வேண்டும், அதுவும் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அணைய வேண்டும் எனப் பல விதிகள் இப்போது உள்ளன. 

வாடிவாசல் குறுங்கதை, எழுத்தின் மூலம் உண்மையாக நடக்கும் ஜல்லிக்கட்டை நம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தும். வேறு எங்கேயும் நம்மை அகல விடாத கதையும் கூட. பாத்திரங்கள் அறிமுகம் என்று பின்னோக்கி செல்லாத நாவல் வாடிவாசல்.