Monday, September 16, 2024

நிலம் எனும் நல்லாள் - சு.வேணுகோபால்

மனிதர்களுக்கு எங்கே சுற்றினாலும், எங்கே இருந்தாலும் அவர்களுக்கு சொந்த ஊரைப் பற்றிய ஏக்கம் மனதை விட்டுப் போகாத ஒன்று. அவர்களின் சிறு வயதில் சுற்றித் திரிந்த இடங்கள், பழகிய மனிதர்கள், பழக்க வழக்கங்கள் என அதுவொரு திரும்பிப் போக முடியாத காலம். சொந்த ஊரின் நினைவுகள் இருந்தாலும், தம் பிள்ளைகளுக்கு அந்த பொக்கிஷங்கள் கிடைக்கவில்லையே என கழிவிரக்கம் கொண்டாலும், கடைசியில் யாதும் ஊரே யாவரும் கேளிரே என இந்த நாவலில் நாயகன் பழனிக்குமார் உணர்கிறான். 


விவசாயம் செய்த தனது கிராமத்தில் இருந்து மதுரைக்கு வேலைக்குப் போனவன் பழனிக்குமார். அவனுடைய மனைவி ராதாவின் ஊர் கோவை. இரண்டு ஆண் குழந்தைகளோடு அவள் கோவையில் வசிக்கிறாள். பழனி அவ்வப்பொழுது விடுமுறையில் கோவைக்கு சென்று குழந்தைகளைப் பார்த்துவிட்டு வருவான். அவனுக்கு கோவை பிடிப்பதே இல்லை. கோவையின் பேச்சு வழக்கும், கொடுக்கும் மரியாதையையும் பார்த்து அவனுக்கு கோபம் வருகிறது. ராதாவோடு அடிக்கடி சண்டையும், அவனுடைய குறைவான வருமானமும் பிரச்சினை ஆகிறது. அவள் வேலைக்குப் போய்க்கொண்டு இருப்பதால் பழனியின் சொந்த ஊருக்கு வர மறுக்கிறாள். அவனுக்கோ தனது பிள்ளைகள் கிராமத்தில் வளராமல் இந்த ஊரில் வளர்கிறார்களே என்ற கவலை.


மூன்று ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை என இருக்கும் பழனியின் குடும்பத்துக்கு விவசாயம்தான் தொழில். அவனுடைய ஒரு தம்பி குமரன் இறந்துவிட்டான். அவன் இருக்கும்பொழுது நிலமே கதி என்று கிடந்து நல்ல மகசூல் எடுக்கிறான். குடும்பம் கொஞ்சம் தலை நிமிர்ந்தது அவனால்தான். அவனின் இறப்புக்கு பின்னர் விவசாயம் செழிக்காமல் ஏனோ தானோ என்று நடக்கிறது. அண்ணன் பாஸ்கரன் இப்போது நிலத்தை பார்த்துக்கொள்கிறான். எந்த வருமானமும் அந்த நிலத்தில் கிடைக்காததால் அதை விற்றுவிட்டு கோவையில் வீடு கட்ட மனை வாங்கச் சொல்கிறாள் பழனியின் மனைவி ராதா. 

நகரத்தில் வீடு கட்ட வேண்டும் என்பது எல்லோருக்கும் உள்ள ஆசை போல ராதாவுக்கும் உண்டு. அவள் வேலைக்கும் போவதால் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வைத்து வாங்கலாம் என நினைக்கிறாள். நிலத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருக்க, பழனியிடம் விவசாய பூமியை விற்றுவிட்டு வா என்கிறாள். விற்க கூட வேண்டாம், தென்னை, கரும்பு போல பணப்பயிர்களை போட்டால் வருமானம் வருமே என்கிறாள். அவள் சொல்வது எதுவுமே நடைமுறை சாத்தியம் இல்லை என்கிறான் பழனி. பிறகு வார்த்தைகள் தடித்து கை வைப்பதில் போய் முடிகிறது. நீயா நானா என தடித்த வார்த்தைகள் என்று  எதற்கெடுத்தாலும்  சண்டைகள் நிம்மதியை குலைக்கின்றன. 

குழந்தைகளுக்கு கூட அவனின் சொந்த ஊர் பிடிப்பதில்லை. மாமனார், மாமியார் மேல் வைத்திருக்கும் பாசத்தில் கொஞ்சம் கூட தன் தாயுடன் இல்லையே என வருத்தப்படுகிறான். கால்நடைகளுக்கான வைத்தியம்  பழனிக்கு கொஞ்சம் தெரியும். கோவைக்கு வரும்பொழுது பக்கத்தில் இருக்கும் ஆடு மாடு வளர்ப்பவர்களுக்கு அவன் ஆலோசனை சொல்லி வைத்தியம் பார்க்கிறான். 

பையன்களை நொய்யல் ஆற்றுக்கு கூட்டிச் சென்று குளிக்க வைக்கிறான்.ஆறு குளம் போன்றவற்றிலும், இயற்கையுடனும் கலந்து பிள்ளைகள் வளர வேண்டும் என்ற ஆசை பழனிக்கு. ஆற்றில் குளித்து சளி பிடித்தால் ராதா அதற்கு அவனைத் திட்டுகிறாள். பையன்களை கெடுக்கிறாய் என்கிறாள். மொத்தத்தில் அவனுக்கு கோவையை விட்டு ஓடி விட வேண்டும் எனத் தோன்றுகிறது. 



நொய்யல் ஆற்றின் கரையில் ஒருநாள் அவன் அமர்ந்திருக்கும் பொழுது கொஞ்சம் மனநலம் சரியில்லாத ஒரு சிறுபெண் அவனை அண்ணா என அழைத்து அவனிடம் பேசுகிறாள். இன்னொரு நாள் குட்டிகளை ஈன முடியாமல் தவிக்கும் ஆட்டுக்கு வைத்தியம் பார்க்கிறான். அந்த ஆட்டுக்கு சொந்தக்காரி எங்கேயோ இருந்து வந்து கணவன் குடியினால் இறக்க ஆடு வளர்ப்பு, தோட்ட வேலை என தன் குடும்பத்தை நிலைநிறுத்த பிள்ளைகளோடு போராடிக் கொண்டிருக்கிறாள். அவர்களின் வறுமையைப் பார்த்த பழனி காசு வேண்டாம் என்கிறான். ஆட்டை பிழைக்க வைத்த அவனுக்கு ஏதாவது தர வேண்டும் என எண்ணி மறுநாள் காலையில் ஒரு வாழைத் தாரோடு அவன் வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். பழனிக்கு இங்கேயும் நமக்கு சுற்றமும், சொந்தமும் உண்டு என எண்ணி மகிழ்கிறான். 

நாவலில் ஒரு வரி வருகிறது "எல்லா ஊர்களிலும் அபூர்வமான சிலர் வேருக்கு நீரூற்றி விடுகிறார்கள்" . அவனுக்கு இப்பொழுது இதுவும் சொந்த ஊரே, இங்கேயும் அவனுக்கு சுற்றம் உண்டு.

சொந்த ஊர் என்பது உண்மையில் யாருக்குமே கிடையாது. நாவலில் வரும் பழனிக்கு கூட. அவனுடைய தாத்தா காலத்தில் அந்த கிராமத்தில் வந்து தங்கியவர்கள். நாம் எங்கே பிறக்கிறோமோ, எங்கே பால்ய காலங்களை கழிக்கிறோமோ அதுவே சொந்த ஊர் என நினைக்கிறோம். மற்றபடி சொந்த ஊர் என்பது நிரந்தரம் கிடையாது. அதனை பழனி உணர்ந்து கொள்கிறான்.  இனிமேல் ராதாவோடு அவன் இணங்கியே போவான். 

"நிலம் எனும் நல்லாள்" எங்கேயும் நம்மை ஆதரிக்க, அரவணைக்க  காத்திருக்கிறாள். 


No comments:

Post a Comment