Wednesday, August 13, 2025

சார்த்தா - எஸ். எல். பைரப்பா

அந்தக் காலத்தில் வணிகம் செய்வதற்காக நாடு விட்டு நாடு குழுவாக பயணம் செய்துள்ளனர். நீண்ட நாள் பயணம் என்பதால், ஒரு குழுவாகவே அனைவரும் இணைந்து சென்றுள்ளனர். இணைந்து செல்வதால் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதிலும் புத்த மதத்தைச் சேர்ந்த வணிகர்களே அதிகம் இருந்துள்ளனர். அப்படி ஒரு குழுவாகச் செல்வதை சார்த்தா என அழைத்துள்ளனர்.  கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இக்கதை நடப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சார்த்தா என்ற சொல், தமிழில் நமது இலக்கியத்தில் (சிலப்பதிகாரம்) உள்ளது என்கிறார் இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த ஜெயா வெங்கட்ராமன்.

தனது முன்னுரையில் "வணிகர் கூட்டத்தின் தலைவன் சாத்தன், சாத்துவான் என அழைக்கப்பட்டான். வணிகச் சாத்துக்களின் காவல் தெய்வமாகிய அய்யனாருக்கும் சாத்தன் என்ற பெயருண்டு. ஒருவரை ஒருவர் சார்ந்து கூட்டமாகச் செல்வதால் 'சார்தல்' எனும் சொல்லிலிருந்து சாத்து எனும் சொல் வழக்கூன்றியது." என்கிறார் ஜெயா வெங்கட்ராமன்.



நாகபட்டன் என்கிற பிராமண இளைஞன் தனது தாய் மற்றும் மனைவி சாலினியுடன் வசித்து வருகிறான். அரசன் அமருக மகாராஜாவுக்கு இவன் நண்பன். அரசனான அவன் தனது நண்பன் நாகபட்டனை வணிகக் குழுவோடு சேர்ந்து பயணித்து அவர்கள் எவ்வாறு வணிகம் செய்கிறார்கள், சுங்க வரிகள் மற்றும் மற்ற நாடுகளின் வணிக நிலைமை என அறிந்து வருமாறு சொல்கிறான். வணிகம் பற்றி அறிந்து கொள்கிறேன் என்று சார்த்தாவிடம் சொன்னால், அவர்கள் அவனைச் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அந்தக் குழுவுடன் கல்வி கற்க செல்பவர்கள், கலை ஆர்வம் கொண்டவர்கள், வேறு ஊர்களுக்கு குடி பெயர்பவர்கள் என பயணிகளாகச் செல்ல முடியும்.  'காசி சென்று வைதீக மேல் படிப்பு படிக்கப் போகிறார், எனவே உங்கள் குழுவுடன் இவரை அழைத்துச் செல்லுங்கள்' என அரசனே ஒரு குழுவிடம் சொல்லிவிடுவதால், மறுக்காமல் அவனை அழைத்துச் செல்கிறார்கள்.  

போகும் வழியில் அவன் எவ்வளவு முயன்றாலும் அவர்களிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதில்லை. குழுவில் பொன்னும் பொருட்களும் பாதுகாப்பாக செல்கின்றன. திருடர் பயம் காரணமாக அதற்கு காவலர்களும் உண்டு. இந்த சார்த்தா வேறு மார்க்கமாக பயணிப்பதால், காசி செல்லும் இன்னொரு சார்த்தாவுடன் பயணிக்குமாறு கூறி மதுராவில் இருக்கும் ஒரு புத்த விகாரையில் நாகபட்டனை இருக்கச் சொல்லிவிட்டு அவர்கள் கிளம்புகின்றனர்.  வணிகம் பற்றிய சில தகவல்களை அந்த புத்த விகாரையில் இவன் பெறுகிறான். 

புத்த விகாரையில் தங்கி இருக்கும்பொழுது அந்த ஊரில் இருக்கும் ஒரு நாடகக் குழுவுடன் நாகபட்டனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதன் மூலம் அவன் நாடக நடிகனாக நடிக்கிறான். ஒரு நாடகம் மட்டுமே என்று இருந்த அவனிடம், நன்றாக நடிப்பதால் சுற்றி இருக்கும் ஊர்களிலும் அதே நாடகம் போடப்பட்டு நாகபட்டன் புகழ் அடைகிறான். தனது நாட்டில் இருந்து வந்து பல வருடங்கள் ஆனபோதிலும், அவன் திரும்பி போகாமல் நாடகம் நடிப்பிலேயே குறியாக இருக்கிறான். நாடகத்தில் கிருஷ்ணர் வேடம் என்பதால் அவனை எல்லோரும் கிருஷ்ணானந்தர் என்றே அழைக்கிறார்கள். அவனுக்கு ஜோடியாக நடிக்கும் சந்திரிகையின் மேல் காதல் வந்தாலும் அவள் அதனை கண்டுகொள்வதில்லை. அவனின் நட்பு, பேச்சு என அவள் விரும்பினாலும் அவளை அடைய அவள் விடுவதில்லை. ஒரு கட்டத்தில் அவனை விட்டு அவள் விலகிச் சென்றுவிடுகிறாள். 



சந்திரிகை விலகிச் சென்றாலும் நாகபட்டனுக்கு அவள் மேல் இருக்கும் காதல் மறக்க முடிவதில்லை. அவன் ஊரைச் சேர்ந்த ஒருவரை சந்திக்க நேர்கிறது. மேல் படிப்புக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு பல வருடங்கள் திரும்பாமலே இருந்ததால் அவனின் இளவயது மனைவி சாலினி, அரசனுடன் தொடர்பில் இருப்பதாகவும், ஒரு குழந்தையும் பிறந்திருப்பதாகச் சொல்கிறான். தனது மருமகளின் நடவடிக்கைகள் கண்டு கவலைப்பட்டு  அவனது அம்மா இறந்துவிட்டதாகவும் கேள்விப்படுகிறான்.  பின்னர் யோகம், தாந்திரீகம் என ஆன்மிகத்தில் நாட்டம் கொள்கிறான். தனது மனைவியையும், அரசனையும் தனது யோக சக்திகள், தாந்திரீக மந்திரங்கள் மூலம் வெல்ல வேண்டும் என நினைக்கிறான். 

நாவலில் சந்திரிகைக்கு ஒரு பழைய கதை சொல்லப்படுகிறது. தனக்கு பாட்டு குருவாக இருந்த இளைஞன் ஒருவனையே அவள் மணந்து இருக்கிறாள். அவளின் கணவனுக்கு கண் பார்வை இல்லை. மிகவும் அழகியான இவளை அவன் புகழ முடிவதில்லை. பிரச்சினை அவள் கணவனின் மருமகன் வடிவில் வருகிறது. பாட்டு கற்றுக்கொள்ள வந்த அவன் சந்திரிகையின் அழகை வர்ணிக்கிறான். இருவரும் எல்லை மீறிப் போக, அதனை அறிந்த கணவன் அவளிடம் விசாரிக்கிறான். பின்னர் மருமகன் சொல்லாமல் கொள்ளாமல் அந்த ஊரை விட்டுச் செல்ல, கண் பார்வை இல்லாத அவளின் கணவன் தற்கொலை செய்து கொள்கிறான். இதனால் மனமுடைந்த சந்திரிகை ஒரு யோக குருவின் மூலம் தியானம் கற்றுக்கொண்டு இல்லற வாழ்க்கையில் இருந்து தள்ளியே இருக்கிறாள். அதனால்தான் அவள் நாகபட்டனை விட்டுச் சென்று விட்டாள்.  

நாகபட்டன் தாந்திரீக நாட்டம் கொண்டு அதில் சில முயற்சிகளைச் செய்கிறான். அவனுக்கு சொல்லிக் கொடுத்த குரு, எல்லாம் உனக்கு சொல்லிக் கொடுத்தாகி விட்டது, நீ தனியே செல் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். எனவே அவன் மீண்டும் சந்திரிகையை சந்திக்கச் செல்கிறான். அவளைக் கருவியாகக் கொண்டு தன் சாதனையை நிகழ்த்த வேண்டும் எனச் சொல்ல, முதலில் தயங்கும் அவள் பின்னர் சம்மதிக்கிறாள்.  நாட்கள் செல்லச் செல்ல அவள் காட்டும் அன்பில் திளைக்கும் அவன் தவறான வழியில் சென்றதாகக் கருதி, சந்திரிகை சொல்வதைக் கேட்கிறேன் என்கிறான். அவளோ இல்லறம் மட்டும் வேண்டாம் என உறுதியாக இருக்கிறாள். 

அதன் பின்னர் புத்த குருவின் மூலம் நாளந்தாவிற்கு படிக்கச் செல்கிறான். புத்த மதக் கருத்துக்களை அறிந்து கொள்ளவே அவன் அங்கே செல்கிறான். அங்கே தனது குரு மண்டன மிஸ்ரருக்கு குருவாக இருந்த குமரிலபட்டரைச் சந்திக்கிறான். கொஞ்ச நாட்களில், வேத குருவாக இருந்துகொண்டு புத்த மதத்தின் கருத்துக்களை அறிந்துகொள்ள புத்த சீடன் போர்வையில் அங்கே வந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வெளியே அனுப்பப்படுகிறார் குமரிலபட்டர். குமரிலபட்டரோ தனது நோக்கம் எதுவாக இருந்தாலும், அதனைத் தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த புத்த குருவிடம் உண்மையைச் சொல்லியிருக்க வேண்டும், நான் பொய் சொன்னதால் பிராயச்சித்தமாக தான் வேள்வி மூட்டி இறக்க வேண்டும் எனச் சொல்லிவிட்டு அவ்வாறே இறந்தும் போகிறார். நாளந்தா பள்ளியில் இருந்து கிளம்பும் நாகபட்டன் அரச முறைப் பயணமாக தனது குரு மண்டன மிஸ்ரரைச் சந்திக்க தனது சொந்த ஊருக்குச் செல்கிறான். 

அங்கே மண்டன மிஸ்ரரைச் சந்திக்க சங்கரர் வருகிறார்.  கல்வியில் சிறந்தவரான மண்டனருடன் விவாதம் செய்து வெற்றி பெற வேண்டும் என்பது யதியின் விருப்பம். அதற்கு நடுவராக மண்டனரின் மனைவியும், குமரிலபட்டரின் சகோதரியுமான பாரத தேவி இருக்கிறார். இருவருக்கும் விவாதம் நடக்கிறது. இறுதியில் மண்டனர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சங்கரருடன் சேர்ந்து துறவறம் மேற்கொள்வதாகச் சொல்கிறார். ஆனால் பாரத தேவி, காமம் பற்றி ஒரு கேள்வி கேட்க அது பற்றி அறியாத சங்கரர் சிறிது நாட்கள் சென்று இதற்கு பதில் அளிக்கிறேன் எனச் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார். அதன் பின்னர் கூடு விட்டு கூடு பாய்தல் மூலமாக அதற்குரிய பதிலை அறிந்து வந்து அதனை கூறிவிட்டு மண்டன மிஸ்ரரை அழைத்துச் செல்கிறார். பாரத தேவி, நாகபட்டனிடம் 'இல்லற வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத ஞானம் வெளியே கிடைக்குமா?' எனக் கேட்கிறார். இவை எல்லாமே நாகபட்டனின் பார்வையில் சொல்லப்படுகிறது. 

பின்னர் அங்கிருந்து கிளம்பும் நாகபட்டன், சந்திரிகையுடன் சேர்ந்து பகைவர்களான மிலேச்சர்கள் படையெடுப்பில் நாடு படும் துயரம் கண்டு நாடகம் மூலமாக எச்சரிக்கை செய்ய நினைக்கிறார்கள். அவ்வாறே நாடகங்களை நடிக்கிறார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பிணையாக கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகின்றனர். பல பிரச்சினைகளைச் சந்தித்தாலும் இறுதியில் அவர்கள் இல்லற வாழ்க்கை நடத்துவதென முடிவு செய்கிறார்கள். முன்பு பாரத தேவி நாகபட்டனிடம் சொன்னது அவனுக்கு நினைவுக்கு வருகிறது. 

நாகபட்டனின் பயணம் பற்றி சார்த்தா நாவலில் சொல்லப்பட்டாலும் அவனுடைய உள் நோக்கிய பயணத்தைச் சொல்வதாகவும் இருக்கிறது. வேதம், சாக்தம், புத்தம், யோகம், தியானம் எனப் பல வழிகளில் அவன் முன்னேற முயன்று கொண்டே இருக்கிறான். அவனுடைய உள் நோக்கிய பயணத்தில் இடையூறு ஏற்படும் போதெல்லாம் சிறிது இளைப்பாறவோ, ஆறுதல் பெறவோ, அவனை தக்க வழியில் திரும்பச் செய்யும் ஒரு தோழியாக சந்திரிகை இருக்கிறாள். 

சார்த்தா - எஸ். எல். பைரப்பா
தமிழில்: ஜெயா வெங்கட்ராமன்
விஜயபாரதம் பதிப்பகம் 
 

No comments:

Post a Comment