Monday, December 24, 2012

விஷ்ணுபுரம் 2012 விருது விழாவில்..

விஷ்ணுபுரம் விருது 2010 ல் எழுத்தாளர் ஆ.மாதவன் அவர்களுக்கும், 2011 ல் எழுத்தாளர் பூமணி அவர்களுக்கும் வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான விருது கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு, கடந்த சனிக்கிழமை(22/12/2012)  அன்று கோவையில் வழங்கப்பட்டது. 
விழாவில் இசை ஞானி இளையராஜா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். அவரின் திரை இசையில் தோன்றிய பாடலான, 'மாசறு பொன்னே வருக..' பாடலுடன் விழா துவங்கியது. எங்கு இந்தப் பாட்டைக் கேட்டாலும், கொஞ்ச நாட்களுக்கு இந்தப் பாட்டை வாய் பாடிக் கொண்டே இருக்கும். அழகான இந்தப் பாட்டை, அழகாகப் பாடிய இரண்டு சிறுமிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

திரு. அரங்கசாமி அவர்கள் வரவேற்புரை வழங்க, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் விழாவிற்குத் தலைமை தாங்கினார். இசை ஞானியை தான் முதன் முதலாக சந்தித்ததைப் பற்றியும், அதற்குப் பின்னர் அவரைப் பற்றியும் குறிப்பிட்டார் நாஞ்சில் நாடன். அவரின் உரையில், தேவதேவன் அவர்களின் இரண்டு கவிதைகளைப் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று, கீழ்வரும் கவிதை;

ஒரு கர்ப்பிணிப் பெண்ணை
அவளின் தாயிடம்
ஒப்படைப்பது போல
உன்னை
இந்த மர நிழலில்
விட்டுவிட்டுப் போகிறேன்

(இந்தக் கவிதை எனது நினைவில் இருந்து எழுதுவது.. எழுத்துப் பிழையோ அல்லது சொற்களோ விடுபட்டிருந்தால்.. மன்னிக்கவும்).

இந்தக் கவிதையை நாஞ்சில் அவர்கள் சொன்னதும், எவ்வளவு பெரிய கவிதை என்றுதான் எனக்குத் தோன்றியது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணை அவளின் தாய் எப்படிப் பார்ப்பாள் என்று எனக்குத் தெரியும். இரண்டு அக்காக்களுடன் பிறந்து வளர்ந்ததால் இருக்கலாம். அது போல இந்த மரம் உன்னைப் பார்த்துக்கொள்ளும் என்பது.. எவ்வளவு பெரிய உண்மை. உண்மையில் சொல்லப் போனால், அந்த மன எழுச்சியை, அந்த மரத்தின் பிரமாண்டத்தை, இயற்கையின் முன்னால் நாம் எல்லோரும் குழந்தைகள் என்பதை.. என்னால் வார்த்தைகளில் எழுத முடியவில்லை. இனி எந்த ஒரு மரத்தைக் கண்டாலும், தேவதேவனின் இந்தக் கவிதை நிச்சயம் மனதில் வந்து போகும்.

 பின்னர் பேசிய விமர்சகர் திரு.ராஜகோபாலன், 'சமூக அவலங்களுக்கு எதிராக.. தேவதவன் கவிதைகள் எழுதுவதில்லை. அவரின் கவிதைகள் அனைத்தும், அழகியல் சார்ந்தவை என்று ஒதுக்குபவர்கள் உண்டு. அழகியலை எழுதிய கவிஞர்களும் உண்டு. ஆனால், அவர்களுக்கும் தேவதேவன் அவர்களுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. மற்றவர்கள், பிரமாண்டமான இயற்கையின் முன்னால் நாம் ஒரு தூசு போன்றவர்கள் என்று கவிதை எழுதினால், தேவதேவனின் கவிதைகளில் அந்த தூசும் இந்தப் பிரமாண்டத்துக்கு இணையானது என்பதைக் காட்டுவார்..' என்று குறிப்பிட்டார்.


தொடர்ந்து திரு. மோகனரங்கன் அவர்கள் தேவதேவனின் கவிதைகள் பற்றி உரையாற்றினார். தொடர்ந்து மலையாளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் அவர்கள் தேவதேவனின் கவிதைகள் பற்றி மலையாளத்தில் உரையாட, கே.பி. வினோத் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார்.
அதற்குப் பின்னர் பேசிய இயக்குனர் சுகா அவர்கள், தனக்கும் கவிதைகளுக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பேசியவர், புதுக் கவிதைகள் என்றாலே என்னவென்றே தெரியாத தனக்கு, பிரமிளின்,
 
சிறகிலிருந்து பிரிந்த
ஒற்றை இறகு
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

என்ற கவிதையின் மூலம் புதியதொரு படைப்பை நோக்கி நகர்ந்தேன்.. என்று குறிப்பிட்டவர், 'ஜெயமோகன் தேவதேவன் பற்றிச் சொல்லும்போது, அவர் எழுதிய கவிதைகளைப் பற்றிச் சொன்னதை விட, தேவதேவன் என்ற மனிதரைப் பற்றி சொல்லியது அதிகம்' என்றார். மூத்த படைப்பாளிகளை அறிமுகப்படுத்தும் இது போன்ற விழாவை நடத்தும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து தனது பேச்சை முடித்துக்கொண்டார் இயக்குனர் சுகா.
இசை ஞானி அவர்கள் பேசும்பொழுது 'திரு. ராஜகோபாலன் அவர்கள் பேசும்பொழுது கவிதைதான் முதலில் தோன்றியது எனக் கூறினார், ஆனால் இசைதான் முதலில் தோன்றியது, பின்னரும் இசைதான் தோன்றியது... அதற்குப் பின்னரும் இசைதான். பேசுவது இசை இல்லையா... இசை இல்லையா (இந்த இடங்களில் இசை போலவே பாடியவாறு சொல்ல.. ஒரே கை தட்டல்தான்).. எனவே இசைதான் எல்லாவற்றுக்கும் முதல்' என்று  கூறியவர், தேவதேவனின் கவிதைகள் உண்மையானது, அவரைப் போலவே என்று குறிப்பிட்டார்.

ஜெயமோகன் அவர்கள் பேசும்பொழுது, பால் சக்கரியாவின் கதை ஒன்றை மேற்கோள் காட்டிப் பேசியவர், தேதேவனின் கவிதைகளைப் பற்றி கூறினார். பின்னர் கவிஞர் தேவதேவன் அவர்கள் ஏற்புரை வழங்கினார். 'இந்த மேடையில், நான் அமர்ந்திருந்த நாற்காலி இப்பொழுது காலியாக இருக்கிறது, அது இன்மையில் இருக்கிறது.. இந்த அரங்கத்தில், உங்களுக்கு முன்னால் உட்கார்ந்திருப்பவர்களையும், பின்னால் உட்கார்ந்திருப்பவர்களையும் உங்களால் பார்க்க முடியாது'.. என்று கவிதையாகவே பேசியவர், தனது சிறு வயது பற்றியும்   'தன்னால் சில வரிகளைக் கூட நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை.' என்றும் குறிப்பிட்டார்.


விழாவைத் தொகுத்து வழங்கிய திரு.செல்வேந்திரன் அவர்கள் நன்றி கூற, விழா மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

விழாவில் ஜெயமோகன் அவர்கள் எழுதிய 'ஒளியாலானது' புத்தகம் வெளியிடப்பட்டது. விஷ்ணுபுரம் விருதை இசை ஞானி இளையராஜா அவர்கள், கவிஞர் தேவதேவன் அவர்களுக்கு வழங்கினார்.

*******************************************

ஜெயமோகன் அவர்கள் தனது தளத்தில், தேவதேவனின் கவிதைகள் பற்றி எழுதும்பொழுது, அவரின் பல கவிதைகள் பற்றிச் சொல்லி இருந்தாலும் எனக்கு பிடித்த இரண்டு கவிதைகள்; 


’மரம் உனக்கு பறவைகளை அறிமுகப்படுத்தும்
அப்பறவைகள் வானத்தையும் தீவுகளையும்
வானமோ அனைத்தையும் அறிமுகப்படுத்திவிடும்’’அசையும்போது தோணி
அசையாதபோதே தீவு
தோணிக்கும் தீவுக்கும் நடுவே
மின்னற்பொழுதே தூரம்... '
*******************************************


தேவதேவன் கவிதைகள் வலைத் தளம்:
தேவதேவன் கவிதைகள் 


விஷ்ணுபுரம் விருது 2012 – நிகழ்வுகள்
தேவதேவனின் கவிமொழி
தேவதேவனின் படிமங்கள்
தேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…

படங்கள்:  ஜெயமோகன்.இன் தளத்திலிருந்து - நன்றி6 comments:

ezhil said...

அருமையான அந்த நிகழ்விற்கு நானும் வந்திருந்தேன் உங்களின் இந்தப் பதிவு ஒரு அருமையான நினைவூட்டலாக அமைந்தது.

லாரியைப் பார்த்த குட்டிப்பெண்
எவ்வளவு பெரிய மாத்திரை எனவும்
சிறிய பூச்சியை பார்த்து
குட்டி ரயில் எனவும் கூறுவது
சிறியவற்றைப் பெரிதாகவும்
பெரியவற்றைச் சிறிதாகவும் ஆக்க
குழந்தையால் மட்டுமே முடியும் என ஜெயமோகன் அவர்கள் பகிர்வு சுவையாக இருந்தது
சுகா அவர்களின் பகிர்வும் அருமை.கல்பற்றா நாராயணன் அவர்கள் மொழியே நமக்குப் புரிந்தது... அதன் கருத்துக்களால்...

இளங்கோ said...

@ezhil

நீங்கள் கூறியதும் தான், ஜெயமோகன் அவர்களின் இந்த வரிகள் நினைவுக்கு வந்தன.
நன்றிங்க

வ.மு.முரளி. said...

நன்றி நண்பரே!

இளங்கோ said...

@வ.மு.முரளி
நன்றிங்க

Vijayashankar said...

:-) அருமையாக தொகுத்து எழுதியிருக்கீங்க

இளங்கோ said...

@Vijayashankar
நன்றி நண்பரே...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...