Friday, July 1, 2011

ராமன், லட்சுமணன் மற்றும் அனுமார்

நண்பர்கள் நாங்கள் நால்வர் ஒருநாள் வெளியே சுற்றி வரலாம் என்று கிளம்பினோம். முந்தின இரவில் மழை பெய்து குளிராக இருந்தது சாலை. போகும் வழியில், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த சின்ன டிபன் கடை முன் வண்டியை நிறுத்தி, சாப்பிட உள்ளே சென்றோம்.

கடையின் முன் தோசை மாஸ்டர், உள்ளே ஒருவர், கல்லா அருகில் லுங்கி கட்டி முன்டாப் பனியன் அணிந்த ஒருவர் என சிறு கடை. சாப்பிட்டு முடித்து நாங்கள் வெளியே வரவும், ராம லட்சுமண அனுமார் வேஷம் போட்ட மூன்று பேர் கல்லாக் காரனிடம் ஒரு நோட்டை நீட்டிக் கொண்டிருந்தார்கள்.

ராமருக்கும், லட்சுமணனுக்கும் தலையில் கிரீடம். அனுமாருக்கு பிளாஸ்டிக் வாயும், வாலும். அண்ணன் தம்பிகள் இருவருக்கும் நீலக் கலர் முகம், கை என அப்பி இருந்தனர். அனுமாருக்கு கலர் இல்லை, சரி அவர் மனித இனம்தான் என நினைத்து அப்படியே விட்டிருக்கலாம். மூவருக்கும் காலில் சலங்கைகள். மடி மடியாக வைத்து தைக்கப்பட்ட பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் துணிகள். துவைத்து நெடு நாட்கள் ஆகியிருக்க வேண்டும். ராமர் கையில் மட்டும் ஜிகினா துணி சுற்றிய வில்.

"மொதலாளி இல்ல.. கெளம்புங்க.." என்றார் கல்லாக்காரர்.

"இல்லீங்க.. ஒவ்வொரு தடவ வரும்போதும் ஏதாவது கொடுப்பாங்க"

"கடைக்கு வர்றவங்களுக்கு சில்லற தர்ரதுக்கே சில்லற இல்ல.. இதுல நீங்க வேற"

"இருக்கறத குடுங்க" ராமர் விடவில்லை.

"மொதாலாளி தான் இல்லன்னு சொல்லுரமுள்ள.. இன்னொரு நா வாங்க" - தோசை மாஸ்டரும் சேர்ந்து கொண்டார்.

"அஞ்சு, பத்தாவது குடுங்க" லட்சுமணன் தன் பங்குக்கு பேசினார்.

"காலம் கார்த்தால வந்து வாதிக்கரிங்களே.." முனகிக்கொண்டே கல்லாப் பெட்டியில் ரூபாய் நோட்டுக்களைத் தேடிக் கொண்டிருந்தார் கல்லாக்காரர்.

ஒரு பத்து ரூபாய் தாளை எடுத்து, அவர்கள் நீட்டிய புத்தகத்தில் கடைப் பெயரையும், ஊரையும் எழுதி பத்து ரூபாய் என்று எழுதிக் கொடுத்தார் கல்லாக்காரர்.

வெளியே வந்த ராமரைப் பார்த்து, இதுவரைக்கும் வாயே திறக்காத அனுமார் "இங்கயே சாப்பிட்டு போயிரலாண்டா.. பசிக்குதுடா" என்றார். "காலாலே இருந்து இன்னும் முப்பது ரூபா கூட தேரல.. அப்புறம் பார்க்கலாம் வா" என்று முன்னாடி போய்க்கொண்டிருந்தார் லட்சுமணன்.

அவ்வளவு பெரிய மலையைத் தூக்கிய அனுமார், கடல் தாண்டி சென்ற அனுமார், அவர்கள் இருவரின் பின்னால் பசியுடன் போய்க் கொண்டிருந்தார்.

11 comments:

  1. யதார்த்தத்தை பகிர்ந்து உள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  2. கடைசியில் அந்த அ’சாமி’கள் மீது பரிதாபம் வருவதை தவிர்க்க முடியவில்லை....

    ReplyDelete
  3. Superb!
    ஒரு இடத்துல காரர்.. இன்னொரு இடத்துல காரன்..... கொஞ்சம் இடிக்கிது... பார்த்துக்கோங்க... ;-))))

    ReplyDelete
  4. @பத்மநாபன்
    ஆமாம் அண்ணா, இந்த ஒரு ஜான் வயிற்றுக்கு என்ன எல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  5. @RVS
    எல்லா இடத்திலையும் 'காரர்' ஆ மாத்திட்டேன். எப்படித்தான் இப்படி உன்னிப்பா படிக்கரிங்களோ. :)

    நன்றிகள் அண்ணா

    ReplyDelete
  6. @Rathnavel
    நன்றிங்க.

    ReplyDelete
  7. நல்லா இருக்கு இளங்கோ.... :-)

    ReplyDelete
  8. @முரளிகுமார் பத்மநாபன்
    நன்றிங்க முரளி

    ReplyDelete