Friday, October 26, 2012

கதவின்றி அமையாது


மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும்.

சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன்.

கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு மேல் படிந்திருந்த கரையானை இடித்து விட்டு, அக்கதவைப் பார்த்து அச் சிறுவர்கள் அடையும் சந்தோசத்தை கி.ரா. அவர்கள் எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

உண்மையில் பார்த்தால் கதவுகள் இருக்கும் தைரியத்தில்தான் இரவில் பயமில்லாமல் நாம் உறங்குகின்றோம். தாழிட்டு விட்டு வெளியே சென்றால் நிம்மதியாக இருக்கின்றோம். கதவுகள் நம்முடன் வாழ்கின்றன. வீட்டுக்கும், வெளிக்கும் ஒரு பாலமாக கதவுகள் இருக்கின்றன.

இது ஒரு மீள்பதிவு.

Wednesday, September 26, 2012

தோட்டத்தில்: மெழுகு பீர்க்கங்காய் (Sponge Gourd)


ஆறு மாதத்துக்கு முன்னால், ஊத்துக்குளி அருகே ஒரு சிறு கிராமத்தின் வழியாகச் சென்ற போது " இங்க பாரு.. மெழுகு பீர்க்கங்காய்".. என்று அப்பாவும், அக்காவும் கத்தினார்கள். ஒரு வீட்டின் வேலி முழுவதும் கொடி படர்ந்து காய்கள் நிறையக் காய்த்திருந்தன. வண்டியை நிறுத்தி, அவர்களிடம் கேட்டு காய்களை வாங்கிக் கொண்டோம். அவர்களிடம் விதை இருக்கிறதா எனக் கேட்க, அவர்களும் கொஞ்சம் விதையை சந்தோசமாக கொடுத்தார்கள். 



"இப்பதான் நான் மொத மொதல்ல இந்த பீர்க்கையைப் பார்க்கிறேன்" என்று சொன்னதும், அக்கா "நீ சின்னப் பையனா இருந்தப்போ.. நம்ம வீட்டு வேப்ப மரத்துல நெறையப் பிடிச்சுதே.. ஞாபகம் இல்லையா.." என்று கேட்க... எனக்கு சுத்தமாக நினைவுக்கு வரவில்லை.

வீட்டுக்கு வந்ததும், மூன்று நான்கு விதைகளை மண்ணில் போட.. முளைத்து வந்ததில் ஒரே ஒரு செடி மட்டும் நன்றாக வளர்ந்தது. ஒரு கயிற்றில் கட்டி மொட்டை மாடிக்கு இழுத்து விட்டு,  ஒரு சிறிய பந்தல் போல செய்து அதன் மேல் படர விட நன்றாக காய்கள் பிடிக்க ஆரம்பித்தது. பக்கத்தில் இருந்த மருதாணிச் செடியின் மேல் நன்றாக படர்ந்து கீழேயும் காய்கள் பிடித்தது. 



இப்பொழுதெல்லாம் வாரத்துக்கு இரண்டு மூன்று தடவை பீர்க்கங்காய் சட்னி, பொரியல், கூட்டு தான் வீட்டில். மருந்தடிக்காத, நம் மண்ணில் விளைந்த காய் என்பதால் சுவை அதிகம். அது போலவே கொஞ்சம் முற்றினால் கசப்படிக்கிறது.

 


காயை முற்ற விட்டு, அதன் பின்னர், அதனை உடைத்தால்.. உள்ளே இருக்கும் நார் ஒரு பொம்மை போல அவ்வளவு அழகாக, மென்மையாக இருக்கிறது. சின்ன பையனாக இருந்த போது, இந்த நாரில் தேய்த்து குளித்தது நினைவுக்கு வந்தது. ஆங்கிலத்தில் Sponge Gourd என்று சொல்கிறார்கள்.