Friday, April 22, 2011

பெண்ணும் எழுத்தும்

'தீராத விளையாட்டுப் பிள்ளை' ஆர்.வி.எஸ் அவர்கள் இந்தத் தொடருக்கு என்னை அழைத்திருந்தார். முதல் முறை என்னை அழைத்து எழுதச் சொல்லியவர், இரண்டாவது முறையாகவும் என்னை அழைத்திருக்கிறார். அழைப்புக்கு நன்றி சொல்லி இதோ எழுதத் தொடங்குகிறேன்.

ஆதி காலத்தில் மனிதக் குழுக்களுக்கு தலைவியாக பெண்தான் இருந்திருக்கிறாள். 'வால்காவிலிருந்து கங்கை வரை' புத்தகத்தில் இதைப் பற்றி விரிவாகக் காணலாம். தலைவியின் வழிப்படியே அந்த குழுக்கள், அவளின் பினனால் நடந்து போயிருக்கின்றன. ஆனால், பின்னால் இந்த சமூகம் அப்படியே மாறிப் போயிருக்கிறது. மாறிப் போனதன் விளைவாகவே 'தையல் சொல் கேளேல்' என்றும், 'பெண் புத்தி பின் புத்தி' என்றும் எழுதி வைத்திருக்கிறார்கள். ஈன்று புறம் தருதலோடு தன் கடன் முடிந்ததாகவும் பதிவு செய்திருக்கிறார்கள்.

போன வாரம் கூட கண்ணகி பிறந்த நாள் என்று கொண்டாடினார்கள். ஏன் மாதவி முன்னிறுத்தப் படுவதில்லை இங்கே? . ஏனென்றால் பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், அதாவது கண்ணகி போல் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைவு படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாதவியை கெட்டவள் போல் என்னும் சமூகம், ஒரு போதும் கோவலனை கெட்டுப் போனவனாக எண்ணுவதில்லை. அது எப்படி முடியும், கண்ணகியை பண்பாட்டுச் சின்னமாக என்னும் தலைவர்கள் வீட்டில் எத்தனை பெண்டாட்டிகள். பெண்களை நாம் கண்ணகியாகவோ, மாதவியாகவோ எண்ணாமல், ஒரு பெண் ஆக எப்போது பார்க்கப் போகிறோம்?.

எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் வலைத் தளத்தில் 'சொந்தக்குரல்' என்கிற கதை வெளியாகி இருக்கிறது. இந்தக் கதையில், அம்மா தன் மகனிடம் கதை சொல்வதாக இருக்கும். தனது கணவன் செய்த கொடுமைகளையும் தாண்டி ஒரு கதை எழுத அவள் கஷ்டப் பட்டதையும், இன்னும் ஒரு கதை எழுதப் படாமல் இருப்பதாகவும், அதை சொல்லப் போவதாகும் சொல்லிக் கொண்டே உறங்கிப் போகிறாள். இந்த அம்மாவைப் போலவே, ஊரில் உள்ள அத்தனை பெண்களிடமும் ஒரு நீள் கதை உறங்கிக் கொண்டிருக்கும் அல்லவா? .

பெண் எழுத்தாளர்கள் வரிசையில் அனுராதா ரமணன், சிவசங்கரி மற்றும் வாஸந்தி ஆகியோரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். அதிலும் மெல்லிய நகைச்சுவையோடு எழுதும் அனுராதா ரமணன் அவர்களின் எழுத்து ரொம்பப் பிடிக்கும். இப்பொழுது வாஸந்தி அவர்கள் எழுதி வரும் 'பெற்றதும் இழந்ததும்' தொடர் குமுதம் தீராநதியில் வெளிவருகிறது. ஒரு திறந்த கோணத்தில் எழுதப் படும் தொடராகவே இது எனக்கு பிடித்திருக்கிறது. ஆண்களில் எல்லோருமே பெண்களைப் பற்றி எழுதாமல் கடந்து போக முடிவதில்லை. நான் படித்த அனைத்து எழுத்தாளர்களுமே பெண்களை உயர்வாகத்தான் பேசியிருக்கிறார்கள்.

எழுத்து என்று வரும்போதும் நினைத்ததை எல்லாம் எழுத முடிவதில்லை. ஒரு ஆண் காமம் பற்றியோ அல்லது பாலியல் பற்றியோ விவரமாக எழுத முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி எழுதும் அனைத்துப் பெண் எழுத்தாளர்களுக்கும் எனது வணக்கங்கள்.

இறுதியாக, மலையாளக் கவிஞர் கமலாதாஸ் அவர்களின் கவிதை ஒன்றை, எழுத்தாளர் வாஸந்தி அவர்கள் இந்த மாத குமுதம் தீராநதியில் தனது 'பெற்றதும் இழந்ததும்' பகுதியில் எழுதியிருக்கிறார்.

தூக்கணாங்குருவியை உன் உள்ளங்கைக்குள்
பொத்தி வைக்கத் திட்டமிட்டாய்
உனக்குத் தெரியும்,
உனது அன்புப்பிடியில் இறுக்கிக் கொண்டால்
அவளது இயல்பு மாறுமென்று
பருவங்களும் சொந்த வீடும் மட்டும் மறக்கவில்லை,
போயின மறதியில்..
பறக்கும் ஆர்வமும் முடிவற்ற வானத்தின் எல்லைகளும்..




இந்தப் பதிவை தொடர விருப்பமுள்ள அனைத்து நண்பர்களும் எழுதவும்.


Wednesday, April 20, 2011

எனது டைரியிலிருந்து..

ஒரு காலத்தில் எனக்குப் பிடித்த சில கவிதைகளை டைரியில் எழுதி வைத்திருந்தேன். அதிலும் ஆனந்த விகடனில் வரும் கவிதைகள் தான் அதிகம் இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கே பகிர்கின்றேன்;


இருந்தவை.. தொலைந்தவை..
- கல்யாண்ஜி (ஆனந்த விகடன்)

கார்த்திகை ராத்திரி
ஏற்றின கடைசி விளக்கை
வைத்துத் திரும்புமுன்
அணைந்து விடுகிறது
முதல் விளக்குகளுள் ஒன்று.
எரிகிறபோது பார்க்காமல்
எப்போதுமே
அணைந்த பிறகுதான்
அதைச் சற்று
அதிகம் பார்க்கிறோம்.
எரிந்த பொழுதில்
இருந்த வெளிச்சத்தைவிட
அணைந்த பொழுதில்
தொலைந்த வெளிச்சம்
பரவுகிறது
மனதில் பிரகாசமாக.



********************************

வலி
- ஜி.ஆர்.விஜய் (ஆனந்த விகடன்)

விழுங்கிய மீன்
தொண்டையில் குத்துகையில்
உணர்கிறேன்
தூண்டிலின் ரணம்.

********************************

வானம் மட்டும் இருக்கிறது
- பா.சத்தியமோகன்
(ஆ.வி. கற்றதும் பெற்றதும் பகுதியில் - சுஜாதா குறிப்பிட்டது)

ஆமாம் ஆமாம்
நீ பேசும் ஒவ்வொன்றும்
வரிக்கு வரி நிஜம்
முற்றுப்புள்ளி உள்ளிட்ட
அனைத்தும் ஏற்கத் தயார்
அனைத்துக்கும் ஆமாம்.
சங்கிலியால் கட்டப்பட்டது
யானையென்றாலே
தப்புதல் கடினமாச்சே
சங்கிலியால் கட்டுண்ட டம்ளர்
தப்புமோ கூறு?















மேலே உள்ள யானைப் படம் மட்டும் இணையத்திலிருந்து.. நன்றி.