Tuesday, February 5, 2013

நாளை மற்றுமொரு நாளே - ஜி.நாகராஜன்

இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை

நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய
சின்னத்தனங்கள்,

நிர்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய
துணிச்சல்,

விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய
நோய்கள்,

பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய
அவமானம்,

இவையே அவன் வாழ்க்கை.

அவனது அடுத்த நாளைப்பற்றி நாம்
தெரிந்துகொள்ள வேண்டாம். ஏனெனில்
அவனுக்கும் - நம்மில் பலருக்குப் போலவே -

நாளை மற்றுமொரு நாளே !



புத்தகத்தின் முதல் பக்கத்தில் இருக்கும் மேற்கண்ட வரிகளே, நாவலின் போக்கைச் சொல்கிறது.



ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை தான் நாவலில் வருகிறது. காலையில் எழுந்து, காலைக் கடன்களை முடித்து, கிடைக்கும் நேரத்தில் உணவருந்தி, அலுவலகம் ஓடி, திரும்ப கூட்டுக்கு ஓடி வரும் பறவை போல மாலை திரும்பும் மனிதர்கள் பற்றிய நாவல் இல்லை இது. சாதாரண மனிதர்கள்தான் நாவலில் வருகிறார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தால் சாக்கடை, காலி பாட்டில்களை சேகரித்து காசு தேற்றும் நிலை, பத்து ரூபாய் பணத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் மக்கள் தான் நாவல் முழுவதும் வருகிறார்கள்.

கந்தன் என்னும் பாத்திரத்தின் வாயிலாகவே கதை சொல்லப் படுகிறது. நாள், கிழமை என்பதெல்லாம் அவனுக்கு கிடையாது. ஓரிடத்தில் நாவலில் சொல்வது போல 'நாயுடு, வாடகைக்கு வந்தால் ஆறாம் தேதி' அது மட்டும் தான் அவனுக்கு தெரியும். மற்ற எல்லா நாட்களும் அவனுக்கு ஒரே நாள்தான். இன்னோரிடத்தில், அவன் நண்பன் 'வருங்காலத்துக்கு என்ன திட்டம் போட்டு வைத்திருக்கிறாய்?' எனக் கேட்கிறான், அதற்கு கந்தன் சொல்கிறான் 'எந்தத் திட்டம் போட்டு நான் சொர்ணத்தம்மாவின் வயிற்றில் வந்து பிறந்தேன்' எனக் கேட்கிறான். சொர்ணம் கந்தனின் அம்மா.

அவன் சேர்த்துக்கொண்ட மனைவியின் பெயர் மீனா. தன்னால் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள முடியவில்லை என்பதால், வேறோர் இடத்தில அவளைச் சேர்த்துவிட தரகர்களிடம் கேட்கிறான் கந்தன். அவர்களின் ஒரே பையன் சந்திரன், சண்டை போட்டு விட்டு எங்கேயோ ஓடி விட்டான். அவனை இன்னும் தேடிக் கண்டுபிடிக்கவில்லை.

கந்தன் காலையில் எழுந்து, அவன் இடையில் சந்திக்கும் மனிதர்கள் ஊடே கதை ஓடி, அன்று இரவு கதை முடிகிறது. கனவில் தொடங்கும் அவனின் அன்றைய நாள், அவன் கனவு காண்பதிலே முடிந்து விடுகிறது. இடையில், அவனின் கதை சொல்லப் படுகிறது. அவனின் கதை என்பதை விட, கந்தன் மற்றும் அவனைச் சுற்றியிருப்பவர்களின் கதை.



ராக்காயி என்கிற மோகனா, செட்டியார் மற்றும் ஐரீன், சோலை, தரகர் அந்தோணி, குதிரை வண்டி ஓட்டி , ஏட்டையா பொன்னுசாமி, முத்துசாமி, அன்னக்கிளி என நாவலில் அப்படியே வந்து போகிறார்கள். நாம் நேரில் அவர்களைப் பார்த்தால் கூட, சொல்லி விட முடியும். பெரிய விளக்கங்கள் இல்லை, இரண்டொரு வார்த்தைகளில் நம் மனதுக்கு நெருக்கமாக வந்து விடுகிறார்கள்.

தரகர் அந்தோணி, சிறு வயதில் தான் ஒரு பத்து ரூபாய் பணத்துக்காக நிர்வாணமாக ஓடினேன் எனச் சொல்பவர், அன்றில் இருந்து 'இந்தப் பணமே ஒரு மானங் கெட்ட விஷயம்...' என்பதைப் புரிந்து கொண்டதாகச் சொல்கிறார்.

பக்கத்தில் ஒரு சேரி தீப்பற்றி எரிகிறது. இறந்தது பன்னிரண்டு பேர். வீணாக நகர சபைக்கு ஏன் கெட்ட பெயர் என்று மூன்று உயிர்களையே விபத்து குடிதுவிட்டதாகப் பத்திரிக்கைகள் அறிவிக்கின்றன. "அந்தப் பன்னிரண்டு பேருமே சாகவில்லை; அவங்க எல்லோருமே வாக்காளர் பட்டியல்ல இருக்காங்க; எப்படியும் அடுத்த தேர்தல்லே ஓட்டுப்போட வந்திடுவாங்க. வாழ்க முதலாளித்துவ ஜனநாயகம்" என பேசிக்கொள்கிறார்கள் நாவலில்.

**********************

இன்றைக்கு இப்படி இருக்கிறான் கந்தன். அவனுடைய 'நாளை' எப்படி இருக்கும்?. அதைப்பற்றிய கவலை நமக்கு எதற்கு, நமக்கெல்லாம் எப்படி 'நாளை' என்பது உண்டோ, அது போலவே அவனுக்கும் 'நாளை மற்றுமொரு நாளே !'

படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி 




Friday, January 11, 2013

உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி

நாம் புரிந்து கொண்டதென்பது ஒன்று. ஆனால் உண்மை என்பது இன்னொன்று. சில சமயங்களில் நாம் புரிந்து கொண்டதிலிருந்து, உண்மையானது வெகு தூரத்தில் இருக்கும்

உதாரணத்துக்கு, கடவுள் இருக்கிறார் என்று சிலர் சொல்கிறார்கள். இல்லை என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆகவே,  ஒருவர் தான் புரிந்து கொண்டதிலிருந்து கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்ற முடிவுக்கு வருகிறார். யார் சொல்வது இங்கே உண்மை?. உண்மை என்பது ஒன்றாகத்தானே இருக்க முடியும்.




அசோகமித்திரன் அவர்கள் எழுதிய கதைகளின் சிறு தொகுப்பான '1945இல் இப்படியெல்லாம் இருந்தது'' புத்தகத்தை விஷ்ணுபுரம் விருது விழாவில் வாங்கினேன். அந்தப் புத்தகத்தில் தான் 'உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி' என்கிற கதை இருக்கிறது. மிகவும் சிந்திக்கச் செய்த கதை.

ஒரு தம்பதியினர், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. நடுத்தர காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒருநாள் அத்தை வருகிறாள். அத்தை வந்த பின்னர், வீட்டு வேலை மற்றும் சமையலை அத்தையே பார்த்துக் கொள்கிறார். முதலில் ஒரு குறையும் சொல்லாமல் இருக்கும் அத்தை, போக போக வீட்டில் தான் இல்லாமல் எதுவும் நடக்காது போல உரிமை எடுத்துக் கொள்கிறார். வீட்டுக்கு வந்தவர்களுக்கு ஒரு காப்பி கொடுக்க வேண்டும் என்றால் கூட அத்தையைக் கேட்க கூடிய நிலைமையில் இருக்கிறார்கள் இருவரும்.

ஒருநாள் அத்தை இறந்து விடுகிறார். உறவினர்கள் யார் என்பது தெரியாமல் இவர்களாகவே எல்லாக் காரியங்களையும் செய்து முடிக்கிறார்கள். வீட்டுக்கு வந்த பின்னர் கணவன் கேட்கிறான், "இருந்தாலும் உன் அத்தைக்கு நாம் ரொம்ப இடம் குடுத்துட்டோம்" என்கிறான். மனைவி சொல்கிறாள்; "என்னது என் அத்தையா? உங்கள் அத்தை என்றல்லவா இத்தனை நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன்".

இவ்வளவுதான் கதை, ஆனால் இத்தனை நாட்களாக நாம் புரிந்து கொண்டவை அனைத்தும் உண்மை அல்ல என்பது நினைவுக்கு வராமல் போகாது.

*****************


'உங்கள் வயது என்ன?' என்ற கதையும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

முற்காலத்தில் உயிர்களைப் படைத்த கடவுள், வயதை நிர்ணயம் செய்யாமல் விட்டு விட்டார். எனவே  உலகத்தில் எல்லா உயிர்களும் பல்கிப் பெருகி, இடம் இல்லாமல் ஆகி விட்டது. இனிமேல், எல்லா உயிர்களுக்கும் வயதை நிர்ணயம் செய்து விடலாம் என முடிவெடுத்து, அப்படியே எல்லா உயிர்களுக்கும் வாழ் நாளை முடிவு செய்தார்.

மனிதன், கழுதை, மற்றும் நாய் ஆகிய மூன்று உயிர்களுக்கு மட்டும் வயதைச் சொல்லவில்லை. மூன்றும் கடவுள் முன்னால் வந்து நின்றன. மூன்றுக்கும் நாற்பது வயது என முடிவு செய்தார்.

கழுதை மட்டும், "என்னால், இத்தனை வருடம் பொதியைச் சுமக்க முடியாது. தயவு செய்து என் வயதை பாதியாக குறைத்து விடுங்கள்" என்றது.

உடனே மனிதன், "அந்த இருபதை  எனக்கு கொடுத்து விடுங்கள்", எனக் கேட்க, கடவுள் ஒப்புக் கொண்டார்.

நாய், "என் வயதையும் குறைத்து விடுங்கள்" என்றது, கடவுள் ஆகட்டும் என்றார்.

மனிதன் உடனே எழுந்து, "சாமி.." என வாய் திறக்க, கடவுள் "அப்படியே ஆகட்டும்" எனச் சொல்லிவிட்டு மறைந்து விடுகிறார்

அன்றிலிருந்து தான், முதல் நாற்பது வருடங்கள் மனிதனாகவும், அடுத்த இருபது வருடங்கள் கழுதை போலவும், மீதி இருபது வருடங்கள் நாய் போலவும் அலைய நேரிட்டது.

*****************



'1945இல் இப்படியெல்லாம் இருந்தது', 'தோஸ்த்', 'நாய்க்கடி', 'யார் முதலில்?' போன்ற கதைகளும் அருமையானவை. படித்துப் பாருங்கள்.

புத்தகம் வாங்க;
உடுமலை.காம் 




படங்கள்: இணையத்தில் இருந்து - நன்றி