Tuesday, December 11, 2012

எனது டைரியிலிருந்து - 6

விற்ற காசு

தோப்பும் துரவும்
வீடும் கிணறும்
விற்று வாங்கிய
தொகையை
எண்ணிக்  கொண்டிருக்கையில்
ஐந்நூறு ரூபாய் நோட்டுகள்
அனைத்திலும்
அப்பாவின் முகம்.

- ந. கண்ணன் (ஆனந்த விகடன்)



===================================================

தோல்வி

கடைசி சவம் விழுந்ததும்
கட்டாயம் அறிவிக்கப்படும்
வெற்றிபெற்ற கடவுள் பெயர்.

- எஸ். ஏ. நாசர் (ஆனந்த விகடன்)


===================================================

நடைபாதை ஓவியன்

கோவர்த்தன மலையை
குடையென ஆக்கி
மக்களைக் காக்கும்
கண்ணனை
வயிற்றுப் பசியுடன்
வரைந்து முடித்து
நிமிர்ந்து பார்க்க
வந்தது மழை.
குடையுடன்
கடவுள்
அழிந்து கொண்டிருந்தார்.

- எம். மாரியப்பன் (ஆனந்த விகடன்)
===================================================

அகத்தகத்தினிலே

காதலர் தினம், அன்னையர் தினம்
என வரிசையாய்
எல்லா தினங்களின் போதும்
நீ கொடுத்த
முத்தங்கள், கடிதங்கள்
வாழ்த்து அட்டைகள், பரிசுகள்
என எல்லாவற்றையும்
அடிக்கடி நினைத்துப் பார்த்து
உயிர்த்திருக்கிறேன் பலமுறை.
வழக்கமானதொரு மாலைப்பொழுதில்
என் தலை கோதி, உச்சி முகர்ந்து
'......ப் போல இருக்கிறாய்'
என்று அனிச்சையாய்
யாரோ ஒரு நடிகனின் பெயரை
நீ சொன்னபோது
செத்துப்போயவிட்டேன்
ஒரேயடியாக.

- ஆதி (ஆனந்த விகடன்)

Friday, October 26, 2012

கதவின்றி அமையாது


மரங்களின் தந்தை திரு. அய்யாசாமி அவர்களைச் சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது, அவர் வீட்டுக்கு பக்கத்துக்கு வீட்டில் சாத்தி இருந்த கதவைப் பார்க்க நேர்ந்தது. அந்தக் கதவை என் செல்லில் படம் பிடித்துக் கொண்டேன். அந்த இரவு அந்தக் கதவைப் பற்றிய நினைவுகள் வந்த வண்ணம் இருந்தன.

எங்கள் கிராமத்து வீட்டிலும் அதே போல் ஒரு கதவு வீட்டுக்குள் இருக்கிறது. மூன்று படிகள் வைத்து, சின்ன சின்ன பூக்கள் போட்ட கதவாக இருக்கும். ஒவ்வொரு படியிலும் ஏறி கதவைத் தள்ளி விட்டு விளையாடுவோம். கதவுக்கு மேலே ஒரு அட்டாரி இருந்தது. அட்டாரியில் எதாவது எடுக்க வேண்டும் என்றால் கதவு மேல் ஏறித்தான் எடுக்க வேண்டும்.

சாமி படங்கள், நடிகர்கள் படங்கள், இயற்கைப் படங்கள் என கதவுகளில் ஒட்டிக் கொண்டே இருப்பேன். புதிய படங்கள் கிடைத்தால், பழைய படங்களை கிழித்து விட்டு புதியதை ஒட்டி விடுவேன்.

கி.ரா. வின் 'கதவு' சிறுகதையில் ஒரு கதவுக்காக அழும் சிறுவர்களைப் பற்றி சொல்லியிருப்பார். தீர்வை கட்டாமல் இருந்ததற்காக கதவைத் தலையாரி பெயர்த்து கொண்டு செல்லுகின்றான். கொஞ்ச நாள்கள் கழித்து, அந்த கதவு வைத்திருந்த இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். கதவு மேல் படிந்திருந்த கரையானை இடித்து விட்டு, அக்கதவைப் பார்த்து அச் சிறுவர்கள் அடையும் சந்தோசத்தை கி.ரா. அவர்கள் எழுத்தில் கொண்டுவந்திருப்பார்.

உண்மையில் பார்த்தால் கதவுகள் இருக்கும் தைரியத்தில்தான் இரவில் பயமில்லாமல் நாம் உறங்குகின்றோம். தாழிட்டு விட்டு வெளியே சென்றால் நிம்மதியாக இருக்கின்றோம். கதவுகள் நம்முடன் வாழ்கின்றன. வீட்டுக்கும், வெளிக்கும் ஒரு பாலமாக கதவுகள் இருக்கின்றன.

இது ஒரு மீள்பதிவு.